Monday, December 19, 2011

ஆழ்வார்களைத் துயிலெழுப்பும் ஆண்டாள்...
பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் சேஷசாயி 2-3 நாட்கள் முன்னர் தொலைபேசியில் பேசினான். அப்போது, அவன் மூலம் அறிந்த சில செய்திகளே இந்த இடுகை.திருப்பாவை முதல் பத்து பாடல்களில் ஆண்டாள், ஆழ்வார்களைத் துயில் எழுப்பியிருக்கிறாள் என்பதாக ஒரு தாத்பர்யம் இருக்கிறதாம். அதாவது திருத் தொண்டர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் துயிலெழுப்பி, அதன் பின்னர் நப்பின்னையான தாயாரை முதற்க் கொண்டு பெருமாளை சரணடைகிறாளாம் கோதை. எந்தப் பாடல்களில் எந்த ஆழ்வாரைக் குறிப்பிட்டிருக்கிறாள் என்பதைப் பார்க்கலாம்.“புள்ளும் சிலம்பின காண்” என்னும் பாசுரத்தில், ‘பிள்ளையே எழுந்திராய்’ என்று கூறியிருப்பது பொய்கை ஆழ்வாரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள். பொய்கையார் பிள்ளைப் பிராயத்திலேயே இறையனுபவம் பெற்றிருந்தவராம்.“கீசு கீசு என்றெங்கும்” என்ற பாசுரத்தில், ‘பேய்ப் பெண்ணே’ என்று வருவது பேயாழ்வாரைக் குறிக்கிறது என்றும், “கீழ்வானம் வெள்ளென்று” என்கிற பாசுரத்தில், ‘கோதுகுலமுடைய பாவாய்’ என்பது பூத்த்தாழ்வாரைக் குறிப்பது என்றும் சொல்லுவார்களாம். பூதத்தாழ்வார், திருமல்லையில் சயனித்திருக்கும் பெருமாளைப் பாடும் போதெல்லாம் மிகுந்த குதுகலம் அடைவாராம். ஆகவே அந்தக் குறியீட்டின் மூலமாக பூத்த்தாழ்வாரைக் குறிப்பிட்டுச் சொல்லுவதாகத் தெரிகிறது.“தூமணி மாடத்து” என்கிற பாசுரத்தில், ‘மாமன் மகளே’ என்றது திருமழிசை ஆழ்வாரைக் குறிப்பதாம். ப்ருகு முனிவரின் புத்ரியாக அவதரித்தவள் பார்கவி என்றழைக்கப்படும் ஸ்ரீ தேவியான மஹாலக்ஷ்மி. ப்ருகு முனிவரின் புத்ரர் பார்க்கவர். இந்த பார்கவரின் புத்ரராம் திருமழிசையாழ்வார். ஆகவே ஆண்டாள் 'மாமன் மகளே' குறிப்பிடுவது திருமழிசைபிரானை என்கிறார்கள்.

“நோற்று சுவர்க்கம் புகுகின்ற” என்னும் பாசுரத்தில், ஆற்ற அனந்தனுடையார்” என்பது ஆற்றுக் கொண்ட குலசேகராழ்வாரைக் குறிப்பதாம். இவருக்கு ராமனிடத்தான ஈடுபாடு அசாத்யம். ராமாயண காவியத்தைப் கேட்கும் போது தன்னை மறந்து ராமனுக்கு உதவக் கிளம்பிடும் அளவு ஆற்றங் கொண்டவர் என்பதால் இவரைக் குறிப்பிடுகிறது என்கிறார்கள்.“கற்றுக்கறவை” என்னும் பாசுரத்தில், ‘குற்றமொன்றில்லாத கோவலர்: என்பதாகச் சொல்லுவது பெரியாழ்வாரை. அதாவது ஆசாரம், நியம-நிஷ்டையில் வழுவாதவரான பெரியாழ்வாரே இங்கு குற்றமில்லாத கோவலர் என்று கூறுகிறார்கள்.“களைத்திளங் கற்றெருமை” என்பதில், ‘நற்செல்வன் நங்காய்” என்பது தொண்டரடிப் பொடியாரைக் குறிப்பதாகவும், “எல்லேஇளங்கிளியே” எனும் பாசுரத்தில், ‘கிளியே’ என்பது திருமங்கையாரைக் குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறதாம். திருமங்கையார் கிளியைத் தனது பாடல்களில் அடிக்கடிச் சொல்லியிருக்கிறதால் இவ்வாறாகச் சொல்லப்படுகிறதாம்.


“புள்ளின்வாய் கீண்டானை: என்ற பாசுரத்தில், ‘போதரிக் கண்ணினாய்’ என்றது திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறதாம். “அமலாதிபிரான்” என்று தொடங்கும் பாசுரம் முதலாக பல பாசுரங்களில் பெருமாளின் கண்ணழகை மிகவும் வர்ணித்தவராம் திருப்பாணாழ்வார். ஆகவே இந்த்ப் பாடல் அவரைக் குறிப்பதாகச் சொல்லுகிறார்கள் போல.“உங்கள் புழக்கடை” என்னும் பாசுரத்தில், ‘நங்காய்’ என்பது நம்மாழ்வாரைக் குறிப்பதாம். நம்மாழ்வாரது தாயார் பெயர் நங்காய் என்பதால் இந்தக் குறியீடு அவரையே குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.....................................................................................2011 மார்கழிப் பதிவுகள் தொடரும்

20 comments:

வல்லிசிம்ஹன் said...

