ஒரு வாரம் நிம்மதியாக மதுரையில் கழிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆரம்பிக்கலாம் என்றதும் செல்ல தோன்றிய கோவில்கள் மீநாக்ஷி கோவிலும் கூடலழகர் கோவிலும் தான். பலவருடங்கள் முன் தினமும் அஷ்டாங்க விமானப் பிரதக்ஷணம் செய்திருந்தாலும், கடந்த 1.5 ஆண்டுகளாகச் இரு கோவில்களுக்கும் செல்ல இயலவில்லை. ஆகவே முதலில் இம்முறை பெருமாள் தரிசனம். மார்கழியில், பிரம்ம முஹுர்த்த நேரத்தில், பெருமாள் பார்க்கப்-பார்க்கத் தெவிட்டாத பரிபூரணனாக இருந்தார். கூடலழகர் கோவில் சிறப்புக்களை யாரும் எழுதியதாக நினைவில்லை, ஆகவே இந்த பதிவு.
பிரம்மாவின் புத்திரரான சனத் குமாரருக்கு பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். இந்த விருப்பம் நிறைவேற கிருதமால் நதி தீரத்தில் தவமிருக்கிறார். அப்போது தவத்தின் பயனாக பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அவருக்கு காக்ஷி அளித்தார். அவ்விடத்தில் பெருமாளுக்கு கோவிலமைக்க முடிவு செய்த சனத் குமாரர் விஸ்வகர்மாவை அழைத்து இறைவன் தமக்கு அளித்த தரிசனத்தை விவரித்து, அத்தோற்றத்தில் பெருமாளுக்கு விக்ரஹம் அமைக்கச் செய்கிறார். அந்த விக்ரஹத்தை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்ட்டை செய்து வழிபாட்டினை தொடங்குகிறார். இவ்வாறாக கூடல் மாநகரில், அமர்ந்த கோலத்தில் கூடலழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். இக்கோவில் கிருத யுகத்திலேயே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்றுத் திகழும் எம்பெருமானாரை சதுர்யுகப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.
பெருமாள் கோவில்கள் பலவகையான விமானங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் அஷ்டாங்க விமானம் என்பது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே இந்த அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் சேவை சாதிக்கிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், கலசம் 10 உயரமும் கொண்டது. எட்டு பகுதிகளாக இருக்கும் இந்த விமானமே ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தின் கீழ் இருக்கும் பெருமாளை 48 நாட்கள், தினத்திற்கு 11 முறை சுற்றி வந்தால் நினைத்த கார்யம் சித்திக்கும் என்பது மதுரை-வாழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள்.
மூன்று நிலைகளில், பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் அழகிய சுதைச் சிற்பங்களாக இருப்பினும், கீழ்த் தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் கூடலழகருக்கே நித்ய பூஜைக்கும், மற்ற விழாக்களும். இங்கு தாயார் பெயர் மதுரவல்லி, உற்சவர் சுந்தர-ராஜப் பெருமாள் என்ற திருநாமம். மூலவருக்கு ஆகூய திருக்கரத்தான் என்ற திருநாமமும் இருக்கிறது. இடது கையால் பக்தனை அழைத்து, வலது கையால் அருள் பாலிப்பவன் என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். மதுரையை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றி பெற இவரை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது நிலையில் பெருமாள் சூரிய நாராயணராக தேவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இந்த சன்னதியை ஓவிய மண்டபம் என்று அழைக்கின்றனர். இச்சன்னதியில் பிரம்மா, சிவன் விஷ்ணு, அஷ்ட திக்பாலகர்கள் ஓவிய வடிவில் காக்ஷி அளிக்கின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர் என்ற திருநாமத்துடன் சயனித்திருக்கிறார். இவர்களைத் தவிர, விமானத்தில் லக்ஷ்மி நரசிம்ஹர், பூவராஹர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மற்றும் வைஷ்ணவ ஆச்சார்யார்களது திருவுருவங்களைத் தரிசிக்கலாம். எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிராகாரங்களுடன் அமையப் பெற்ற கோவில் இது.
