Friday, August 5, 2011

ரஹோயாக-க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா, ஸாக்ஷிவர்ஜிதா


நவாவரண பூஜை மற்றும் இவற்றையொட்டிய மந்திர ஜபங்கள் போன்றவை மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவன. இந்த மார்க்கமானது மிக ரஹஸ்யமாகச் செய்யப்படுவது. இந்த மார்க்கத்திலேயே பல விதங்கள் இருக்கிறது., இவை அவரவர் குலாசாரம், உபதேசிக்கும் குருவின் மார்க்கம் போன்றவற்றையொட்டி வருவது. உதாரணமாக காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி சன்னதியில் செய்கிற பூஜைமுறைகளும், மற்ற கோவில் மற்றும் இல்லங்களில் செய்கிற ஸ்ரீசக்ர பூஜை முறைகளுக்கும் வேறுபாடு உண்டு. இதே போன்று, ஸன்யாசிகள் மற்றும் க்ருஹஸ்தர்களது ஸ்ரீ சக்ர பூஜை முறைகளில் வேறுபாடு உண்டு. இந்த பூஜை முறைகளை என் போன்ற சாதாரணர்கள் பார்க்கும் போது எவ்வித வித்யாசங்களும் தெரியாது. இவ்வாறு வித்யாசங்களை அறிய முடியாத வகையில் அம்பிகையை ரஹஸ்யமாக ஆராதிப்பதால் ரஹோயாகக்ரமாராத்யா என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தை, ரஹோயாக + க்ரமாராத்யா என்று பிரிக்க வேண்டும். ரஹோயாகம் என்றால் ரஹஸ்யமாகச் செய்யப்படும் யாகம் என்றும் க்ரமாராத்யா என்றால் குறிப்பிட்ட க்ரமத்தைக் கொண்டு ஆராதிப்பவள் என்றும் பொருள். ரஹஸ்யமான யாகக் க்ரமத்தால் வழிபடப்படுபவள் என்பது பொருள்.

யோக மார்க்கத்தில் குண்டலி சக்தியை சஹஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று அங்கே பரமசிவத்துடன் சேர்த்து உபாசனை செய்வது என்பது ஏகாந்தமாக , ரஹஸ்யமாகச் செய்யப்படும் ஆராதனை. இதையே செளந்தர்ய லஹரியில் ஆசார்யார், 'ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே' என்று கூறுகிறார்.

ரஹஸ்யமான முறையில் ஜப, யோக முறைகள் செய்தாலும், அவற்றின் புரச்சரணமாக தர்பணம் செய்யவேண்டும். இந்த தர்பணமும் ஆராதனையே!. தர்பணம் என்ற சொல் நமக்குத் தெரிந்ததே. த்ருப்தி தரும் கர்மாவே தர்பணம். அம்பிகைக்குத் த்ருப்தி தரும் ரஹஸ்ய தர்பணத்தால் வழிபட்டு அவளை த்ருப்தி செய்தல் என்பதே ரஹஸ்தர்பண தர்பிதா. மந்த்ரத்தின் பொருளை அறிந்து சாதகம் செய்வதே அம்பிகையை த்ருப்தி செய்யும். இவ்வாறு பொருளை அறிந்து செய்யும் பிரயோகத்தையும் ரஹஸ்தர்பணம் என்கிறார்கள் பெரியோர். சில நேரங்களில் குலாசார முறையில் முதலில் மந்த்ர ஜபம் போன்றவை முதலில் நடந்தாலும், பின்னர் ரஹஸ்யமாக மந்த்த்ரங்களின் பொருள் கூறப்படுகிறது. இவ்வாறு பொருள் அறிந்த பின்னர் செய்யப்படுவது அம்பிகைக்கு மிகுந்த த்ருப்தியைத் தருவது, இதுவே 'ரஹஸ்தர்பண தர்பிதா'. மேற்கூறியவாறு, ரஹோகக் க்ரமத்திலும், ரஹஸ்யதர்பணங்களிலும் வழிபாடு செய்ப்யும் போது அம்பிகை உடனே அனுக்ரஹம் செய்கிறாளாம், ஆகவே அவளை 'ஸத்ய: ப்ரஸதினி' என்கிறார்கள்.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஆரம்பமே 'விச்வம் விஷ்ணும் வஷட்காரோ' என்று ஆரம்பிக்கிறது. ஸகல உலகங்களிலும் நடக்கும் செயல்களுக்கும் அம்பிகை சாக்ஷியாக இருக்கிறாள் என்பதால் அவளை 'விச்வஸாக்ஷிணீ' என்கிறார்கள் வாக்தேவதைகள். விச்வம் என்ற பதத்திற்கு ஜகத், ஸகலம்/எல்லாமும் என்று பொருள் சொல்லலாம். இப்படி எல்லாச் செயல்களுக்கும் சாக்ஷியாக இருப்பவளுக்கு எந்த சாக்ஷியும் கிடையாது. அவரவர் அனுபவத்தால் மட்டுமே அறியப்படுபவள் இவள். ஆகவே இவளை 'ஸாக்ஷிவர்ஜிதா', அதாவது தனக்கு சாக்ஷி ஏதும் இல்லாதவள் என்ற பதத்தில் கூறப்படுகிறாள்.

5 comments:

திவாண்ணா said...

நல்ல பதிவு, தொடரட்டும்!

Kavinaya said...

ஹ்ம்... எனக்கு அம்மா, அம்மான்னு மட்டுமே சொல்லத் தெரியும் :(

ஸாக்ஷிவர்ஜிதா என்ற பெயர் ரொம்ப அழகு.

நன்றி மௌலி.

குமரன் (Kumaran) said...

அன்னையிடமிருந்து தான் அனைத்தும் பிறந்து நிலைத்து கலப்பதால் அவள் விச்வஸாக்ஷிணியாக இருக்கிறாள். அனைத்தும் பிறக்கும் முன்னரும் கலந்த பின்னரும் அவள் மட்டுமே இருப்பதால் (ப்ரலய காலத்தில்) அப்போது அவளைப் பார்க்கும் 'பிற(ர்)' இல்லை என்பதால் அவள் ஸாக்ஷிவரிஜிதையாக இருக்கிறாள். புரிந்து கொண்டது சரி தானா மௌலி?

Jayashree said...

ரஹோயாக க்ரமாராத்யா - "ஸஹ ரஹஸி பத்யா விஹரசி"
சௌந்தர்ய லஹரி :)))))

gvsivam said...

அருமையான தொடர்.மேலும் தொடர்ந்து பதியுங்கள்