Monday, June 2, 2008

ஐம்பத்து ஒன்றும் அன்னை பராசக்தியும் - 2



இந்த கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான், கதையின் ஒரு பகுதி எல்லோருக்கும் தெரிந்தாலும், அரிதான சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக சொல்ல முயல்கிறேன்.

சிருஷ்டித் தொழிலைச் செய்ய தனக்கு அடுத்தபடியாக பிரும்மா பத்து பிரஜாபதிகளை உருவாக்கினார். இவர்கள் ப்ரும்மாவின் மானச புத்திரர்கள் என்பர். இந்த பிரஜாபதிகளே உலகில் உள்ள புல்-பூண்டு, மக்கள், பிராணி, பக்ஷிகளை உண்டாக்குபவர்கள். இந்த 10 பேரில் ஒருவர்தான் தக்ஷ பிரஜாபதி என்று அழைக்கப்படும் தக்ஷன். தாரணி என்னும் பெண்ணை மணந்த தக்ஷன் உலகில் படைப்புக்காக பல குமாரர்களைப் பெற்றார். ஆனால் நாரதர் இந்த குமாரர்களுக்கு உபதேசம் செய்து, உலக வாழ்வில் விருப்பமில்லாத தவசிகளாக மாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த தக்ஷன் நாரதரை, நிலையற்றுத் திரிந்து கொண்டேயிருக்கவும், கலகப்ரியனாகவும் இருக்க சபித்து விடுகிறார். இதற்கிடையில் தக்ஷனின் இன்னொரு மனைவியான அசக்னி பல பெண்களை பெறுகிறாள். இவர்கள் கன்னிகைகளாகும் சமயத்தில் சந்திரனுக்கு 27 பெண்களையும் (நக்ஷ்த்திரங்கள்), காச்யபர், ஆங்கீரஸர், கிரிசுவா போன்றவர்களுக்கும் மணம் செய்விக்கிறார்.


அப்போது பிரும்மா தக்ஷனை நீண்ட தவம் செய்யப் பணித்து, தவத்தின் பயனாக லோகமாதா அன்னை பராசக்தியே மகளாக, தாக்ஷாயினியாகப் பிறக்கிறார். காலக்கிரமத்தில் கன்னிப் பருவம் அடைந்த தாக்ஷாயினி மனதில் ஈஸ்வரனையே பதியாக வரித்து, அனுதினமும் பூஜித்து, அவரை அடைய பல விரதங்கள் இருந்தாள். அப்போது ஈசன் நீண்டகாலமாக யோக நித்திரையில் இருப்பதால் சிருஷ்டி பாதிப்படைக்கிறது. ப்ரம்மாவும், விஷ்ணுவும் ஈசனை யோகத்திலிருந்து மீளப் ப்ரார்த்திக்க, ஈசனும் கண்விழித்து தாக்ஷாயினியை ஏற்க முடிவு செய்கிறார்.

ஒரு நன்னாளில், சுபயோக, சுபஹோரையில் ப்ரம்மா, விஷ்ணு, மற்றூம் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் தக்ஷனின் கடைக்குட்டியான தாக்ஷாயினிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. பெண்ணை மணமுடித்துக் கொடுத்த தக்ஷன் சில காலம் சென்று, தனது மகளை காணும் ஆவலில் கைலாயம் செல்கிறார். அவர் கையிலை அடையும் முன்பே வாயிலில் இருந்த சிவகணங்கள் அவரை போகவிடாது தடுத்து பலவாறு கேலி செய்தனர். இதனால் மிகுந்த அவமானம் அடைந்த தக்ஷன் மனம் நொந்து, மகளை பார்க்காமலேயே திரும்பிவிடுகிறான். இதன் காரணமாக கையிலை வாசனை மட்டம் தட்ட எண்ணி, வேண்டுமென்றே ஒரு பெரிய வேள்வியை செய்யத் துவங்கி நாராயணனை வேள்விக்கு அதிபதியாக்கி, சிவனை அவமதிக்க முற்படுகிறார். தனது பிறந்த வீடு என்கிற பாசத்தால் ஈசனது சொல்லைக் கேளாமல் பிறந்தகம் சென்று, அங்கு தன் கணவருக்கும் தனக்கும் நேர்ந்த தூஷணையால் மிகுந்த கோபமடைந்து தக்ஷனால் தனக்கு ஏற்பட்ட உடலை துறக்க முடிவு செய்கிறாள்.

