Friday, July 27, 2012

முகுந்தா, முக்தி நிலையா,நாராயணீ......நாராயணன் என்பதற்கு பல விதங்களில் பொருள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம். நரன் என்று ப்ரம்ஹத்தையும் குறிப்பிடுவதுண்டு. ப்ரம்ஹத்திலிருந்து நீர் உருவானதால் அதற்கு நீரை நாரம் என்று கூறுவார்கள். நீரில் சயனித்திருப்பவரை நாராயணன் என்று குறிப்பிடுவது முறைதானே?. இதே போல நரன் என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், அயனன் என்பதற்கு அடையும் பொருள் என்று பொருள் சொல்லி, ஜீவன்கள் கடைசியில் அடையும் பொருள் என்பதாக நாராயணன் [நராணாம் அயனம் யஸ்மாத் தஸ்மான்னாராயண ஸ்ம்ருத:] என்று கூறுகிறது ப்ரம்ஹ-வைவர்த்த புராணம்.

ப்ரம்ஹத்திலிருந்து உருவான ஜீவன்களை, அந்த ப்ரம்ஹமே வழிநடத்தி தன்னிடத்தில் அழைத்து வந்து சேர்த்துக் கொள்வதால் ப்ரம்ஹமே நாராயணன் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி தூரீயமான ப்ரப்ரம்ஹத்தையே பரமசிவன், மஹாவிஷ்ணு என்றெல்லாம் கூறுகிறோம். ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் "நாராயணீ " என்று வாக்தேவதைகளால் அழைக்கப்படுகிறாள். பத்மநாப சஹோதரி, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி என்றெல்லாம் அம்பிகையின் நாமங்கள் இருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முகுந்தன் என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். முகு: என்றால் மோக்ஷம், மோக்ஷத்தை அருளுவதால் அவன் முகுந்தனாகிறான். "முகுந்தா" என்று அம்பிகையையும் குறிப்பிடுகிறார்கள் வாக்தேவதைகள். அம்பிகையும் தனது பக்தர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவதால் அவளும் முகுந்தா என்று அழைக்கப்படுகிறார்கள். அம்பிகையே விஷ்ணு ரூபம் எடுத்து வந்ததாகச் சொல்வதை இங்கு மனதிலிருத்திப் பார்க்க வேண்டும். தந்த்ர ராஜம் என்ற நூலில் மந்த்ரங்கள் பற்றிச் சொல்லும் போது, கோபால மந்திரம் பற்றிச் சொல்லுகையில் ஸ்ரீக்ருஷ்ணரது பாகவதத்தில் கோபிகைகளாக வந்தவர்கள் எல்லாம் அம்பிகையின் சக்திகளே என்று கூறியிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு. நமக்கெல்லாம் தெரிந்த மன்னார்குடி ராஜகோபாலனது பீடத்தில் ஸ்ரீசக்ர யந்த்ரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ராஜகோபாலர் வருஷத்தில் ஒருநாள் ஸ்ரீசக்ரத்தில் இருக்கும் அம்பிகையாக அலங்கரித்துக் காக்ஷி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.


கேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி பூரியிலும் பெருமாள் பெயர் ஜகன்நாதர் என்பதை அறிவோம். ஜகன்நாதர் என்றால் ஜகத்திற்கு நாயகர் என்று பொருள் சொல்லிவிடலாம். அம்பிகையைப் போற்றும் போது வாக்தேவதைகள் அவளை, "சராசர ஜகன்நாதா" என்கிறார்கள். அதாவது சராசரத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் ஜகன்மாதாவாக, ஈஸ்வரியாக இருப்பவள் என்று பொருள்.

இப்படி, முகுந்தா, ஜகன்நாதா என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகையே முக்தி ஸ்தானமாக இருப்பவள் என்பதை, "முக்தி நிலையா" என்று கூறுகிறார்கள். அதாவது, ஸாலோக்ய, ஸ்மீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்ய, கைவல்யம் என்ற ஐந்து விதமான முக்திகளிலும் அடையப்படுபவள் என்று பொருள். இப்படி முக்தியை அளிக்கும் அம்பிகையின் கண்களை "பத்ம நயனா" என்று அழைக்கிறார்கள்.

தாமரைப் பூக்கள் வெண்மை மற்றும் சிவப்புக் கலந்த நிறங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பாரதியும் "வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம். சிவப்புத் தாமரை போன்ற காந்தியுடையவள் அம்பிகை என்பதை "பத்மராக ஸமப்ரபா" என்கிறார்கள் வாக்தேவிகள். குண்டலினீ சிவந்த நிறமுடையதாம், அம்பிகையே குண்டலினீ சக்தியாக இருப்பதைச் சொல்வதாகவும் இந்த நாமத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ப்ர் பெரியோர்.
....................எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்....................

18 comments:

vijayaragavan said...