பிரகாரங்களில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் போன்றோரது சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. இக்கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு நவக்கிரஹ சன்னதி. சாதாரணமாக பெருமாள் கோவில்களில் நவக்கிரஹங்களுக்கு என்று சன்னதி கிடையாது, ஆனால் இக்கோவிலில் தனியாக நிறுவப்-பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது.
நரசிம்ஹ விக்ரஹங்கள் யோக நிலையிலோ அல்லது லக்ஷ்மியை மடியில் இருத்திக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹராகவோ பார்த்திருக்கிறோம். அபூர்வமாக, இக்கோவிலில் நரசிம்ஹர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பிரகாரத்தில் காக்ஷி தருகிறார். இங்கு பெருமாள் சன்னதியின் வலப்புறத்தில் மதுரவல்லித் தாயார் சன்னதி. இங்கு தாயார் "படிதாண்டாப் பத்தினி" என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெயருக்கு ஏற்றார்ப்போல அன்னை உற்சவ காலங்களில் சன்னதிக்குள் மட்டுமே புறப்பாடு ஆகிறாள். நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு. இங்கு தாயாருக்கு லக்ஷ்மி அஷ்டோத்திரமும், பெருமாளுக்கு ராமாஷ்ட்டோத்திரமும் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கான தீர்த்தம் "ஹேம புஷ்கரிணி" என்று அழைக்கப்படுகிறது. இப்பெருமாளின் தெப்பக்குளம்தான் தெப்பக்குளத்தெரு என்று அழைக்கப்படுகிறது, டவுன்ஹால் ரோட்டின் ஒருபுறம் அமைந்துள்ளது.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம் என்று அர்ச்சகர் கூறினார். இப்பகுதியை வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்ட காலத்தில், பரம்பொருள் யார் என்ற கேள்விக்குச் சரியான விளக்கம் சொல்லப் படவேண்டும் என்று போட்டி வைக்கிறான். கேள்விக்குச் சொல்லப்படும் விளக்கம் சரியானால் பொற்கிழி கட்டப்பட்ட கம்பம் வளைந்து கொடுத்து பொற்கிழியை எடுக்க ஏதுவாக வேண்டுமென்று கூறி அதற்கேற்ப ஓர் உயர்ந்த கம்பத்தில் பொற்கிழியை இணைத்து வைக்கிறான். வில்லிப்புத்தூரில் இருந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள், அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கப் பணிக்கிறார். விஷ்ணு சித்தரும் ஆதிமூலமாகிய பரம்பொருள் விஷ்ணுவே என்று கூறிட அப்போது கம்பம் வளைந்து கொடுத்ததாம். இக்காக்ஷியைக் கண்ட மன்னன், விஷ்ணு சித்தரை வணங்கி தனது பட்டத்து யானையில் வைத்து வலம் வரச் செய்ததாகவும், அப்போது பக்தனின் பெருமையைக் காண பெருமாளும் கருடாரூடராக வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த பெருமாளின் அழகில் மயங்கிய விஷ்ணு சித்தர், ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி திருஷ்டி கழிப்பாளோ அது போல பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டுவிடுமே என்று கலங்கிப் பாடியதுதான் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்னும் பாசுரம் என்று கூறுகிறார்கள். இந்தப் பெருமாள் சதுர் யுகங்களும் கண்டவர் என்பதாலும் அவ்வாறு பாடியிருக்கிறார் என்றால் மிகையில்லை. பெருமாளுக்கே தாயாக, திருஷ்டி கழித்து அவரை வாழ்த்தியதால் அன்று முதல் அவர் 'பெரியாழ்வார்' என்று அழைக்கப் பெற்றாராம்.
மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில் மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.
31 comments:
அடேயப்பா. தகவல்களை அள்ளித் தந்திருக்கிறீர்களே. இத்தனை கால மதுரை வாழ்க்கையில் கூடலழகர் கோவிலுக்குப் போனதே இல்லை :( ஹ்ம்.. அடுத்த முறையாச்சும் அழகர் அழைக்கிறாரான்னு பார்ப்போம்... மிக்க நன்றி மௌலி.
