Monday, September 29, 2008

நவராத்திரி விரதம் சில குறிப்புகள் - *நவராத்திரி சிறப்பு இடுகை - 2*


நவராத்திரி என்பது சாதாரணமாக ஆவணி கடைசி அல்லது புரட்டாசியில் வருவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் அம்பிகையை வழிபட நான்கு நவராத்திரிகள் உண்டென்பது தெரியுமா?. புரட்டாசியில் வரும் (இன்று ஆரம்பிப்பது) சரன் நவராத்ரி என்று பெயர். இது போலவே வசந்த காலத்தில் ராம நவமிக்கு முன் வருவது வசந்த நவராத்த்ரி என்பர். இது போலவே மற்ற இரு ருதுக்களிலும் நவராத்ரி உண்டு. அது பற்றி பின்னர் வேறு இடுகையில் காணலாம். இன்று நாம் காண இருப்பது புராணங்களில் பலரால் செய்யப்பட்ட நவராத்திரி விரதங்களும் அதன் பலனாக அவர்கள் அடைந்தவைகளும் மட்டுமே. கீழே கூறப்பட்டுள்ள சம்பவங்கள் தேவி பாகவதத்தில் வேத வியாசர் கூறியவை

இராமாயணத்தில் நவராத்ரி:
வனவாசத்தில் சீதா தேவியை இழந்த ராமர் சுக்ரீவனுடன் எற்பட்ட தொடர்பில் சுக்ரீவனது உதவியை நாடி, அவனுக்காக வாலியை வதம் செய்கிறார், பின்னர் சுக்ரீவனுக்கு அரசுப்பட்டத்தை அளிக்கிறார். அவ்வாறு அரசுரிமை பெற்ற சுக்ரீவன் ராமனுக்கு செய்ய வேண்டிய உதவியினை மறந்து சுக போகங்களில் மூழ்கிவிடுகிறான். அப்போது ராமர் வருந்தியிருக்கையில் அங்கு வந்த நாரதர் ராமனது கலக்கத்தை போக்கும் விதமாக அவனிடத்திலே தேவியின் நவராத்ரி விரதத்தை கடைபிடித்து வெற்றியை கைப்பற்ற கூறுகிறார். ராமனோ, தானிருப்பதோ கானகம், அங்கே எப்படி இம்மாதிரி விரதம்/விழா போன்றவற்றை கடைபிடிக்க இயலும் என்று கேட்க, நாரதர் 'வன்ய நவராத்ரி' பற்றி கூறி அதனை கடைபிடிக்க கூறுகிறார். வனத்தில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு செய்வது வன்ய நவராத்திரி என்று பெயர். கூறியதுடன் நில்லாத நாரதர், தாமே முன்னிருந்து அவ்விரத பூஜைகளை ராமனுக்கு செய்து கொடுக்கிறார். இந்த நவராத்திரி விரத பலனே ராமனுக்கு ஊக்கம் அளித்ததாம். இதன் பிறகே லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனுக்கு தனது நிலையினை எடுத்துரைக்க வைத்து அவனது முயற்சியை பெறுகிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

மஹாபாரதத்தில் நவராத்ரி:
சியமந்தக மணியினை திருடியதாக ஸ்ரீ கிருஷ்ணர் மீது குற்றம் சாட்டப்பட்ட போது கிருஷ்ணர் அந்த மணியினை மீட்பதற்காக காட்டில் இருக்கும் ஜாம்பவானுடன் போருக்குச் செல்கிறார். அப்போது கிருஷ்ணனின் தந்தையான வசுதேவர் தமது மகனது முயற்சி வெற்றியடைய நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார். ஒன்பது நாட்களிலும் அன்னைக்கு ஒன்பது விதமான ஆபரண-அலங்காரங்கள், நிவேதனங்கள் என்று செய்து அவளருளை வேண்டிப் பிரார்த்திக்கிறாராம். அவற்றின் பலனாக கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று சியமந்தக மணியினை திரும்ப பெற்றதுடன் இல்லாது ஜாம்பவானின் புத்ரியான ஜாம்பவதியை திருமணமும் செய்து கொள்கிறார். மீட்ட சமந்தக மணியின் உரிமையாளரான சத்ரஜித்திடம் அதை ஒப்படைக்கையில் அவனும் தமது தவறை உணர்ந்து தனது மகளான சத்ய பாமாவை கிருஷ்ணருக்கு மணம் செய்விக்கிறான். இதெல்லாம் நவராத்ரி விரத்த்தை ஆரம்பித்த வசுதேவர் அதை முடிக்கும் 9 தினங்களுக்குள்ளாக நடந்ததாகவும், கிருஷ்ணர் திரும்புகையில் விஜய தசமி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