அருமை அருமை மௌலி. எந்த உபந்யாசமும் நேரில் போக முடியவில்லை.
அந்தக் குறை தீர்க்க தொலைக்காட்சிகள் பெரியோர் வார்த்தைகளை வழங்கிக் காலை வேளைகளைப் புனிதமாக்குகிறது.
அந்த அமிர்தம் இப்போது உங்கள் பதிவிலும் வருவது மனதுக்கு இதம். நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. முதல் ஐந்து பாடல்களிலும் திருமாலின் ஐவகை நிலைகளைச் (பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை) சொல்லிவிட்டு, ஆறு முதல் பதினைந்து வரையில் பத்து பாடல்களில் ஆழ்வார்கள் பதின்மரையும் எழுப்புவதாக ஐதிஹ்யம் உண்டு.

குமரன் (Kumaran) said...

To follow up the comments

Vasudevan Tirumurti said...

நல்ல அனாலைசிஸ்! :-)

ஷைலஜா said...

மனதை விழிக்கச்செய்யும் பதிவு... அருமை மௌலி.

மதுரையம்பதி said...

வரவேணும் வல்லியம்மா, உங்கள் மனதிற்கு இதமாக இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி....

மதுரையம்பதி said...

வாங்க குமரன், ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கீங்க...நல்வரவு. :-) ஓ!, முதல் பத்து பாடல்களில்லையா?, 5 முதல் 15வரையிலா?....நண்பன் சொன்னதை மனதில் கொண்டுவந்து எழுதியதில் தவறு நான் செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். மிக்க நன்றிகள்.

மதுரையம்பதி said...

வாங்க திவாண்ணா....அனலைஸ் பண்ணிய பெரியவர் யாரோ தெரியாது....நண்பன் சொன்னதை நான் பகிர்ந்திருக்கிறேன்...அவ்வளவே!

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸக்கா....ரொம்பநாட்கள் கழித்து இந்தப்பக்கம் வந்திருக்கீங்க....:-). ஆழ்வார்கள் பற்றி அடிக்கடி எழுதணும் போல இருக்கிறதே? :-). அடுத்தது ராமானுஜர் பற்றியது...தவறாது வாருங்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய மார்கழி வாழ்த்துக்கள் அண்ணா!:)
பதிவு அருமை! யார் அந்த சேஷசாயி? அவருக்கும் ஒரு நன்றி சொல்லிருங்க, என் சார்பாவும், தோழி சார்பாவும்:)

-----

ஆண்டாள் காலம், 7-8th CE!
அவளுக்குத் தெரிந்த ஒரே ஆழ்வார் = பெரியாழ்வார், அவ அப்பா என்பதால்!
மேலும், தன் அப்பாவுக்கு, "ஆழ்வார்" என்ற பேரு கிடைக்கும்-ன்னு எல்லாம் அவளுக்கு அப்போ தெரியாது! அது பின்னாளில் ஆனது!

அனைத்து ஆழ்வார்களையும், இராமானுசரையும் இவளே துயில் எழுப்புகிறாள் என்பது, பின்னாளில் வழங்கிய ஒரு ரசமான குணானுபவமே!:)

16ஆம் பாசுரம் = நாயகனாய் நின்று.. கோயில் காப்போனே = கோயில் என்ற திருவரங்கத்தைக் காத்துக் குடுத்த உடையவரைக் குறித்ததாகும் என்று ஈடு செய்யப்பட்டது!:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

1. நாராயணனே நமக்கே பறை தருவான் = பரம்

2. பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி = வியூகம்

3. ஓங்கி உலகளந்த உத்தமன் = விபவம்

4. ஆழி மழைக் கண்ணா, உலகினில் பெய்திடாய் = அந்தர்யாமி

5. மாயனை, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க = அர்ச்சை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒவ்வொரு ஆழ்வார்-ன்னு நீங்கள் குறித்தது வரிசை மாறி இருக்கு-ண்ணா!

இதோ சரியான வரிசை! (பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள் தலைக் கட்டியது)
-----

ஆழ்வார்கள் தூங்கு மூஞ்சிகளா? அவர்களைப் போய் இவள் எழுப்பலாமோ?-ன்னு ஒரு கேள்வி வரலாம்:))

ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும் என்ற ஸ்ரீ வசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும்..
மங்களாசாசனத்திற்கு அஞ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று ஆகையாலே...

பாட்டளவாகப் பத்துப் பாசுரங்களாலே அநுபோக்தாக்களைக் குறித்துத் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது!

