
பதிவு -1 இங்கே!
பதிவு -2 இங்கே!
அன்னை காஞ்சியில் பிரதிஷ்ட்டை ஆன பிறகு அந்த பிரதேசத்தை ஆள்வதற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்க பிரம்மாவிடம் வேண்டுகின்றனர். பிரம்மா தனது திருஷ்டியால் வானிலிருந்து ஒருவனை வரவழைத்து அவனுக்கு ஆகாச பூபதி என்று பெயரிட்டு, அப்பகுதியை ஆளவும், அன்னைக்கு பூஜைகள் நடத்தவும் அவனுக்கு உத்தரவிடுகிறார். வருஷங்கள் கடக்கிறது. ஆகாச பூபதி அன்னையை வழிபட மறந்து கேளிக்கைகளில் ஈடுபடத் துவங்குகிறான்.அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாக மக்களும் அன்னைக்கு பூஜை, மற்றும் உத்ஸவங்களை நடத்த தவறினர். தேசத்தில் வறுமை தலைவிரிக்க ஆரம்பிக்கிறது. மன்னனை மிகப் பெரிய வறுமை ஒன்றும் வாட்டியது. ஆம்!, ஆகாச பூபதிக்கு மழலைச் செல்வம் இல்லை. தீமை காட்டி விலக்கிடும் தெய்வமல்லவா அன்னை?. தனக்கு மக்கட் செல்வம் இல்லாததும், நாட்டில் நிலவும் பஞ்சமும் ஆகாச பூபதிக்கு பராசக்தியை நினைவுபடுத்துகிறது. அன்னை காமாக்ஷிக்கு நித்ய மஹோத்ஸவங்களைச் செய்து, அரசனும் அவன் மனைவியும் குழந்தை வேண்டி அனுதினமும் அன்னையை ஆராதிக்கின்றனர். இதன் விளைவாக அரசியின் கருவறையிலும் உயிர் வளர ஆரம்பிக்கிறது.
தன்னையே தனது சேய்களுக்குத் தரும் காமாக்ஷி, தனக்கும் மேலான ஒன்றை அரசனுக்குத் தர முடிவெடுக்கிறாள். தன்னையே தருவதையும் விட தனது புத்ரனைத் தருவது எந்தத் தாயாலும் முடியாது, ஆனால் லோகமாதா தனது ஸீமந்த புத்ரனை, செல்வ/செல்ல கணபதியை அரச தம்பதிக்கு மகனாக அளிக்க முன்வருகிறாள். அதிலும் ஒரு திருவிளையாடலாக கணபதியை, கஜமுகனாக அன்றி, சாமானிய நரமுகத்துடனான மானிடக் குழந்தையாகவே பிறக்குமாறு செய்து, அக்குழந்தை விக்னேஸ்வரன் என்பதை மறைக்கிறாள். இவ்வாறாக சைவ பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் பிருத்வீ க்ஷேத்ரமாகவும், சாக்த பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் ஆகாச தலமுமான காஞ்சியில் விக்ன விநாயகன் அரச குடும்பத்தில் அவதரிக்கிறான். நாடு முழுவதும் கொண்டாட்டம், அரசனது குழந்தைக்குப் பெயரிடும் நாளும் நெருங்குகிறது. இனியும் கணேசனது ப்ரபாவத்தை மறைக்கலாகாது என்று எண்ணுகிறாள் பராசக்தி. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசன் மக்களுக்கு வாரி வழங்குகிறான். அரண்மனையில் மக்களுக்கு அறுசுவை உண்டி வழங்கப்படுகிறது. முதலில் ஆடவர் உண்டு பின்னரே பெண்கள் உணவருந்துவது என்பது பொது வழக்காக இருந்தாலும், இங்கே அரசன், இவ்விழாவில் "தவதேவி பேதா: ஸத்ரிய: ஸமஸ்தா ஸகலா ஜகத்ஸு" என்னும் சண்டி மந்திரத்தின்படி பெண்களை எல்லாம் முதலில் அமர்த்தி சுவாசினி பூஜை செய்து உணவிடுகிறான். சஹஸ்ர நாமத்தில் "ஸுவாஸிந்யார்ச்சன ப்ரீதா" என்று சொல்வதால் ஸுமங்கலிகளையே காக்கும் தேவியாகக் கருதி அவர்களைக் காக்க வைக்காது முதலில் விசேஷமாக உணவளிக்கிறான்.
