Monday, November 14, 2011

ஆகார நியமம் - பகுதி -2


காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் உற்சவத்தின் பகுதி
 அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி
 யாலரசு நறுவிலிபுங் காயி லாரை
புத்திகொல்லி குறிஞ்சிதான்றி குசும்பை வேளை
 புனமுருங்கை முருங்கைசுக முளரி யுள்ளி
சிற்றவரை கொம்மட்டி பண்ணை தொய்யில்
 சீங்காடன் றேறலூவை பனைம யூரன்
சுத்தியிலா நிலத்திலவை கடம்பு காளான்
 சுரைபீர்க்குச் சணந்தின்னார் சுருதி யோரே.


அத்திவகைகள் , பேரார்க்கு (?), இறலி, வெள்ளைக்கத்தாரி, ஆல், அரசு, நறுவிலி, புங்கு, ஆயில், ஆரை, பூண்டு, குறிஞ்சி, தான்றி, குசும்பை, வேளை, முருங்கை,தாமரைக்கிழங்கு, உள்ளி, சிறிய அவரை, தும்மட்டி, பண்ணைக்கீரை, தொய்யிற்கீரை, சீங்காடன், தேறற்காய், ஊவைக்காய், பனை, நாயுருவி, கடம்பு, நாய்க்குடை, சுரைக்காய், பீர்க்கு, சணற்கீரை, மற்றும் அசுத்தமான நிலத்தில் பயிராகும் வகைகளை உணவில் தவிர்க்க வேண்டும் என்கிறார் தேசிகர்.

சாதாரணமாக கத்தரியில் முழுவதும் பச்சை நிறத்தாலானதும், வெளீர் நிறத்தாலானதும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், ஊதா நிறத்திலான கத்தரி முழுவதுமாக விலக்கப்பட வேண்டும் என்பார்கள்.

 ***

சிறுகீரை செவ்வகத்தி முருக்கி ரண்டுஞ்
 சிறுபசளை பெரும்பசளை யம்ம ணந்தாள்
பறித்தொருவர் கொடாதிருக்கத் தானே சென்று
 பாய்ந்தெடுத்துக் கொள்ளுமவை பகிராக் கூறுங்
குறித்தாலுந் தின்னவெணாக் கைப்பு வர்ப்புங்
 கூர்க்குமவை யழமுமவை கொடும்பு ளிப்புங்
கறிக்காகா விவையென்று கண்டு ரைத்தார்
 கார்மேனி யருளாளர் கடகத் தாரே.

சிறுகீரை, முருக்கை, சிவந்த அகத்தி, பசளை வகைகள், பிறர் தோட்டத்திலிருந்து அனுமதியின்றிப் பறித்தவை, பலருக்காகவும் சமைத்த உணவை எல்லோருக்கும் பரிமாறும் முன்னர் தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளுதல், உண்ண முடியாத அளவுக்கு கசப்பாகவும், மிகுந்த காரமானவையும், கொண்ட பண்டங்கள் உண்ணத் தக்கதன்று.

 ***

மாலமுது செய்யாமல் வந்த வெல்லாம்
 வருவிருந்தில் வழங்காமல் வைத்த வெல்லாங்
காலமிது வன்றென்று கழித்த வெல்லாங்
 கடையின்வருங் கறி முதல கழுவா வெல்லா
நூலிசையா வழிகளினால் வந்த வெல்லா
 நுகராத துடன்பாகஞ் செய்த வெல்லாஞ்
சீலமில்லாச் சிறியோராக் கினவு நல்லோர்
 செலமலங்கள் பட்டனவுந் தின்னார் தாமே.

பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதது, அதிதிகளுக்கு அளிக்காது தவிர்த்த உணவு, குறிப்பிட்ட காலங்களில் உண்ணக் கூடாது என்று கூறப்பட்டவை [சாதூர்மாஸ்ய காலங்களில் விலக்கப்பட்டது என்று தோன்றுகிறது], கடையில் வாங்கிய காய் வகைகளை கழுவாமல் செய்த உணவுப் பொருட்களும், சாஸ்திரங்களில் சொல்லப்படாத விதத்தில் சம்பாதித்த உணவுப் பொருட்களும், ஆசாரமற்ற, ஜலமலங்களுடன் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது.

***
தேவர்களுக் கிவையென்று வைத்த வெல்லாஞ்
 சிவன்முதலாத் தேவர்களுக் கிட்ட வெல்லா
மாவிமுத லானவற்றுக் காகா வெல்லா
 மதுவிதுவென் றறியவரி தான வெல்லா
நாவிலிடு வதற்கரிதா யிருப்ப வெல்லா
 நன்றென்று தம்முள்ள மிசையா வெல்லா
மோவியநா ளோவாத பூவுங் காயு
 முத்தமர்க ளட்டுப்பு முகவார் தாமே.

