பக்ஷம் என்றால் 15 நாட்கள்; மஹாளயம் என்பது பித்ரு தேவதைகள் வசிக்கும் இடம். பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் சூக்ஷ்ம ரூபத்தில் வசிக்கும் 15 நாட்களே மஹாளய பக்ஷம். புரட்டாசி மாச அமாவாசைக்கு முந்தைய 14 நாட்களை மாஹாளய பக்ஷம் என்று பெயர். புரட்டாசி அமாவாசையை மஹாளய அமாவாசை என்று சொல்கிறோம். இந்த நாட்களில் நமது மூதாதையர்களான பித்ருக்கள் பூலோகத்திற்கு சூக்ஷம ரூபத்தில் வந்து நாம் அளிக்கும் பித்ருதர்பணங்களை நேரடியாக எற்பகிறார்கள். பொதுவாக பித்ருக்கள் எல்லா நாட்களிலும் பூலோகம் வர இயலாதாம். ஒவ்வொரு அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் அவர்கள் மறைந்த திதி நாட்கள் மற்றும் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே அவர்களால் பூலோகத்திற்கு வர இயலுமாம். அதனால்தான் அவர்கள் வரும் தினங்களில் பித்ரு பூஜையை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மஹரிஷிகள். புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நமது பித்ருக்களான வசு, ருத்ர, ஆதித்யர்கள் கூட பூலோகம் வந்து பித்ரு தர்பணங்களை சூக்ஷ்ம ரூபமாய் செய்கிறார்கள் என்பர்.
அமாவாசை, மாசப்பிறப்பு மற்றும் க்ரஹண காலங்களில் செய்யும் தர்பணமானது நமது தந்தை மற்றும் முந்தைய 2 தலைமுறையினருக்கும், தாய் வழியில் 3 தலைமுறையினருக்குமாக 12 பேர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது.ஆனால் மஹாளய பக்ஷத்தில் மட்டுமே, காருணீகர்கள் எனப்படும் மாமா-மாமி, பெரியப்பா-பெரியம்மா, அத்தைகள்,சகோதரர்கள்-அவர்களது மனைவிகள், சித்தப்பா-சித்தி, மாமனார்-மாமியார், குரு, நண்பர்கள் ஆகிய எல்லோருக்கும் செய்ய முடிகிறது.பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன் மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும் என்கிறார்கள். இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும், செய்யத் தகுதியுடையவன் செய்யாது விடக்கூடாது என்பது பெரியவர்கள் கூற்று.
மஹாளயத்தை மூன்று விதங்களில் செய்யலாம். பார்ணவம் எனப்படும் ஹோமத்துடனான சிராத்தமாகவும், ஹோமமில்லாது ஹிரண்ய சிராத்தமாகவோ, அல்லது தர்பண ரூபமாகவோ செய்வது வழக்கம். நமது பொருளாதார, இட-கால வசதிக்கு ஏற்ப ஏதேனும்ஒரு வழியைப் பின்பற்றியோ அல்லது குலவழக்கத்தின்படியோ செய்வது அவசியம். 15 தினங்களும் தர்பணம் செய்வதற்கு பக்ஷ-மாளயம் என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் விசேஷ தினங்களான மஹாபரணி, மத்யாஷ்டமி, வ்யதிபாதம், கஜச்சாயா,அல்லது தமது தாய்/தந்தையின் திதிகளில் மட்டுமாவது ஹிரண்ய ரூபமாக சிராத்தம் செய்து அன்னமிடுதல் வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சன்யாசியாகி மரணமடைந்திருந்தால் அவர்களுக்கு மாஹாளய ஏகாதசியன்று சிராத்தம் செய்வதும் துர்மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி உத்தமமானதாகச் சொல்லப்படுகிறது.
பொதுவாக நாம் தர்பணங்கள் செய்யும் போது நமது வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் நடுவிலாக நீரை வார்க்கிறோம். இந்த இருவிரல்களுக்கு நடுவில் இருக்கும் ரேகைகளை பித்ரு-பூம்ய ரேகைகள் என்பர். இந்த ரேகைகள் மூலமாக அளிக்கப்படும் நீரானது பித்ருக்களுக்கானதாக மாறிவிடுகிறதாம். இந்த 15 நாட்களும் சிராத்தம், தர்பணம் போன்றவை மூலமாக தான தர்மங்களைச் செய்தல் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானதாச் சொல்லப்படுகிறது. இவ்வாறு ப்ரீதியான பித்ருக்கள் நமது வம்சம் தழைக்கவும், நோய்-நொடியற்ற வாழ்வுக்கும் ஆசிர்வாதிக்கின்றனர். நமது வாழ்வுக்கு நல்லது என்பது ஒருபுறமிருந்தாலும், நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும். அவரவர் குலாசாரத்தின்படியாக எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படியாக செய்து மூதாதயர்களை வணங்கி, அவர்களது அருளை நாடுவோம்.