சுசீலனது கதை:
முன்னொரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவன் தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை அடைந்து வறுமையால் வருந்தினான். அவன் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இயலாது இருக்கும் காலத்தில் கூட அவன் கர்மானுஷ்டானங்களை விடாது செய்து வந்தான். வறுமையால் வரும் அசுயை, சபலம் போன்றவை நெருங்காது தர்ம சிந்தனையுடன் இருந்தான். ஒருநாள் தமது குடும்பம் உண்ண எப்பொருளையும் சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கையில் ஒரு அந்தணனை காண நேர்கிறது. அப்போது சுசீலன் அந்த அந்தணரிடம் தனது குறைகளைச் சொல்லி தமது குடும்பத்துக்கு உணவு பற்றாக்குறை தீரவும், திருமண வயதை நெருங்கும் தனது பெண் குழந்தைக்கு காலத்தே விவாஹம் நடக்கவும் ஏதேனும் விரதம், பூஜை, தவம் போன்றவை இருக்கிறதா என்று அறிய விரும்புவதாக கூறுகிறான். அப்போது அந்தணர் அவனுக்கு நவராத்திரி விரதத்தைப் பற்றிச் சொல்கிறார். இவ்விரதத்தை பக்தி-சிரத்தையுடன் கடைப்பிடிப்பவன் வாழ்வில் வறுமை நீங்கி சகல சம்பத்துக்களையும் பெற்று வாழலாம் என்று கூறுகிறார். சுசீலனும் அவ்வாறே பக்தி சிரத்தையுடன் நவராத்திரி விரதமிருந்து ஒன்பதாம் நாள் அன்னையின் தரிசனம் கிடக்கப் பெற்று அவனுக்கு தீர்க்க ஆயுளும், சகல-சம்பத்துக்களையும் அருளினாள்.

நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு. குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம்.
குமாரரூய ச தத்வானி யாரூ ருஜத்யயி லீலாய
காதிநபிச தேவாம்ரூதான் குமாரிம் பூஜயாம்யஹம்

குழந்தையினுடைய விளையாட்டுக்களைப் போல் எவள் செய்கிறாளோ, பிரம்மன் முதலான தேவர்கள் எந்த சக்தியின்லீலையால் சிருஷ்டி-ஸ்திதி-சம்ஹாரங்களைச் செய்கிறார்களோ அந்த சக்தியான குமாரியை நான் பூஜிக்கிறேன்

சத்யரதிபிரூ த்ரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநி சக்திரூ த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம்

சத்வம் முதலான குணங்களால் அநேக ரூபங்களாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் போன்ற செயல்களாகவும், காலை, உச்சி, மாலை போன்ற காலங்களாகவும் வியாபித்திருக்கும் சக்தியான த்ரிமூர்த்தியை பூஜிக்கிறேன்.
கல்யாண காரிணீ நித்யம் பக்தானாம் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம்

பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த சக்தியால் மங்களங்களை அருளுகிறாளோ அந்த சக்தியைக் கல்யாணியை வணங்குகிறேன்.
ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவீ சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம்
பல பேதங்களுடைய சகல பிராணிகளின் பூர்வ ஜென்ம கர்மங்களாகிய பாபங்களை எந்த சக்தியால்நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியான ரோஹிணியை நான் பூஜிக்கிறேன்.
காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ சராசரம்
கல்பாந்த சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்

மஹா-பிரளய காலத்தில் அண்ட-சராசரங்களையும் எந்த சக்தியால் சம்ஹரிக்கின்றாளோ அந்தசக்தியான காளியை பூஜிக்கிறேன்.
சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம்
சண்ட-முண்டர்களை வதைத்து அதன் மூலமாக பாதகங்களை தவிர்த்திட எந்த சக்தியானவள் காரணமாகிறாளோ அந்த சக்தியான சண்டிகாவைப் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம்
பரபிரம்மத்தின் விருப்பப்படி எந்த சக்தியினால் திருவுருவங்களை உருவாக்குகிறாளோ அந்தசக்தியான சாம்பவியை நான் பூஜிக்கிறேன்.
துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதிநாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம்
துர்க்கதியை நீக்குபவளாய், தேவர்களாலும் காணப்படாதவளாகவும், பக்தர்களின் துயர் துடைப்பவளாகவும்எந்த சக்தி இருக்கிறாளோ அந்த சக்தியை துர்க்காவாக பூஜிக்கிறேன்.

சுபத்ராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

தனது பக்தர்களுக்கு மங்களங்களைத் தருபவளும், அமங்கலத்தைப் போக்குபவளுமான சக்தியைசுபத்ரா என்ற பெயரில் பூஜிக்கிறேன்.
இவ்வாறு தேவியை ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன விதத்தில் தியானித்து, சகல உபசாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும். நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாவிட்டால், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களிலாவது செய்யலாம். தினம் பூஜை செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று நாட்கள் செய்தாலே 9 நாட்கள் செய்த பலனை அடைவார்களாம்.

