நமக்கெல்லம் ஆறு ஆதாரங்கள் பற்றித் தெரியும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவையே அந்த ஆதாரங்கள். இந்த ஆதாரங்களில் அம்பிகையை எப்படி வழிபட வேண்டும் என்பதை பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த ஆறு சக்ரங்கள் ஒவ்வொன்றிலும் தேவி தன் நாயகனுடன் இணைந்து எவ்வாறு செயல்படுகிறாள் என்பதை ஆதிசங்கரர் நமக்கு செளந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். சாதகன் இந்த சக்ரங்களின் ஒவ்வொரு நிலையை அடையும் போதும் அவனால் இவற்றை உணர முடியும் என்கிறார்கள் பெரியோர். முந்தைய பதிவில் நாம் பார்த்த அக்னி கூடம்ம், சூர்ய கூடம், சோம கூடம் என்பதெல்லாம் இந்த ஆறாதாரங்களே.
மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் அக்னி கண்டமாகவும், மணிபூரகம், அனாகதம் ஆகியவை சேர்ந்தது சூர்ய கண்டமாகவும், விசுக்தி மற்றும் ஆஜ்ஞை சேர்ந்தது சோம/சந்த்ர கண்டம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி கண்டத்திற்கும் சூர்ய கண்டத்திற்கும் இடையில் வருவது பிரம்ம கிரந்தி என்றும், சூர்ய கண்டத்திற்கும், சோம கண்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி விஷ்ணுக்ரந்தி என்றும், சோம கண்டத்திற்கு மேற்பட்ட சஹஸ்ராரம்-த்வாதசாந்தம் என்பதற்கு இடைப்பட்டது ருத்ரக்ரந்தி என்றும் கூறப்படுகிறது. இங்கே கண்டம், கூடம், மண்டலம் என்பதெல்லாம் அந்தந்தச் சக்ரங்களைக் குறிக்கும் வேறு பெயர்களாகக் கொள்ள வேண்டுகிறேன். கிரந்தி என்பது நாடிக்களின் முடிச்சையும், அந்த நாடிகளில் ஏற்படும் ஜென்ம வாசனையால் ஏற்படும் சிக்கல்கள் எனக் கொள்ளலாம்.
பிரம்மக்ரந்தியை கடப்பதன் மூலம் சிருஷ்டி வாசனையும், விஷ்ணுக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக ஸ்திதி வாசனையினையும், ருத்ரக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக் சம்ஹார வாசனையும் விலகுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த மூன்று கண்டங்களிலும் அம்பிகை இருப்பதையே லலிதா சஹஸ்ர நாமத்தில் "வஹ்னிமண்டல வாஸினி, பானு மண்டல மத்யஸ்த்தா, சந்திர மண்டல மத்யகா" என்னும் மூன்று நாமங்கள் குறிப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறார் எனது குரு. இதையே வேறொரு இடத்தில் வாக்தேவிகள், சிரஸில் சந்திரனைப் போன்ற வெண்மையாக அம்பிகை இருக்கிறாள் என்பதை, "சிர: ஸ்திதா சந்த்ர நிபா" என்றும், புருவ மத்தியில் "பாலஸ்தேந்த்ர தநு: பிரபா" என்பதாக வானவில்லை ஒத்த நிறங்களுடன் இருப்பதாகவும், ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்ற பிரகாசிப்பதை"ஹிருதயஸ்தா ரவிப்பிராக்யா" என்றும் கூறுகிறார்கள்.
மூலாதாரத்தில் தனுஸ், புஷ்பபாணம், அபய, வரத ஹஸ்தத்துடன் செம்பருத்தி மலர் போன்ற செந்நிறத்தினளாக, தேவியை த்யானம் செய்ய வேண்டும் என்கிறது ருத்ர யாமளம். இதே போல ஸ்வாதிஷ்ட்டானத்தில் நிலைத்த மின்னல் போன்ற வடிவில் இருப்பதாகவும், அவள் பிரம்மக்ராந்தியைப் பிளந்து செல்லுகையில் அக்னி போன்ற காந்தியுடன் இருப்பதாகவும், அவளே அனாகதத்தை தாண்டி விஷ்ணுக்ரந்தியைக் கடக்கையில் சூரியனது ஒளியை விஞ்சுவதாகவும், ஆக்ஞையைக் கடக்கையில் மின்னல் கொடி போன்று விளங்குவதாகவும் த்யானிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
மூலாதாரத்தில் பஞ்சதசியாகவும், ஹ்ருதயத்தில் சியாமா/தருணியாகவும், ஆக்ஞாவில் வாராகியாகவும், ஸஹஸ்ராரத்தில் மஹா ஷோடசியாகவும், த்வாதசாந்தப் பெருவெளியில் பரா என்னும் முதிர்ந்த சுவாசினியாகவும் த்யானிக்கப்பட வேண்டும் கூறப்பட்டுள்ளது. ஆகவே நாமும் அவளை த்யானிப்போம், அவளை உணரத் தலைப்படுவோம்.
துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:
13 comments:
//ஹிருதயஸ்தா "ரவி"ப்பிராக்யா//
இதயத்தில் அம்பாள் என்னைப் போலவா! ஆகா! கேட்கவே மனம் இனிக்குது:)
வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
//சிரஸில் சந்திரனைப் போன்ற வெண்மையாக அம்பிகை இருக்கிறாள் என்பதை, "சிர: ஸ்திதா சந்த்ர நிபா" என்றும், புருவ மத்தியில் "பாலஸ்தேந்த்ர தநு: பிரபா" என்பதாக வானவில்லை ஒத்த நிறங்களுடன் இருப்பதாகவும், ஹ்ருதயத்தில் வசிக்கையில் சூர்யன் போன்ற பிரகாசிப்பதை"ஹிருதயஸ்தா ரவிப்பிராக்யா" என்றும் கூறுகிறார்கள்.//
ஆஹா. என்ன அழகான நாமங்கள். பொருள் தெரிந்து கொண்டு படிக்கையில் ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றி மௌலி.
ருத்ரக்ரந்தியைக் கடப்பதன் மூலமாக் சம்ஹார வாசனையும் விலகுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். //
சம்ஹார வாசனை?? அல்லது சம்சார வாசனை?? ருத்ரக்ரந்தி என்பதால் சம்ஹாரம் தான் சரியா இருக்குமோ?? விளக்கம் ப்ளீஸ்
திருப்பியும் படிச்சுப் பார்த்தேன்; சம்ஹாரம் தான் என்று நன்றாகவே புரிந்தது. நன்றி. சம்சாரத்திலேயே உழன்று உழன்று அதே நினைவு.
மௌலிண்ணா,
தங்களிடம் உள்ள பெரும்-பொக்கிஷத்தை உவந்தளித்துவிட்டீர்கள் என்று தோன்றுகிறது..
எவ்வளவு அற்புதமான விளக்கம் !!
கருணைக்கு நன்றி.
இங்கும் அங்குமாகப் படித்துவிட்டேன்! அன்னையின் அடிகளே அபயம்!
வாங்க கே.ஆர்.எஸ், உங்களுக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்.
வாங்க கவிக்கா....கனகதாரை முழங்க வந்திருக்கீங்க...நன்றி. :)
வாங்க கீதாம்மா....
//சம்சாரத்திலேயே உழன்று உழன்று அதே நினைவு.//
வேதத்திலும், சாக்தத்திலும் இல்லாத சம்சாரமா?...ஒன்றும் வருந்தாதீர்கள் :-)
திருமால் சார்,
உவந்தளித்தல் எல்லாம் குரு செய்யவேண்டியது....ஏதோ எனக்குச் சொல்லப்பட்டதை, எனக்குப் புரிந்த, தெரிந்த அளவிற்கு எளிமைப்படுத்தியிருக்கிறேன்.
இந்த இடுகையில் சொல்லப்பட்ட எல்லாம் என்னால் உணரப்பட்டதல்ல என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.
வாங்க டாக்டர் சார். அங்கு கண்டிப்பாகப் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் :-)
இந்த இடுகையில் சொல்லப்பட்ட எல்லாம் என்னால் உணரப்பட்டதல்ல என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.///
காமாலைக்குச் சிகிச்சை தரும் டாக்டரிடம், உங்களுக்கு நோய்வந்து நீங்கிருக்கானு கேக்க மாட்டோம் மௌலிண்ணா நாங்க..
//காமாலைக்குச் சிகிச்சை தரும் டாக்டரிடம், உங்களுக்கு நோய்வந்து நீங்கிருக்கானு கேக்க மாட்டோம் மௌலிண்ணா நாங்க..//
ஆஹா!, இப்படி போட்டுத் தாக்குறீங்களே திருமால் :-)
Post a Comment