உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் தற்போழுது நான் பணி செய்யும் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி அறிந்து மிகுந்த கவலையுடன் போனிலும், மெயிலிலும் தொடர்பு கொண்டு கேட்டனர். நடப்பது எல்லாம் அம்பாள் சித்தம் என்றே நினைக்கிறேன் அதையே பதிலாகவும் கூறி வருகிறேன். இதனைப் பற்றி கொஞ்சம் சிந்தித்தேன் அதன் விளைவே இந்த இடுகை.
சந்தோஷம் என்பதே எல்லோரும் எக்காலத்திலும் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே முயற்சிக்கிறோம். இந்த முயற்சி எதுவரையில்?, ஆயுள் முடியும் வரையில் இதே முயற்சிதான் செய்கிறோம் அல்லது செய்வதைப் பார்க்கிறோம். அம்பாள் நமக்கு எதனை தருகிறாளோ அதை அனுபவிப்போம், அத்துடன் திருப்தி கொள்வோம் என்ற எண்ணம் எல்லா நேரமும், எல்லோருக்கும் வந்துவிடுகிறதா?. இவ்வாறு எல்லா நேரங்களிலும் இந்த நினைவு இருந்தால் அவர் யோகியாக அல்லவா இருப்பார்?. சரி, அவ்வாறு எல்லோரும், எல்லா நேரங்களிலும் இருக்க முடிவதில்லை. சரி, வேறு என்ன வழி என்று பார்த்தால், எப்போதும் நடப்பதெல்லாம் அம்பாள் சித்தப்படியே என்று இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
கடந்த சில காலமாகவே ப்ரதி சனிக் கிழமை மதியத்தில் பகவத் கீதையில் கொஞ்சம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இன்று மதிய உணவிற்குப் பிறகு எனது தற்போதைய சிந்தனைக்கு ஏற்றவாறு என்ன இருக்கிறது என்று பார்க்கத் தோன்றியது. எனது தற்போதைய சிந்தனைக்கு ஏற்றதாக நான் நினைத்த வரி கீழே!
"யக்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்சர:"
என்னுடைய கடமை எதுவோ அதை நான் செய்கிறேன். நான் செய்யும் கடமை மூலமாக எனக்கு என்ன கிடைக்கிறதோ அதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். என்ற பாவம் இருக்கவேண்டும் என்கிறார். நமது முயற்சிகள் நல்லவையாக இருக்க வேண்டும். அதனை முறையே செய்தல் வேண்டும். அதன் பிறகு வரும் பலா-பலன்களை முழுவதுமாக ஏற்று அதுதான் ப்ராப்தம் என்று பகவான் சொல்லியதாகக் கருதவேண்டும். இந்த எண்ணம் மிக அவசியம் என்பதாக அறிகிறேன்.
சரி, "த்வந்த்வாதீதோ" என்பது என்ன?. மேற் சொன்னதை இன்னும் தெளிவாக்குகிறது இந்தச் சொல். இது கீதையின் பல இடங்களில் சொல்லியதே. சுக-துக்கங்களை சமமாகப் பார்ப்பது என்பது தான் அது. இதன் பொருள் எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. சுகமான காலத்திலும், துக்கமான காலத்திலும் நமது மனம் சஞ்சலம் ஆகக் கூடாது என்பதே இதன் பொருள். இன்பமோ-துன்பமோ, அது ஈஸ்வர சங்கல்பம் என்று இருக்கப் பழக வேண்டும். நமது சுபாவம் இப்படியா இருக்கிறது?. சந்தோஷத்தில் தலை-கால் புரியாமல் ஆடுகிறோம். கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் அதற்கு காரணம் யார்?, எவர்? என்று ஆராய்ச்சியிலும், அதன் விளைவாக பலரை தண்டிக்க அல்லது தவறாகப் பேச ஆரம்பிக்கிறோம். கஷ்டம் வரும் காலத்தில் அதீத சிந்தனையின் காரணமாக, இறைவன் இருக்கிறானா? என்பது போன்ற கேள்விகளும், இறைவனைப் பழிப்பதும் நடக்கிறது. கஷ்டகாலம் என்பது நமது பூர்வ ஜென்ம பலன், இனி வரும் ஜென்மங்களில் இவை நடக்காதிருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லவா, நமக்குத் தேவை?. இதை எழுதுகையில் ராமர் தனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் அவர் லக்ஷ்மணனிடம் சொன்னதாக ராமாயணத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆரண்ய காண்டத்தில் "லக்ஷ்மணா, போன ஜென்மங்களில் என்ன பாபம் செய்தோமடா?, அரச போகங்களை இழந்து காட்டுக்கு வந்தும் நமக்கு சுகம் இல்லையே?" என்று சொல்கிறாராம். ஆக இறைவனே சொல்லியபடி ஜென்மாந்திர பலன்கள் நம்மை தொடரும் என்பது நமக்கு மனதில் எப்போதும் இருக்குமானால் நமக்கு சஞ்சலம் என்பது இல்லாது இருக்கும். இந்த சஞ்சலம் குறையக்-குறைய சுக-துக்கங்கள் ஏதும் நம்மைத் தாக்காத மனம் வாய்க்கும் என்று தோன்றுகிறது.
"மத்சர:" என்பதற்கு "அசூயை" என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால் பொறாமை. "விமத்சர:" என்றால் பொறாமையின்மை. என்று பொருள். நம்மைவிட அதிகம் படித்த ஒருவன் அல்லது நம்மைவிட பெரும் பொருள் சேர்த்த ஒருவனைக் கண்டால், நாமும் அவனைப் போல படிக்க அல்லது நல்ல வழியில் பொருள் சேர்க்க முயல வேண்டும். அதை விடுத்து அவனுக்கு என்ன தெரியும், அதை விட எல்லாம் எனக்கு தெரியும் என்ற குணம் இருப்பின் அதுதான் பொறாமை. நமக்குத் தெரியாதவற்றை அவனிடமிருந்து கற்க முயலலாம், அல்லது பெரும் பணக்காரனாக இருந்தால் அவனை உற்சாகப்படுத்தி சமூகத்திற்கு இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்யச் சொல்லாம். அதை விடுத்து அவனைப் தூஷிப்பதும், அவனது செயல்களை தூஷிப்பதும் நமது பாவத்தை அல்லவா அதிகமாக்கும்?. ஆக, இந்த பொறாமை, தூஷணை போன்றவை நமது சஞ்சலத்தை அதிகமாக்கி சித்தத்தைக் கலக்கமடையச் செய்திடும் என்று தெரிகிறது.
ஆகவே, எப்போது எது கிடைக்கிறதோ அதற்கு திருப்திப்படுவதும், அதிக ஆசை இல்லாமையும், சுக-துக்கங்களை சமமாக ஏற்கும் மனதும், மாத்சர்யம் இல்லா நிலையும் எப்போதும் இருக்க இறைவன் அருளட்டும்.
20 comments:
பதிவுக்கு மிக்க நன்றிகள் மௌலி சார்!
//எப்போது எது கிடைக்கிறதோ அதற்கு திருப்திப்படுவதும், அதிக ஆசை இல்லாமையும், சுக-துக்கங்களை சமமாக ஏற்கும் மனதும், மாத்சர்யம் இல்லா நிலையும் எப்போதும் இருக்க இறைவன் அருளட்டும்.//
நன்றாகச் சொன்னீர்கள். துன்பம் என்பது இந்த மனநிலைக்கு நம்மைத் தயார் செய்ய இறைவன் அளிக்கும் பயிற்சியாகவே தோன்றுகிறது...
வாங்க ஜீவா சார், ரொம்ப நாட்கள் கழித்து இப்பக்கம் வந்திருக்கீங்க...நன்றி :)
வாங்க கவிக்கா...
இது போன்று தொடர் பதிவுகள் கீதையில் இருந்து சிறு-சிறு வரிகளைக் கொண்டு எழுத எண்ணம்...பார்க்கலாம்.
// கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் அதற்கு காரணம் யார்?, எவர்? என்று ஆராய்ச்சியிலும்,
அதன் விளைவாக பலரை தண்டிக்க அல்லது தவறாகப் பேச ஆரம்பிக்கிறோம்.//
உண்மைதான். இருப்பினும்,
ஒரு ப்ரச்னை வரும்போது அதற்கு காரணம் என்ன ? யாராக இருக்கலாம் என்று ஆய்வதில் தவறில்லை.
இருப்பினும், அதிலேயே மூழ்கி, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என நினைக்க வேண்டும், என்னென்ன
மாற்று வழிகள் பிரச்னையிலிருந்து வெளிப்பட இருக்கின்றன, அதை அமல்படுத்துவதற்கு நம்மிடமுள்ள
வசதிகள் ( resources ) என்ன இருக்கின்றன, யார் யார் அனுகூலமாக இருப்பார்கள் என ஆராய்வதுதான்
problem solving exercises ல் சொல்லப்படும் முதற்கருத்து. இரண்டாவது ஏதோ விதிப்படிதான் எல்லாம்
நடக்கிறது என ஒரு தளர்ந்து நிற்பதும் சோர்ந்து போவதும் சரிதானா ?
தர்மம் சீர் குலையும்போது அதை நிலை நிறுத்துவதுதான் கர்மயோகம். நம்மால் எது செய்யப்படவேன்டுமோ
அதைத் துணிந்து செய்தல் சிறப்பாகும்.
நிற்க. இலக்குமணன் மூர்ச்சையுற்று கீழே கிடக்கிறான். இராமன் புலம்புகிறான். அனுமன் அந்த மூர்ச்சையைத்
தெளிவிப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுகிறான். இராமாயணத்தில் problem solving க்கு இது ஒரு
நல்ல உதாரணம்.
சுப்பு ரத்தினம்.
ீதைவரிகள் தான் நம்மனதை ஒரு நிலைப்படுத்துகின்றன என்பது உண்மைதான்!
\\\யக்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்சர:" என்னுடைய கடமை எதுவோ அதை நான் செய்கிறேன். நான் செய்யும் கடமை மூலமாக எனக்கு என்ன கிடைக்கிறதோ அதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். என்ற பாவம் இருக்கவேண்டும் என்கிறார். நமது முயற்சிகள் நல்லவையாக இருக்க வேண்டும். அதனை முறையே செய்தல் வேண்டும். \\\\\
நன்றாக சொல்லீருக்கிறீர்கள்
\\\இந்த பொறாமை, தூஷணை போன்றவை நமது சஞ்சலத்தை அதிகமாக்கி சித்தத்தைக் கலக்கமடையச் செய்திடும் என்று தெரிகிறது. \\\\
ஆமாம் ஆனால் இவைகள் எப்படித்தான் நம்மைவந்தடைகிறதோ அழையாத விருந்தாளிகளாய்! சரிவர உபசரிக்காமல் முகம்திருப்பிக்கொண்டால் இந்த வேண்டாதவிருந்தாளிகள் வந்தவழிபோயிடலாம்!
\\உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் தற்போழுது நான் பணி செய்யும் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி அறிந்து மிகுந்த கவலையுடன் போனிலும், மெயிலிலும் தொடர்பு கொண்டு கேட்டனர். நடப்பது எல்லாம் அம்பாள் சித்தம் என்றே நினைக்கிறேன் அதையே பதிலாகவும் கூறி வருகிறேன்\\\
மீனாட்சியை வணங்குவோருக்கு
வீணான கவலைஇல்லை
தானாக எல்லாம் சரியாகும்
அன்பான தம்பிமௌலி!மனம் அமைதி கொள்க!
அருமை மதுரை அண்ணா, சில சமயம் ஆறுதல் மொழிகளே ஒரு வித தர்மசங்கடமான நிலைக்கு கேட்பவரை தள்ளி விடும்.
இப்ப தான் விட்டுபோன கொப்புடை அம்மன் பதிவும் படித்தேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! அப்படியும் இருக்கலாமே! வாழ்த்துகளும், ஆசிகளும்.
சம துக்க சுக க்ஷமியாக இருப்பது கொஞ்சம் கடினம் தான் மௌலி. துக்கத்தில் தளராமல் இருப்பது கடினம். சுகத்தில் பொங்காமல் இருப்பது அதனைவிடக் கடினம் என்று தோன்றும்.
//அருமை மதுரை அண்ணா, சில சமயம் ஆறுதல் மொழிகளே ஒரு வித தர்மசங்கடமான நிலைக்கு கேட்பவரை தள்ளி விடும். //
இதைத் தான் முதல்லே எழுதினேன், அப்புறமா அடிச்சேன், இப்போ வேறே வழியில்லாமல், அம்பிக்கு ஒரு ரிப்பீட்டே (க்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அம்பிக்கு) போட்டுக்கறேன்.
வாங்க ஷைலஜாக்கா..
//நன்றாக சொல்லீருக்கிறீர்கள்//
நன்றி.
//மீனாட்சியை வணங்குவோருக்கு
வீணான கவலைஇல்லை//
உண்மைதான். அதனால் தான் நான் இன்னும் பதிவுகள் போட்டுக்கிட்டு, வேலைகளை செய்துகொண்டு இருக்கிறேன்ன்னு நினைக்கிறேன். :-)
//தானாக எல்லாம் சரியாகும்
அன்பான தம்பிமௌலி!மனம் அமைதி கொள்க!//
நன்றி. கவலை என்பது எனக்காக மட்டுமல்ல, இண்டஸ்டிரி சரியில்லாத நிலையில் 50 ஆயிரம் குடும்பங்கள் என்ன செய்யும் என்ற இயலாமை தான் சங்கடப்பட வைக்கிறது.
