பல வருட காலங்கள் கழிந்த பின்னர் அவர்களது மன உறுதியை மெச்சிய பராசக்தி அசரீரியாக அவர்களிடம் தோன்றி அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டாள். அசுரர்கள் இருவரும் அவளை வணங்கி தங்களது மரணம் அவர்கள் விரும்பும்போது மட்டுமே நடக்கவேண்டும் என்று கேட்க, அன்னையும் அவர்களுக்கு அந்த வரத்தையும், யாராலும் ஜெயிக்க முடியாத பராக்ரமத்தையும் அளித்தாள். இதன் காரணமாக மது-கைடபர்கள் மிகுந்த கர்வத்துடன் வலம் வருகையில் பிரம்மா தாமரைத் தண்டின் வழி வந்து இவர்களை சந்திக்கின்றார். பிரம்மாவிடம் இருக்கும் தாமரை மலரைக் கண்ட அவர்கள், அதை தமக்கு தருமாறு வற்புறுத்துகின்றனர். வாதம்-விவாதம் தொடருகையில் பிரம்மா தமது சக்தியால் மது-கைடபர்களது பிறப்பினைப் பற்றியும், அவர்களுக்கு அன்னை அருளியது பற்றியும் அறிகிறார். அவர்களை தன்னால் சமாளிக்க முடியாதென முடிவெடுத்து நாராயணனது உதவியினைப் கோரவும் இயலாது அவர் யோக நித்திரையில் இருப்பதால் அவரது உதவி கிடைப்பது தாமதமாகலாம் என்று உணர்ந்து அனைத்துலகுக்கும் மூலகாரணமான பரசாக்தியைத் துதிக்கிறார்.
பிரம்மன்னுடைய பிரார்த்தனையால் மகிழ்ந்த தேவி அவருக்கு அனுக்கிரகிக்கும் எண்ணத்துடன் தமது தாமஸ ரூபமான நித்திராசக்தியை நாராயணனுடைய திருமேனியில் இருந்து விலகச் செய்ய, நாராயணன் கண்விழித்து பிரம்மனின் நிலையினை உணர்ந்து அவருக்கு அபயமளித்து, பிர்மமனே அஞ்சவேண்டாம், நான் அவ்விரு அசுரர்களையும் வதம் செய்கிறேன் என்றார். பின்னர், அசுரர்களைப் பார்த்து யுத்தம் செய்ய வருமாறு கூறுகிறார். மது-கைடபர் ஆகிய இருவரும் விஷ்ணுவுடன் சண்டையிடுகிறார்கள். மாறி-மாறி தாக்கிக் கொண்டதில் 5000 வருடங்கள் கடந்ததாம். பின்னரும் சண்டை ஒரு முடிவுக்கு வராத காரணத்தால் நாராயணன் அவர்களைத் தந்திரத்தால் கொல்ல நினைத்து அவர்களிடம், நீங்கள் இருவரும் மாறி மாறி என் ஒருவனைத் தாக்குவதால் நான் சற்று களைப்புற்றிருக்கிறேன். சற்றே இளைப்பாறி பின்னர் போரைத் தொடரலாம் என்றார். அசுரர்களும் அதற்கு இணங்கினர். இந்த நேரத்தில் பரந்தாமன் யோகத்தில் ஆழ்ந்து அசுரர்களுக்கு தேவி அளித்துள்ள வரங்களைப் பற்றி அறிகிறார். இதன் பின்னர் அவர் பராசக்தியின் துணைநாடி தவமிருக்கிறார். அம்பிகையும் நாராயணன் முன் தோன்றி தமது மாயாசக்தியில் மது-கைடபர்களை மயக்குவதாகவும், அவ்வாறு மயங்கிய நிலையில் அவர்களிடம் அவர்கள் சாவுக்கு வரம் வாங்கிவிடவும் சொல்கிறாள். பின்னர் தமது மாயா சக்தியை அழகிய பெண்ணுருக் கொள்ளச் செய்து, அவளை அசுரர்களிடத்து அனுப்புகிறாள். அப் பெண்ணைக் கண்ட மதுகைடபர்கள் அவளை அடைய எண்ணுகையில் நாராயணன் அவர்களிடம் போருக்கு வரச் சொல்ல, அசுரர்கள் மாயாசக்தியான பெண்ணின் அழகால் வந்த பிரமிப்பில் போருக்கு வர மறுக்கின்றனர். அப்போது நாராயணனிடம் அவ்வசுரர்கள், நாராயணா, இதுவரை தோல்வியடைந்த உனக்கு நாங்கள் வரம் தருகிறோம், வேண்டியதை கேட்டு வாங்கிக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல வேண்டும் என்று கூறுகின்றனர். அத்தருணத்தை எதிர் நோக்கியிருந்த நாராயணன் மிகவும் சந்தோஷித்து அசுரர்களிடம், தம் கையால் அவர்களை கொல்வதே தமக்கு வரமாக வேண்டும் என்கிறார்.