தேவர்களுக்கு என்று செய்தவை, சிவன் முதலானவர்களுக்கு நிவேதனம் செய்தவை [ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பரதாயத்தில் சிவப் பிரசாதம் விலக்கப்பட வேண்டியது என்பது இங்கே சுட்டப்படுகிறது], ப்ராணன் மற்றும் மற்ற இந்திரியங்களுக்கு கெடுதியானவையும், எதனால் சமைக்கப்பட்டது என்று அறிய முடியாத பொருட்களும், நாவு தாங்க முடியாத உஷ்ணம், காரம் போன்றவையும், மனது ஏற்காத உணவினையும், தூய வெண்மையின்றி அழுக்கு நிறத்தாலான உப்பும் விலக்கத்தக்கது.


இந்தப் பாடலில் சிவப் பிரசாதம் உண்ணத்தக்கதல்ல என்று இருப்பதை ஏதோ பெரிய தவறாகக் கொள்ளத் தேவையில்லை. ஸ்ரீ வைஷ்ணவத்தில் வந்த வேதாந்த தேசிகர் தமது வழக்கத்தை சேர்த்திருக்கிறார் என்பதைத் தவிர இதை ஏதும் பெரிதாகக் கொள்ளத் தேவையில்லை. வீர சைவ மரபினருக்கும் இது போல பழக்கங்கள் இருப்பதால் இவற்றை அக்காலத்து வழக்கமாகவும், அந்ததந்த சமயத்து வழிமுறைகள் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

***

கிளிஞ்சின்முதல் சுட்டசுண் ணாம்பு தானுங்
 கிளர்புனலி லெழுங்குமிழி நுரைக டாமும்
விளைந்ததனின் முதன்மாலுக் கீயா வெல்லாம்
 விளைந்தநில மறுகாம்பென் றெழுந்த வெல்லாங்
களைந்தமனத் தார்மற்றுங் கழித்த வெல்லாங்
 கடியமுதி மியமத்தார் கழித்த வெல்லாந்
தெளிந்தபுனற் றிருவேங்க டத்து மாறன்
 றிருவாணை க்டவாதார் தின்னார் தாமே.

கிளிஞ்சலைச் சுட்டு எடுத்த சுண்ணாம்பு, நுரை, குமிழிகளுடனான நீர், நிலத்தில் விளைந்தவற்றில் இறைவனுக்குச் சமர்ப்பிக்காதவை, பலன் கொடுத்த பின்னர் அதே காம்பு/கொழுவில் இருந்து வளர்ந்தவை [அரைக்கீரை - போன்றவை], பெரியோர்களும், ஆகார நியமத்தைக் கடைப்பிடிக்கும் மற்றோரும் கழித்தவை ஆகியவற்றை நாமும் நமது உணவிலிருந்து நீக்கிட/விலக்கிட வேண்டும் என்கிறார்.

             ..........................................தேசிகர் தொடர்வார்

5 comments:

Lalitha Mittal said...

பதிவில்தேசிகரால் ''தவிர்க்கும்படி'' குறிப்பிட்டுள்ளவற்றில்முக்கால்வாசி
நாம்உண்பவைஅதிலும்தாமரைக்
கிழங்கு (தாமரைத்தண்டு?),மற்றும்
நாய்க்குடை(மஷ்ரூம்?)போன்றவை ஒரு ஸ்பெஷல் டிஷ்ஷாக வட இந்தியாவில் விருந்தினருக்காக சமைக்கவேண்டியுள்ளது!இந்தப்பதிவைப்படித்ததும்
இனிமேல் இதையெல்லாம் எப்படியாவது அவாய்ட் பண்ணனும் என்று தோன்றுகிறது!

மதுரையம்பதி said...

வாங்க லலிதா மேடம்....ஆமாம் தாமரைத் தண்டு பற்றிய விஷயம் நானும் இதைப் படித்த பின்னரே தெரிந்து கொண்டேன்.

VSK said...

உடல் நலத்துக்காக மட்டுமே அல்லாது, ஆன்மீக முன்னேற்றம் போன்ற இதர காரணங்களுக்காவும் சேர்த்தே இப்படியெல்லாம் தவிர்க்கச் சொல்லுகிறார் எனக் கருதுகிறேன் மௌலி ஜி.

தி. ரா. ச.(T.R.C.) said...

இன்றைய உலகில் இவைகளை கடைபிடிப்பதுசிறிது கடினம். வட இந்தியாவில் நம்மவர்கள் பலர் சுரைக்காயையும் உணவில் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன் காலத்திற்கு ஏற்ப மாறுமோ? அறிய வேண்டிய விஷ்யம்தான்

Anonymous said...

Neela Kathari dhaan allowed.

Pachchai and especially Vellai Kathari dhaan not allowed.

So called Hybrid kathari GMO, PD - kekave vendam kandipa not allowed.