தக்ஷனால் யாகத்திற்காக ஏற்பட்ட அக்னியில் திடீரெனப் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். உடலில் இருந்து உயிர் போனாலும் அக்னி அந்த புனித உடலைத் தீண்டவேயில்லை. இதனாலேயே தாக்ஷாயினி சதிதேவி என்ற பெயர் பெறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளை நாரதர் கையிலையில் இருக்கும் ஈஸ்வரனுக்கு சொல்ல, மிகுந்த ரெளத்திரத்துடன் யாகசாலையினை அடைந்த ஈசன் தனது சடையினை வேகமாக தரையில் ஓங்கி அடிக்கிறார். அந்த சடையிலிருந்து வீரபத்ரர் மிக உக்ரத்துடன் தோன்றுகிறார். ஈஸ்வரனது கட்டளைப்படி, தக்ஷனது யாக சாலையினை சின்னாபின்னப்படுத்தி, தக்ஷன் தலையைக் கொய்து வேள்வித் தீயில் எறிந்துவிடுகிறான். அப்போது உயிரற்ற பகவதியின் உடலைக் கண்ட மஹாதேவன் கடும் கோபத்துடன் தாக்ஷயினியின் உடலை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டு கூத்தாட ஆரம்பித்துவிட்டார். அது சாதாரணக் கூத்தல்ல, ஊழிப் பெரும் கூத்து, அண்டசராசரங்களும் ஆட ஆரம்பித்தது. சூரிய-சந்திரரும், மற்ற தேவர்களும் நிலைதடுமாறினர். ஈரேழு பதினாலு லோகங்களும் ஆடியது. நவக்கிரகங்களும், அஷ்ட திக்பாலகர்களும் அவர்களது திசை மாறினர்.

நிலையின் விபரீதம் உணர்ந்த மஹாவிஷ்ணு ஈசனது உக்ரதாண்டவத்தை நிறுத்த ஒரே வழி சதிதேவியின் உடலை அவரிடமிருந்து பிரிப்பதுதான் என்று முடிவு செய்து தனது சுதர்சன சக்ரத்தை ஏவுகிறார். ஈசனைத் தொடர்ந்த சக்ராயுதம் சதிதேவியின் புனித உடற்பாகங்களை துண்டு-துண்டுகளாக வெட்டி வீழ்த்திக் கொண்டே சென்றது. இவ்வாறு வெட்டப்பட்ட அங்கங்களின் துண்டங்கள் நமது புனித பாரத தேசம் மட்டுமல்லாது பூவுலகம் முழுவதும் வீழ்ந்தன. அந்த இடங்களே நாளடைவில் அம்பாளின் சக்தி பீடங்களாகின. இவ்வாறு சதிதேவியின் இதயத்துக்கு மேலுள்ள அங்கங்கள் விழுந்த இடங்கள் வைதீக மார்க்க சக்தி தரும் திருத்தலங்களாகவும், இதயத்துக்கு கீழ்ப்பட்ட அங்கங்கள் வீழ்ந்த இடம் வாம-மார்க்க சக்தி ஷேத்திரங்கங்களாகவும் ஆனதாக புராணங்கள் சொல்கின்றன. மத்ஸய புராணமும், மகாபாரதமும் இத்தகைய இடங்கள் நூற்றியெட்டு என்று அட்டவணை அளித்தாலும், மற்ற புராணங்கள் 51 இடங்களையே சொல்கிறது. ஐப்பத்தொரு பீஜாக்ஷரங்கள் தோன்றிய இடங்களில் அங்கங்கள் விழுந்ததாகவும், அணிகலன்கள், ஆடைகள் விழுந்த இடங்களையெல்லாமும் சேர்த்து 108 என்பதாகவும் கூறப்படுகிறது.

யோகினி ஹ்ருத்ய தந்த்ரம் தாக்ஷாயினி தந்த்ரம், தந்த்ர சூடாமணி முதலிய நூல்களில் சக்தி பீடங்கள் பற்றி கூறப்பட்டிருந்தாலும், இவற்றுள் வேறுபாடுகள் இருக்கின்றது. இவ்வாறாக பல்வேறு நூல்களும் பல இடங்களைச் சொன்னாலும், ப்ரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவரால் அகஸ்தியருக்கு சொல்லப்பட்ட நியாஸ விதியில் இருப்பதே சிறந்த ப்ரமாணம் என்பார்கள்.

25 comments:

Kavinaya said...

சுபஹோரைன்னா?

//நமது புனித பாரத தேசம் மட்டுமல்லாது பூவுலகம் முழுவதும் வீழ்ந்தன.//

என்னென்ன இடங்கள்னு அடுத்த பதிவுகள்ல சொல்வீங்களா?

ambi said...

ம்ம், பொதுவா படைத்தல் என்பது பிரம்மனின் தொழில் தானே? சிவன் யோக நித்ரையில் இருந்தால் பிரம்மனுக்கு என்ன வந்தது?

