ஒரு வாரம் நிம்மதியாக மதுரையில் கழிந்தது. கோவிலுக்குச் செல்ல ஆரம்பிக்கலாம் என்றதும் செல்ல தோன்றிய கோவில்கள் மீநாக்ஷி கோவிலும் கூடலழகர் கோவிலும் தான். பலவருடங்கள் முன் தினமும் அஷ்டாங்க விமானப் பிரதக்ஷணம் செய்திருந்தாலும், கடந்த 1.5 ஆண்டுகளாகச் இரு கோவில்களுக்கும் செல்ல இயலவில்லை. ஆகவே முதலில் இம்முறை பெருமாள் தரிசனம். மார்கழியில், பிரம்ம முஹுர்த்த நேரத்தில், பெருமாள் பார்க்கப்-பார்க்கத் தெவிட்டாத பரிபூரணனாக இருந்தார். கூடலழகர் கோவில் சிறப்புக்களை யாரும் எழுதியதாக நினைவில்லை, ஆகவே இந்த பதிவு.
பிரம்மாவின் புத்திரரான சனத் குமாரருக்கு பெருமாளை அர்ச்சாவதார மூர்த்தியாக தரிசிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம். இந்த விருப்பம் நிறைவேற கிருதமால் நதி தீரத்தில் தவமிருக்கிறார். அப்போது தவத்தின் பயனாக பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் அவருக்கு காக்ஷி அளித்தார். அவ்விடத்தில் பெருமாளுக்கு கோவிலமைக்க முடிவு செய்த சனத் குமாரர் விஸ்வகர்மாவை அழைத்து இறைவன் தமக்கு அளித்த தரிசனத்தை விவரித்து, அத்தோற்றத்தில் பெருமாளுக்கு விக்ரஹம் அமைக்கச் செய்கிறார். அந்த விக்ரஹத்தை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்ட்டை செய்து வழிபாட்டினை தொடங்குகிறார். இவ்வாறாக கூடல் மாநகரில், அமர்ந்த கோலத்தில் கூடலழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். இக்கோவில் கிருத யுகத்திலேயே அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நான்கு யுகங்களிலும் சிறப்புற்றுத் திகழும் எம்பெருமானாரை சதுர்யுகப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.

பெருமாள் கோவில்கள் பலவகையான விமானங்களுடன் அமைக்கப்படுகிறது. இதில் அஷ்டாங்க விமானம் என்பது மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில், இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே இந்த அஷ்டாங்க விமானத்தின் கீழ் பெருமாள் சேவை சாதிக்கிறார். இந்த விமானம் 125 அடி உயரமும், கலசம் 10 உயரமும் கொண்டது. எட்டு பகுதிகளாக இருக்கும் இந்த விமானமே ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என்று கூறப்படுகிறது. இந்த விமானத்தின் கீழ் இருக்கும் பெருமாளை 48 நாட்கள், தினத்திற்கு 11 முறை சுற்றி வந்தால் நினைத்த கார்யம் சித்திக்கும் என்பது மதுரை-வாழ் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எந்த பிரார்த்தனையும் இன்றி தினமும் இந்த பிரதக்ஷணத்தைச் செய்யும் பலர் இருக்கிறார்கள்.

மூன்று நிலைகளில், பெருமாளின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் அழகிய சுதைச் சிற்பங்களாக இருப்பினும், கீழ்த் தளத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் கூடலழகருக்கே நித்ய பூஜைக்கும், மற்ற விழாக்களும். இங்கு தாயார் பெயர் மதுரவல்லி, உற்சவர் சுந்தர-ராஜப் பெருமாள் என்ற திருநாமம். மூலவருக்கு ஆகூய திருக்கரத்தான் என்ற திருநாமமும் இருக்கிறது. இடது கையால் பக்தனை அழைத்து, வலது கையால் அருள் பாலிப்பவன் என்பது இதன் பொருள் என்று கூறுகின்றனர். மதுரையை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றி பெற இவரை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. இரண்டாவது நிலையில் பெருமாள் சூரிய நாராயணராக தேவியுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இந்த சன்னதியை ஓவிய மண்டபம் என்று அழைக்கின்றனர். இச்சன்னதியில் பிரம்மா, சிவன் விஷ்ணு, அஷ்ட திக்பாலகர்கள் ஓவிய வடிவில் காக்ஷி அளிக்கின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர் என்ற திருநாமத்துடன் சயனித்திருக்கிறார். இவர்களைத் தவிர, விமானத்தில் லக்ஷ்மி நரசிம்ஹர், பூவராஹர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மற்றும் வைஷ்ணவ ஆச்சார்யார்களது திருவுருவங்களைத் தரிசிக்கலாம். எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் விதமாக எட்டு பிராகாரங்களுடன் அமையப் பெற்ற கோவில் இது.
பிரகாரங்களில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், விஸ்வக்ஷேனர், ராமர், கிருஷ்ணர், லக்ஷ்மி நாராயணன், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள் போன்றோரது சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. இக்கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு நவக்கிரஹ சன்னதி. சாதாரணமாக பெருமாள் கோவில்களில் நவக்கிரஹங்களுக்கு என்று சன்னதி கிடையாது, ஆனால் இக்கோவிலில் தனியாக நிறுவப்-பெற்று பூஜைகள் செய்யப்படுகிறது.

