அண்ட சராசரங்கள் அனைத்தையும் பலவித சக்திகள் இயக்குகின்றன. ஸ்தூல ரூபமான பெளதிக சக்திகளை ஸூக்ஷ்ம ரூபிணிகளான சக்தி தேவதைகளே ஆள்கிறார்கள்.இந்த சக்தி தேவதைகளையே நாம் பலவிதங்களில் பூஜிக்கிறோம். இந்த சக்தி தேவதைகளோ, மஹான்களது மனத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு லோக க்ஷேமார்த்தமான பல காரியங்களை நடத்துகின்றனர். இந்த சக்தி தேவதைகளே பாரதத்தின் பல இடங்களில் பல ரூபங்களாக வழிபடப்படுகின்றனர். இவ்வாறான சக்தி தேவதைகளின் மஹோன்னதத்தை சிறப்பித்து வழிபடவே நவராத்ரி. இந்த நவராத்ரிகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தி தேவதைக்கு சிறப்புத்தந்து வழிபடுகிறோம்.
இந்த சக்தி தேவதைகளே 51 சக்தி பீடங்களில் போற்றப்படுகிறார்கள். இவ்வாறான 51 பீடங்களில் நான்கு பீடங்களை மட்டும் மந்த்ர பீடங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியோர். அவை, காமகிரி பீடம், ஜலாந்த்ர பீடம், பூர்ணகிரி பீடம், மற்றும் ஒட்டியாண பீடம் என்பன. வேதத்திற்கு ப்ரணவம் எத்தனை முக்கியமானதோ, அது போன்றது சாக்தத்தில் 'ஹ்ரீம்' என்னும் அக்ஷரம். இந்த அக்ஷரமானது நான்கு பகுதிகளை உடையது. இந்த நான்கையும் ஸ்தூல ப்ரணவ பீடம், ஸூக்ஷ்ம ப்ரணவ பீடம், காரண பிரணவ பீடம் மற்றும் மகா காரண ப்ரணவ பீடம் என்று நான்காகச் சொல்லியிருக்கிறார்கள்.
சரி, இந்த நான்கு பீடங்கள் என்பன முன்பு இங்கு சொல்லியது போன்று உருவான பீடங்களில் உள்ளவை அவ்வளவுதானே?, என்றால் அதுதான் இல்லை. இவை நமது உடலிலும் இருக்கின்றன. அக்னி கூடம் எனப்படுவது அடி வயிறு, சூர்ய கூடம் எனப்படும் ஹ்ருதயம், சோம கூடம் எனப்படுவது முகம், மற்றும் சஹஸ்ரார கூடம் எனப்படுவது உச்சந்தலை. இவற்றில் அக்னி கூடம் என்பது காமகிரி பீடம், சூர்ய கூடம் எனப்படுவது ஜலாந்த்ர பீடம், சோம கூடம் எனப்படுவது பூர்ணகிரி பீடம், கடைசியாக சஹஸ்ரார கூடம் என்பது ஒட்டியாண பீடம். இந்த நான்கு பீடங்கள்/கூடங்களிலும் உள்ள தேவதைகள் பல நாமங்களில் இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்றும் பார்த்துவிடுவோம்.
காமகிரி பீடத்தில் வாகீஸ்வரி ஸ்வரூபத்தில் மஹா காமேஸ்வரீ, ஜலாந்த்ர பீடத்தில் காமகலா ஸ்வரூப மஹா வஜ்ரேஸ்வரீ, பூர்ணகிரி பீடத்தில் பராபர சக்தி ஸ்வரூப மஹா பகமாலினி, கடைசியாக ஒட்டியாண பீடத்தில் பரபிரம்ம ஸ்வரூபத்தில் ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி. இவளே ச்ர்வ மங்களா என்று சஹஸ்ர நாமத்தில் 200ஆவது நாமமாகச் சொல்லப்படுபவள். கும்பகோணத்தில் கும்பேஸ்வரரின் பத்னியாக கொலு வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் மங்களாம்பிகை என்பதாகும். இவள் எழுபத்து மூன்று அக்ஷரங்களால் ஆன பீடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த எழுபத்து மூன்று என்னும் எண்ணானது [பிந்துவுடன் சேர்த்து] ஸ்ரீசக்ரத்தைக் குறிப்பதே ஆகும்.
ஆகவே, சர்வ மங்களத்தையும் அருளும் ஜகன்மாதா ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுரசுந்தரியை நவராத்ரி நாட்களில் துர்கா-லக்ஷ்மி-சரஸ்வதியுடன் சேர்த்து பூஜிப்போம்.
துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:
11 comments:
கூடங்களின் விளக்கம் அருமையாக உள்ளது. நன்றி.
துர்கா - லக்ஷ்மி - சரஸ்வதி ஸஹித ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தர்யை நம:
நன்றி மௌலி. இனிய நவராத்திரி வாழ்த்துகள்.
வாங்க கீதாம்மா, கவிக்கா....நவராத்ரி பதிவுக்கு இரு பெண்கள் முதலாக வந்திருக்கீங்க...அழகு. வெற்றிலை பாக்கு, மற்ற மங்கலப் பொருட்களுடன் சுண்டல் வாங்கிக்கோங்க. :-)
ஆஹா!!! அமாவாசைலேந்து கொலு ஆரம்பிச்சாச்சு போலருக்கே!! நாலு கூடங்கள் பத்தின தகவல்கள் அருமை. இதிலுள்ள தேவதைகளை குறித்தே நாம் செய்யும் ஏகாதச ந்யாசம் வரர்துனு நினைக்கிறேன்.
பீடங்களைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தது பற்றி சந்தோஷம்.
நன்றி. இந்த பதிவுக்கு எனது வலையிலிருந்து ஒரு தொடர்பு
தந்திருக்கிறேன். லலிதா ஸஹஸ்ர நாமத்தைக் கேட்டுக்கொண்டே
மௌலி அண்ணா அவர்களின் கட்டுரையையும் படிக்கலாம்.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
நவராத்திரி வாழ்த்துக்கள்
நீண்டநாட்கள் கழித்து பதிவு கண்டு மகிழ்ச்சி.
நவராத்திரி வாழ்த்துக்கள்
வாங்க சிற்றோடை...உங்க்ளது முதல் வரவுக்கும், எதிர்பார்புக்கும் நன்றிகள்
வாங்க சுப்புரத்தினம் சார். தொடர்புக்கு நன்றிகள் பல
வாங்க தக்குடு....நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் :)
அன்பர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
Post a Comment