இந்த நவராத்திரிக்கு எழுதும் பதிவுகள் பெரும்பாலும் இதனை அடிப்படையாக கொள்ள இருக்கிறேன். நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.
இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.
ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை.
நவராத்ரி பூஜை 9 நாட்கள் என்றாலும் இதை செய்பவர்கள் மேற்ச் சொன்னபடி கலசத்தில் அம்மனை ஆவிர்பஹித்தல், கொலு வைத்தல் ஆகியவற்றை அமாவாசையன்றே ஆரம்பிப்பது வழக்கம். அது போல அமாவாசையாகிய இன்று, இந்த இடுகையுடன் மதுரையம்பதியில் நவராத்ரி ஆரம்பிக்கிறது. முப்பெருந்தேவியர் அருள்வேண்டி, இன்று முதல் தினம் ஒரு இடுகை இந்திய நேரப்படி மாலையில் இங்கே இடப்படும்.
பராம்பிகை திருவடிகளே சரணம்.
10 comments:
இனிய நவராத்ரி வாழ்த்துக்கள் மௌலி. தேவி-மஹாத்மியம் தாங்கள் படித்துக் கேட்க காத்திருக்கிறோம், வரும் நாட்களில்.
//மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். //
இது 'கீழிருந்து வருகையில்' என்றிருக்க வேண்டுமோ? அல்லது 'கீழிருந்து மேலே செல்கையில்...'?
ஒன்பதாவது படிக்கு எதேனும் குறிப்புகள் உண்டா?
நவராத்ரின்னாலே தனி மகிழ்ச்சி. கொலு வைக்கிற பழக்கமெல்லாம் இல்லைன்னாலும் :) ஜீவாவோட கேள்வி எனக்கும் வந்தது. 9 படிகள்லயும் என்ன வைக்கணும்னு விவரமா சொல்லுங்களேன்.
தேவி பாகவதம் கேட்க வெயிட்டிங்... கொலு படம் சூப்பர். நன்றி மௌலி.
அன்னையின் திருவடிகள் சரணம்.
வாங்க ஜீவா.
மரப்பாச்சியில் மனிதர்களது உருவம் இருப்பதால் அதை கீழே வைப்பதும், மேல் படியில் இறை உருவங்களை வைப்பது உண்டு. ஆனால் மரப்பாச்சியை செய்யும் கருங்காலி மரத்தின் சிறப்பால் அதை அக்னி ரூபமாக நினைத்து அதையும், கலசத்தையும் வைத்து அவற்றை இறையாக உணர்ந்து மேலே முதல் படியில் வைப்பதும் உண்டு. இவை எல்லாம் அவரவர் இல்லத்தில் வழக்கத்தினை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.
மேல் படியில் இறைவனும், பின்னர் படிப்படியாக கிழே வருகையில் தேவர்கள், முனிவர்கள் பிறகு மனிதர்கள், அதற்கும் கிழே பிற ஜீவ ராசிகள், புற்-பூண்டுகள் என்று கொண்டு செல்லப்படும். அதாவது கீழிருந்து மேலே செல்ல எல்லா ஜீவனுக்கும் வழியுண்டு...அந்த ஜீவன்கள் இறையாக முடியும் என்ற தாத்பர்யம்.
வாங்க கவிக்கா..
//நவராத்ரின்னாலே தனி மகிழ்ச்சி. கொலு வைக்கிற பழக்கமெல்லாம் இல்லைன்னாலும் :) ஜீவாவோட கேள்வி எனக்கும் வந்தது. 9 படிகள்லயும் என்ன வைக்கணும்னு விவரமா சொல்லுங்களேன்.//
மேலே ஜீவாவின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க.
//தேவி பாகவதம் கேட்க வெயிட்டிங்... கொலு படம் சூப்பர். நன்றி மௌலி.//
முழுதும் எழுத இப்போ முடியாதுங்க...
ஆனா ஆரம்பத்தை மட்டுமே சொல்லப் போகிறேன். மற்றவை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக படித்து பின்னர் எழுதறேன்.
கொலுப்படம் கூகிளாண்டவர் உபயம்..யார் வீட்டு கொலுவோ, நல்லாயிருக்கு, எல்லா வருடங்களும் அவர்கள் இல்லத்தில் இவ்வாறு நடக்க இறைவி அருளட்டுமுன்னு இங்கே பிரார்த்திக்கறேன்.
மௌலி.
நவராத்திரி நல்வாழ்த்துகள்.
தேவி மஹாத்மியப் பாராயணத்தை எல்லோரும் செய்ய அனுமதியில்லை; நவாக்ஷரி போன்ற மந்திர உபதேசம் பெற்றவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த மந்திர உபதேசம் பெறுவதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு - குலம், கோத்திரம், ஜாதி என்ற எந்த வேறுபாடும் இன்றி நம்பிக்கை உள்ளோர் எல்லோருக்குமே அந்த அதிகாரம் உண்டா?
வாங்க குமரன்.
வடக்கே ஜாதி வேறுபாடின்றி ஜபம், மஹாத்மிய பாராயணம் தினமும் 1 வேளை மட்டும் உணவு என்று தீவிரமாக நவராத்ரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்திலும், ஆந்திராவிலும், சில குருமார்களால் அன்னையின் மந்திரங்கள் எல்லோருக்கும் (ஜாதி-மத வேறுபாடின்றி)உபதேசம் செய்யப்படுகிறது குமரன்.ஆனால் பஞ்சாக்ஷரம் போல் அல்லாது இதற்கு புரசரணங்கள் அவசியம்..எல்லோருக்கும் உபதேசம் செய்பவர்கள் குறைவு.
மாந்திரீகர்கள் எல்லா ஜாதியிலிருந்தும் வருகிறார்கள். அவர்கள் வாமாசார மார்க்கத்தில் மந்திர உபதேசம் பெற்றுத்தான் அக்கலையில் உயர்கிறார்கள்...
அன்பர்களுக்கு இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒரு பாராயண சுலோகம்/செய்யுள் தாருங்களேன் மெளலி அண்ணா!
//அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை//
தத்துவார்த்தமான நிலைகள்!
பீதி என்பது ஒரு நிலையா?
சலிப்பு தாபம் எல்லாம் சரி தான். அன்னையவள் அபயம் இருக்க, பீதி எப்படி?
வாங்க கே.ஆர்.எஸ்
//ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒரு பாராயண சுலோகம்/செய்யுள் தாருங்களேன் மெளலி அண்ணா!//
அடுத்த பதிவில் இருக்குங்க...
பீதி என்பதில் மரணபயம் என்ற நிலையைச் சொல்லியிருக்கிறேன்
வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment