Friday, January 16, 2009

கொப்புடை அம்மன் - காரைக்குடி...

கடந்த சிலவாரங்களில் சென்ற கோவில்களில் கூடலழகர் பற்றி எழுதினேன். பிறகு வேறு ஒரு பின்னூட்டத்தில் காரைக்குடி கொப்புடை அம்மன் கோவிலில் புதிதாக பிரதிஷ்ட்டை ஆன ஹனுமார் சன்னதிக்குச் சென்றது பற்றி சொல்ல, நண்பர் குமரன் இக்கோவிலைப் பற்றி எழுதக் கேட்டார். இன்னும் சில நண்பர்கள் போனில் பேசுகையில் இந்த அம்மனைப் பற்றி எழுதச் சொன்னாலும், இன்றைக்கு அம்பாளுக்கு உகந்த தை வெள்ளிக்கிழமை என்பதால் இந்த இடுகை.

எப்போது காரைக்குடி சென்றாலும் நான் மறக்காமல் செல்லும் இடம் கொப்புடையம்மன் கோவில். இக்கோவிலுக்கும் எனக்கும் ஏதோ வெகுகால தொடர்பிருப்பதாகவே தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் என்று பார்த்தால், 1930-45களில் எனது பாட்டனார் (தாய்வழி) இக்கோவிலுக்கு பேஷ்காராக (இக்கால அறநிலையத்துறை அலுவலர் போன்ற பதவி) இருந்து வந்திருக்கிறார். இன்றும் என் தாய் தமது சிறுவயதில் இக்கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டது பற்றி கூறுகிறார். திருமணமான பின் எனது மறுபாதியுடன் சென்ற முதல் கோவில் இதுதான். சரி, சுய புராணம் போதும், கோவில், மற்றும் தல புராணத்தைப் பார்க்கலாமா?


ஜகன்மாதா அன்னை பராசக்தி கோவில் கொண்டுள்ள பல திருத்தலங்களில் கொப்புடையம்மன் கோவிலும் ஒன்று. பைந்தமிழும், பக்தியும் தழைத்த பாண்டிய தேசத்தில் மீனாக்ஷி, காந்திமதி, கோமதி, மாரியம்மன், காளி என்று பல வடிவங்களில் சக்தி வழிபாடுகள் இருந்தாலும், நகரத்தார் தலைநகர் என்று சொல்லக்கூடிய சிறப்புற்ற காரைக்குடியின் மத்தியில் கொப்புடைய அம்மன், "கொப்பாத்தாள்", "கொப்புடையாள்" என்ற பெயரில் குடி-கொண்டிருக்கிறாள். இவள் இந்த ஊருக்கான கிராம தேவதையாகவே கூறப்பட்டாலும், ஆகம விதிகளின்படி அமைந்த கோவில், பூஜை முறைகள் என்றே இருக்கிறது.


ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாம். அவற்றை அழித்து நகரம் நிர்மாணிக்கப்பட்டதால் காரைக்குடி என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். நகரின் நடுவில், குளத்துடன், மூன்று நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் கூடிய அழகிய கோவில். ராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் வரும் மண்டபத்தை சோபன மண்டபம் என்றழைக்கின்றனர். அன்னைக்கு பூச்சொரிதல் போன்ற விழாக்கள் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறதாம். இந்த சோபன மண்டபத்தின் இடது புறத்தில் முறையே வல்லத்துக் கருப்பர் மற்றும் விநாயகரும், வலது புறத்தில் தண்டாயுதபாணியும் அருள் புரிகின்றனர். கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, காசி-விஸ்வநாதர், விசாலாக்ஷி, தென்முகக் கடவுள், சண்டிகேஸ்வரர், மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.



கருவறையின் உள்ளே நின்ற திருக்கோலத்தில் சுடர் வீசிப் பிரகாசிக்கும் ஜுவாலைக் கிரீடத்துடன், நாற்கரங்களில் வலது முன்-கை அஞ்சிடும் அடியவர்கட்கு அபயம் அளித்தும், வலது மேல்-கை தீமைகளை வேருடன் தோண்டிக் களையும் சூலத்தைச் சுமந்தும், இடது-கைகள் பாசத்தையும், கபாலத்தையும் ஏந்தியவாறு காக்ஷி அளிக்கிறாள். காணத் தெவிட்டாத அன்னையின் திருவுருவம் பஞ்ச லோகத்தால் ஆன திருமேனியாகும். பூர்ண அலங்காரத்தில் பட்டும் வைரமும் போட்டி போட்டு ஜ்வலிக்க, வெள்ளிப் பீடத்தில் வெள்ளி திருவாச்சி துலங்க அன்னை அருட் கண்கள் நம்மை, "வா!, நானிருக்கிறேன்" என்பதாக இருக்கிறது.