பந்தியில் பெண்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே மழை 'சோ' என்று பொழிய ஆரம்பிக்கிறது. போஜன கூடத்தின் முற்றத்தில் மழைத்துளிகள் சல-சலவென விழுகின்றன. ஆஹா! பொன் மழையல்லவா பொழிகிறது. மழை நீருடன் பொன் துகள்களும் வர்ஷிப்பதை ஆச்சர்யத்துடன் காண்கின்றனர் மக்கள். ஒரு முஹுர்த்தகாலம் இவ்வாறாக ஸ்வர்ண மணிகள் கொண்ட மழை பொழிந்த பின்னர் அங்கே இருந்த தவஸ்ரேஷ்டர்களுக்கு வானில் மற்றொரு காக்ஷி தெரிகிறது. அன்னை காமாக்ஷியின் எழிலான தரிசனம் தருகிறாள். வறுமையில் வாடின நாட்டைக் குபேர ஸாம்ராஜ்யமாக ஆக்கிவிட்டாள். இது அவள் அனுக்ரஹமே என்று உணர்ந்த எல்லோரும் ஆச்சர்யத்துடன் போஜன சாலைக்குள் வருகின்றனர். போஜன சாலையிலேயே ஒரு மஞ்சத்தில் அரசனது மகவும் படுக்க வைக்கப்பட்டிருந்தது. அரசன் மிக்க மகிழ்ச்சியுடன் பந்தி விசாரணை செய்கிறான், அப்போது பிறந்த குழந்தை அரசனை நோக்கி நகர்ந்து சென்று அவனை நோக்குகிறது. பிறந்து பன்னிரு நாட்களே ஆன குழந்தை தவழ்வதே ஆச்சர்யம் என்றிருக்கையில் அக்குழந்தை தனது தந்தையிடம் பேசவும் ஆரம்பிக்கிறது. 'பொன் மழை பெய்த காரணம் சொல்கிறேன் கேளுங்கள் அப்பா, இன்று நீங்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த விருந்தில் பயற்றம் பொங்கலும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொங்கலுக்காக எடுத்து வைக்கப்பட்ட பயற்றில் ஒரு பொன் மணி கலந்திருந்தது. என்னைப் பெற்ற அன்னை பயறு நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் போது அவளது நெளி-மோதரத்தில் இருந்த ஒரு தங்க முத்து இப்பயற்றுடன் கலந்து, அது பொங்கலாயிற்று. அந்த பொன்னாலான பயறு செய்த பாக்யம் அது அன்னை காமாக்ஷியின் திருவயிற்றில் சேர்ந்தது. அதன் பலனே இந்த பொன்மழை" என்று கூறி நிறுத்தியது அக்குழந்தை.
குழந்தை சொல்வதைக் கேட்ட ஆகாச பூபதி, பொங்கலில் கலந்த பொன்மணி எப்படி பராசக்தியின் வயிற்றை அடைந்தது என்று குழந்தையிடம் கேள்வி கேட்க, 'இது கூட புரியவில்லையா?, சகல உலகிற்கும் தாயான தேவி அந்தப் பந்தியில் தானே ஒரு சுமங்கலிக் கோலத்தில் அதோ அந்த பந்தி வரிசையில் உணவருந்திக் கொண்டிருக்கிறாள். வாருங்கள் காண்பிக்கிறேன்' என்று கூறி தந்தையை அழைத்துச் செல்கிறது. குழந்தை காட்டிய இடத்தில் யாரும் இருக்கவில்லை, ஆனால் அங்கே அந்த சுமங்கலிகள் பந்தியில் ஒருவர் உணவருந்தியதற்கான தடையமாக இலையும், அதில் பறிமாறிய உணவு உண்ணப்பட்டதாகவும் தெரிகிறது. பறிமாறப்பட்ட பயற்றம் பொங்கலில் விரல்-சுவடுகளும் தெரிகிறது. அதைக் கண்டதும் அரசன் ஆனந்தக் கண்ணீர் விடுகிறான். மஹா-மாயா தனக்கு தரிசனம் தராது அந்தர்யாமியாகி-விட்டாளே என்ற வருத்தம் ஒருபுரம், இன்னொரு பக்கம், தான் அளித்த விருந்தில் அன்னையே பங்கேற்றாளே என்ற பரவசம். சிறு குழந்தையோ, அந்த இலையில் இருந்த, அந்த மீதமான பொங்கலை அள்ளி அருந்துகிறது. தான் மட்டுமல்லாது அங்கிருந்த எல்லோருக்கும் தேவீயின் ப்ரசாதம் என்று வாரி-வாரி வழங்குகிறது. அப்-பிரசாதமும், அள்ள-அள்ளக் குறையாது அக்ஷயமாக வளர்ந்தது.