இக்கட்டான சூழ்நிலையினை உணர்ந்த அசுரர்கள் இருவரும், தமது தவற்றை உணர்ந்தாலும் ஹரியிடம் பின்வருமாறு கூறுகின்றனர், வரம் என்று கேட்டுவிட்டதால் எங்களைக் கொல்ல அனுமதிக்கிறோம், ஆனால் எங்களைக் கொல்லும் இடமானது பல யோஜனை பரப்புள்ள, நீரில்லாத இடமாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களது சூழ்ச்சியை உணர்ந்த பரந்தாமன் மெல்லச் சிரித்தவாறு தமது உருவத்தை பெரிதாக்கி தமது துடைகளை இரண்டாயிரம் யோஜனை உடைய நீரில்லா இடமாக காண்பித்து அங்கு அவர்களை இருத்தி கொன்றார். அசுரர்கள் உடல் பாற்க்கடலில் பரவிய இடமெல்லாம் பூமியாகியதாம். அதனால்தான் பூமிக்கு மேதினி என்று பெயர் என்று கூறுகிறது தேவி பாகவதம்.
இவ்வாறாக மது-கைடபர்கள் அழிந்த நேரத்தில் அங்கே ருத்திரரும் தோன்ற, அப்போது தேவி அசிரீரியாக "நீங்கள் மூவரும் உங்களுக்கு உரிய தொழில்களான சிருஷ்ட்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் மேற்கொண்டு உங்கள் பதவிகளில் சுவஸ்த சித்தர்களாக இருங்கள்" என்று கூறுகிறாள்.
மூவரும் குரல் வந்த திசையினை வணங்கி, ஹே! அம்பிகே எங்கு பார்க்கிலும் ஒரே ஜல மயமாக இருக்கிறதே நாங்கள் எங்கள் தொழிலை எப்படி, எங்கே நடத்துவது, பிரஜைகள் எங்கே?, நாங்கள் அசக்தர்களாக இருக்கிறோமே? எங்கள் கர்மாகக்களை நடத்த சக்தியில்லையே என்று கூறினர். அப்போது அவர்கள் அருகே ஒர் அழகிய விமானம் தோன்றி அருகே வந்து நிற்க, அசரீரி அவர்களை அதில் ஏறிக்கொள்ள சொன்னதன் படி அவர்கள் மூவரும் அதில் ஏறுகின்றனர். வானில் கிளம்பிய விமானம் சற்று நேரம் பறந்த பிறகு ஒரிடத்தில் இறங்கியது. அங்கே அடர்ந்த வனங்களும், தடாகங்களும், உத்தியான வனங்களும் இருந்தது. அவ்வனத்தில் பலவகைப்பட்ட மிருகங்களும், மக்களும் ஆங்காகே வாசம் செய்வதை கண்டு மும்மூர்த்திகள் வியப்படைந்தனர்.
