பரிக்ஷித் மஹாராஜனை தக்ஷகன் கொன்றதால் பரிஷித்தின் மகன் ஜனமேஜயன் தக்ஷகனை கொல்வதற்கு சர்ப்ப யாகத்தை ஆரம்பிக்கிறான். ஈரேழு உலகிலும் இருக்கும் சர்ப்பங்களை மந்திரத்தால் வரவழைத்து ஆகுதியாகச் செய்கையில் அஸ்திகர் என்னும் முனிவர் யாகசாலைக்கு வருகிறார். [இந்த அஸ்திகர் பற்றிய வரலாறு பிறகு பார்க்கலாம் ]அவரை வரவேற்று உபசரித்த ஜனமேஜயன், தன்னால் முனிவருக்கு ஆகக் கூடிய காரியம் ஏதாகிலும் இருக்குமானால் செய்ய காத்திருப்பதாக கூறுகிறான். முனிவரும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் செயலைச் செய்தல் என்றால் அது சர்ப்ப யாகத்தை அப்போதே பூர்த்தி செய்வதேயாகும் என்று கூற, அரசன் அதிர்ந்தாலும் கொடுத்த வாக்கை காப்பற்றும் பொருட்டு யாகத்தை அத்துடன் நிறுத்திவிடுகிறான்.
யாகத்தை நிறுத்தினாலும் தமது குலத்திற்கு விரோதியான சர்ப்ப குலத்தை அழிக்க முடியவில்லையே என்று மனமுடைந்தான் ஜனமேஜயன். அப்போது வைசம்பாயனர் என்றழைக்கப்படும் வியாசர் ஜனமேஜயனது வருத்தத்தை போக்கவும், அவனது சந்ததியினர் அடைந்திருக்கும் களங்கம் நீங்கவும் தேவிபாகவதம் என்னும் உத்தம புராணத்தை அவனுக்குச் சொல்கிறார். அப்போது, அவர் ஜனமேஜயனிடம், "தேவியினால் மஹாவிஷ்ணுவுக்குச் சொல்லப்பட்ட இந்த புராணத்தை கேட்பதால் உன் தந்தை நல்ல கதி அடைவார், இது கேட்பவரை பரிசுத்தமடையச் செய்யும், ஜனன-மரண துக்கங்களில் இருந்து விடுவிக்கும்" என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட ஜனமேஜயன், தமக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, "சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனப்படும் முத்தொழிலுக்கும் ஆதாரமாக இருப்பவர்களும், சகுண ஸ்வருபமானவர்களுமான பிரம்மா, விஷ்ணு, ருத்திரர் ஆகிய மூவரும் தேவர்களில் சிறந்தவர்கள் என்றும் சச்சிதானந்த ஸ்வரூபிகள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களுக்கும் மரணம், சுக-துக்கம் போன்றவை உண்டா?, நித்திரை போன்ற அவஸ்தைகள் உண்டா?, இவர்களுக்கு உதிரம் போன்ற சப்த தாதுக்களுடன் கூடிய தேகம் உண்டா?, அவர்களது குணங்கள் என்ன?. அவர்களது வசிப்பிடம் எப்படி இருக்கும், அவர்களது லீலாவினோதங்கள் போன்றவை பற்றி எல்லாம் கூறுங்கள்" என்று பணிவுடன் கேட்கிறான்.
இக்கேள்விகளைக் கேட்ட வியாசர் பெரிதும் மகிழ்ந்து, 'அரசே, நீ கேட்டவை எல்லாம் மிக அரிய விஷயங்கள். இவற்றையெல்லாம் நானும் முன்பு நாரத மஹரிஷியிடம் கேட்டேன். அப்போது அவர் சிரித்தவாறு சில செய்திகளை சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் ஒருமுறை மீண்டும் வற்புறுத்திக் கேட்ட சமயத்தில் எல்லாவற்றையும் கூறினார். அவற்றை உனக்கு கூறுகிறேன் கேள்" என்று கூறி நாரதர் தமக்கு கூறியதை பின்வருமாறு கூறுகிறார். நாரதர், தமக்கும் இக்கேள்விகள் எழுந்ததாகவும், தமது ஐயங்களை தன் தந்தையான பிரம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும். தற்போது சொல்வது பிரம்மனது வாக்கு என்று கூறித் தொடர்கிறார். ஒருமுறை பிரளய வெள்ளத்தில் எல்லாம் அழிந்து பிரம்மன் ஒருவனே இருந்தாராம். அப்போது அவர் தம்மைப் பற்றிச் சிந்தித்தாராம். எங்கும் நீர் மயமாக இருக்கையில் தாம் யாரால் உருவாக்கப்பட்டார்?, தன்னை ஒடுக்குபவர் யார்?. என்றெல்லாம் யோசித்தக் கொண்டிருக்கையில் தாம் அமர்ந்திருக்கும் தாமரை எதனை ஆதாரமாக கொண்டிருக்கிறது...அது ஏதோ ஒர் இடத்தில் நிலை பெற வேண்டுமெ என்று உணர்ந்து, அந்த தாமரையின் தண்டுடன் கீழ் நோக்கிச் செல்கிறார். அத்-தண்டின் அடிப்பகுதியில் ஓர் அத்புதமான காட்சியைக் கண்டார். மேக-சியாமள வர்ணத்தில், பீதாம்பரதாரியாக, சதுர்புஜங்களில் சங்கு-சக்ர, கதா-பத்மங்களைத் தாங்கியவராக மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருப்பதையும், அங்கு இரு அசுரர்கள் நீர்பரப்பில் இருப்பதையும் கண்டார்.
