சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சிவகரம் என்றால் மங்களத்தைச் செய்வது. ஒருவன் தன்னிடம் இருப்பதைத்தான் பிறருக்கு அளிக்க முடியும். நாமெல்லோருக்கும் மங்களத்தை அருளுபவன் என்பதாலேயே பரப்பிரம்மம் சிவமாகிறது. சம்பு என்றும் சிவனுக்குப் பெயருண்டு. சம்பு என்றாலும் ஆனந்தம், மங்களம் என்றே பொருள். சம்பு எனப்படும் மங்களகாரகன் 'சம்கர:' எனப்படுகிறான், இதையே, "சம் கரோதி இதி சம்கர:" என்கிறார்கள் ஆன்றோர். இந்தக் கருத்தை தாயுமானவர் சொல்லும் போது பின்வருமாறு கூறுகிறார்.
"அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
ஆனந்த மூர்த்தியாகி அருளொடு நிறைந்தது"
இவ்வாறான ஆனந்த மூர்த்தியின் அருகாமையில், அவனுடன், அவனாக இருக்கும் மூவரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவே இந்த இடுகை.
தேவி பாகவதத்தில் ஒரு வரி, 'சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா' என்பது. அதாவது குண்டலினி சக்தியிழந்த சிவனும் சவமாகிறான் என்பது இதன் அர்த்தம்.உமையொரு பாகன் என்றழைக்க்ப்படும் ஈசனும் சக்தியில்லையேல் சிவமில்லை என்பதாக நிச்சலமான பரபிரம்மம் என்று ஆதி சங்கரரால் கூறப்படும் சிவமும் சலனமடைவது சக்தியாலேயே. அதனால்தான் சிவலிங்கத்தில் ஆவுடை சக்தியாகச் சொல்லப்படுவது. ஆக லிங்க மூர்த்தியாக இருக்கையில் சிவன் அருகில், அவனில் இணைந்து இருக்கும் பராசக்தியே மூவரில் முதலிடத்தைப் பெறுகிறாள். இதே போல ஈசன் சோமாஸ்கந்த வடிவில் இருக்கும் உற்சவ விக்ரஹங்களிலும் ஈசனுக்கும், ஸ்கந்தனுக்கும் அடுத்ததாக இருப்பவள் ஆவுடைநாயகி என்றே விளிக்கப்படுகிறாள்.
சிவாலயங்களுக்குச் செல்லுகையில் நாம் முதலில் தரிசிப்பது நந்தியம்பெருமானையே!. ஈசன் சன்னதியில் கொடி மரம், பலி பீடத்தை அடுத்து ஈசனை நோக்கியவாறு இருக்கும் ரிஷபத்தை நந்தி என்று கூறுகிறோம். ஸ்மார்த்தராகட்டும், சைவராகட்டும், இந்த நந்தியம்பெருமானை வழிபட்ட பின்னரே ஈசனை வழிபடுவர். இவரருகில் சென்று,
"நந்திகேச்வர மஹா ப்ராக்ஞ சிவத்யான பராயண
உமா சங்கர சேவார்த்தம் அனுக்ஞாம் தாது மர்ஹஸி"
என்று பிரார்த்திப்பது வழக்கம். இதன் பொருளாவது, "மூச்சுக் காற்றால் சிவ கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ள மஹா பக்த நந்தியம்பெருமானே!, உமா சங்கரனை சேவிக்க என்னை அனுமதிப்பாயாக" என்பதுதான்.சிவன் யோகத்தில் எப்போதும் இருப்பதால் அவருக்கு ஸதாகாலமும் தனது மூச்சுக்காற்றால் விசிறிக் கொண்டு வழிபடுகிறாராம் நந்தியம்பெருமான். சைவம், மற்றும் லிங்கத்தை ப்ராதான்யமாக வைத்துச் செய்யும் பஞ்சாயதன பூஜைகளில் நந்தியைப் பூஜித்த பிறகே ஈசனுக்கு வழிபாடு. ஆக ஈசனின் முதல் பக்தன் என்றால் அது நந்தியே!. அடியவரை வழிபட்டு பின்னர் அண்ணலை வழிபடுதல் என்பதே முறை என்று ஆன்றோர் காட்டிய வழி. சைவாகமத்தை நமக்கருளிய நந்தியம்பெருமானை வணங்கியபின், அதாவது சைவாகமத்தின் முதல் குருவான நந்தியை வணங்கியபின் அவரனுமதியுடன் ஈசனை வணங்குதல் சரிதானே!.
ஆயிற்று, நந்தியின் அனுமதியுடன் ஈசனை வழிபட்டாயிற்று. அடுத்து பிராகார வலத்தில் நாம் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்கையை தரிசித்த பின், ஈசனது இடது புறத்தில், ஈசனை நோக்கியவாறு இருப்பவர் சண்டிகேஸ்வரர். இவரே மூன்றாவது முக்கிய நபர். இந்த சன்னதியிலேயே பலரும் கைகளைத் தட்டுவது, விரல்களைச் சுண்டுவது.
நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரித மானஸ
சம்போ ஸேவா தேஹி சண்டிகேச நமோஸ்துதே!
