Thursday, February 11, 2010

ஈசன் - எந்தையும், தாயும் அவனே! - சிவராத்ரி -1

-

அது ஒர் மழைக்காலம். காவிரிக் கரையில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டிலிருந்து 'அம்மா' என்று வலி பொறுக்க முடியாது கதறும் பெண்ணின் குரல் கேட்கிறது. அது பூரண கர்பிணியான பெண்ணின் குரல், பிரசவ வலியில் தவித்துக் கதறுகிறாள் அவள். இந்த நிமிடமோ, அடுத்த நிமிடமோ குழந்தை பிறந்துவிடும் என்பது போன்ற நிலை. அவளது சிறிய இடையிலிருந்து பரவிய வலி தேகமெங்கும் பரவி கூவியவள் கதறவே ஆரம்பித்துவிட்ட தருணம். ஆனால் அவள் கூப்பிட்ட அவளது தாயோ அங்கு இல்லை. பெண்ணின் பிரசவ நாளை தவறாகக் கணக்கிட்டு, அதற்கு இன்னும் 2-3 நாட்கள் இருப்பதாகக் கணக்கு வைத்துக் கொண்டு காவிரியின் மறுகரையில் வேறு வேலையாகச் சென்றிருக்கிறாள் பிரசவ வலி கண்டவளின் தாய்.

மறுகரையிலிருந்து திரும்புகையில் காவிரி கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றைக் கடக்க இயலவில்லை, திகைத்தாள். மறுகரையில் தாயாகப் போகும் தனது மகளது நிலையை நினைத்தும் பார்க்க இயலவில்லை. ஐயோ!, பிரசவகாலத்தில் தனியாக விட்டுவிட்டு வந்தது பிழையல்லவா?, அவளைக் காப்பvar யாருமில்லையே, என்று நினைத்து 'இறைவா ஈஸ்வரா, கருணைக் கடலே என் மகளைக் காப்பாற்று' என்று நெஞ்சுருக வேண்டினாள்.

அதே சமயம் மறுகரையில், வீட்டில் மகள் பிரசவ வலியின் இறுதியில் 'அம்மா!, அம்மா! நீ எங்கே போய்விட்டாய்' என்று கதறுகிறாள்.

'இதோ வந்துவிட்டேன் கண்ணம்மா!, பயப்படாதே! என்று தைரியம் கூறி பிரசவ அறைக்குள் நுழைகிறாள் தாய். சில நிமிஷங்களில் சுகப்பிரசவம் ஆகிறது. மகவைப் பெற்றவள் வலி நீங்கி ஆறுதல் அடைகிறாள். வந்த அன்னையிம் தன்மையை அறியாது, ' அம்மா நீ எங்கேயோ போய்விட்டாயே என்று பயந்துவிட்டேன், நல்ல வேளையாக, சமயத்தில் வந்தாய்' என்று கூறுகிறாள்.

இரண்டு நாட்கள் கழித்து காவிரியில் வெள்ளம் குறைந்த பின்னர் பெற்ற தாய் அவசர அவசரமாக ஓடி வருகிறாள். பிரசவ நேரத்தில் தாயாக வந்தவள் அப்போது அந்த இடத்திலிருந்து நழுவிவிடுகிறாள்.

எல்லாவற்றையும் தனது மகளிடமிருந்து அறிந்தபின் ஒருவாறு யூகித்து வந்தது உமையொரு பாகனே என்று முடிவுக்கு வந்து ஈசனைப் நினைந்து நன்றி கூறுகிறாள். அப்போது அப்பெண்களுக்கு சிவன் உமையுடன் ரிஷபவாகனனாக காக்ஷி அளிக்கிறான் தாயும் ஆன நமது ஈசன், ஆனந்த சபேசன், வெள்ளியம்பலத்தீசன், ஜகதீசன்.

தென் தமிழகத்துக் குடும்பங்கள் பலவற்றிலும் பெண்கள் பிரசவ காலத்தில் இருக்கும் சமயத்தில் அவர்களது குடும்பத்தினர் தாயுமானவருக்கு பசும்பாலும் பழத்தாறும் நேர்ந்து கொண்டுவருகின்றனர்.

தெளிவறியாதார் சிவனை யறியார்
தெளிவறியாதார் சீவனுமாகார்
தெளிவறியார் சிவமாக மாட்டார்
தெளிவறியாதவர் தீரார் பிறப்பே.

ஹர ஹர மஹாதேவ சம்போ!

6 comments:

கீதா சாம்பசிவம் said...

தாயுமானவர் கதையா?? நல்லா இருக்கு சிவராத்திரி ஸ்பெஷல்

கீதா சாம்பசிவம் said...

போணியே ஆகலையா??? மீ த ஃபர்ஷ்டு????

கிருஷ்ணமூர்த்தி said...

தாயுமானவனை நினைக்கவாவது மறுபடியும் பதிவு எழுத வேண்டும் என்று தோன்றியதா, மௌலி!

அவரவர் விருப்பத்துக்கேற்றபடி இறைவன் அன்னையும் தந்தையுமாய், நல்லாசிரியனுமாய்த் தோழனுமாய்ப் பணிவிடை செய்யும் ஊழியமாய் எல்லாவகையாலும் நிறைந்தானை சேவிக்கும் புண்ணியமாய் ஆனது இப்பதிவே!

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா....முதல் போணிக்கு நன்றி :)

மதுரையம்பதி said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார். சிவராத்திரி சிறப்பு இடுகை(கள்?)ஏதாவது எழுதணும் அப்படின்னு நினைத்த போது இது தோன்றியது....இன்னும் 2 இடுகைகள் இடலாம் என்று இருக்கிறேன்....பார்க்கலாம் நேரத்தைப் பொறுத்து...

Jayashree said...

தாயும் ஆன ஸ்வாமி என்னையும் கண்கூட காப்பாத்தி இன்று உயிரோடு இருக்க வைத்த ஸ்வாமி மதுரை சொக்கநாதரே!!
அருமை !!
தை வெள்ளிக்கிழமை எல்லாம் முடிஞ்சு போச்சேப்பா. ஸ்ரீ ஸ்துதி வரதானு தினம் வந்து பாத்தேன்!! காணுமே? வேலை ஜாஸ்தியா? பரவாயில்லை முடிஞ்சப்புறம் கட்டாயம் போடுங்கோ