கொப்புடையாளது கதையாக இவ்வூர் மக்கள் சொல்லும் செவி-வழிச் செய்தியை பார்க்கலாம்.
காரைக்குடிக்கருகில் இருக்கும் சங்கராபுரம் என்னும் ஊரின் காவல் தெய்வம் காட்டம்மன் என்பதாம். அவளது சகோதரியே கொப்புடையம்மன் என்று கூறுகின்றனர். கொப்புடையம்மனுக்கு மழலைகளிடத்துப் பிரியம் அதிகமாம். அவள் எப்போதும் தமது சகோதரியின் குழந்தைகளிடத்து அளவில்லாப் பிரியத்துடன் இருந்தாளாம். இதனால் தமது குழந்தைகள் தன்னை அதிகம் நேசிக்கவில்லை என்று வருத்தமுற்ற காட்டம்மன், கொப்புடையாளிடமிருந்து தனது குழந்தைகளைப் பிரித்தாளாம். வருத்தமுற்ற கொப்புடையாள், பாச-பந்தத்தால், வருத்தமும் வேதனையும் தான் என்று உணர்ந்து துறவு பூண்டு கானகத்தில் வசித்தாளாம். அவ்வாறு வசித்த இடமே காரைக்குடி என்று கூறுகின்றனர்.

இன்னொரு கதையும் சொல்கிறார்கள். அக்காலத்தில் அப்பிரதேசத்தை ஆண்ட அரசன் ஒருவன் காட்டம்மனிடம் அளவில்லா பக்தி பூண்டிருந்தானாம். ஒவ்வொரு நாளும் அன்னையை வணங்கி, தனது அன்றாட வரவு-செலவுகளை அவளிடம் ஒப்பிவிப்பானாம். முகலாய படையெடுப்பின் போது அவர்களிடத்திருந்து காட்டம்மன் திருவுருவத்தை காப்பாற்ற சங்கராபுர கோவிலின் உற்சவ விக்கிரஹத்தை ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த பொந்தில் மறைத்து வைத்து, அதனை பத்திரமாக பராமரிக்க சிலரை நியமித்தானாம். பிற்காலத்தில் மரப்பொந்தில் இருந்த விக்கிரஹத்தை மாடு மேய்க்கும் இடையர்கள் கண்டெடுத்து அதை ஒரு மகிழ மரத்தடியில் வைத்து பூஜித்தனராம். பிற்காலத்தில் ஊர் விரிவடைந்த நிலையில் இப்போது கோவில் இருக்கும் இடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். அரசர் நம்பகமானவர்களிடத்து ஒப்புடைத்ததால் அம்மன் 'ஓப்புடையம்மன்' என்று வழங்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் "ஒப்புடை" என்பதே மறுவி "கொப்புடை" என்று ஆனதாகக் கூறுகின்றனர். பெண்கள் அணியும் ஒரு காதணி ஆபரணத்தின் பெயர் "கொப்பு". அம்பாள் இவ்வாபரணத்தினை காதில் அணிந்திருப்பதால் இப்பெயர் பெற்று இருக்கிறாள் என்றும் கூறுகின்றனர்.

இங்கு பூச்சொரிதல் மற்றும் தேர் திருவிழா மிக முக்கியமானதாகச் சொல்கின்றனர். 50-60 வருடங்கள் முன்பெல்லாம் இவ்விழா சமயத்தில் நகரத்தார் தத்தம் இல்லத்து நகைகள் எல்லாம் அன்னைக்கு அணிவித்து அருள் வேண்டுவராம். குழந்தை வரம் வேண்டி கரும்பாலான தொட்டில் கட்டுவது மிக விசேஷ பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

படங்கள் தந்து உதவிய நண்பர் கே.ஆர்.எஸ் அவர்களுக்கு நன்றி.

9 comments:

குமரன் (Kumaran) said...

கொப்புடை அம்மனைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் மௌலி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நகரத்தார் குலதெய்வமான கொப்புடைய நாயகி அம்மனைப் பற்றிய அறிமுகப் பதிவிற்கு நன்றிண்ணா!

என் நகரத்தார் நண்பர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தாலும் இந்த அம்மனைப் பற்றிச் சொல்லிச் சிலாகிப்பது வழக்கம்!

//கூகிளாரிடத்து பலமுறை கேட்டும் கொப்புடை அன்னையின் படம் இல்லை என்று கூறிவிட்டார்//

படங்களை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்!

Kavinaya said...

