Thursday, October 9, 2008

விஜய தசமி - *நவராத்திரி சிறப்பு இடுகை - 12*மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுல வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி

மாணிக்கத்தாலான வீணையை வாசிப்பவள் (இந்த வீணைக்கு மஹதி என்று பெயர்), அழகான வாக்கு உடையவள், மஹேந்திர நீலம் போன்ற காந்தி உடையவள் மதங்கரின் பெண்ணாகப் பிறந்தவள், அவளுக்கு நமஸ்காரம்.(சியாமளா தண்டகம்)

அன்னை சரஸ்வதீயின் இன்னொரு ரூபமே லகு-சியாமளா எனப்படும். இவளது அருள் இருந்தால் எல்லா கலைகளும் லகுவாக சாதகனுக்கு அப்யாசம் ஆகும். இவளே வாக்வாதினி என்றும், சாரதா என்றும் கூறப்படுபவள். குருவினிடத்து சந்தேகங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தைக்குப் பொருள். குருநாதர்கள் சில அரிய விஷயங்களை பலதடவை கேட்டாலன்றி உபதேசிக்க மாட்டார்கள். மேலும் சில விஷயங்களை பலமுறை கேட்டு/படித்தால் தானே மனதில் வாங்கிக் கொள்ள முடிகிறது. ஆகையால் வாக்வாதினி என்பதற்கு குருவாக இருந்து பலமுறை சொல்லிப் புரியவைப்பவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

இப்படி பலவாறு துதிக்கப்படும் சரஸ்வதி தேவியின் கருணாகடாக்ஷம் நமக்கு எல்லாவற்றையும் அருளக்கூடியது. இந்த விஜய தசமி நாளில் நாம் துவங்கும் எல்லா புதிய முயற்சிகளுக்கும், குறிப்பாக வித்யாரம்பம் போன்றவை பல மடங்கு அபிவிருத்தி ஆகி வெற்றியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, (அ) வீட்டிலேயே வித்யாரம்பம் செய்வது, நடனம், சங்கீதம், வீணா, வேணு, வயலின் போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் நலம். முன்பே கற்க ஆரம்பித்தவர்களும் முதல் நாள் சரஸ்வதி பூஜையில் வைக்கப்பட்ட புத்தங்கள், வாத்தியக் கருவிகள், மற்றும் தமது தொழிலுக்கான கருவிகளை விஜய தசமி பூஜை முடிந்து உபயோகம் செய்தல் நலம் என்று கூறப்படுகிறது. இந்த நல்ல நாளில் தமது குருவுக்கு வந்தனங்கள் செய்து குரு-தக்ஷிணை அளித்து வணங்குதல் மரபு.

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் காலத்தின் கடைசி ஒரு வருடம் அக்ஞாத வாசத்தின் போது வன்னி மரப் பொந்தில் அர்ஜுனனது காண்டீபம் முதலான ஆயுதங்களை யாருக்கும் தெரியாது ஒளித்து வைக்கின்றனர். துரியோதனன் இவர்களை வெளிப்படுத்த முயலும் போது உத்தரனை முன்னிருத்திக் கொண்டு வன்னி மரப் பொந்தில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து போரிட்டு கெளரவர்களை வெல்கிறான் விஜயன். அவன்
இவ்வாறு அந்த போரில் வெற்றி பெற்ற நாளே விஜய தசமி என்றும் கூறப்படும். இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான்.

இவ்வாறு சிறப்புற்ற இந்த நல்ல நாளில் அன்னை பராசக்தி மகிஷன் உள்பட்ட எல்லா அசுரர்களையும் வென்று ராஜ்யாபிஷேகம் செய்து கொண்டாள் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக ராஜ்ய லக்ஷ்மி, பராசக்தி, மற்றும் ஞானஸ்வரூபியான வாகீஸ்வரி போன்ற தேவதைகளை வணங்கி அவர்களை பலவிதங்களிலும் ஆராதித்து அவர்களது அருளை வேண்டுவோம். வித்யைகள் பலவற்றை நமக்கு கற்றுக் கொடுத்த ஆச்சார்யர்களுக்கும், குருவிற்கு இந்த நன்னாளில் அனந்த கோடி நமஸ்காரங்கள் செய்து அவர்களது அருளை, ஆசிகளை வேண்டுவோம்.