//ஆகவே முதலில் இம்முறை பெருமாள் தரிசனம்//
அது! :)
//அவருக்கு காக்ஷி அளித்தார்//
காட்சி?
//இக்கோவில் கிருத யுகத்திலேயே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது//
பெருமாள் பெரும் பொய்யனா இருப்பான் போல இருக்கே! :))
உள்ளேன் ஐயா!
//கூடலழகருக்கே நித்ய பூஜைக்கும், மற்ற விழாக்களும். இங்கு தாயார் பெயர் மதுரவல்லி//
அன்னை மீனாட்சியின் பெயர்கள் அனைத்தும் (கயற் கண்ணி தவிர)கிட்டத்தட்ட இவளுக்கும் உண்டு! மதுரவல்லி, மரகத வல்லி, வகுள வல்லி...
//உற்சவர் சுந்தர-ராஜப் பெருமாள் என்ற திருநாமம்//
சோலைமலைக் கள்ளழகன் = பர சுந்தர ராஜன்
கூடல் சுந்தர ராஜன் = வியூக சுந்தர ராஜன்
நாகை அழகியார் = அர்ச்சா சுந்தர ராஜன்
//மூலவருக்கு ஆகூய திருக்கரத்தான் என்ற திருநாமமும் இருக்கிறது//
அருமை! வாப்பா வா-ன்னு கூப்பிடுகிறானோ? ஆச்சரியமா இருக்கே! தாயார் தானே கூப்பிடுவா! இவன் மகா கஞ்சன் ஆயிற்றே! :))
//108 திவ்ய தேசங்களில், இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே இந்த அஷ்டாங்க விமானத்தின்//
ஆமாம்!
ஆனால் திவ்யதேசம் அல்லாத பல தலங்களில் இப்போது இது போல அஷ்டாங்க விமானம் செய்கிறார்கள்! சென்னை பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி ஆலயம் அதில் ஒன்று!
//எட்டு பகுதிகளாக இருக்கும் இந்த விமானமே ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என்று கூறப்படுகிறது//
இது எப்படி-ன்னு யாராச்சும் விரிவாச் சொன்னா நல்லா இருக்கும்!
//இரண்டாவது நிலையில் பெருமாள் சூரிய நாராயணராக தேவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார்//
முதலில் இருந்தும்
இரண்டாவதில் கிடந்தும்
மூன்றாவதில் நின்றும்
என்று இருக்க வேண்டுமோ? எதுக்கும் ஒரு முறை செக் பண்ணிக்கோங்க! அடியேன் சென்று நாளாகுது!
//சாதாரணமாக பெருமாள் கோவில்களில் நவக்கிரஹங்களுக்கு என்று சன்னதி கிடையாது, ஆனால் இக்கோவிலில் தனியாக நிறுவப்-பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது//
ஆமாம்! தனிச் சன்னிதி கிடையாது! சக்கரத்தாழ்வாரின் சுழற்சி வட்டத்திலேயே கிரகங்களும் அமைந்து விடுவதாகவும், அதனால் கிரக ப்ரீதிக்கு, சக்கரத்தாழ்வார் வழிபாடே, அனைத்து கிரகங்களையும் ஏக காலத்தில் வழிபட்டதும் ஆகும் என்பார்கள்!
கேள்வி: கூடல் அழகர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி எங்குள்ளது? நவகிரக சன்னிதி எங்குள்ளது?
ஆனால் நவக் கிரகங்களுக்கும் அவர்கள் செய்யும் கர்மாக்களுக்கு உண்டான மரியாதை உண்டு! திக் பாலகர்க்குத் தரப்படும் அன்னபலி போலவே நவக்கிரகங்களுக்கும் தரப்படுவது உண்டு!
//நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்கூடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு//
முருகன் சொல்லி இருப்பான் போல! பால் குடத் தகவல் சூப்பரு! :)
//பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்//
இல்லை!
ஆண்டாளும் பெரியாழ்வாரும், கூடிடு கூடலே-ன்னு பொதுவாகப் பாடினாலும் இந்தத் தலத்தைப் பாடவில்லை! சோலைமலையே பாடினார்கள்!