என்று சண்டிகேஸ்வரனை வணங்குகிறோம். 'நீலகண்டனின் பாதாரவிந்தத்தில் ஊன்றிய மனமுள்ள சண்டிகேசா!, சிவதரிசனத்தின் பலனை எனக்குத் தாருங்கள்' என்று பொருள். எப்போதும் சமாதி நிலையில் இருப்பவராம் இந்த சண்டிகேஸ்வரர். நாமும் குண்டலினியைத் தூண்டி, த்யான, தாரண முறைகளின் வழியாக ஸமாதியில் மனமிழந்து நிற்கவேண்டும் என்பதே இதன் சிறப்பு. இந்த நந்தி மற்றும் சண்டிகேஸ்வர தரிசனத்தை பின்வருமாறு தத்துவார்த்தமாகச் சொல்வர் பெரியோர்.
ரிஷபமாக இருக்கும் ஜீவன் தன்னுடைய ப்ராணாயாமத்தால் தன்னுள் புதைந்து கிடக்கும் கனலை (சிவனுக்கு அக்னி என்றும் பெயருண்டு) விசிறி அதன் மூலமாக குண்டலினியை தூண்டி த்யான, தாரண வழிகளில் பிரயாணம் செய்து முடிவாக ஸமாதி நிலைகயில் சண்டிகேஸ்வரரைப் போல தன் மனமிழந்து சமாதி நிலை அடைய வேண்டும் என்பதே இந்த மூன்று தரிசனங்களின் பொருள்.
அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும் போது இந்த மூவரையும் முறையே தரிசித்து வணங்குவோம்.
சிவசிவ வென்கிலர் தீவினையாளர்
சிவசிவ வென்றிட தீவினை மாளும்
சிவசிவ வென்றிட தேவருமாவார்
சிவசிஅ வென்றிட சிவகதிதானே!
ஹர ஹர மஹாதேவ சம்போ!
8 comments:
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் நமசிவாய
ஈசனை நோக்கியவாறு இருப்பவர் சண்டிகேஸ்வரர். இவரே மூன்றாவது முக்கிய நபர். இந்த சன்னதியிலேயே பலரும் கைகளைத் தட்டுவது, விரல்களைச் சுண்டுவது.//
சண்டேஸ்வர நாயனார் சந்நிதியில் கை தட்டக்கூடாதுனு இல்லை கேள்விப்பட்டிருக்கேன், மெளலி, அதை விளக்கி இருக்கலாமே???
வருகைக்கு நன்றி குமரன்.
வாங்க கீதாம்மா.....ஆமாம், கைதட்டக்கூடாதுன்னுதான் சொல்றாங்க...என்பதிவிலும் செய்வார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேனே தவிர 'செய்வோம்/செய்யுங்கள்' என்று கூறவில்லை.. :) நீங்களே பின்னூட்டத்தில் Pril/Vim liquid soap போட்டு விளக்கினீங்கன்னா நன்றாக இருக்கும்.. :)
//நீங்களே பின்னூட்டத்தில் Pril/Vim liquid soap போட்டு விளக்கினீங்கன்னா நன்றாக இருக்கும்.. :)// பாட்டி எப்பொதுமே கேள்வி மட்டும்தான் கேட்பார்கள்.....:)
நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரித மானஸ
சம்போ ஸேவா *பலம்* தேஹி சண்டிகேச நமோஸ்துதே!
என்றிருக்க வேண்டு. சம்புவை ஸேவித்த பலனைத் தாரும் என வேண்டிக்கொள்வது.
(’நீலகண்ட’ என்பதில் உள்ள ‘ட’ ஸம்ஸ்க்ருத எழுத்தில் உள்ள இரண்டாவது ‘ட’; ’சம்போ’ வில் உள்ள ‘போ’ ஸம்ஸ்க்ருதத்தில் நான்காவது ’போ’; பரிஸ்புரித’, ’பலம்’ என்பதில் உள்ள ’பு’, ‘ப’ இரண்டும் ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டாவது ’பு’ ‘ப’; இவற்றைச் சரியாக உச்சரித்தல் நல்லது. இயலவில்லையானால் பரவாயில்லை, இறைவன் பொறுத்து ஏற்றுக்கொள்வான்)
நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரித மானஸ
சம்போ ஸேவா *பலம்* தேஹி சண்டிகேச நமோஸ்துதே!
என்றிருக்க வேண்டு. சம்புவை ஸேவித்த பலனைத் தாரும் என வேண்டிக்கொள்வது.
(’நீலகண்ட’ என்பதில் உள்ள ‘ட’ ஸம்ஸ்க்ருத எழுத்தில் உள்ள இரண்டாவது ‘ட’; ’சம்போ’ வில் உள்ள ‘போ’ ஸம்ஸ்க்ருதத்தில் நான்காவது ’போ’; பரிஸ்புரித’, ’பலம்’ என்பதில் உள்ள ’பு’, ‘ப’ இரண்டும் ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டாவது ’பு’ ‘ப’; இவற்றைச் சரியாக உச்சரித்தல் நல்லது. இயலவில்லையானால் பரவாயில்லை, இறைவன் பொறுத்து ஏற்றுக்கொள்வான்)
வாங்க அனந்த் சார். பின்னூட்டத்திற்கு நன்றி. ஆமாம், உச்சரிப்பில் கவனம் வேண்டும், எழுதுகையில் எண்களிட்டு எழுதலாம், ஏனோ எனக்கு அவ்வாறாக எழுத பிடிப்பதில்லை...மாற்றிக் கொள்ள முயல்கிறேன்.. நன்றி
Post a Comment