Friday, September 30, 2011

2011 - நவராத்ரி: குலாம்ருத ரசிகா, கெளலின்யா, குல சங்கேத பாலின்யா...




சாதாரணமாக இல்லங்களிலும், கோவில்களிலும் ஸ்ரீ சக்ரங்கள் வைத்துப் பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவ்வாறு படம், கடம், சக்ரம், சிலை போன்றவற்றில் இறைசக்தியை இருத்தி வழிபடும் முறை பாஹ்யம் என்பார்கள். அதாவது வெளிப்படையாக ஸ்ரீசக்ரத்தை வைத்துப் பூஜிப்பது என்பது பாஹ்யாகாசம் என்றும், ஹ்ருதயத்தில் மானசீகமாக ஸ்ரீசக்ரத்தை உபாசிப்பதை தகராஹாசம் என்றும் கூறுகிறார்கள். மானசீகமான ஸ்ரீசக்ரத்தை வியத் (வியத்=ஆகாசம்) சக்ரம் என்கிறார்கள். இவ்வாறு மனசீகமாக செய்யப்படும் பூஜைக்கு "ஸமயம்" என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு மானசீகமாக அம்பிகையை வழிபடுவதாலேயே அவளுக்கு "ஸமயாந்தஸ்தா" என்று ஒரு நாமம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. வசிஷ்ட்டர், சனகர், சனந்தனர், சனத்குமாரர், சுகர் போன்ற மஹரிஷிகள் அம்பிகையை இவ்வாறு வழிபட்டதாகத் தெரிகிறது. இவ்விதமான பூஜாமுறையை ஸமய பஞ்சகம் என்கிறார்கள். இவ்வாறு, ஆறாதாரம் முதலான பாவனையான பூஜையில் சந்தோஷமடைபவள் என்பதைக் குறிக்கும் நாமமே "சமயாசார தத்பரா" என்பது.




முந்தைய பதிவில் நாம் ஆறாதாரங்களில் அம்பிகையின் லீலாவினோதங்களை அறிந்தோம். மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியே ஒரு சக்தி ரூபம்தான் என்றும் நாமறிவோம். இந்த குண்டலினி சக்திக்கு குலஸ்திரீ என்று ஒரு பெயர். குலம் என்றால் குடும்பம் என்ற பொருள் நாமறிவோம். இதைத் தவிர குலம் என்று ஸுஷும்னா மார்க்கத்தினையும் சொல்லியிருக்கிறார்கள். யோகிகள் குலத்தைக் காப்பாற்று என்று வேண்டியிருப்பதெல்லாம் தங்களது குண்டலினி யோக முயற்சியைக் காத்து வெற்றியடையச் செய்யப் பிரார்த்தித்தலே. இந்த குலம் என்ற பதத்தினைக் கொண்டு ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பல நாமங்கள் சஹஸ்ரநாமத்தில் இருக்கிறது. அவற்றைப் பார்க்கலாமா?.

குலாம்ருத ரசிகாயை (90) - சஹஸாரத்தினை குண்டலினி சக்தி எட்டும்போது ஏற்படும் அம்ருத தாரையில் ரசனையுடையவள் என்று பொருள்.

குலசங்கேத பாலின்யை (91) - குல சம்பந்தமான ரகசியங்களைக் காப்பவள். அதாவது வேதம், பூஜை, மந்திரம், சக்ரம் போன்றவற்றில் இருக்கும் ரகஸியங்களைக் காப்பவள். அம்பிகையின் உபாசனா முறைகள் குரு-சிஷ்ய சம்பிரதாயத்தையொட்டி வருவது. இவ்வாறான உபாசனா முறையை ரகஸியமாகக் காப்பவள் அம்பிகை.

குலாங்கனாயை (92) - குலஸ்த்ரீ போன்றவள். சரீரத்திற்கு குலம் என்று ஒரு பொருள், அதன்படி குலஸ்திரீயாக சரீரத்திற்குள் இருப்பதாகப் பொருள்.

குலாந்தஸ்தாயை (93) - இந்த நாமத்தில் குலம் என்பது நகரம், வீடு, தேகம், வம்சம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் வசிப்பவள் குலாந்தஸ்தா.

கெளலின்யை (94) - குல என்றால் சக்தி; அகுல என்றா சிவன். கெளலின்யை என்பது சிவ-சக்தி சேர்ந்த ரூபம்.

குலயோகின்யை (95) - குலத்துடன் சம்மந்தமுடையவளாக, குலத்தை இயக்குபவளாக இருப்பவள் குலயோகின்யா

அகுலாயை (96) - குலத்துக்கு மேலாக இருப்பவள். சரீரத்தில் குண்டலினியின் இருப்பிடமான மூலாதாரத்திலும், மேலே சஹஸ்ராரத்திலும் பத்மங்கள் இருக்கின்றன. இதில் அடிப்பாகத்தில்/மூலாதாரத்தில் இருக்கும் பத்மத்தை அகுலம் என்றும், மேல் பாகத்தில் இருப்பதை குலம் என்று சொல்கிறது ஸ்வச்சந்த சங்கிரகம் என்னும் நூல்.

4 comments:

Geetha Sambasivam said...

முந்தைய பதிவையும் மறுபடி படிச்சேன்; விளக்கம் அருமை. தெரியாத பல அர்த்தங்களையும் தெளிவாய்க் கூறுவதற்கு நன்றி.

S.Muruganandam said...

கற்பகாம்பாளை பதிவிறக்கிக் கொண்டேன், படத்திற்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. நவராத்திரி ந்ல்வாழ்த்துக்கள் மதுரையம்பதி ஐயா.

தக்குடு said...

புதுசு புதுசா விஷயங்கள் கிட்டர்து அண்ணா!! ஆராதனை தொடர வாழ்த்துக்கள்!!

Kavinaya said...

எங்கும் வசிப்பவளான குலாந்தஸ்தாயையின் திருவடிகள் சரணம்.

நன்றி மௌலி.