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரமும், திருமழிசையாழ்வார் ஒரு பாசுரமும் இருவர் மட்டுமே மங்களாசாசனம்! பதிவில் திருத்தி விடுங்கள்!
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் "திருக்கூடல்" கூட, - மழைப்பேர் அருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி அரவொடுங்கும் வெற்பு!
= திருமழிசை ஆழ்வார்
திருமங்கை இந்த வியூக சுந்தர ராஜனை பட்டியல் போடுகிறார்!
கோழியும் "கூடலும்" கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ண மெண்ணில்
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா!
பால்கூடம் =பால்குடம்
பொற்கழி = பொற்கிழி
//எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். //
செய்திருக்கோம்! கூடாரவல்லித் திருநாள் இங்கேயும் மிகவும் விமரிசையாக நடை பெற்று வந்தது. அது சரி, தெப்பக்குளம் அப்படியேதான் இருக்கா? இல்லை, அங்கேயும் கட்டிடங்கள் வந்துட்டதா? தெப்பக்குளத்திற்கு எதிரே தான் என்னோட பெரியப்பா கொஞ்ச நாட்கள் குடி இருந்தார். அந்த வீடெல்லாம் இருக்கா, இல்லையா? தெரியலை! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வாங்க கவிக்கா. நன்றி.
வாங்க கே.ஆர்.எஸ்.
//முதலில் இருந்தும்
இரண்டாவதில் கிடந்தும்
மூன்றாவதில் நின்றும்
என்று இருக்க வேண்டுமோ//
இப்போ நான் குழம்பிப் போய்விட்டேன். மேலிருக்கும் சன்னதிகளுக்கு போக தனி டிக்கெட் எல்லாம் உண்டு. அங்கு பூஜை/ஆராதனை என்று ஏதும் இல்லை என்பதால் உள்ளூர் மக்கள் மேலே செல்வதில்லை. போன வாரம் கூட நான் மேலே செல்லவில்லை. எப்போதோ பார்த்ததை வைத்து எழுதினேன்.
வருகைக்கு நன்றி கொத்ஸ். :)
வாங்க கீதாம்மா,
குளம் பெயரளவில் இருக்கிறது...சின்னக்கடை மார்கெட் பின் புறத்தில். சின்னக்கடை மார்கெட் என்பதையே எடுத்துட்டதாக சொன்னாங்க...நான் அந்த் பகுதிக்கு செல்லவில்லை
நீங்க சொல்லும் இடத்தில் கடைகளும், லாட்ஜ்களும் வந்துவிட்டது.
கூடாரைவல்லி மட்டுமா?, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களிலும் தரிசனத்திற்கு மிகுந்த கூட்டம் கூடும். கூட்டத்தை ஒழுங்கு பண்ண என்.எஸ்.எஸ் மாணவனாக பிரதி வருடம் போயிருக்கிறேன்.
அது சரி, பொற்கிழியை மட்டும் மாத்தாம கழியாவே வச்சிருக்கீங்க, உங்க தமிழ் ஆசிரியையை விட்டு அந்தக் கழியாலேயே போடச் சொல்லணும்! :P:P:P
//உங்க தமிழ் ஆசிரியையை விட்டு அந்தக் கழியாலேயே போடச் சொல்லணும்!//
அடப்பாவமே, அவங்க போய் சேர்ந்துட்டாங்கன்னுல்ல கேள்விப்பட்டேன்.
//பொற்கிழியை மட்டும் மாத்தாம கழியாவே வச்சிருக்கீங்க//
ஒரு இடத்தில் மட்டும் மாத்திட்டு விட்டுட்டேன்....இதோ இப்போது மற்ற 2 இடங்களிலும் மாத்திட்டேன்...
ஹைய்யா.. எனக்கு ரொம்ப பிடிச்ச பெருமாள். ஊருக்கு போகும்போதெல்லாம், பெரியார் பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி கூடல் அழகரை சேவித்து விட்டு தான் பரமக்குடி பஸ் ஏறுவேன்.
