Friday, January 23, 2009

கண்ணுடை நாயகி - நாட்டரசங்கோட்டை

அன்னை கொலுவிருக்கும் பல கோவில்களுக்குச் சென்றாலும், சில கோவில்களில் சொல்லப்படும் அன்னையின் திருவிளையாடல்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, நம்மை அக்கோவிலுடன் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவது தை வெள்ளியாகிய இன்று நாம் பார்க்க இருப்பது நாட்டரசங்கோட்டை கண்ணுடையாள். கடந்த மாதம் கொப்புடையம்மன் கோவில் சென்ற போது நாட்டரசங்கோட்டைக்கும் சென்றேன். இந்த ஊர் பல விதங்களில் சிறப்புற்றது என்று கேள்விப்பட்டேன். அவற்றின் தொகுப்பே இந்த இடுகை.



-----------------------------------------------------------------
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்

செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி

அம்பொற் பணிபூண்டு அறுகோண வீதியிலே

கம்பத்தின் மேலிருந்து என் கண்ணம்மா கண்குளிரிப் பாரேனோ

----- அழுகுணிச் சித்தர்

சிவகங்கையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், பட்ட மங்கலத்திலிருந்து சுமார் 25 கீ.மியிலும் இருக்கிறது இந்த ஊர். கண்ணுடை நாயகி என்பது அன்னையின் பெயர். நாம் குழந்தைகளை கண்ணே, மணியே என்று கொஞ்சுவது போல கண்ணாத்தா என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்கள் இப்பகுதி மக்கள். சீர் மிகு நகரத்தார் தெய்வமாக, மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளியிருக்கிறாள் அன்னை பராசக்தி. சரி கோவிலுள் நுழைவோமா?.

ஆலயத்தின் பிரதான வாயிலுக்கு நேர் எதிரில் அருமையான குளம். குளத்தைச் சுற்றிலும் படிகள், மற்றும் கம்பியாலாகிய தடுப்பு வேலி. பக்தர்கள் நீர் நிலையினை தவறாக பயன்படுத்தாதிருக்க அறிவிப்புப் பலகை. குளத்தின் மேற்குக் கரையில் கற் சிற்ப்பங்கள் நிறைந்த பெரிய மஹா மண்டபம். கண் பார்வை பாதிப்புக்கு உள்ளானவர்கள் 48 நாட்கள் இம் மண்டபத்தில் தங்கி, தினமும் அன்னையை வணங்கி பார்வைக் கோளாறுகள் நீங்கிச் செல்வார்களாம். இந்த மண்டபத்தில் மத்தியில் கிழக்கு நோக்கியவாறு வேலைப்பாடுகள் நிறைந்த அருமையான ராஜ கோபுரம். இதைக்கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தின் முடிவில் பெரிய துவார பாலகிகள் காவலுக்கிடையில் கருவறைக்கான நிலை வாசல்.

கருவறையில் சற்றே தலை சாய்து, கருணை பொங்கும் கண்களுடன் கண்ணுடை நாயகி காக்ஷி அளிக்கிறாள். சிலம்பணிந்த கால்களில் வலக்காலை சற்றே தூக்கியவாறும், இடக்காலின் அடியில் அரக்கனை அழுத்தியவாறும் எட்டு கரங்களுடன் ஜ்வாலை நிறைந்த கீரிடத்தில் சந்திர-சூரியர்களை அணிந்தவாறு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் கைகளில் கீழ் நோக்கிய சூலம், அக்னி, உடுக்கை, கேடயம், குறுவாள், மணி, கிளி, கபாலம் என்று வலது-இடது கரங்களில் முறையே வைத்திருக்கிறாள்.