மீண்டும் விமானம் கிளம்பி இன்னொரு இடத்திற்கு சென்று இறங்க, அதனைக் கண்டவுடன் அது தேவலோகம் என்று அறிந்தனர். அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள், தச-திக்பாலகர்கள் ஆனந்தமாக இருந்து வந்தனர். மறுபடி விமானம் பறக்கையில் அவர்கள் கண்ட இன்னொரு இடம் பிரம்மனை திடுக்கிடச் செய்தது. ஆம்!, அது சத்ய லோகம், அங்கே ஒரு சத்ய ஸ்வரூபியாக நான்முகன் தாமரையில் அமர்ந்திருக்க, முனிவர்கள் பலவிதமாக ஸ்தோத்திரம் செய்வதைக் கண்டனர். அவர் ஆச்சர்யத்துடன் சிந்திக்கையில் விமானம் நகர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்றது. அங்கே புலித்தோலணிந்த பரமன் நந்திகணங்கள் சூழ இருப்பதைக் கண்டனர். இதே போல வைகுந்தத்தில் சர்வாபரண பூஷிதராக லக்ஷ்மி-நாராயணனைக் கண்டனர். இவற்றையெல்லாம் பார்த்து வியந்தவாறு இருக்கையில் விமானம் அவர்களை ஒர் அலைகள் மிகுந்த கடலுக்குக் கொண்டு சென்றது. கடலின் நடுவில் ஒர் தீவு. அத்தீவில் பலதரப்பட்ட மனிதர்கள் இருந்தனர். பழங்கள் நிறைந்த மரங்களும், வாசனை நிறைந்த மலர்களும் பூத்துக் குலுங்கியது. அங்கே இருக்கும் அழகிய உத்தியான வனத்தின் நடவுல் ரத்தினங்களால் இழைக்கப்பட்டு எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் அழகிய கட்டில் ஒன்று சிறந்த வேலைப்பாடுகளுடன் இருந்தது. அக்கட்டிலில் சர்வாலங்கார பூஷிதையாக ஓர் மாது வீற்றிருந்தார். அவரைக் கண்டதும் மனதில் ஒர் நிம்மதியும், நிறைவும், மகிழ்வும் உருவாவதை உணர்ந்தனர் மும்மூர்த்திகள். அஷ்ட கோண வடிவான ஸ்ரீசக்ர பீடத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆபரணங்களிலிருந்து வெளிப்படும் ஒளியானது அவளுடைய முக காந்தியை வெளிப்படுத்துவதாக இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கையில் அவள் அநேக முகங்களையும், கை-கால்களையும் கொண்டு விசுவரூபமாகத் தெரிந்தாள். அவள் யார் என்று தெரியாது மும்மூர்த்திகள் சிந்தித்துக் கொண்டிருக்கையில் முதலில் விஷ்ணுவிற்கு தெளிவு பிறக்கிறது.
10 comments:
நீங்க நிறுத்தியிருக்கிற இந்த இடம் தேவி பாகவததில் எனக்கு பிடித்தது :) அடுத்த பகுதிக்கு ஆவலுடன்...
வாங்க கவிக்கா...ஆக நீங்க முன்பே தெரிந்து கொண்டுதான் என்னை கேட்டீர்களா?...அப்போ சரி... :)
தவறுகள் ஏதாச்சும் இருந்தாலும் சொல்லுங்க...நீங்க படித்ததுக்கும் நான் சொல்வதுக்கும் வித்யாசம் இருந்தாலும் குறிப்பிடுங்கள்.
முழுசும் படிச்சதில்லை. எப்ப ஆரம்பிச்சாலும், முதல்ல கொஞ்சம் படிச்ச பிறகு நின்னு போயிடும் :(
எனக்கு தேவி பாகவதத்தில் இந்தக் கட்டம் மிகவும் பிடிக்கும்! விஷ்ணு இன்னொரு விஷ்ணுவை இன்னொரு லோகத்தில் காண்பது! :)
இதே போல் காகபுஜண்டர் கதையும் உண்டு! அதே ராமாயணம் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டத்தில் நடந்து கொண்டிருக்கும்! Time, Matter & Space Theory-ஐ மிக அழகாக இதைக் கொண்டு விளக்கலாம்!
//உங்கள் பதவிகளில் சுவஸ்த சித்தர்களாக இருங்கள்" என்று கூறுகிறாள்//
இப்படி எல்லாம் சொன்னால் அஞ்ஞானச் சக்ரவர்த்தியான அடியேனுக்கு எப்படிப் புரியும்? சுவஸ்த சித்தர்-ன்னா என்னாண்ணா?
//முதலில் விஷ்ணுவிற்கு தெளிவு பிறக்கிறது//
Hurrah! Mouli Anna is the best :)))
சந்த்ரமெளலீஸ்வரியின் படம் அருமையோ அருமை!
தேவி பாகவதத்தை மீண்டும் படிக்கும் பாக்கியத்தைத் தருவதற்கு நன்றி மௌலி. எப்போதோ பிரதியெடுத்ததை இன்று தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
//
ஒர் அழகிய விமானம் தோன்றி அருகே வந்து நிற்க, அசரீரி அவர்களை அதில் ஏறிக்கொள்ள சொன்னதன் படி அவர்கள் மூவரும் அதில் ஏறுகின்றனர்.....
//
நம்மை யாரவது அது மாதிரி கூட்டிட்டி போயி சுத்தி காமிச்சா...கற்பனை பண்ணி பார்கவே ஜாலியா இருக்கு...!! :-))
நல்லா இருக்கு! அடுத்ததுக்குப் போறேன் இப்போவே!
Post a Comment