ஒருமுறை பங்குனி உத்திரத்தன்று கூடலழகரை, தாயாருடன் கண்ட திருக்கோலம் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது.
அறியாத நிறைய தகவல்களை சொல்லிருக்கீங்க.. நன்றிண்ணா..
அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங்களா இல்லையா?
அப்புடியே, நம்ம முருகன் இட்லி பத்தியும் சொல்வீங்கன்னு நினைச்சேன். :)
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணாஇ பண்ணுகிறார்கள். கோவிலை வலம் வந்து கொண்டே பாராயணாம் பண்ணுவர்.
////நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்கூடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு//
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோவில்லயும் பால்குடம் எடுத்து பாத்துருக்கேன்.. ஒருவேளை அந்த ஊர் வழக்கமாக இருக்குமா?
மெளலிண்ணா, முக்கியமான கேள்வி கேக்க மறந்துட்டேன்..
கூடலழகர் கோவில் பக்கத்துல நம்ம வேதாந்த தேசிகரை சேவிச்சீங்களா ??
அங்கே தேசிகர் திருநட்சத்திரத்தன்று மட்டுமே சடாரி சாதிக்கப்படுமாம்.
//சோலைமலைக் கள்ளழகன் = பர சுந்தர ராஜன் //
ஓஹோ.. அதனால் தான் மூலவருக்கு பரமசாமி என்று திருநாமமோ
//கூடலழகர் கோவில் பக்கத்துல நம்ம வேதாந்த தேசிகரை சேவிச்சீங்களா ??//
ஓ! தேசிகர் சன்னதிக்கு போகல்லைன்னா கூடலழகர் தரிசனமே முடிவாகாது....அங்கே இருக்கும் ஹயக்ரீவர் வரப்பிரசாதி...
//அங்கே தேசிகர் திருநட்சத்திரத்தன்று மட்டுமே சடாரி சாதிக்கப்படுமாம்//
இது எனக்கு தெரியாத செய்தி.நன்றி
//ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணாஇ பண்ணுகிறார்கள்//
ஆம், நான் சஹஸ்ரநாமம் கற்றதே அங்குதான்.
சனிக்கிழமைகளில் தேசிகர் சன்னதியில் அமர்ந்து பாராயணம் நடக்கும்.
தெரிந்தவர்கள் பாராயணம் செய்து கொண்டே பிரதக்ஷிணம் வருவர்.
//அன்னையை தரிசித்ததை பற்றி சொல்லவே இல்லையே?? போனீங்களா இல்லையா?//
இல்லை, வரும் வீக்-எண்ட் தான் போகணும்.
//அப்புடியே, நம்ம முருகன் இட்லி பத்தியும் சொல்வீங்கன்னு நினைச்சேன். :)//
அதெல்லாம் 5-6 வருடங்கள் முன் போனது...இப்போ போகல்லை.
கூடலழகர் கோவில் சிறப்புகளை எழுதியதற்கு நன்றி மௌலி. எழுத வந்த நாள் முதல் இந்தக் கோவிலைப் பற்றி எழுதச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நண்பர்கள். நீங்கள் எழுதற்கு நன்றி. மதுரை குழுப்பதிவிலும் இடலாம் என்று நினைக்கிறேன்.
கான்சாமேட்டுத் தெருவின் முனையில் (பழைய நியூ சினிமா எதிரில்) முன்பு ஜான்சிராணி பூங்காவாகவும் இன்றைக்கு வணிக வளாகமாகவும் இருக்கும் இடத்திற்கு மேங்காட்டுப் பொட்டல் என்று பெயர். மெய் காட்டும் பொட்டலாகிய இந்த இடத்தில் தான் கருடவாகனன் தோன்றியதாகவும் திருப்பல்லாண்டு இங்கு தான் பாடப்பட்டதாகவும் ஐதிகம். வருடாவருடம் கூடலழகர் இங்கு திருவிழா கண்டருளுகிறார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.
திருப்பல்லாண்டு பாசுரங்கள் கூடலழகரைப் பாடியதாகத் தான் மரபு. அதனால் நீங்கள் சொன்னது போல் பெரியாழ்வாரும் பாடிய தலம் தான் இது.