14 comments:

திவாண்ணா said...

தெரியாத விஷயங்கள். நல்லா இருக்கு.

pudugaithendral said...

நவராத்திரி 10 நாளும் ஒவ்வொரு தோழிகள் வீட்டில் சேர்ந்து லலிதா ஸஹஸர்நாமம் பாராயணம் செய்து, சுமங்கலிகளுக்கு உணவளிப்போம்.

கடைசி நாளன்று கோயிலில் அம்மனுக்கு புடவை சாத்தி கோயிலில் பாராயணம் செய்து முடிப்போம்.

இனி அவை ஞாபகங்கள் மட்டுமே. இதோ நவராத்திரி வந்து விட்டது. தனியாக லலிதா சொல் கிறேன். மனது இலங்கைக்கு சென்றுவிட்டது.

Geetha Sambasivam said...

//புரட்டாசியில் வரும் (இன்று ஆரம்பிப்பது) சரன் நவராத்ரி என்று பெயர். //

சாரதா நவராத்திரி??????????????

Kavinaya said...

நவராத்திரியின் சிறப்புகளை தியான ஸ்லோகங்களுடன் சொன்னமைக்கு நன்றி மௌலி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ருதுவுக்கு ஒன்றாக நான்கு வித நவராத்திரிகள் என்பது புதிய செய்தி!

படத்தில் இருப்பது அன்னை சாமுண்டீஸ்வரியா?

//புரட்டாசியில் வரும் (இன்று ஆரம்பிப்பது) சரன் நவராத்ரி என்று பெயர். //

அண்ணா
நவராத்திரி பொதுவாக புரட்டாசியில் வருமா, இல்லை ஐப்பசியில் வருமா?
பிரம்மோற்சவமும் புரட்டாசியில் ஒரு முறை, பின்னர் ஐப்பசியில் நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் கொண்டாடப்படுகிறது. ஏனோ?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா...பாராட்டுக்கு நன்றி.ஏதோ எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கேன். தவறு இருந்தாலும் சுட்டத் தயங்க வேண்டாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க புதுவையக்கா. மிக விசேஷமான காரியங்களைச் செய்திருக்கிங்க...

தங்கள் வருத்தத்தை உணர முடிகிறது. அந்த தேசத்திலும் விரைவில் அமைதி திரும்பி உங்களுடன் பாராயணம் செய்தவர்கள் அதனை தொடர இறைவி அருளட்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா,

சரத் ருதுவில் வருவது சரத்+நவராத்ரி=சரன் நவராத்ரி என்பர். சாரதா நவராத்ரி என்றும் கூறப்படும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா.

//தியான ஸ்லோகங்களுடன்//

ஆமாம், வணங்குபவர்களுக்கு உதவுமே என்றுதான் அதனையும் அளித்தேன். இந்த ஸ்லோகமானது தேவி பாகவதத்தில் வருவது.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்.

படம் சாமுண்டிதான்.

சரத் ருதுவில், மஹாலய அமாவாசைக்குப்பின் வரும் பக்ஷத்தில் நவராத்ரி.

திருப்பதியில் நவராத்ரியில் ஒரு பிரம்மோற்சவம் உண்டு என்ற அளவில் மட்டுமே தெரியும், இன்னொன்று உண்டு என்று அறிந்தாலும் அது எதை அடிப்படையாக வைத்துச் செய்கிறார்கள் என்று தெரியாது.

ambi said...

பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்னு சொல்லிக்கறேன்.

சாமுண்டி படம் ரொம்ப நல்லா இருக்கு.

மைசூர் வரை ஒரு தடவை போயும் இன்னும் பாக்க நேரம் வரலை.

குமரன் (Kumaran) said...

கதைகளையும் தியான சுலோகங்களையும் படித்தேன் மௌலி. தியான சுலோகங்கள் கொஞ்சம் கடினமாக இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் அவற்றை ஸ்தோத்ர மாலாவில் எழுதும் போது (!!!) இன்னும் கொஞ்சம் விவரித்துப் பொருள் சொல்லுங்கள். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி...மைசூர் சாமுண்டி உங்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் தரிசனம் தருவா....வெயிட் பண்ணுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//தியான சுலோகங்கள் கொஞ்சம் கடினமாக இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் அவற்றை ஸ்தோத்ர மாலாவில் எழுதும் போது (!!!) இன்னும் கொஞ்சம் விவரித்துப் பொருள் சொல்லுங்கள். :-)//

ஓ! ஆமாம் நான் அதுல வேற இருக்கேன்ல்ல :)

சரிங்க குமரன்...ஒரு இடுகையாச்சும் அதுலயும் போட்டுட்ட முயல்கிறேன்.