இவ்வளவும் செய்யும் இக்குழந்தை உண்மையில் யார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. அங்கிருந்த அருந்-தவத்தோருக்கு புரிந்தது விஷயம். கணபதிராயனே ராஜகுமாரனாகப் பிறந்திருக்கும் உண்மை புரிந்தது. சரி, ராஜகுமாரனை ஏன் முருகனாகச் சொல்லவில்லை?. முருகனுக்கு உகந்தது தினை, அவன் அண்ணனுக்கு உகந்தது பயறு. கணநாதனுக்கு உரிய சக்ரத்தில், மூலாதாரத்திற்கு உரிய இடத்தில் வசிக்கும் பாரசக்தியின் பரிவார-சக்தியின் பெயரே 'முத்கெளதனாஸக்த சித்தா'. முத்க ஓதன = பயற்றம் சோறு, முத்கம் = பயறு. அழகாலும், குழந்தை உள்ளத்தாலும், முக்தி அருள்வதாலும் அவன் முக்தன். துதிக்கை இல்லாமல் கையாலேயே அம்பிகையின் பிரசாதத்தை தனது வாயில் அடைத்துக் கொண்டு, பிறருக்கும் அள்ளி-அள்ளித்தரும் குழவியைக் கண்ட அங்கிருந்த அனுபூதிமான்கள் குழந்தையை நோக்கி 'அம்மாவை நீ இனம் கண்டு, அவளை எங்களுக்கும் உணர்த்திவிட்டாய், துதிக்கை இன்றித் தோன்றினாலும் நீ துண்டீரனே! என்று கூறித் தொழுதனர். துண்டம் என்றால் துதிக்கை; துதிக்கையை உடையவன் துண்டீரன். அரசன் குழந்தைக்குத் 'துண்டீரன்' என்றே பெயரிட்டு வாழ்த்தொலி எழுப்ப, மக்களும் ஜய கோஷம் செய்கின்றனர். அப்போது குழந்தை மீண்டும் வாய்திறந்து 'அன்னை நம் கண்களுக்குப் புலப்படவில்லையே என்ற விசனம் வேண்டாம். அவள் போஜனத்தின் போது பாதியில் சென்றது தனது உச்சிஷ்ட்டம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற அவளது க்ருபை, மேலும் தரிசனம் தராமைக்குக் காரணம் என்மீது இருக்கும் வாத்சல்யமே. அவளது தரிசனத்திற்குப் பிறகு என்னை விநாயகன் என்று நீங்கள் அறிந்தால் அது, தேவாம்ருதம் அருந்திய மக்களுக்கு தேனின் சுவை எப்படி மிகுந்த களிப்பை ஏற்படுத்தாதோ அது போன்ற உணர்வைத் தரும். என்னால் விளையும் ஆனந்தம் குறைவாக தெரியக்கூடாது என்ற கருத்தில் என்னை பெருமைப்படுத்தவே அவள் காக்ஷி தரவில்லை' என்று கூறி முடிக்கிறார்.
மஹாகாயரான துண்டீரர் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார். உரிய நேரத்தில் அரசன் ஆகாச பூபதி துண்டீரருக்கு மாலதி என்ற மங்கை நல்லாளை திருமணம் செய்வித்துப் அரச பட்டாபிஷேகமும் செய்வித்த பின்னர் தவம் செய்ய வனம் புகுகிறார். துண்டீரரது பட்டாபிஷேகம் அரசவையில் நடக்கவில்லை, அன்னை காமாக்ஷி கோவிலில் அவள் முன்னால் நடந்ததாம். பூத கணங்களையே ஆளும் ஐயன் நரர்களையும் சேர்த்து அரசாண்டார். நாடெங்கும் லெளகீக, மற்றும் ஆன்மிகச் செல்வமும் தழைத்தோங்கியது. ஆண்டுகள் கடந்தன, போதுமெனக் கருதிய துண்டீரர் தவ-வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்கிறார். ஆனால் தன் தந்தையைப் போல் கானகம் செல்லாது கனகம் பொழிந்த காமாக்ஷி ஆலயத்தையே தனது ஆன்மா லயிக்கும் இடமாக கொண்டார். மூல காமாக்ஷிக்கு எதிராக அமர்ந்து தாம் தியானம் செய்தால் பக்தர்களுக்கு பாதகமாகும் என்று உத்ஸவ காமாக்ஷி எதிரே ஓரமாக நின்றபடியே தவம் செய்து சாய்ஜ்யம் அடைந்தார். துண்டீர கணபதி ஆண்ட பிரதேசம் துண்டீர நாடு என்று வழங்கலாயிற்று.
மூகாசார்யாள், 'துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி' என்று மூக பஞ்சசதியில் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தை மனதில் வைத்தே தியாகராஜ ஸ்வாமிகள், "விநாயகு நிவலெநு ப்ரோவவே - அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி" (விநாயகனைப் போல என்னையும் கருதிக் காப்பாயாக ஸ்ரீ காமாக்ஷி) என்று பாடியிருக்கிறார். நாமும் இந்த நன்னாளில் அவளருளை வேண்டிடுவோம்.
இன்று வரலக்ஷ்மி விரதம்!. 'ராவே மா இண்டிகி' அப்படின்னு வரலக்ஷ்மியை/காமாக்ஷியை அழைத்து வணங்கிடுவோம். வர-லக்ஷ்மி எல்லோருடைய இல்லங்களுக்கும் வந்து பொன் மழை மட்டுமல்லாது, கல்வி, ஞானம் மற்றும் அன்பு எங்கும்-எப்போதும் செழிக்க வரமளிக்கட்டும்.
ஜெய ஜெய காமாக்ஷி!!!
ஜெய ஜெய காமாக்ஷி!!!
ஜெய ஜெய காமாக்ஷி!!!