தரிசனம் முடிந்து பிராகாரத்தை வலம் வருகையில் கருவறையை ஒட்டி, மேலே அடைப்புடன் கூடிய ஒரு பிராகாரமும், அதன் வெளிச்சுற்றாக திறந்த வெளி பிராகாரமும், அதன்பின் கோவில் மதிலும் இருக்கிறது. பிராகாரத்தில், வடக்குப் பகுதியில் அன்னையின் அபிஷேக நீர் வரும் இடத்தில் ஒரு தொட்டியினைக் காண முடிகிறது. பக்தர்கள் இத்தொட்டி அருகில் அமைதியாக பிரார்த்திப்பதைக் காணலாம். இதனைப் பற்றி இப்பதிவின் இறுதியில் பார்க்கலாம். வடமேற்கு மூலையில் கணபதி கோவில் கொண்டிருக்கிறார். வடகிழக்கில் பைரவர் மற்றும் கருப்பண்ணசாமி குடி கொண்டிருக்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு காலத்தில் யாதவர்கள் மிகுந்து வசித்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் பசுக்களிடத்திருந்து பாலைக் கறந்து விடியலில் பக்கத்து ஊருக்குக் கொண்டு செல்கையில் ஒரு இடத்தில் தினமும் கல் தடுக்கி பால் கொட்டுவதை உணர்ந்தனராம். அவ்விடத்தில் இருக்கும் கல்தான் தமது பாலை வீணாக்குகிறது என்று, கல்லை அப்புறப்படுத்தும் விதமாக கடப்பாரை கொண்டு கல்லை நகர்த்தும் போது இரத்தம் பீரிட்டு கிளம்ப, மக்கள் பெரும் அதிர்வுக்கு உள்ளாகி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்து காண்பித்துள்ளனர். அவர்களில் அம்பலகாரர் அக்கல்லை முழுவதுமாக வெளியில் எடுக்க, அன்னையின் உருவம் தெரிந்துள்ளது. விக்ரஹத்தை அவ்விடத்தை விட்டு நகர்த்த இயலாததால் அங்கேயே வைத்துப் பூஜிக்கத் தொடங்கியுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பகுதியின் மிராசுதாரர் அன்னையைச் சுற்றி கருவரை எழுப்பினாராம்.காலில் இடறி அதன் மூலமாக தமது இருப்பிடத்தை கண்ணுற வைத்த காரணத்தால் கண்ணுடைநாயகி என்று பெயர் வந்ததாக கோவில் பட்டர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் சேதுபதி மன்னர்களும், சிவகங்கை மன்னர்களும், நகரத்தாரும் ஆலயத்தை பல விதங்களில் விரிவுபடுத்தி நிவந்தங்களை அளித்துள்ளனர். இன்றும் இக்கோவில் சிவகங்கை சமஸ்தானத்தின் பராமரிப்பில் சிறப்பாக இருக்கிறது.

இக்கோவிலில் ஆடி முளைப்பாரியும், தை மாதத்தில் தைலக்காப்பும், ஐப்பசியில் கோலாட்ட உற்சவமும், வைகாசியில் பிரம்மோற்சவமும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறதாம். பக்தர்கள் காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கண் பார்வை சம்பந்த நோய்கள் தீர அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.


அழுகுணிச்சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதியான அன்னையின் அபிஷேக நீர் வெளியேறும் தீர்த்தத் தொட்டியின் கீழே இவரது சமாதி இருக்கிறது. இவ்விடத்தில் செய்யப்படும் நியாயமான வேண்டுதல்கள் பலிப்பதாகவும், இங்கே தியானம் செய்தால் மிகுந்த மன நிறைவு கிட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஊரின் அருகிலேயே பாட்டரசன் என்று இவ்வட்டாரத்தாரால் அன்புடன் போற்றப்படும் கம்பரது சமாதி அமைந்திருக்கிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பரது சமாதியில் இருந்து மண் எடுத்து நாக்கில் தடவுவதன் மூலம் தமது குழந்தைகள் கவித்துவம் பெறுவர் என்று நம்புகின்றனர். கண்ணுடை நாயகிக்கு பூஜைகள் செய்வது கம்பரது பரம்பரையில் வந்தவர்களாம்.

கற்பகமே, கண்ணுடை நாயகி தாயே சகல புவனங்களையும் காத்தருள்வாய் என்று இந்த தை வெள்ளிக் கிழமையில் அவளைப் பிரார்த்திப்போம்.

