Wednesday, October 8, 2008

சரஸ்வதியை வணங்குவோம் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 11*

வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதீ பூஜை. "மூலேநா ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்" என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புன:பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.


நாத்யாபயேந்ந ச விஸேத் நா அதீயீத கதாசந
புஸ்தகே ஸ்தாபிதே தேவீம் வித்யாகாமோத் விஜோத்தம

என்பதாக புஸ்தகங்களில் ஆவாஹனம் செய்துவிட்ட பிறகு எந்த வித்யையும் புதிதாக கற்கவும், கற்பிக்கவும் கூடாது என்பது சம்பிரதாயம். இதனால்தான் சாதாரண நாட்களில் குழந்தைகள் பாடம் படிக்க/எழுதாத போது இன்று என்ன சரஸ்வதி பூஜையா? என்று கேள்வி கேட்பது வழக்கமாயிற்று. அக்ஷர வடிவமான ஸரஸ்வதி இந்த பூஜையால் சந்தோஷமடைந்து நமக்கு நல்லறிவு, நினைவாற்றல் போன்றவற்றை அளித்துக் காப்பார். நல்ல கல்வி, அறிவு, சொல்வன்மை, செல்வம், பதவிகள், விருதுகள் போன்றவற்றை பெற்றுத்தரும் சரஸ்வதியை போற்றும் விதமாக தேவகுரு பிரஹஸ்பதியால் இயற்றப்பட்ட ஒரு ஸ்தோத்ரம் பத்ம புராணத்தில் இருக்கிறது. அதனை இன்று பார்க்கலாம்.

சரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ரிதிஸ்திதாம்
கண்டஸ்த்தாம் பத்மயோநேஸ்து ஹிமாகர ப்ரியாஸ்பதாம்

அனைத்து உயிர்களின் இதயத்திலும், தனது கணவரான பிரம்ம தேவனது கழுத்தில் இருப்பவளும், சந்திரனுக்கு எப்போதும் பிரியமுள்ளவளுமான ஸ்ரீ சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

மதிதாம் வரதாம் ஸுத்தாம் வீணாஹஸ்த வரப்ரதாம்
ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதி த்வம்ஸ காரிணீம்

நல்லறிவினையும், உயர்ந்தவையெல்லாம் தருபவளும், தூய்மையானவளும், கையில் வீணையுடன் விரும்பிய அனைத்தையும் தருபவளும், ஐம் என்னும் பீஜம் போன்ற மந்திரங்களில் ப்ரியமுள்ளவளும், தரம் தாழ்ந்த புத்தியுடையவர்களை நாசம் செய்பவளாகவும் விளங்கும் சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.


ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
ஸுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் ஸுபாங்காம் ஸோபனப்ரதாம்

நல்ல ஒளியாக இருப்பவளும், அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குபவளும், வெண்மையானவளும், வீடு பேறு அருளுபவளூம், மிக அழகான அங்கங்களை உடையவளும், எப்போதும் மங்களத்தை அருளுபவளுமான சரஸ்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் ஸுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்ய-மண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்

தாமரையில் அமர்ந்திருப்பவளும், சிறந்த காதணிகளை அணிந்தவளும், வெண்மையான நிறத்தவளும், மனதிற்கு சந்தோஷத்தை அருளுபவளூம், ஸுர்ய மண்டலத்தில் வசிப்பவளும், மஹாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான சரஸ்வதியை நமஸ்கரிக்கிறேன்

இதி மாஸம் ஸ்துதானேன வாகீஸேன மஹாத்மனா
ஆத்மானம் தர்ஸயாமாஸ ஸுரதிந்து ஸமப்ரபாம்
ஸரஸ்வத்யுவாச:, வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸிவர்த்ததே


இவ்வாறாக பிருஹஸ்பதியால் ஒரு மாதம் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட சரத்கால சந்திரன் போன்ற ஒளியுடன் கூடிய வாக்தேவி அங்கு பிரத்யக்ஷமாகிறாள். அப்போது அவள், "உனக்கு மங்களம் உண்டாகட்டும், உனது விருப்பத்தை கேள்" என்று கூற;

ப்ருஹஸ்பத்யுவாச:, யதி மே தேவி ஸ்ம்யக் ஞானம் ப்ரயச்சமே

பிருஹஸ்பதியும், "ஹே தேவி எனது விருப்பங்கள் எல்லாம் நல்ல அறிவு மட்டுமே, அதை அருளுங்கள்" என்கிறார்.

ஸரஸ்வத்யுவாச, இதம் தே நிர்மலம் க்ஞானம் அக்ஞான திமிராபஹம்
ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தெளதி ஸம்யக் வேதவிதோ நர:
லபதே பரமம் க்ஞானம் மம துல்ய பராக்ரமம்
த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா
தேஷாம் கண்டே ஸதா வாசம் கரிஷ்யாம ந ஸம்ஸய:

சரஸ்வதியும், "அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்கும் தூய ஞானத்தை உனக்குத் தருகிறேன். மற்றும் இந்த ஸ்லோகத்தை படிப்பவர்கள் உயர்ந்த ஞானத்தை அடைவர். காலை-மதியம்-மாலை ஆகிய மூன்று வேளையும் யார் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் வாக்கில் நானிருப்பேன்" என்கிறார்.

இவ்வாறு சகல வித்யைகளையும், ஞானத்தையும் அருளும் அன்னை மஹா-சரஸ்வதியின் சரணாரவிந்தங்களைப் பணிந்து, ஞானதேவி நம் சொல், செயல், சிந்தனைகளை சீர்படுத்த வேண்டுவோமாக.

சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காம-ரூபிணீம்
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே சதா

7 comments:

கவிநயா said...

ஸ்லோகமும் பொருளும் அருமையாய் இருந்தது. நன்றி மௌலி.

அஞ்ஞான இருளகற்றி
மெய்ஞான ஒளியேற்றும்
கலைமகளின் கவின்பதங்கள்
சரணம் சரணம்!

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கா...தசரா நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

நிதானமாக சுலோகங்களை படித்து முடித்தேன்!
சரஸ்வதி நமோஸ்துதே!

Sumathi. said...

ஹாய் மெளலி,

நானும் படித்தேன். அப்படியே ஒரு அட்டண்டன்ஸும் போட்டுடறேன்.

மதுரையம்பதி said...

வாங்க ஜீவா..வந்து படித்து பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி :)

மதுரையம்பதி said...

வாங்க சுமதியக்கா. அட்டெண்டன்ஸ் மார்க் பண்ணியாச்சு :)

குமரன் (Kumaran) said...

அருமையான ஸ்தோத்ரம் மௌலி. ஸ்தோத்ர மாலாவிலும் இட்டுவிடுங்கள்.