//
ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. //

நாராயண தஷாக்ருதி யும் இப்படித் தானே?!. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு திரைப் படத்தில் "மற்ற கடவுள்கள் உள்ளே வராத நேரம் சிவனும் விஷ்ணுவும் தத்தம் பக்த்தர்கள் மூலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரம் ..." என்பது போல கதாநாயகன் சொல்லுவார்.
இதுவெல்லாம் சரியாக புரிந்துகொள்ளாமல் பேசுவது தாம். எழுத்தாளர் சுஜாதா சொல்லுவது போல், புராணம் , இதிகாசங்கள் இவற்றை கட்டுடைத்துப் பார்த்துக் கொள்ள பழகவேண்டும். சாக்ஷாத் ஈஸ்வரன் அவதாரமான சங்கரரே சௌந்தர்ய லஹரியில் (முதல் ஸ்லோகம்)

சிவன், சக்தியான உன்னூடன் இருப்பதாலேயே (யதி பவதி) ஈஸ்வரனுக்கு பிரபஞ்சத்தை ஆக்கும் சக்தி கிடைக்கிறது. அவ்வாறு உன்னூடன் சிவன் இல்லாவிடில்(ந சேத்) சிவனே சலனமற்று, அசைவற்ற (குசல:) ஜடமாகிடுவான் (ஸ்பந்திது-மபி). ஆகவே ஹரி-ஹர-பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளும் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்க்கோ (ப்ரணந்தும்), துதிப்பதற்கோ (ஸ்தோதும் வா) எவ்வாறு தகுதியுடையவனாவான். அதாவது பராசக்தியை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கே பூர்வபுண்ணியம் செய்திருக்கவேண்டும் என்கிறார்.

லலிதா த்ரிஷதியில் கூட "ஹரி ஷோதர்யை நம: " என்று வருகிறது. சஹோதரி என்றால் உடன் பிறந்தவள் என்று மட்டும் தான் அர்த்தம் இல்லை மாறாக ஒரே மாதிரி (குணம்) என்றும் கூட அர்த்தம்.

மேரு பூஜையில் சத்யநாராயணா பூஜையும் உண்டு என்பதை சாதகர்கள் உணரவேண்டும். ஆத்மீகத்தை பின்பற்றுபவர்களிடம் கூட ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்தால், பகவான் கீதையில் சொன்னது போல் "மம மாயா துரத்யயா".

vijayaragavan said...
This comment has been removed by the author.
vijayaragavan said...
This comment has been removed by the author.
vijayaragavan said...
This comment has been removed by the author.
vijayaragavan said...

//
பாரதியும் "வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம்.
//
similar to this,
வெண்டாமரைக் கன்றின் நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரை....
sagalakala vallan illai original /real 'sagalakalaavalli maalai" :)

Jayashree said...

Happy varalakshmi vratham!! Beautiful photo:))

ஜீவா (Jeeva Venkataraman) said...

வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள் மௌலி சார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அது எப்படி மெளலி அண்ணா, வரலட்சுமி விரதம் அதுவுமா, நாராயணீ என்கிற நாமாவளியை டைம் பண்ணிப் பதிவு போடறீங்க? :)

அதுவும் பாருங்க...முக்தி-ன்னாலே, அம்பாள் பேரும் நாராயண சம்பந்தமாவே வந்துருது! :)) முகுந்தா-முக்திநிலையா-நாராயணீ!

//கேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது//

அது ஜகன்னாதப் பெருமாள் இல்லை! ஜனார்த்தனப் பெருமாள்!
வர்க்கலா என்ற திருத்தலம்!

அங்கே தான் ஆசமனக் கோலத்தில் பெருமாள், கையில் தண்ணி வச்சிக்கிட்டு, வாய் அருகே கொண்டு செல்வது போல் இருப்பாரு! (மவுத் வாஷ் பண்றாரோ? :))

மிகப் பழமையான தலம்! மகாபாரதத்தில் பலராமர் இந்த தலத்துக்கு வருவதாகக் கூட வரும்! கடலோரம் இருந்தாலும் அழகான பச்சைக் குளம் பார்க்கவே அழகா இருக்கும்! திருவனந்தபுரத்தில் இருந்து பத்து மைல்-குள்ள தான் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! பெருமாளுக்கு டச்சுக்கார கேப்டன் கொடுத்த பெரிய காண்டாமணியும் மாட்டி வச்சிருப்பாங்க!

சாதிகள் கடந்த மலையாள பக்தி இயக்கச் சான்றோரான நாராயண குருவின் சமாதித் தலமும் இதுவே!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது//

சூப்பரோ சூப்பர்!
நாராயணஹ பரஹ என்பது தானே வேத வாசகம்!

நாராயண பரோவக்யாத் அண்டம் அவ்யக்த சம்பவம்-ன்னு தானே ஆதிசங்கரரும் சங்கர பாஷ்யத்தைத் துவங்குகிறார்?