10 comments:

Kavinaya said...

அடடா என்ன அழகான பாடல். அருமையா எழுதியிருக்கீங்க. மிக்க நன்றி. கண்ணுடை நாயகி காக்கட்டும்.

Raghav said...

நல்ல தொகுப்பு மெளலிண்ணா.. நான் கல்லூரி படிக்கையில் நாட்டரசன்கோட்டையில் 10 நாட்கள் தங்கி உழவாரப் பணி செய்துள்ளேன்..

Raghav said...

நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாளுக்கு என்னை நல்லாத் தெரிஞ்சுருக்கணுமே, என்னைப் பத்தி கேட்டீங்களாண்ணா :)

1998ல் கல்லூரி முதல் வருடம் பத்து நாட்கள் நாட்டரசன்கோட்டை சென்று (பொங்கல் வேளையில்) உழவாரப்பணி செய்துள்ளேன்..

ஊரே செந்நிறமாக அல்லவா இருக்கும்..

jeevagv said...

சுவையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள்!

குமரன் (Kumaran) said...

அன்னையைப் பற்றி படிப்பது நேரில் சென்று தரிசிப்பதைப் போல் இருக்கிறது மௌலி. மிக்க நன்றி.

நம்ம ஊர் தெப்பக்குளம் மாரியம்மனைப் பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள்?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க குமரன்.

//அன்னையைப் பற்றி படிப்பது நேரில் சென்று தரிசிப்பதைப் போல் இருக்கிறது மௌலி. மிக்க நன்றி. //

நீங்க இப்படிச் சொன்னது மிக மகிழ்ச்சியா இருக்கு. நன்றி.

//நம்ம ஊர் தெப்பக்குளம் மாரியம்மனைப் பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள்?//

எழுதறேங்க... கொப்புடையாளையும், கண்ணுடையாளையும் சமீபத்தில் தரிசித்ததால் உடனே பதிய முடிந்தது. தெப்பக்குளத்தாளைப் பார்த்து வருடங்களாகிடுச்சு..அடுத்த முறை மதுரை போகையில் அன்னையைப் பார்த்துட்டு வந்து எழுதறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி ஜீவா.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ராகவ்.

//நல்ல தொகுப்பு மெளலிண்ணா..//

நன்றி.

//நான் கல்லூரி படிக்கையில் நாட்டரசன்கோட்டையில் 10 நாட்கள் தங்கி உழவாரப் பணி செய்துள்ளேன்..//

அதனால தானா அன்னை கேட்டா என்னிடம், எங்க ராகவைக் காணவே இல்லைன்னு?

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா. ஆமாம், அந்த பாடலைக் கோவிலில் எழுதி வைத்திருந்தாங்க. அப்படியே ஒரு சின்ன பேப்பரை எழுதி வைத்திருந்தேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

கண்ணாத்தாள் என்று சொல்லும் போதே பெற்றெடுத்த தாயை விட அவளிடம் அன்பும், பயமும் கொண்ட ஒரு பெண்ணின் கதையை, நடந்தது தான், கேட்டிருக்கிறீர்களா?

அந்தப் பெண்ணின் கணவன், கண்ணாத்தாள் சன்னதி கருவறை விமானத்தில் இருந்த தங்கத் தகடுகளைத் திருடி விட்டான். செய்தி அறிந்ததும் பதைத்துப் போனாள். உடனே காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் கொடுத்து விட்டு, ஆத்தாள் கோவிலிலேயே திருடவும் துணிந்தவன் கட்டிய தாலியும் வேண்டாம் என்று அதையும் கழற்றி எரிந்து விட்டாள்.

பாமரத்தனமான ஆனால் முழு நம்பிக்கையோடு தேடி வரும் பக்தர்களைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பதால் என்னவோ, அவளைக் கண்ணாத்தா, கண்ணாத்தா என்றே உருகி அழைக்கத் தோன்றுகிறது!