Saturday, January 10, 2009

திருவாதிரைத் திருநாள்
2007 திருவாதிரைக்காக இடப்பட்ட பதிவு இது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

- திருநாவுக்கரசர்.


திரு ஆதிரை ஈசனின் நக்ஷத்திரமாக போற்றப்படுகிறது. மாணிக்க வாசகர் திருவாசகத்தை அருளச் செய்த சமயத்தில் அதனை எழுதுதுருவில் (நல்லவேளை அந்தக்காலத்தில் யூனிக்கோடெல்லாம் இல்லை) மாற்ற வேண்டுமென பலர் பிரார்த்தித்தனராம். என்னே விந்தை, மறுநாள் காலையில் தில்லை நடராஜன் சன்னதியில் அவன் காலடியில் திருவாசகம் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் இருந்ததாம். இவ்வாறாக அம்பல கூத்தன் திருவாசகத்திற்கு படி எடுக்கும் பெருமானாக அமைந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை தினமாம். இந்த நிகழ்ச்சியின் காரணமாக இன்றும் திருவாதிரை தினத்தில் சிதம்பரத்தில் மாணிக்க வாசகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு இறைவன் முன்னால் திருவாசகம் ஓதப்படுகிறதாம். நந்தனார் நடராஜனடி சேர்ந்ததும் திருவாதிரைத் திருநாள் தான்.


சிதம்பரம் ஈசனின் பஞ்சபூத தலங்களில் ஆகாய க்ஷேத்திரம். இத்தலத்தின் பெருமைகளை திருமூலர் திருமந்திரமும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் அருளிய தேவாரமும் அருணகிரியாரின் திருப்புகழும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும் மிக தெளிவாக குறிப்பிடுகிறதாய் சொல்ல கேட்டிருக்கிறேன். சோழ ராஜ்யத்திற்கு மட்டுமா இக்கோவில் இதயம்?, இல்லையில்லை சைவ சமயத்திற்கே இதயமாயிற்றே. அதனால் சோழர்கள் இந்த ஈசன் மீதுள்ள தங்கள் பக்தியினை எக்காலமும் நிலைத்திருக்குமாறு அவர்கள் காலத்திலான அளவைகளுக்கு பெயராக "சிற்றம்பலக்கோல்" (நீள-அகலம் அளக்க), "ஆடாவல்லான்" (மரக்கால் அளவை) என்பனவாக இந்த ஈசனது நாமங்களை வைத்துள்ளனர்.


சிதம்பரத்தில் நடராஜபிரானுக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெருகிறது. அந்த ஆறுநாட்களில் ஒரு நாள்தான் ஆருத்திரா தரிசனம் நடக்கும் திருவாதிரைக்கு முந்தைய தின இரவு. இந்த இரவில் ஆயிரக்கால் மண்டபத்தில் இந்த அபிஷேகம் நடைபெறுவதை காண கண் கோடி வேண்டும். அபிஷேகப் பிரியனுக்கு பால், தேன், இளநீர் எல்லாம் குடம் குடமாக அபிஷேகிக்கப்படும். பின்னர் விடியலில் ஆருத்திரா தரிசன வைபவமாக நாதஸ்வர இசைக்கேற்ப அசைந்தாடி வரும் ஆனந்த் கூத்தனைப் பார்க்க சலிக்காது. திருவாதிரைக் களி பற்றிய கதையினை மிகத் தெளிவாக தனக்கே உரிய பாணியில் நண்பர் கே.ஆர்.எஸ் எழுதியிருக்கிறார். அதனை வாசிக்க இங்கே சுட்டவும்.


களி என்றால் ஆனந்தம் என்று பொருள். ஈசனின் இயல்பே ஆனந்தம் தானே?. அரிசியில் வெல்லத்தை குழைத்து களி செய்வதுபோல் அறிவில் அருளைக் குழைத்து பெருவதே ஆண்டவன். ஏழு காய்கள், பயறு வகைகள் சேர்த்து வைக்கும் கதம்ப கூட்டானது ஆண்டவன் அளித்துள்ள இயற்கை வளங்களை திரட்டி அவனுக்கு அற்பணிப்பதாககும்.பல சுவைகளையுடைய வெவ்வேறு காய்களை கொண்டு படைக்கும் இந்த கூட்டினை நமது பல உணர்ச்சிகளையும் கொண்ட இகவாழ்வுக்கு அறிகுறியாக கொள்ளலாம். இவற்றினை பாத்திரத்தில் இட்டு உப்பு-புளி, நீர் வார்த்து தீயில் வேகவைத்த பின்னரே அதன் தனியான சுவையினை அறிய முடிகிறது. அது போல பொருளற்ற நமது உணர்ச்சிக் குவியலில் பக்தி என்ற நீரை ஊற்றி ஞான தீயில் சமைத்தால் நித்யானந்த சுவையினை பெறலாம்.