ஒரு வேளை சிவன் தான் அப்ரூவ் பண்ண வேண்டிய பிராஜக்ட் மானேஜரா? :p

இதயம் விழுந்த இடம் தான் கொல்லூர் என சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்னாடி தான்) அந்த படத்தில் காட்டினாங்க. உண்மையா?

ambi said...

இன்னோரு கேள்வி, ஏன் 'தமிழ் கடவுளான' நாராயணனை, மாயோனை, ஹோமத்துக்கு தலைவராய் ஏற்க கூடாது?

இதற்க்கு ஏதேனும் தரவு உள்ளதா?

ஒகே! வந்த வேலை முடிந்தது.

ஷ்டர்ர்ட் மீஜிக். :))

(ஒரு ஐம்பது கமண்டாவது அடிக்க வேணாம்?)

பி.கு: என் கேள்வியில் எந்த உள்குத்தும் இல்லை. :p

Kavinaya said...

//இதனால் கோபமடைந்த தக்ஷன் நாரதரை, நிலையற்றுத் திரிந்து கொண்டேயிருக்கவும், கலகப்ரியனாகவும் இருக்க சபித்து விடுகிறார். //

ஏங்க அம்பி, உங்களுக்கும் இப்படி ஏதாச்சும் நடந்ததோ :)

ambi said...

//ஏங்க அம்பி, உங்களுக்கும் இப்படி ஏதாச்சும் நடந்ததோ//


எதுனாலும் நாம பேசி தீத்துக்கலாம் கவிநயா. இப்படி சபைல வார வேணாம். :)

மதுரையம்பதி அண்ணன் போன் போட்டு உங்க கமண்டை சொல்லி கை கொட்டி சிரிக்கறாரு.

Anonymous said...

கவினயா மேடம் கேட்டதற்கு அஹோபில மடத்துக்காராளோட‌
வலைப்பதிவுலே ஆன்ஸர் இருக்கு.

ஹோரை அறிதல் ஒரு நாளுக்கு 24 ஹோரை.
சூ.உ. முதல் மணிக்கு ஒரு ஹோரை.
முதல் ஹோரை தரப்பட்டுள்ளது,
பிறகு வரிசைஎண் படி அடுத்தடுத்தது
திரும்பத் திரும்ப வரும்.
1. ஞாயி - சூரிய (சு,பு,சந்,சனி,கு,செ-சூ)
2. வெள் - சுக்ர (பு,சந்,சனி,கு,செ,சூ-சு)
3. புதன் - புதன் (சந்,சனி,கு,செ,சூ,சு-பு)
4. திங்க - சந்தி (சனி,கு,செ,சூ,சு,பு-சந்)
5. சனி - சனி (கு,செ,சூ,சு,பு,சந்-சனி)
6. வியா- குரு (செ,சூ,சு,பு,சந்,சனி-குரு)
7. செவ் - செவ் (சூ,சு,பு,சந்,சனி,குரு-செ)
சனி,செவ் அசுப ஹோரை.
குரு,சுக் சுப ஹோரை மற்றவை மத்திமம்.

ஒரு காரியத்தை செய்யணும்னு சொன்னா அது என்ன காரியம், விவாஹம், புதுவீட்டுக்கு அஸ்திவாரம், கிருஹப்பிரவேசம், உத்யோக‌ சம்பந்தமா இன்டர்வ்யூ, மேலதிகாரியை ப் பார்க்கிறது உத்யோக பிரமோஷன் பற்றி, பிரயாணம், இதற்கெல்லாம் ஹோரை பார்த்துண்டு போறது நல்லது.(ஒரு புதுசா பதிவு ஆரம்பித்து புதுசா ஒரு இடுகை (அப்படின்னா என்னன்னு இன்னும் புரியல) போடதா இருந்தாலும் ஹோரை பார்த்துண்டு போறது நல்லது. அசுராள் வந்து இடைஞ்சல் பண்ணாம இருக்கணுமே. அதுக்காக. வரமாட்டான்னு நினைச்சுண்டு இருப்போம் . வந்துடுவா. ஆனா எல்லாத்துக்கும் ஹோரையை பார்த்துண்டுதான் போவேன்னு அடம் பிடிக்கக்கூடாது.ஏன்னா, இதைத்தவிர்த்து, ராகுகாலம், எம கண்டம் அப்படின்னு ஏகப்பட்ட சமாசாரம் இருக்கு. இது போக, பஞ்சகம் அப்படின்னு இன்னொரு விஷயம் இருக்கு. திதி, வாரம், நக்ஷத்திரம், லக்னத்தோடு, ராசிகள் ஒவ்வொண்ணுக்கும் ஒரு நம்பர் அதையும் கூட்டி, ஒன்பதால வகுத்து என்ன பஞ்சகம் அப்படின்னு சொல்லுவா பெரியவா. எல்லாம் ஒரு தினுசான க்ளாசிஃபைடு ஸென்ஸிடிவ் சமாசாரங்கள்.ரொம்ப பாத்துண்டே இருந்தா பாத்துண்டே இருக்கவேண்டியது தான். (எந்த வேலையா இருந்தாலும் ஆரம்பிக்கும்போது பிள்ளையாரப்பா அப்படின்னு வேண்டிக்கோங்க . அது போதும் ) மற்றபடி, நமக்கு நல்ல நேரமா இல்லையான்னு ஆத்து வாத்யார்தான் சொல்லணும். அவர் ஒரு வழியாய் பஞ்சாங்கத்தைப் பாத்து தக்ஷிணைக்கு ஏத்த மாதிரி நல்ல நேரமா சொல்லுவார்.

