Saturday, December 10, 2011

திருக்கார்த்திகை - தீப கைங்கர்யச் செம்மல்கள்...




திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் 2 நாட்கள் முன்னரே கார்த்திகை தீபத் திருநாள் முடிந்துவிட்டது. கார்த்திகை நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டாடப்பட்டது அது. இன்றுதான் கார்த்திகைப் பெளர்ணமி, சர்வாலய தீபம். அதாவது தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரும் பெளர்ணமியும், அந்த பெளர்ணமியன்று இருக்கும் நக்ஷத்திரங்களும் சிறப்புடன் ஆலயங்களில் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். உதாரணமாக, சித்திரா பெளர்ணமி, வைகாசி விசாகம் (வைகாசி பெளர்ணமி, ஆவணி அவிட்டம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை பெளர்ணமி நாட்களே). இது போன்றே கார்த்திகையில் பெளர்ணமியன்று கார்த்திகை நக்ஷத்திரம் வரும். ஆனால் இந்த வருஷம் கார்த்திகை நக்ஷத்திரம் பெளர்ணமிக்கு இருதினங்கள் முன்னதாக வந்திருக்கிறது. ஆகவே பெளர்ணமியை அடிப்படையாகக் கொண்ட சர்வ ஆலய தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாளில் தீபத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டாடிய சிலரை நாமும் நினைவுக் கொண்டு வந்து அவர்கள் போன்று தீபத்தை வணங்கலாம் வாருங்கள்.


கலிநாயனார் என்பவரைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எண்ணெய் வியாபாரம் செய்தாலும், திருவெற்றியூர் கோவிலில் தீபமேற்றும் பணியைச் செய்து வந்தவர். காலக் கிரமத்தில் தனது வியாபாரம் நொடித்துப் போன போதிலும் கோவிலில்தீபமேற்றுவதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஒரு சமயத்தில் வறுமை முற்றி தன்னால் விளக்கு ஏற்ற எண்ணைய் வாங்கவும் இயலாத நாளில் தனது ரத்தத்தையே விளக்கிற்கு எண்ணையாக்க முயல்கிறார். அந்த சமயத்தில் ஈசன் அவருக்கு தரிசனம் தந்து கலிநாயனாரைகாப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. தனது உடலை வருத்தி தீபம் ஏற்றத் துணிந்த கலிநாயனாருக்கு இறைதரிசனம் கிட்டியிருக்கிறது.


கலிநாயனார் போன்ற இன்னொருவர் கணம்புல்லர் என்பவர் இவரைப் பற்றி சேக்கிழார் குறிப்பிடுகையில் பின்வருமாறு கூறியிருப்பதாகத் தெரிகிறது.

அணங்குமைபாகம் ஆக அடக்கி ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல்வருந் தவத்த
கணம் புல்லார்க்கு அருள்கள் செய்து காதமால் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பார் போலும்


கணம்புல்லர் என்பது இவரது தொழிலை அடிப்படையாகக் கொண்ட பெயரெனத் தெரிறது. நித்தமும் காட்டிற்குச் சென்று கணம்புல்லை சேகரித்து அதை கிராமங்களில் விற்று கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிதம்பரம் ஆலயத்தில் விளக்கேற்றி வந்தவர்.சில காலமாக இவர்விற்று வந்த புல்லை யாரும் வாங்காத காரணத்தால் எண்ணெய் வாங்க இயலாது தவிக்கிறார். கோவிலில் தீபமேற்ற இயலாது வருந்தியவர், ஆத்மஹத்தி செய்து கொள்ள தீர்மானித்து தீ மூட்டி அதில் குதிக்க முயல்கிறார், அப்போது அவருக்கு இறைதரிசனம் கிட்டுகிறது என்பது சேக்கிழார் பெருமானது வாக்கு.


மூன்றாவதாக வருபவர் நமிநந்தி அடிகளார். இவர் திருவாரூரில் விளக்கேற்றும் திருப்பணி செய்தவர். இவருக்கும் ஒரு சமயத்தில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்காத நேரத்தில் சமணர்கள் இவரிடத்தில் 'உங்கள் தெய்வத்திற்கு நெய் விட்டு விளக்கேற்றத்தான் வேண்டுமோ?,தண்ணீரை விட்டு விளக்கேற்ற உங்கள் தெய்வம் அருளாதா?' என்று பரிகசித்ததாகவும், மனம் நொந்து, இறைவனைப் பணிந்த அடிகளார் குளத்து நீரை விட்டு விளக்கேற்றியபோது அவை பிரகாசமாக ஒளிர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவரது தொண்டை அப்பர் பாடுகையில்பின்வருமாறு பாடிச் சிறப்பித்திருக்கிறார்.


ஆராய்ந்தடித் தொண்டர் ஆணிப்பொன் ஆரூரகத்தடங்கி

பாரூர் பரிப்புத்தகம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்

ஆரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி

நீராற் திருவிளக்கிட்டமை நாடறியுமன்றே


வள்ளலார் ஸ்வாமிகளும் அருட்பெருஞ்சோதியாகவே இறைவனை வழிபட்டவர் என்பது நாம் அறிந்ததே!.