இங்கே வா வா என்று கூப்பிட்டு அருள் தருகிறான். திருமலையில் கைகாட்டி அருள் தருகிறான்.
கூடல் அழகர் கோவிலில் சக்கரத்தாழ்வார் சன்னிதி அண்மையில் அமைக்கப்பட்டது. பெருமாள் சன்னிதியிலிருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் பாதையில் இருக்கிறது. அதற்கு முன் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் சுவற்றில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது இருவருக்கும் வழிபாடு நடக்கிறது. திருமோகூருக்குச் செல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்தச் சன்னிதி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நவக்கிரக சன்னிதி அஷ்டாங்க விமான பிரகாரம் நிறைவு பெறும் இடத்தில் (வடகிழக்கு மூலையில்) இருக்கிறது. அது எப்போது அமைக்கப்பட்டது என்று தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இருக்கிறது.
வாங்க குமரன். நீங்க இன்னும் அதிக சிறப்புக்களைத் தருவீர்கள். ஆகவே நேரம் கிடைக்கையில் நீங்களும் எழுதணும். :)
ஜான்சி ராணி பூங்கா விஷயம் புதியது. தெரிந்து கொண்டேன்.
திருப்பல்லாண்டு பற்றிச் சொன்னதற்கும் நன்றி. பட்டர்கள் அவர் இந்த சன்னதியில் பாடியதாகத்தான் கூறினர்.
//பெருமாள் சன்னிதியிலிருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் பாதையில் இருக்கிறது.//
ஆமாம்.
//அதற்கு முன் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடப்பக்கம் சுவற்றில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை மட்டுமே வணங்கிக் கொண்டிருந்தார்கள்//
அப்படியா, நினைவில்லை.
//நவக்கிரக சன்னிதி அஷ்டாங்க விமான பிரகாரம் நிறைவு பெறும் இடத்தில் (வடகிழக்கு மூலையில்) இருக்கிறது.//
ஆமாம், ஆண்டாள் சன்னதியிலிருந்து வந்து, கொடி மரம் பக்கம் திரும்பும் இடத்தில்.
//அது எப்போது அமைக்கப்பட்டது என்று தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இருக்கிறது.//
ஆமாம் :-)
@குமரன், மெளலி அண்ணா
//திருப்பல்லாண்டு பாசுரங்கள் கூடலழகரைப் பாடியதாகத் தான் மரபு. அதனால் நீங்கள் சொன்னது போல் பெரியாழ்வாரும் பாடிய தலம் தான் இது//
//திருப்பல்லாண்டு பற்றிச் சொன்னதற்கும் நன்றி. பட்டர்கள் அவர் இந்த சன்னதியில் பாடியதாகத்தான் கூறினர்//
//ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்//
இதை மட்டும் தான் சுட்டிக்காட்டினேன்!
மங்களாசாசனம் என்பது தலத்தின் பெயரைப் பதிந்து சாசனம் செய்வது!
அப்படிக் கூடலழகர் சன்னிதியை அவர் செய்யவில்லை! அதனால் மங்களாசாசன முறையில் பெரியாழ்வார் பாசுரங்கள் கூடலழகர் கோயிலுக்கு வராது!
மற்றபடி பல்லாண்டு பாடியது இந்த "இடத்தில்" தான் என்பது சரியே! அது மங்கல மரபு!
அப்படிப் பார்த்தால், ஆண்டாளும் கூடிடு கூடலே என்று கூடலழகரைப் பாடி உள்ளாள்! :)
// மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில்
மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.//
மதுரைக்குச் செல்வதே
மீனாட்சி தர்சனத்துக்குத்தானே !
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
கூடல் அழகர் பற்றி எனக்கு தெரிந்த சில...
Pls visit http://maduraikoodalalagar.co.cc/
and give feedback. Thank You
அருமையான பதிவு.
இந்தக் கோவிலுக்குப் போனதை ஒரு நாலைஞ்சுவரி இங்கே எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.
மூணு வருசத்துக்கு முந்திய பதிவு.
http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post.html
http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_31.html
Post a Comment