அன்னை பற்றிய வர்ணனை அருமை. நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம். எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்...நீங்கள் தான் இந்த பதிவெழுதக் காரணம்...நீங்களே முதல் பின்னூட்டமும் இட்டது அருமை!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்...

நகரத்தார் குலதெய்வம் என்று கூற முடியாது. அவர்களது குல தெய்வங்கள், வேறு 9 கோவில்கள் என்று கூறியதாக நினைவு...கொப்புடைநாயகி அவர்களது இஷ்ட தெய்வம் என்றே நினைக்கிறேன்.

மின்மடலில் நீங்க அனுப்பிய போட்டோக்களைப் பார்த்தேன், இதோ இன்னும் சில நிமிடங்களில் இடுகையுடன் இணைத்துவிடுகிறேன். மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா..

//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம்//

மிக உண்மை. இந்த ஊரணிகள் எல்லாம் பல காலம் முன்பிருந்து இருப்பவை...நகரத்தார் சமூகத்தால் ஊர் நன்மைக்காக தோண்டப்பட்டு அவை கோவிலுடன் சேர்த்துப் பராமரிக்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீருக்கு இக்குளங்களும், ஊரணிகளுமே உபயோகம் ஆகிறது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வேலிகளிட்டுப் பராமரிக்கிறார்கள்.

பிள்ளையார் பட்டியாகட்டும், வேந்தன் பட்டியாகட்டும், நாட்டரசங்கோட்டையாகட்டும், நகரத்தார் மெயிண்டெயின் பண்ணும் கோவில்கள் மிக அருமை.

நகரத்தார் சிறப்பினைப் பற்றியே சில இடுகைகள் எழுதவேண்டும். அவர்களது டிசிப்பிளினான வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, தமது முன்னோர், மற்றும் பெரியோர்கள் மீது கொண்டுள்ள மரியாதை, சொந்த, மற்றும் பிழைக்க வந்த ஊரின் மேல் இருக்கும் அபிமானம், வியாபாரத்தில் நேர்மை என்று நீண்ட பாராம்பர்யம் உள்ள சமூகம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா..

//நகரத்தார் ஊர்ப் பக்கமெல்லாம் கோவில், ஊரணியைச் சுற்றியே ஊர் அமைந்திருக்கும். பொதுவாகவே கோவில்களெல்லாம் விசாலமாகவும் அமைதி நிரம்பியதாகவும் இருக்கும். மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கலாம்//

மிக உண்மை. இந்த ஊரணிகள் எல்லாம் பல காலம் முன்பிருந்து இருப்பவை...நகரத்தார் சமூகத்தால் ஊர் நன்மைக்காக தோண்டப்பட்டு அவை கோவிலுடன் சேர்த்துப் பராமரிக்கப்படுகிறது. பல இடங்களில் குடிநீருக்கு இக்குளங்களும், ஊரணிகளுமே உபயோகம் ஆகிறது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வேலிகளிட்டுப் பராமரிக்கிறார்கள்.

பிள்ளையார் பட்டியாகட்டும், வேந்தன் பட்டியாகட்டும், நாட்டரசங்கோட்டையாகட்டும், நகரத்தார் மெயிண்டெயின் பண்ணும் கோவில்கள் மிக அருமை.

நகரத்தார் சிறப்பினைப் பற்றியே சில இடுகைகள் எழுதவேண்டும். அவர்களது டிசிப்பிளினான வாழ்க்கை முறை, இறை நம்பிக்கை, தமது முன்னோர், மற்றும் பெரியோர்கள் மீது கொண்டுள்ள மரியாதை, சொந்த, மற்றும் பிழைக்க வந்த ஊரின் மேல் இருக்கும் அபிமானம், வியாபாரத்தில் நேர்மை என்று நீண்ட பாராம்பர்யம் உள்ள சமூகம்.

ஷைலஜா said...

அம்மனைப்பற்றி விரிவாக எழுதி இருக்கிறீர்கள்..முன்பு எப்போதோ தீபாவளிமலர் ஒன்றில் இந்தக்கோயில் சிறப்பினைப்படிதத் நினைவு. காரைக்குடிப்பக்கம் போனால் செல்லவேண்டும் எனும் ஆவலை உங்களின் இந்தப்பதிவு தூண்டிவிடுகிறது இன்னும். அன்னை அருள் இருந்தால் அந்த பாக்கியம் கிடைத்துவிடும்!

கபீரன்பன் said...

ஒன்பது வருட காரைக்குடி வாழ்க்கை மீண்டும் மனக்கண் முன் ஓடியது.

அப்போது இந்த கதைகளை யாரும் சொன்னதில்லை (அ) நான் கேட்டதில்லை. தங்கள் இடுகை மூலம் தெரிந்து கொண்டேன்

நன்றி