தமிழகத்திலிருக்கும் பல கோவில்களின் வரலாற்றைச் சொல்லும் கல்வட்டுக்களிலும் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு என்றே நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கோவிலில் ஒரு விளக்கு எரிக்க நிவந்தம் அளிக்கையில் அதற்கு விளக்கு மட்டும் கோவிலுக்கு அளிக்கவில்லைநம் பெரியோர்கள். அந்த விளக்கெரிக்கும் செயல் தொடர்ந்து நடைபெறுவதற்கும் வைப்புநிதியாக பசுக்கள், ஆடுகள் போன்றவற்றை அளித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆடு/பசுக்களை அளிக்கையில் அவை பல்கிப் பெருகிட கிடாய்/எருது போன்றவற்றையும் சேர்த்து அளித்திருப்பதாகக் கல்வெட்டுக்கள்தெளிவாகச் செய்தி பகர்கின்றன.


இவ்வாறு நம் முன்னோர்கள் போன்று நாமும் நம்மால் இயன்ற அளவு தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்வோம், குறிப்பாக திருக்கார்த்திகை தீபத்தினை சிறப்பாகக் கொண்டாடுவோம், தீப ஒளி எங்கும் வீசட்டும், அவ்வொளி நமக்கு ஞானஒளியாக திகழட்டும்.


தீப மங்கள ஜ்யோதி நமோ நம:

வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம:

7 comments:

Lalitha Mittal said...

நமிநந்தி அடிகளைப்பற்றிப் படித்ததும் சீரடி சாயி யின் உருவம் மனத்தில் வந்து நின்றது!எவ்வளவு ஒற்றுமை?

அரிய தகவல்களுடன் பதிவு அருமை!

கார்த்திகைத்திருநாள் வாழ்த்துக்கள் !

Geetha Sambasivam said...

thank you.

sury siva said...

இரண்டு நாட்கள் முன்னம், ஒரு வைஷ்ணவர் என்னிடம் அவர்களுக்கு கார்த்திகை எப்பொழுது என்று
கேட்டபொழுது நான் சரியாகவே, வைஷ்ணவர்கள் சம்பிரதாயப்படி, பௌர்ணமி அன்று தான் என்று
சொன்னேன். திரும்பி வரும்பொழுது நினைவு வந்தது. இந்த வருடம் கார்த்திகை பௌர்ணமி அன்று
சந்திர கிரகணம் அதுவும் நமது தேசத்தில் துவக்க முதல் இறுதி வரை தெரியும் கிரகண காலம். இதைப்
பொருத்து, எனது மனதில் எழுந்த ஐயப்பாடு, கிரகண காலத்தில் கோவில்களில் நடை சாத்தப்படும்.
அப்பொழுது தீபம் ஏற்றப்படுவது எப்படி சாத்தியம் என்று ?
எனது நண்பர் ஸ்ரீமான் ராகவ ஐயங்கார் இது பற்றி கூறுகையில், அஹோபில மடம் மற்ற அனேக ஸ்தாபனங்களில், இது பற்றிய விவாதங்களின் முடிவாக, இது பற்றிய பதினைந்து விதிகள்
நினைவு கூறப்பட்டு, கடைசியில், சனிக்கிழமை அதாவது பௌர்ணமி அன்றே வைஷ்ணவ கோவில்களில்
ஸர்வாலய தீபம் ஏற்றப்படுவது மட்டுமன்றி, வைஷ்ணவர்கள் த்த்தம் கிருஹங்களில் மாலை 5.15 முதல் 5.45 க்குள்
அதாவது சந்த்ரோதயத்திற்கு முன்னால் தீபங்கள் ஏற்ற வேண்டுமென ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் .

சுப்பு ரத்தினம்.

மதுரையம்பதி said...

வாங்க சூரி சார். நேற்று கிரஹணம் 6 மணிக்கு மேல் என்பதால் எங்களில்லத்தில் எல்லாம் 5:40க்கு விளக்கு ஏற்றியாயிற்று. இன்று மாலை பெளர்ணமி இல்லை என்பதால் ஸ்ரீரங்கநாதர் நேற்றே கார்த்திகை தீபம் கொண்டாடியதாக பேப்பரில் செய்தி.....கார்த்திகை-பெளர்ணமி வெவ்வேறு நாட்களில் வந்ததாலும், கிரஹணம் வந்ததாலும் 2-3 நாட்கள் கொண்டப்படுகிறது. அதுவும் நல்லதே....

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கீதாம்மா

மதுரையம்பதி said...

வருகைகும் கருத்துக்கும் நன்றிகள் லலிதா மேடம்.

Kavinaya said...

அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள். இத்தகைய பக்திச் செம்மல்களின் பாதங்களைப் பணிந்து கொள்கிறேன்.