பஞ்சாங்க சந்தேகங்களை விளக்குவதுக்கு
www.ahobilam.org
செல்லவும்.

சுந்தர கனபாடிகள்.
சென்னை.
பி.கு.: சபை இன்னும் களை கட்டலயே ! எப்படிக் கட்டும் ? இன்னும் அந்தக் கண்ணபிரான் ஸார் வரவில்லையே !!

குமரன் (Kumaran) said...

சக்தி பீடங்கள் தோன்றிய வரலாற்றை மீண்டும் ஒரு முறை படித்தேன். நன்றி மௌலி.

அம்மையின் இடுப்பிற்கு/தொப்புளுக்கு மேல் பாகங்கள் விழுந்த பகுதி, கீழ் பாகங்கள் விழுந்த பகுதி என்றே படித்ததாக நினைவு. நீங்கள் இதயத்திற்கு மேல்/கீழ் என்று பிரித்து சொல்லியிருக்கிறீர்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிநயாக்கா...

சுபஹோரை பற்றி கீழே நம்ம சுந்தரகனபாடிகள் சொல்லியிருக்காரு பாருங்க...நம்ம சுப்பைய்யா வாத்தியாரும் அவரது வலைப்பூல சொன்ன நினைவு....பாத்துக்கறீங்களா?

51 இடங்கள் எதுங்கறதுல பல வேறுபாடுகள் இருக்கு...இந்த இடுகையின் முந்திய பகுதியை, அதில் கீதாம்மா போட்டிருக்கும் பின்னூட்டம், பதில் எல்லாம் படிச்சீங்கன்னா தெரியும்...ஆகவே, இதை வேற மாதிரி அணுக நினைக்கிறேன்...அடுத்த பதிவுல பாருங்களேன் :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாய்யா அம்பி, தங்க கம்பி...

//ம்ம், பொதுவா படைத்தல் என்பது பிரம்மனின் தொழில் தானே? சிவன் யோக நித்ரையில் இருந்தால் பிரம்மனுக்கு என்ன வந்தது? //

அழித்தல் இருந்தால் தான் அடுத்தடுத்து படைக்க தோன்றுமாம்....புரிஞ்சுதா?..

//ஒரு வேளை சிவன் தான் அப்ரூவ் பண்ண வேண்டிய பிராஜக்ட் மானேஜரா? :p//

ஆமாம் சிவன் பிராஜக்ட் மானேஜர், பராசக்தி ப்ராஜக்ட் ஸ்பான்ஸர், விஷ்ணு குவாலிடி கண்ட்ரோல், ருத்ரன் ரிலிஸ் மானேஜர்...சரஸ்வதி டெக் ரைட்டர்...இன்னும் என்ன ரோலெல்லாம் இருக்கோ யோசிங்க...:))

//இதயம் விழுந்த இடம் தான் கொல்லூர் என சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்னாடி தான்) அந்த படத்தில் காட்டினாங்க. உண்மையா?//

இருக்கலாம் :)

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்னோரு கேள்வி, ஏன் 'தமிழ் கடவுளான' நாராயணனை, மாயோனை, ஹோமத்துக்கு தலைவராய் ஏற்க கூடாது?

இதற்க்கு ஏதேனும் தரவு உள்ளதா?//

இதெல்லாம் நான் படிக்கல்ல, எனக்கு தெரியாது ஆமாம், சொல்லிப்புட்டேன் :))

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கனப்பாடிகளே, நமஸ்காரம்.

பஞ்சகம் இன்பர்மேஷன் சூப்பர்...ஆமாம் யார், எதுக்கு இதனை பார்க்கணும் அப்படிங்கறதையும் சொல்லுங்க...அப்பத்தான் நம்ம மக்களுக்கு அத முழுசா புரியும்.
இந்த பதிவுகளுக்கு வருபவர்கள் பற்றி யோசிக்க வேண்டாம்...எல்லோரும் அறிந்தவர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள். தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.