அன்னைக்கு பூ மாலைகளும், பாமாலைகளும் சூட்டி அவளருளை வேண்டுவது நமது வழக்கம். அதன்படி இந்த பதிவுடன் நவராத்திரி சிறப்புப் பதிவுகள் முடிவுக்கு வரும் இவ்வேளையில் அவளருள் வேண்டி பாமாலை சாற்றியுள்ளார் நமது கவிக்கா என்று அழைக்கப்படும் கவிநயா. அவரது கவிமாலையைக் கீழே தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், அவர் எனது இந்த வலைப்பூவில் அன்னைக்கு கவிதாஞ்சலி செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தவுடன், தயங்காது எழுதிக் கொடுத்து, பல மாற்றங்களையும் செய்தார். கவிநயா அக்காவுக்கும், மஹாத்மியம் அருளிய தம்பி கணேசன் மற்றும் இந்த 12 நாளும் அன்னையின் சிறப்புக்கள் பலவற்றை எழுத காரணமான எல்லா நண்பர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் எல்லோருக்கும் பராம்பிகை சகல செளபாக்யங்களையும் அருள இந்த நன்னாளில் பிராத்திக்கிறேன்.


மகிஷனின் மமதையை அழித்திட உதித்திட்ட
மங்கையர்க் கரசி மாசக்தி!
விகசிக்கும் ஒளியென விண்ணிலே சுடரென
என்னுள்ளே ஒளிர்ந்திடும் ஸ்ரீசக்தி!
தேவர்கள் பணிந்திட மூவரும் போற்றிட
ஆயுதம் தரித்திட்ட ஆதிசக்தி!
நாவலர் பாவலர் நயமுடன் போற்றிடும்
நாரா யணியே நவசக்தி!

அலைகட லெனஅருள் பொழிந்திடு வாய்
அலைமகளே எழில்மிகு அலர்மகளே!
முழுநில வெனஒளிர் செழுமல ரழகே
முகில்வண்ணன் மார்பினில் உறைபவளே!
வாரிதி யினிலே வந்துதித் தவளே
வானவர் வணங்கிடும் வசுந்தரியே!
நீள்நிலம் காத்திடும் நாய கியேநில
மகளே பங்கயத் திருமகளே!

அறிவிருள் நீக்கி அருள்கலை மகளே
கலைகளின் ராணி கலைவாணி!
நெறியினில் நிறுத்தி பிணியினை போக்கும்
பிரம்மனின் சகியே எழில்வேணி!
வெண் டாமரையில் வீற்றிருக் கும்பெண்
தாமரையே எங்கள் பாமகளே!
ஒன்றாய் பலவாய் திருவாய் திகழ்ந்தென்றும்
நன்றே நல்கிடும் நாயகியே!

அன்னை சக்திஉந்தன் அடிபணிந் தோமே
அம்பிகை யுன்திரு வடிசரணம்!
பண்ணில் உனைவைத்து பாடிவந் தோமே
பர்வத புத்திரி பதம்சரணம்!
விண்ணில் உறைபவரும் போற்றிப் பணிகின்ற
விடைவா கனன்துணை யேசரணம்!
மண்ணில் உழல்கின்ற மாந்தருக் கருளிடும்
மங்கையுன் மலரடி கள்சரணம்!

--கவிநயா

13 comments:

கவிநயா said...

ரொம்ப அழகாக எழுதறீங்க மௌலி. நீங்க எப்பவும் அன்னை பற்றி இப்படி எழுதவும் நாங்க படிக்கவும், அவள் அருளட்டும்.

ஸ்லோகம் எல்லாம் பொருள் தெரியும்போதுதான் அதனோட அழகே விளங்குது. பரவாயில்ல.. சொல்றதுக்கு நீங்களாச்சும் இருக்கீங்களே :)

என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து கவிதாஞ்சலி செய்ய கேட்டதுக்கு நன்றி. அன்னையை பாடக் கிடைத்த வாய்ப்பு கசக்குமா என்ன?

//நண்பர்கள் எல்லோருக்கும் பராம்பிகை சகல செளபாக்யங்களையும் அருள இந்த நன்னாளில் பிராத்திக்கிறேன்.//

நானும்.