ஹரி:
9 comments:
பாட்டிக்கு இதை அப்பா விடாது செய்வாரு-ண்ணா!
இந்தப் பதிவை வாசிக்கும் போது எனக்கு வாழைப்பந்தல் ஜனகவல்லி பாட்டி தான் நினைவுக்கு வந்துக்கிட்டே இருந்தாங்க!
இன்று பாட்டு பாடுவதாகட்டும், ஆர்வத்துடன் படிப்பதாகட்டும், பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதாகட்டும், எவ்வளவு சண்டை-ன்னாலும் திரும்ப வந்து பேசுவதாகட்டும்...
அத்தனையும் பாட்டியைப் பார்த்து பார்த்து கத்துக்கிட்டது தான்! பட்டுப் புடைவையும் இல்ல, நகையும் இல்ல, ஆனா பார்த்தாலே ஒரு மதிப்பு வரும்! அவங்களும் தாத்தாவுக்கு விடாது செய்து மஹாளய பட்சம் கொண்டிருந்தார்கள், அப்பா/சித்தப்பா/இல்லை அவர்களின் ஒன்றுவிட்ட தம்பிகள் யாரையாச்சும் வச்சி செய்யத் தவறியதே இல்லை!
நீத்தார் பெருமை என்று குறள் பேசும் நன்றி தெரிவித்தல் பதிவுக்கு நன்றி பல!
//புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள், தேவர்கள்மற்ஸ எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம் செய்வதாகச் சொல்லப்படுகிறது//
1. பூலோகத்தில் மட்டுமே இது செய்யப்படுவதா?
மேலுலகம், சொர்க்கம், நரகம் இங்கெல்லாம் செய்யப்படுமா?
2. மஹரிஷிகள் செய்வதாகச் சொல்லி உள்ளீர்களே? துறவிகளுக்கும் இது உண்டா?
//இன்னொரு கருத்துப்படி, நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்/தர்பணம்போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும்//
அவ்வண்ணமே, மீண்டும் பிறவாது, மோட்சம் அடைந்து விட்ட ஆன்மாக்களுக்கு செய்வதும், நாராயணப் ப்ரீத்யர்த்தமாகவே சென்று விடுகிறது என்பர்!
குடந்தை சாரங்கபாணிப் பெருமாளே, இதை, ஆலயம் சீர் திருத்தியவர் அனாதையாகச் சென்றதால், அவருக்காக, இன்றும் செய்து கொண்டிருக்கிறான்!
* முன்னோர்கள் பாகவதர்கள் என்பதால்,
* பகவத் கைங்கர்யத்தை விட,
* இந்த பாகவத கைங்கர்யம்,
* மிக மிகவும் மேலானது!
//குடந்தை சாரங்கபாணிப் பெருமாளே, இதை, ஆலயம் சீர் திருத்தியவர் அனாதையாகச் சென்றதால், அவருக்காக, இன்றும் செய்து கொண்டிருக்கிறான்!//
அது போலவே திருவண்ணாமலையில் அண்ணாமலையாரும் மாசி மகத்தன்று வள்ளால மஹாராஜாவிற்க்கு திதி கொடுத்து நாம் எல்லோரும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் தெய்வங்களே இவ்வாறு எடுத்து காட்டுகின்றனர்.
நன்றி மதுரையம்பதி ஐயா, சரியான நேரத்தில் பதிவிட்டதற்கு.
நம்மை வளர்த்து ஆளாக்கிய நமது பெரியவர்களுக்கு நாம் செய்யும் நன்றி அறிவித்தல் என்ற எண்ணத்திலாவது இந்த பித்ரு பூஜையை விடாது செய்ய வேண்டும்.
15 நாட்களும் மிகமோசமான உடல்னிலையிலும் கிரம்மாக செய்கிறேன் மௌளி.நன்றி
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கே.ஆர்.எஸ்.
//இது செய்யப்படுவதா?
மேலுலகம், சொர்க்கம், நரகம் இங்கெல்லாம் செய்யப்படுமா?//
மேலுலகங்களில் வசிப்பவர்களும் இந்த காலத்தில் பூமிக்க்கு வந்து செய்துவிட்டுப் போவர் என்றே சொல்லப்படுகிறது.
வருகைக்கு நன்றி கைலாஷி சார்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார். நானும் செய்கிறேன். இதோ கடைசி நாளும் வந்திட்டது.
If possible provide your mail id to me @ srvijayaragavan@gmail.com
Thanks.
Post a Comment