(கவிநயாக்கா, பஞ்சகம் பற்றி வாத்தியாரைய்யா பதிவுல தேடாதீங்க, அவர் எழுதல்லைன்னு நினைக்கிறேன்)

//ரொம்ப பாத்துண்டே இருந்தா பாத்துண்டே இருக்கவேண்டியது தான். (எந்த வேலையா இருந்தாலும் ஆரம்பிக்கும்போது பிள்ளையாரப்பா அப்படின்னு வேண்டிக்கோங்க.//

சூப்பரு.. :))


// மற்றபடி, நமக்கு நல்ல நேரமா இல்லையான்னு ஆத்து வாத்யார்தான் சொல்லணும். அவர் ஒரு வழியாய் பஞ்சாங்கத்தைப் பாத்து தக்ஷிணைக்கு ஏத்த மாதிரி நல்ல நேரமா சொல்லுவார்.//

:))

குமரன் (Kumaran) said...

//இதெல்லாம் நான் படிக்கல்ல, எனக்கு தெரியாது ஆமாம், சொல்லிப்புட்டேன் :)) //

ஒரு வேளை சுந்தர கனபாடிகளுக்குத் தெரியுமோ?

மௌலி, அவருக்கும் ஒரு பிளாக்கர் கணக்கு எடுத்துக் கொடுத்திருங்க. எதுக்கு அனாமத்தாகவே எழுதிக் கொண்டிருக்க வேண்டும்?

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு வேளை சுந்தர கனபாடிகளுக்குத் தெரியுமோ?

மௌலி, அவருக்கும் ஒரு பிளாக்கர் கணக்கு எடுத்துக் கொடுத்திருங்க. எதுக்கு அனாமத்தாகவே எழுதிக் கொண்டிருக்க வேண்டும்?//

யாருன்னு தெரிஞ்சாத்தானே அதெல்லாம் பண்ண முடியும்?

என்னோட ஹேஷ்யம் சரியாக இருந்தா, அவர் ப்ளாக் ஐடி எல்லாம் வச்சுக்கிட்டுத்தான் இப்படி அனாமத்தா வருகிறார். ஏன்னு தெரியல்ல...உங்களுக்கும் தெரிந்தவர்தான், ஏன்னு நீங்க வேணா கேட்டுப்பாருங்க அப்பவாச்சும் சொல்றாரா பார்க்கலாம் :))

Kavinaya said...

அதெல்லாம் ச்சும்மா டமாஸுக்குதான் த/அம்பி. கோச்சுக்க மாட்டீங்கன்னு நம்பி :) அதோட நீங்க தங்கக் கம்பின்னுதான் எனக்கே... தெரியாது... மௌலிதான் சொன்னாரு :)

Kavinaya said...

வணக்கம் கனபாடிகளே. ஹோரை பத்தின விளக்கத்துக்கு மிக்க நன்றி! நீங்க சொல்றதையெல்லாம் பார்த்தா கணக்குப் பார்த்தே காலம் கழிஞ்சிடும் போல இருக்கு. விநாயகரும் அவர் குடும்பமும் நமக்குன்னே இருக்கும்போது கணக்கைப் பத்தி என்ன கவலை :)

//இந்த இடுகையின் முந்திய பகுதியை, அதில் கீதாம்மா போட்டிருக்கும் பின்னூட்டம், பதில் எல்லாம் படிச்சீங்கன்னா தெரியும்//

சரி, படிச்சுட்டு வரேன். எனக்கும் இடுகைக்கும் பதிவுக்கும் வித்தியாசம் தெரியல :(

//கவிநயாக்கா, பஞ்சகம் பற்றி வாத்தியாரைய்யா பதிவுல தேடாதீங்க//

சரிதான் :) தேடாம படிக்கிறதையே இன்னும் படிக்கல... :)

Anonymous said...

ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும்னு சொன்னா அதுக்கு நல்ல நேரம் பாக்க வேணும்.
என்னென்ன திதியிலே என்னென்ன செய்யலாம், அதுபோல என்னென்ன கிழமையிலே
என்னென்ன நக்ஷத்திரத்திலே என்னென்ன லக்னத்திலே என்ன செய்யலாம், அது போல‌
செய்யக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரம் சொல்றது.
அது போல நல்ல காரியங்கள் செய்வதற்கு சில மாதங்கள், சில நக்ஷத்திரங்கள், சில திதிகள், சில யோகங்கள் உத்தமம் என்று எந்த பஞ்சாங்கத்தைப் பார்த்தாலும் தெரிஞ்சுக்கலாம்.
ஆனால், இத்தனையும் பார்த்து ஃபிக்ஸ் பண்ணனும்னு பாத்தா லேசுலே கிடைக்காது. அதனால,
இருக்கறதுக்குள்ளே நல்லதா பாத்துண்டு ( அப்பறம் பர்சனல் செளகரியத்தையும் பாத்துண்டு) ஒரு
நாள், டைம் ஃபிக்ஸ் பண்ரபோது ஒரு க்விக் செக் அப் தான் இந்த பஞ்சகம்.

நான் முன்னமே சொன்னது போல திதி வாரம் நக்ஷத்திரம் லக்னம் எல்லாத்தையும் கூட்டி அத்துடன்
9ஆல் வகுக்க மிச்சப்படுவது 1 ‍ = மிருத்ய 2 = அக்னி 4 = ராகு 6 =சோர 8 = ரோக பஞ்சகமாகும்.
3,5,7.9 பாக்கி வருவது தான் உத்தமம். மற்றது வந்ததுன்னா என்ன செய்யறது ? அதுக்கும் ஒரு
பரிகாரம் இருக்கு. ராஜ பஞ்சகத்திற்கு எலுமிச்சம்பழம், மிருத்யுவுக்கு ரத்தினம், அக்னிக்கு சந்தனம்,
சோரத்திற்கு தீபம், ரோகத்திற்கு தான்யம் இத்யாதி தானம் செய்யணும். அப்படின்னும் பெரியவா
சொல்றா. இதுலே ஒரு கஷ்டம் இருக்கு. இந்த தானம் எல்லாரும் வாங்கிக்கமாட்டா .. வாங்கிண்டவா
என்ன செய்யணும்னு வேற சொல்லியிருக்கு. இருந்தாலும் இந்தக் கலியுகத்தில் இப்படி தானம்
கொடுக்கும்போது something something சேத்து கொடுத்தோம்னா பேஷ், பேஷ் அப்படின்னு
சொல்லின்டு வாங்கிண்டு போவா. இது லெளகீகம்.

இத்தனையும் செஞ்சப்பரமும் மீறி ஒன்னு நடக்குரதுன்னா அது பகவத் சங்கல்பம். நீங்களே பாருங்கோ அந்த
தக்ஷன் இருக்கானே ! இப்படி ஒன்னு வரும்னு எதிர் பாத்துருப்பானோ ! ஏதோ ஒரு ஈகோ ப்ராப்ளம்.
அவாவா தலைலே என்ன எழுதியிருக்கோ அதுபடி தான் நடக்கும்.

அதனாலே தான் எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கும்போது விக்னேச்வரருக்கு பூஜை. அப்பா பிள்ளையாரப்பா
எந்த விக்னமும் வராம நீதான் அப்பா காப்பாத்தணும்னு வேண்டிக்கறோம். இந்த வினாயகர் பூஜைங்கிறது
ரொம்ப முக்கியம். சாக்ஷாத் வினாயகனே வந்து நம்பாத்து நல்ல காரியத்தை நல்ல படியா நடத்தி வைக்கிறதா
ஐதீகம். வைஷ்ணவா வினாயகன்னு பேர் சொல்லாம விஷ்வக்சேனன்னு சொல்லிப்பா ..

எல்லாம் ஒன்னுதான். பிள்ளையார்பட்டி பிள்ளையாரப்பா என்று எக்கணமும் துதிப்பார்க்கு ஒரு
தீங்கும் யாண்டும் எப்போதும் வந்ததில்லை. வரவும் வராது. சர்வ நிச்சயம்.

சுந்தர கனபாடிகள்>
சென்னை.
பி.கு: அது என்ன அனாமத்து அப்படின்னு சொல்றேள் ! பேர் கொடுத்திருக்கேன். ஊர் கொடுத்திருக்கேன்.
வேணா ரேஷன் கார்டு நம்பர் தரேன். அனாமத்துன்னு எப்படி ஆகும். ?
இன்னொரு ஸைடுலே பாத்தா " எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு " அவாளுக்கு ஈ மையில் ஐ டி இருக்கா, ப்ளாக் இருக்கா ?அப்படி இருந்தால்தான் அவா சொல்றதைக் கேட்கணும் அப்படின்னா வள்ளுவர் சொல்றார்.?
யார் சொல்றாங்கறதை விட என்ன சொல்றா அப்படிங்கறது தான் சார் முக்கியம்.
இல்ல, இந்த ப்ளாக் இவாளைத் தவித்து வேற யாரும் கமென்ட் அடிக்கக்கூடாதுன்னு செட்டிங்க்ஸ் போய்
ஒரு கன்டிஷன் போட்டுடுங்கோ . அதுவும் இல்லைன்னா வந்த கமென்டை பப்ளிஷ் பண்ணாதீங்கோ.
இத்தன ஆப்ஷண் இருக்கே..
ஏதோ ஒரு உத்சாகத்திலே எழுதறேன். நல்லதா எழுதறேளே .. சத் விஷயமா இருக்கே .. அதுலே
நம்மளும் சேந்துப்போம்னு எழுதிட்டேன். உங்களுக்கு புடிக்கல்லேன்னா வல்லே.
எல்லாருக்கும் என்னோட ஆசிர்வாதம். எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்.
லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து.