ஒருவரை ஒருவர் சென்று எழுப்புவான் என் எனில்;
பெருக்காற்றில் இழிவார் துணையின்றி இழிய மாட்டாதவாறு போல,
இழிந்தாரைக் குமிழ் நீரூட்ட வல்ல ஆழியான் என்னும் ஆழமோழையில் இழியுமிவர்கள்...
துணையின்றி இழிய அஞ்சித் துணை கூட்டிக் கொள்வதற்காக ஒருவரை ஒருவர் உணர்த்துகின்றனர் என்க!

அன்றியும், "ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத", இன்கனி தினயருந்தான்" என்றபடி...
சுவைமிக்க பொருள் தனியே புசிக்கத் தக்கது அல்லாமையால் கூடிப் புசிக்கப் பாரிக்கின்றனர் என்றுங் கொள்க!!

:))))
ஏதாச்சும் புரிஞ்சுத்தா?:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

6. புள்ளும் சிலம்பின காண், புள் அரையன் = பெரியாழ்வார்
(புள் அரையன் என்னும் கருடாம்சம்)

7. கீசுகீசு என்று எங்கும் = குலசேகராழ்வார்
(நீ கேட்டே கிடத்தீயோ என்று... ஆழ்வார் இராம காதையைக் கேட்ட மாத்திரத்தில் இராகவனுக்கு உதவ படையுடன் கிளம்பினது)

8. கீழ்வானம் வெள்ளென்று = நம்மாழ்வார்
(கோதுகலமுடைய பாவாய் என்பதால் பராங்குச நாயகியான மாறன் நம்மாழ்வாரைக் குறிக்கும்)

9. தூமணி மாடம் = திருமழிசை ஆழ்வார்
(மறந்தும் புறம் தொழா இவர், வீர்யமான வாக்கினால் இடிப்பதால் - ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ - இது மழிசைப் பிரான்)

10. நோற்றுச் சுவர்க்கம் = பேய் ஆழ்வார்
(வாசல் திறவாதார் என்று வருவதால் - பேய் ஆழ்வார் தான் கடைசியாக இடைகழியில் புகுந்து, பின்பு யாரும் வரவில்லை ஆதலால், வாசல் பூட்டித் திறவாமல், திருக் கண்டேன், பொன் மேனி கண்டேன்-ன்னு திறந்தே வைத்து விட்டார்)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

11. கற்றுக் கறவை கணங்கள் = பூதத்து ஆழ்வார்
(குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே என்பதால், பூதத்தாழ்வார் தம்மைக் கொடியாகச் சொல்லிக் கொண்டதன் பொருட்டு = கோல்தேடி ஓடுங் கொழுந்தே போல்தே மால்தேடி ஓடும் மனம்)

12. கனைத்துஇளம் கற்றெருமை = பொய்கை ஆழ்வார்
(முதன் முதலாகப் பேசத் தொடங்கும்போது கனைப்பது இயல்பு, அதே போல் முதலில் பேசியவர் பொய்கை ஆழ்வார் என்பதாலே, கனைத்து என்னும் இப்பாசுரம்)

13. புள்ளின் வாய் கீண்டானை = தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
(குடைந்து நீராடாதே என்பதால் - இந்த ஆழ்வார் அடியவர்கள் பாத தூசியில் வெளியே நீராடியமையால்)

14. உங்கள் புழக்கடை = திருப்பாண் ஆழ்வார்
(சங்கிடுவான், வாய் பேசும், பாடேலோ ரெம்பாவாய் என்பதால், பாடிய பாணன் ஆன திருப்பாணரைக் குறிக்கும்)

15. எல்லே இளங்கிளியே = திருமங்கை ஆழ்வார்
(கிளியாகத் தன்னைப் பாவித்த பரகால நாயகியான ஆழ்வார் ஆதலால், கூடக் கூட எதிர்வாதம் பேசும் ஆழ்வார் ஆகையால்...மாறி மாறி வாதம் செய்யும் இத்தோழிகள் பாசுரம்)

16. நாயகனாய் நின்ற = இராமானுசன்
(கோயில் என்னும் திருவரங்கம் காத்தமையால், கோயில் காப்போனே;
மணிக் கதவம் தாள் திறவாய் = விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கதாயீ என்று அனைவருக்கும் பரமபதத்தைத் திறந்து விட்டமையால், இது இராமானுசனைக் குறித்தது ஆகிறது)!
------

அம்புட்டு தான்!
நன்றி, வணக்கம்!:))

குமரன் (Kumaran) said...

விளக்கங்களுக்கு நன்றி இரவி. :-)

கவிநயா said...

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

மதுரையம்பதி said...

வாங்க கே.ஆர்.எஸ், நீண்ட விளக்கங்களுக்கு நன்றி. ஆம், இதெல்லாம் பெரியவர்களது அனுபவத்தின் மூலமாக தங்களது கருத்துக்களைச் சொல்லியதுதான்..

மதுரையம்பதி said...

வாங்க கவிக்கோ கவிக்கா.

Lalitha Mittal said...

very interesting!thanks!!

Lalitha Mittal said...

very interesting!thanks!!