மஹா-விஷ்ணு ஆதிசேஷன் மீது சயனித்து உறக்கத்தில் இருந்த போது அவரது காதுகளில் இருந்த அழுக்கானது வெளிவந்து இரு அசுரர்களாக ஆகினர். அவர்கள் பெயர் மது, மற்றும் கைடபர் என்பதாகும். இவர்கள் பார்கடலில் பரந்தாமன் காதிலிருந்து வெளிவந்து அந்த கடலிலேயே விளையாடி வந்தனர். இவர்களைத்தான் பிரம்மன் பார்க்கிறார். ஒருசமயம் இவர்களுக்கு சந்தேகம் வந்தது. எந்த பொருளும் ஆதாரம் இல்லாது இருக்க முடியாது. மிக பெரியதாகவும், நீர் மயமாகவும் இருக்கும் இக்கடலுக்கு ஆதாரம் எது?, இதைப் படைத்தது யார்?. இக்கடலில் இருக்கும் தாம எப்படி தோன்றினோம். என்றெல்லாம் எண்ணினர். அவற்றிற்கு பதிலை தேடிய போது தம்மை ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்றும் அந்த சக்தியே அவர்கள் விளையாடும் கடலையும் தாங்குகிறது என்ற முடிவுக்கு வந்தனர். அப்போது வானத்தில் ஏதோ ஒரு பேரொளி மற்றும் சப்தம் தோன்றி மறைகிறது. அதை கவனித்த மது-கைடபர்களுக்கு அது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. தம்மை இயக்கும் சக்தியே அந்த சப்தமாகவும், பேரொளியாகவும் வந்ததாக உணர்ந்து, அச்சக்தியை தரிசிக்க எண்ணினர். பேரொளியுடன் வந்த சப்தத்தையே ஆதாரமாகக் கொண்டு அதை தியானித்து புலன்களை அடக்கி தியானம் செய்தனர்.
12 comments:
ம்... அப்புறம்?
தேவி பாகவதம் சொல்றதுக்கு நன்றிகள் பல!
நன்றி கவிக்கா. எல்லாம் உங்களது கோரிக்கையால் தான். :)
கவி-அக்கா கோரிக்கை மட்டும் தானா? ஹூஊஊஊஊம்!
//ஓர் அத்புதமான காட்சியைக் கண்டார். மேக-சியாமள வர்ணத்தில், பீதாம்பரதாரியாக, சதுர்புஜங்களில் சங்கு-சக்ர, கதா-பத்மங்களைத் தாங்கியவராக மஹாவிஷ்ணு யோக நித்திரையில் இருப்பதையும்//
தேவி நவராத்திரியின் போது, எம்பெருமானைத் தரிசனம் செய்து வைத்தமைக்கு மிகவும் நன்றி மெளலி அண்ணா! :)
"காமாக்ஷி! கடாக்ஷி!", "தேவி பாகவதம்","மீனாக்ஷியம்மை பிள்ளை தமிழ்" போன்ற நூல்களை பல வருடங்களுக்கு முன் வாங்கி, படிக்காமல் அலமாரியில் பூட்டி வைத்திருந்தேன். முன்பு காமாக்ஷி பற்றி நீங்கள் எழுதி வந்த பொழுது முதல் நூலை படித்து முடித்தேன். இப்பொழுது தேவி பாகவதம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி. :-)
வாங்க ராதா சார்.
நீங்க வாங்கின புத்தகங்களை படிக்கறதுக்காகவாவது என் பதிவுகள் க்ரியா ஊக்கியாக இருப்பது பற்றி சந்தோஷமே!. :)
mmmmmmஅப்புறம்????
வாங்க கீதாம்மா...ஏது ரொம்பநாள் கழித்து இந்தப்பக்கம் வந்து கமெண்ட்களை அள்ளித் தெளிச்சுட்டுப் போயிருக்கீங்க? :)
//வாங்க கீதாம்மா...ஏது ரொம்பநாள் கழித்து இந்தப்பக்கம் வந்து கமெண்ட்களை அள்ளித் தெளிச்சுட்டுப் போயிருக்கீங்க? :)//
எங்கே?? இணையத்திலே உட்கார்ந்தால் உடனே மின் தடை. இணையம் வரதில்லை. எல்லாத்தையும் மீறி வந்தால் போஸ்ட் பப்ளிஷ் பண்ண அப்லோட் செய்யணும், அப்லோட் பண்ணி ஷெட்யூல் பண்ணும்போது சொல்லிக்காம மின்சாரம் போயிடும். போதுமா??? இதோட வீட்டு வேலைகள் இத்யாதி, இத்யாதி, இன்னும் பல பதிவுகளுக்குப் போகவே இல்லை! :)))))))))))))இன்னும் கொஞ்சம் வேணுமா??? :P:P:P:P
புரிகிறது கீதாம்மா....தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தியாக நீங்கள் இருப்பதை உணர்கிறேன். :)
Post a Comment