வாங்க அம்பி.
//அருமை மதுரை அண்ணா, சில சமயம் ஆறுதல் மொழிகளே ஒரு வித தர்மசங்கடமான நிலைக்கு கேட்பவரை தள்ளி விடும்.//
உண்மைதான், பலரும் சில நாட்கள் கழித்தே விசாரிக்க ஆரம்பித்தனர். நல்ல உள்ளங்கள் இம்மாதிரி விஷயங்களைப் பற்றி கேட்கவே யோசனைப்படும் என்பது சரிதான்.
வாங்க கீதாம்மா..
//எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! அப்படியும் இருக்கலாமே! வாழ்த்துகளும், ஆசிகளும்//
ஆசிகளுக்கு நன்றி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது நல்லதுதான். அந்த சிந்தனை நிலைத்து நிற்பதகு, எப்போதும் சஞ்சலமற்ற மனம் வேண்டும் என்று தோன்றுகிறது. :-)
வாங்க குமரன்.
//துக்கத்தில் தளராமல் இருப்பது கடினம். சுகத்தில் பொங்காமல் இருப்பது அதனைவிடக் கடினம் என்று தோன்றும்.//
ஆமாம், கடினம் தான், ஆனால் எங்காவது துவங்க வேண்டுமல்லவா?. இறைவன் இம்மாதிரி சந்தவேசங்களை உருவாக்கி நம்மை டெஸ்ட் பண்றார்ன்ன்னு நினைக்கிறேன்.
கீதாம்மா,
எதுக்கு டைப் பண்ணினதை அடிப்பானேன்?, இப்போ ரீப்பீட்டுவானேன்...டைப் பண்ணினதை அப்படியே போட்டிருக்கலாம். :-)
வாங்க சூரி சார்.
ஆராய்வது தவறல்ல, ஆனால் ஆராய்ச்சி மூலமாக அடுத்தவரை இழித்தலும், பழித்தலும் செய்யாது இருப்பது அவசியம். நீங்கள் கூறுவது போல ஆராய்ச்சி செய்வது, மீண்டும் தவறு நடக்காதிருக்க என்பதுவரையில் சரிதான்.
ஹாய் மெளலி,
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க கீதையை பற்றி. எதுவானாலும் தான் என்ன, நடப்பதையோ இல்ல நடக்கப் போறதயோ நம்மால தடுக்கவோ மாற்றவோ முடியுமா என்ன?நல்லதானா சந்தோஷப் படலாம், நன்றி சொல்லலாம் இறைவனுக்கு,கஷ்டமானால், கவலை படலாம், இறைவனிடம் வழி கேக்கலாம், வேர என்ன செய்ய முடியும் நம்மால? எல்லாம் கிருஷ்ணார்பனம் னு விட்டுட வேண்டியது தான்.
// வேர என்ன செய்ய முடியும் நம்மால? எல்லாம் கிருஷ்ணார்பனம் னு விட்டுட வேண்டியது தான்.//
கரெக்டா சொல்றேள்.
அப்பவே சொன்னேன். இ ந்த ஷேர் மார்க்கெட் எல்லாம் நமக்கு வேண்டாம்னு.
கேட்டாரா இ ந்த பிராமணன் ! 600 ருபாய் ந்னு வந்தபோது ஒரு அம்பது வாங்கி எல்லாம் இப்போ
அம்போன்னு போயிடுத்து. எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.
மீனாட்சி பாட்டி.
http://menakasury.blogspot.com
// வேர என்ன செய்ய முடியும் நம்மால? எல்லாம் கிருஷ்ணார்பனம் னு விட்டுட வேண்டியது தான்.//
கரெக்டா சொல்றேள்.
அப்பவே சொன்னேன். இ ந்த ஷேர் மார்க்கெட் எல்லாம் நமக்கு வேண்டாம்னு.
கேட்டாரா இ ந்த பிராமணன் ! 600 ருபாய் ந்னு வந்தபோது ஒரு அம்பது வாங்கி எல்லாம் இப்போ
அம்போன்னு போயிடுத்து. எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.
மீனாட்சி பாட்டி.
Post a Comment