நரசிம்ஹ விக்ரஹங்கள் யோக நிலையிலோ அல்லது லக்ஷ்மியை மடியில் இருத்திக் கொண்டு லக்ஷ்மி நரசிம்ஹராகவோ பார்த்திருக்கிறோம். அபூர்வமாக, இக்கோவிலில் நரசிம்ஹர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பிரகாரத்தில் காக்ஷி தருகிறார். இங்கு பெருமாள் சன்னதியின் வலப்புறத்தில் மதுரவல்லித் தாயார் சன்னதி. இங்கு தாயார் "படிதாண்டாப் பத்தினி" என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெயருக்கு ஏற்றார்ப்போல அன்னை உற்சவ காலங்களில் சன்னதிக்குள் மட்டுமே புறப்பாடு ஆகிறாள். நவராத்திரி முடிந்து வரும் பெளர்ணமியன்று அன்னைக்கு பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு. இங்கு தாயாருக்கு லக்ஷ்மி அஷ்டோத்திரமும், பெருமாளுக்கு ராமாஷ்ட்டோத்திரமும் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கான தீர்த்தம் "ஹேம புஷ்கரிணி" என்று அழைக்கப்படுகிறது. இப்பெருமாளின் தெப்பக்குளம்தான் தெப்பக்குளத்தெரு என்று அழைக்கப்படுகிறது, டவுன்ஹால் ரோட்டின் ஒருபுறம் அமைந்துள்ளது.
பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம் என்று அர்ச்சகர் கூறினார். இப்பகுதியை வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்ட காலத்தில், பரம்பொருள் யார் என்ற கேள்விக்குச் சரியான விளக்கம் சொல்லப் படவேண்டும் என்று போட்டி வைக்கிறான். கேள்விக்குச் சொல்லப்படும் விளக்கம் சரியானால் பொற்கிழி கட்டப்பட்ட கம்பம் வளைந்து கொடுத்து பொற்கிழியை எடுக்க ஏதுவாக வேண்டுமென்று கூறி அதற்கேற்ப ஓர் உயர்ந்த கம்பத்தில் பொற்கிழியை இணைத்து வைக்கிறான். வில்லிப்புத்தூரில் இருந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள், அரசனின் சந்தேகத்தைத் தீர்க்கப் பணிக்கிறார். விஷ்ணு சித்தரும் ஆதிமூலமாகிய பரம்பொருள் விஷ்ணுவே என்று கூறிட அப்போது கம்பம் வளைந்து கொடுத்ததாம். இக்காக்ஷியைக் கண்ட மன்னன், விஷ்ணு சித்தரை வணங்கி தனது பட்டத்து யானையில் வைத்து வலம் வரச் செய்ததாகவும், அப்போது பக்தனின் பெருமையைக் காண பெருமாளும் கருடாரூடராக வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த பெருமாளின் அழகில் மயங்கிய விஷ்ணு சித்தர், ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி திருஷ்டி கழிப்பாளோ அது போல பெருமாளுக்கு கண் திருஷ்டி பட்டுவிடுமே என்று கலங்கிப் பாடியதுதான் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்னும் பாசுரம் என்று கூறுகிறார்கள். இந்தப் பெருமாள் சதுர் யுகங்களும் கண்டவர் என்பதாலும் அவ்வாறு பாடியிருக்கிறார் என்றால் மிகையில்லை. பெருமாளுக்கே தாயாக, திருஷ்டி கழித்து அவரை வாழ்த்தியதால் அன்று முதல் அவர் 'பெரியாழ்வார்' என்று அழைக்கப் பெற்றாராம்.
மதுரை செல்பவர்கள் மீனாக்ஷி கோவிலைக் காணச் செல்லுகையில் மறக்காது இக்கோவிலையும் தரிசித்து இறையருள் பெறுவோமாக.