பரம் என்று ஒன்றைக் குறித்த பின், அனைத்தும் அதனுள்ளே அடக்கம் என்றாகி விடுகிறது! அப்பறம் என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன? பரம் பரம் அல்லவா? சிவ பெருமானுக்கும் நாராயண நாமமே அமைவதில் வியப்பொன்றுமில்லையே! சிவஸ்ச ஹ்ருதயோர் விஷ்ணு, விஷ்ணூச ஹ்ருதயம் சிவம்!

//அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் "நாராயணீ " என்று அழைக்கப்படுகிறாள்//

அபேதமாக இருத்தல் என்றால் என்ன-ண்ணா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தமிழில்...
நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகில்
* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!
* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!

இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar

காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason

அதே போல்..
நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு செல்வது!

சிலப்பதிகாரம்/மணிமேகலையிலும் நாரணச் சொல் வரும்!
மேலதிக தகவல்கள் இங்கே!
----------------------------------

வடமொழியில்...
நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன்

-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:
-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?

கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!

தமிழில் = நாரணம்
வடமொழியில் = நாராயணம்

மதுரையம்பதி said...

வாங்க விஜய். திரைப்படங்கள் பார்ப்பதில்லை, ஆகவே நீங்கள் குறிப்பிட்ட வசனங்கள் பற்றித் தெரியாது :).

இதிகாச புராணங்களை கட்டுடைக்கிறேன் பேர்வழி என்று நமக்குத் தோன்றுகிறவாறு எழுத முடியுமா என்ன?. சுஜாதாவும், தனது கடைசி காலங்களில் தனது இந்த கருத்தைக் கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. :)


செளந்தர்ய லஹரி தொடர்பினை எடுத்துக் காண்பித்தமைக்கு நன்றிகள்...:)

மிக நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றிகள் விஜய். :)

மதுரையம்பதி said...

ஜெயஸ்ரீ மேடம், ஜீவா, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் வர லக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்.. :)

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ்...

//அது ஜகன்னாதப் பெருமாள் இல்லை! ஜனார்த்தனப் பெருமாள்!
வர்க்கலா என்ற திருத்தலம்!//

மிகச் சரி, பதிவில் மாற்றிவிடுகிறேன்.

//அபேதமாக இருத்தல் என்றால் //

பேதம் என்பதன் எதிர்ச் சொல் அபேதம்...பிரிக்க முடியாத என்று சொல்லலாம்.

வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ் :)

Jayashree said...

ஆன்மீகம் சொல்லற “ஸஹஸ்ர சீரிஷா புருஷஹ “பெயர் குணம் இல்லாத ஈஸ்வரன் என்று( குணாதீத ) போற்றப்படுகிற இறைவனின் சக்தி, எனர்ஜி.அது பெண்பாலாக சொல்லப்படுகிறது !! Proud to be a woman !! . அவா அவா ஆசை, இஷ்டப்படறபடி நாராயணன் , மஹேஸ்வரன் நு சொல்லறோம் தேவி மஹாத்மீயத்தில 11 வது சாப்டர் ல அசுர வதம் முடிஞ்சப்புறம் அவளை நாராயணியா துதிக்கிறா.
எனக்கு புரிஞ்சுக்க எப்பவுமே ஒரு ரியலிஸ்டிக் எஃஸாம்பில் வேணும். இப்ப நோம்புக்கு அழகா துடைத்து கோலம் போட்டு, அலங்காரம் பண்ணி ப்ரசாதம் பண்ணி வச்சு ஃபோட்டோ ஜம்னு எடுத்து போட உதவியா இருந்த சக்தி மதிரி !!))))) என்ன மௌலி , KRS ,VR சரிதானே ??!! )) அடிக்கறத்துக்கு முன்னாடி ஓடிடறேன் !!:))

மதுரையம்பதி said...

வாங்க ஜெயஸ்ரீ-மா!...

//இப்ப நோம்புக்கு அழகா துடைத்து கோலம் போட்டு, அலங்காரம் பண்ணி ப்ரசாதம் பண்ணி வச்சு ஃபோட்டோ ஜம்னு எடுத்து போட உதவியா இருந்த சக்தி மதிரி !!))))) என்ன மௌலி , KRS ,VR சரிதானே ??!! )) //

மிகச் சரி...நீங்க சொல்லியது மிகச் சரி.

Vasudevan Tirumurti said...

welcome back to the blog world! keep posting!

கவிநயா said...

வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள், மௌலி! கடைசி ரெண்டு படமும் பெரிசா பார்க்க முடியலையே :(

முகுந்தா. முக்தி நிலையா. நாராயணீ. அவதான் ஈடிணையில்லாத அன்ன்ன்ன்பான அம்மா. அவளோட ஆயிரம் நாமங்களை நீங்க இன்னும் அடிக்கடி எழுத அவள்தான் அருள் புரியணும்.

Anonymous said...

I expect a new post for this NAVARATHRI.

WHAT HAPPENED SIR.