இந்த விழா தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் கொண்டாடப்படுகிறது. நமது கோலாட்டம், கும்மி போல கேரளத்து பெண்கள் இந்நன்னாளில் "ஸ்வாஞ்சலிட்டு" என்பதான ஒரு நடனம் ஆடுகிறார்கள். இந்த நடனம் ஆடாவிடில் பாவம் என்று எண்ணும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.


உத்திரகோச மங்கையில் (மேலே உள்ள தினமலர் படம்) உள்ள முழுவதும் மரகதக் கல்லால் ஆன நடராஜர். திருவாதிரையன்று மட்டுமே இவரது சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். திருவாதிரை காலையில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டுவிடும். உத்திரகோச மங்கை இராமநாதபுரத்தில் இருக்கிறது.

22 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

//இட்டு உப்பு-புளி, நீர் வார்த்து தீயில் வேகவைத்த பின்னரே அதன் தனியான சுவையினை அறிய முடிகிறது. அது போல பொருளற்ற நமது உணர்ச்சிக் குவியலில் பக்தி என்ற நீரை ஊற்றி ஞான தீயில் சமைத்தால் நித்யானந்த சுவையினை பெறலாம்.//
இதுவல்லவோ திருவாசகம், மிக்க நன்று!

cheena (சீனா) said...

திருவாதிரைத் திருநாளினைப் பற்றிய ஒரு அருமையான பதிவு. அபிசேகப் பொருட்களால் அபிசேகம் செய்யப்பட்டு ஆனந்தக் கூத்தன் அசைந்தாடி வெளியே பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்கும் திருவிழா தான் திருவாதிரை திருநாள்.

ஓகை said...

நீங்கள் ஏற்கெனவே வந்து களி ருசி பார்த்துவிட்டிர்கள். மற்றவர்களுக்காக:திருவாதிரை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதனால் சோழர்கள் இந்த ஈசன் மீதுள்ள தங்கள் பக்தியினை எக்காலமும் நிலைத்திருக்குமாறு அவர்கள் காலத்திலான அளவைகளுக்கு பெயராக "சிற்றம்பலக்கோல்//

மெளலி அண்ணா
அது மட்டுமா? தில்லைக் கூத்தன் முன்னர் தான் முடிசூடிக் கொள்வதிலும் விரும்பினார்கள்!
பராந்தகன் தான் சபைக்குப் பொன் வேய்ந்தான்.

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் தகவல்களுக்கு நன்றி.
தில்லையிலும் ரத்னசபாபதி என்னும் இன்னொரு ரத்தின நடராஜர் உள்ளார்!

தீயும் நீரும் மனத்தைப் பதப்படுத்தும் ஒப்புமையை நன்றாகச் சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

மௌலி. எவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள். அருமையான விளக்கங்கள். எண்ணெய்த் தாரை போல் வரும் சொற்றொடர்கள். அருமை அருமை.

களியின் உட்பொருளை மிக நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.

மதுரையம்பதி said...

வாங்க குமரன்.
//எண்ணெய்த் தாரை போல் வரும் சொற்றொடர்கள்//

இப்படியா கிண்டல் பண்ணுவீங்க குமரன்? :)

மதுரையம்பதி said...
This comment has been removed by the author.
மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ்...அட ஆமாம், நீங்க சொன்னதெல்லாமும் எழுதியிருக்கலாம் தான்.இங்கு அதனையும் பதிந்தமைக்கு நன்றிங்கண்ணோவ்.

மதுரையம்பதி said...

வாங்க ஓகை. முதல் வருகைக்கு நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி சீனா சார்

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி ஜீவா. தனியாக திருவாசகம் பற்றீ எழுத வேண்டும் என்று ஆசையிருக்கு பார்க்கலாம்.

Kailashi said...

உத்திர கோச மங்கையின் மரகத நடராசர் தரிசனமும், ஆனந்த தாண்டவேசனின் திருத்தேரும் அருமை. தங்கள் சேவைத் அருமை.

மதுரையம்பதி said...

வாங்க கைலாசி. உங்கள் முதல்வரவுக்கு நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஓகோ எண்ணைத்தாரை என்று சொல்லக்கூடதா அதுவும் குமரனிடமா தவறு காண்கிறீர் நக்கீரரே.
சரி இப்படிச் சொல்லலாமா. சாரங்கம் உதிர்த்த சர மழை போல்
ஏதாவது பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.நிஜமாவே நடை நல்லாத்தான் இருக்கு.
நமக்கு எப்போ இதுமாதிரி எழுத வருமோ

கீதா சாம்பசிவம் said...