மெளலி (மதுரையம்பதி) said...

சுந்தர கனபாடிகளே....கோபம் வேண்டாம். எனதருமை நண்பர் குமரன், உங்களை வருந்தச் செய்வதற்காக அந்த பின்னூட்டத்தை போடவில்லை...

நானே 'சுந்தர கனபாடிகள்' அப்படிங்கற பெயரில் அனானியா வருவதாக நினைச்சு அப்படி கேட்டார். அதற்குத்தான் நானும் பதில் சொல்லியிருக்கேன். தயவு செய்து கோபம் வேண்டாம். :))

இவ்வாறு ப்ளாக்கர் ஐடி வச்சுண்டே அனானியா வருவது என்பது பலரும் செய்கிறார்கள். அதனால் அப்படி கிண்டலாக என்னை கேட்டார்.

//அவாளுக்கு ஈ மையில் ஐ டி இருக்கா, ப்ளாக் இருக்கா ?அப்படி இருந்தால்தான் அவா சொல்றதைக் கேட்கணும் அப்படின்னா வள்ளுவர் சொல்றார்.? யார் சொல்றாங்கறதை விட என்ன சொல்றா அப்படிங்கறது தான் சார் முக்கியம். இல்ல, இந்த ப்ளாக் இவாளைத் தவித்து வேற யாரும் கமென்ட் அடிக்கக்கூடாதுன்னு செட்டிங்க்ஸ் போய்ஒரு கன்டிஷன் போட்டுடுங்கோ . அதுவும் இல்லைன்னா வந்த கமென்டை பப்ளிஷ் பண்ணாதீங்கோ.
இத்தன ஆப்ஷண் இருக்கே..//

இந்த வலையுலகத்தில் ஈமெயில் ஐடிக்கு அம்புட்டு முக்கியத்துவம்...
ஆமாம், நீங்க இம்புட்டு தெரிஞ்சுண்டிருக்கேள், ஏன் ஒரு ஈமெயில் ஐடி, ப்ளாகர் ஐடி வச்சுக்கல்ல?.

உங்க போன் நம்பர் ஏதேனும் குடுக்க முடியுமா, நான் உங்களிடம் பேசிவிட்டு உங்கள் தகவல்களை வைத்து ஐடி உருவாக்கித்தருகிறேன்.

ஒரு காலத்தில் நானும் ஐடி இல்லாது அனானியாக வந்தவந்தான்....இதே நண்பர் குமரன் மற்றும் கே.ஆர்.எஸ் சொல் கேட்டு ஐடி ஒருவாக்கிக் கொண்டேன். :))

//ஏதோ ஒரு உத்சாகத்திலே எழுதறேன். நல்லதா எழுதறேளே .. சத் விஷயமா இருக்கே .. அதுலே
நம்மளும் சேந்துப்போம்னு எழுதிட்டேன். உங்களுக்கு புடிக்கல்லேன்னா வல்லே.
எல்லாருக்கும் என்னோட ஆசிர்வாதம். எல்லோரும் க்ஷேமமா இருக்கணும்.//

அச்சோ, அச்சோ. கனபாடிகளே நீங்க தாராளமா வரல்லாம், பின்னூட்டமிடலாம்...இன்னும் சொல்லப் போனா நீங்க கண்டிப்பாக வரணும்..நான், குமரன் உட்பட, எனதருமை நண்பர் குழாமில் எல்லோரும் எதிர் பார்க்கறது நீங்க ஒரு ப்ளாகராகி வலைப்பூ/வலைப்பந்தல் எல்லாம் ஆரம்பிச்சு எங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்களை விளக்கணுங்கறது தான்...வாருமேன் வேகமாக!!!

ambi said...