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா.

பாராட்டுக்கு நன்றி...நான் எங்க எழுதினேன்...எல்லாம் அவளருள்.

ஏதோ எனக்கு தெரிஞ்ச பொருளைச் சொல்லியிருக்கேன். இவற்றை இன்னும் அழகாகச் சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன்.

பாடல் எழுதி அளித்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக்கறேன். :-)

Anonymous said...

கவினயாகா, காய்ச்சிய பாலில் கற்கண்டு இட்டு அதில் கொஞ்ஜம் தேன் கலந்து ஏலம் பச்சைகற்பூரம் குங்கும பூ இட்டு அதை தேவிக்கு மறக்காமல் படைத்த நைவேதன பால் போல் உள்ளது உங்கள் பாமாலை வாழ்த்துக்கள்.

தம்பி

கவிநயா said...

அடடா, மிக்க நன்றி தம்பி :) உங்க அன்பான வார்த்தைகள் கண்களைப் பனிக்கச் செய்தன. அவளை என்றும் பாடிக் கொண்டிருக்க அவள்தான் அருள வேண்டும்.

அது சரி... இவ்ளோ அழகா எழுதறீங்களே, நீங்க எப்ப வலைப்பூ ஆரம்பிச்சு மணம் பரப்ப போறீங்க? சீக்கிரம்... சீக்கிரம்! :)

Sumathi. said...

ஹாய் மெளலி,

//இந்நாளில் அவரவர் தமது தொழிலுக்கு மூலதனமான ஆயுதங்களை வைத்து பூஜை செய்வதும் இதனால் தான்.//

அட இப்படிஒரு அர்த்தம் இருக்கா இந்த தினத்துக்கு? படித்த போது புதுசா இருந்தது. நன்றி மெளலி.

Sumathi. said...

ஹாய் கவினயா,

ரொம்ப அழகாயிருக்கு நீங்க தொ(கு)டுத்த கவிதாஞ்சலி.படித்தவுடன் பொருள் விளங்கியது.தொடரட்டும் இது போல உங்கள் அழகிய பணி.வாழ்த்துக்கள்.

Sumathi. said...

ஹாய் கவினயா,

ரொம்ப அழகாயிருக்கு நீங்க தொ(கு)டுத்த கவிதாஞ்சலி.படித்தவுடன் பொருள் விளங்கியது.தொடரட்டும் இது போல உங்கள் அழகிய பணி.வாழ்த்துக்கள்.

கவிநயா said...

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க சுமதி! மௌலிக்கும் அவளுக்கும் சேர்த்துடறேன் :)

மதுரையம்பதி said...

வாங்க தம்பியாரே!!!.

கவிக்கா கவிதையை சரியாகச் சொன்னீங்க. நவராத்திரி சிறப்பு இடுகைகள்ல உங்க ரெண்டுபேர் பங்கும் மிக அழகு...நன்றிகள் இருவருக்கும்.

மதுரையம்பதி said...

வாங்க சுமதியக்கா...வருகைக்கு நன்றி...கவிக்காவின் வலைப்பூ மற்றும் அம்மன் பாடல்கள் வலைப்பூ பக்கம் சென்று பாருங்க...அசத்தியிருக்காங்க... :)

மதுரையம்பதி said...

//மௌலிக்கும் அவளுக்கும் சேர்த்துடறேன் :)//

அவளுக்குச் சரி, அதென்ன எனக்கு?...எல்லாம் அவளுக்கே!!!

குமரன் (Kumaran) said...

அருமையான முத்தாய்ப்பு மௌலி.

கவிநயா அக்கா இன்னும் எத்தனை பேருக்குத் தான் பாட்டு எழுதிக் கொடுத்திருக்கிறாரோ? வாக்விலாஸினி அவர் - வாக்விலாஸினியின் அருளைப் பெற்றவர் - எத்தனை வேண்டுமானாலும் எழுத முடியும். :-)

கவிநயா said...

//வாக்விலாஸினியின் அருளைப் பெற்றவர் - எத்தனை வேண்டுமானாலும் எழுத முடியும். :-)//

நன்றி குமரா. அப்படியே ஆகட்டும். எப்போதும் அவளைப் பாடிக் கொண்டிருக்க அவள் அருளட்டும் :)