பெரியவங்க எல்லாம் வந்து சொல்லிட்டுப் போனப்புறம், நாம எதுக்குப் பானகத் துரும்பு? ஜகா வாங்கிக்குறேன்! :))))))

கீதா சாம்பசிவம் said...

களி என்றால் ஆனந்தம் என்று பொருள். ஈசனின் இயல்பே ஆனந்தம் தானே?. அரிசியில் வெல்லத்தை குழைத்து களி செய்வதுபோல் அறிவில் அருளைக் குழைத்து பெருவதே ஆண்டவன். ஏழு காய்கள், பயறு வகைகள் சேர்த்து வைக்கும் கதம்ப கூட்டானது ஆண்டவன் அளித்துள்ள இயற்கை வளங்களை திரட்டி அவனுக்கு அற்பணிப்பதாககும்.பல சுவைகளையுடைய வெவ்வேறு காய்களை கொண்டு படைக்கும் இந்த கூட்டினை நமது பல உணர்ச்சிகளையும் கொண்ட இகவாழ்வுக்கு அறிகுறியாக கொள்ளலாம். இவற்றினை பாத்திரத்தில் இட்டு உப்பு-புளி, நீர் வார்த்து தீயில் வேகவைத்த பின்னரே அதன் தனியான சுவையினை அறிய முடிகிறது. அது போல பொருளற்ற நமது உணர்ச்சிக் குவியலில் பக்தி என்ற நீரை ஊற்றி ஞான தீயில் சமைத்தால் நித்யானந்த சுவையினை பெறலாம்.


மிக ,மிக அருமை, திராச சொல்றாப்பலே நமக்கு எல்லாம் இப்படி எப்போ எழுத வரும்னு தோணுது!

sury said...

/ பொருளற்ற நமது உணர்ச்சிக் குவியலில் பக்தி என்ற நீரை ஊற்றி ஞான தீயில் சமைத்தால் நித்யானந்த சுவையினை பெறலாம்.//

அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

"அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ' ஆகிய நான்குமே இன்னாச்செயலுக்கு இட்டுச்செல்கின்றன.
இந்த எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுபட, நீங்க, முதற்கண் மனம் அமைதி பெற வேண்டும்.
ஈசன் சிந்தை ஒன்றே அத்தகைய அமைதி கிட்ட உதவும். சிந்தை நிலைக்க பக்தி ஏற்படும்.
பக்தி நிலைக்க, ஞானம் பிறக்கும். ஞானம் பிறக்க ஆனந்தம் உணரப்படும்.

இந்த ஆனந்தமதை சுகம் என்கிறார் சித்தரொருவர்.

"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் "
என்பார் பத்திரிகிரியார்.

சுப்பு ரத்தினம்.
http://arthamullavalaipathivugal.blogspsot.com

sury said...

http://uk.youtube.com/watch?v=eUSc6d5M2j0

please visit here.
subbu rathinam

மதுரையம்பதி said...

வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சூரி சார்.

நீங்களே பாடினதா?, மிக அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

sury said...

//நீங்களே பாடினதா?//பாடியது நானே. ஐயம் வேண்டாம்.
பற்கள் பல போனமையால்,
சொற்கள் சிதைகின்றன. நானொரு
விற்பன்னன் இல்லை இசையில் எனினும்
ஏற்புடைக் கவிதைகளைக்காணும்போது
பாடிப் பெறும் மகிழ்வுக்கோரிணையும் உண்டோ !

தமிழ் வலைப்பதிவுகளில் வரும் கவிதைகளை என்னால் இயன்ற வரை
கர்னாடக சங்கீத ராகங்களில் பாடுவதும் எனது ஒரு பொழுதுபோக்கு.
அண்மையில் மேடம் கவினயா அவர்களின் வலைப்பதிவில் பதிவிட்ட திருவெம்பாவை அனைத்து
பாசுரங்களையும் வெவ்வேறு ராகங்களில் பாடிட முயற்சித்திருக்கிறேன்.
www.youtube.com/PichuPeran
இன்னொரு செய்தி. விளம்பரம் அல்ல.
ராகங்களைப்பற்றிய எனது வலைப்பதிவு
http://movieraghas.blogspot.com
தாங்கள் நேரம் கிடைக்கும்பொழுது வரலாம்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

kajan's said...

என்னண்டு உங்களாலை மட்டும் முடியுது

ஷைலஜா said...

குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் >>>>>>>>>>>.

ஈசனைப்பற்றிய அழகியபதிவினை தாமதமாகப்பார்த்து எழுதுகிறேன்.

இயல்பான நடையில் அழகாக எழுதிருக்கீங்க மௌலி.

குமிண் சிரிப்பு எனும் சொல்லே அழகு! அதற்குப்பொருள் சரியாக எனக்குத்தெரியவில்லை நீங்கள் சொல்லுங்க மௌலி