//நான், குமரன் உட்பட, எனதருமை நண்பர் குழாமில் எல்லோரும் எதிர் பார்க்கறது நீங்க ஒரு ப்ளாகராகி வலைப்பூ/வலைப்பந்தல் எல்லாம் ஆரம்பிச்சு எங்களுக்கு இன்னும் நிறைய விஷயங்களை விளக்கணுங்கறது தான்...//

@M-pathi, பாவம் நல்லவர், நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பொறுக்காதே! :))

இப்ப தான் கவனிச்சேன், அது என்ன வலைப்பூ, வலைபந்தல்? :p

அவர் சுந்தரேச கண பாடிகள், நினைவில் வையுங்க லேரேம்பாவாய் :p

மெளலி (மதுரையம்பதி) said...

யோவ் அம்பி, எப்பவுமே லென்ஸ் வச்சுக்கிட்டுத்தான் படிப்பீங்களோ?..

எதோ பூ, கொடி, பந்தல்லுன்னு தொடர்புடையதா 2-3 வார்த்தை சொன்னா இப்படியா கையுங்களவுமா பிடிக்கறது?..... ::) இன்னுமே அவர் வரணும், என் தலைல 2 கொட்டு கொட்டணூம்...நல்ல ஆசையப்பா உங்களுக்கு :))

குமரன் (Kumaran) said...

கனபாடிகள் ஐயா. என்னைத் தப்பா நினைக்க வேண்டாம். அனானிமஸ் ஆப்சனை பயன்படுத்திக்கிட்டதால 'அனாமத்து''ன்னு சொன்னேனே ஒழிய உங்களை அவமானப்படுத்துறதுக்கில்லை. தப்பா எடுத்துக்காதீங்க. அடியேன் சிறிய ஞானத்தன்.

மௌலி தான் உங்க பேருல எழுதுறார்ன்னு கூட நான் நினைக்கலை. மௌலிக்குத் தெரிஞ்சவரா நீங்க இருக்கலாம்ன்னு நினைச்சேன். அதனால தான் ஒரு பிளாக்கர் கணக்கைத் திறந்து குடுங்கன்னு சொன்னேன். அவ்வளவு தான். தப்பா நினைக்காதீங்க.

ஏற்கனவே போன இடுகையிலேயே ஒரு நண்பர் துர்வாசர் கணக்கா கோவிச்சுக்கிட்டுப் போனார். உங்களைப் போன்ற பெரியவங்களும் கோவிச்சுக்கிட்டா பொடியன்கள் நாங்கள் என்ன செய்றது?

நீங்கள் அடியேன் இடுகைகள் பக்கமும் வந்து பார்க்க வேண்டுமாய் வேண்டிக்கிறேன்.

Kavinaya said...

நல்ல நேரம் பார்க்க வேண்டுமென்பது சரிதான். நான் சொன்னதை தவறாக பொருள் கொள்ள வேண்டாம் ஐயா. பெரிய விசேஷங்களுக்கு உங்களை மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க உதவியோட நல்ல நேரம் பார்ப்பாங்க. ஆனா என்னை மாதிரி அறிவிலிகளுக்கு அப்படி ஒவ்வொரு செயலுக்கும் பார்ப்பது சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வந்தேன். எல்லாம் அவள் விருப்பம். அவள் அருள் இருந்தால் நாம ஒரு செயல் செய்ய வேண்டியிருந்தால் அது தானாகவே நல்ல நேரத்திலேயே அமைந்து விடும் என்பது என் நம்பிக்கை. நான் சொன்னதில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கணும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஏற்கனவே போன இடுகையிலேயே ஒரு நண்பர் துர்வாசர் கணக்கா கோவிச்சுக்கிட்டுப் போனார். உங்களைப் போன்ற பெரியவங்களும் கோவிச்சுக்கிட்டா பொடியன்கள் நாங்கள் என்ன செய்றது? //

இது, இது மஹா வாக்யம்...சூப்பர் குமரன்...துர்வாசர் இன்னும் இங்க வரல்ல கவனிச்சீங்களா?...நான் வாங்காத கடனுக்கு வட்டி கேட்க மட்டும் டாண்னு வருவாரு!! :))

Anonymous said...

என்னப்பா, அடுத்த பதிவ போடறது? நாங்க எவ்ளோ நாள் வெயிட் பண்றது? :))

- சுந்தர கன பாடிகள்

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கனபாடிகளே...

கொஞ்சம் வேலை அதிகம்...போடறேன் சீக்கிரம்...

நீங்க கோவிச்சுக்கிட்டு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்...வருகைக்கு நன்றி...

ஆமாம், போன் நம்பர் கொடுங்களேன், பேசலாம் :)

ஷைலஜா said...

ரொம்ப விவரமா எழுதி இருக்கீங்க....இதைப்பற்றி சுபயோக சுபதினம் ஒன்றில் என் வீட்டில் மேலும் பேசுவோம் என்ன?