Monday, September 21, 2009

தேவீ-மஹாத்மியம் (அறிமுகம்-1) - *நவராத்திரி சிறப்பு இடுகை - 4*

முன்பு கூறியபடி கடந்த வெள்ளியன்றே இந்த தொடர் மீள்பதிவுகள் ஆரம்பித்திருக்க வேண்டியது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் தாமதமாகிவிட்டது. இங்கு வரும் பதிவுகள் சென்ற வருடம் நவராத்ரிக்கு இட்டவை. முதல் மூன்று பதிவுகளின் சுட்டிகள் கிழே!.

நவராத்ரி முதல் நாள் பதிவு

நவராத்ரி இரண்டாம் நாள் பதிவு

நவராத்ரி மூன்றாம் நாள் பதிவு

கிழே இருப்பது நான்காம் நாள் பதிவு

************************************************************************

நவராத்திரி 9 தினங்களும் பதிவிடுவது என்று முடிவு செய்தவுடன், அமாவாசை, விஜய தசமியும் சேர்க்க 11 தினங்களாகுமே. எப்படி இத்துணை பதிவுகள் எழுதறதுன்னு ஒரு அச்சம். இதற்காக யாரிடம் உதவி கேட்கலாம் அப்படின்னு யோசித்த போது நண்பர் கணேசன் (அம்பியின் தம்பி) நினைவுக்கு வந்தார். உடனே போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்டேன். அவர் சரின்னு சொன்ன போதே அம்பிகை அருள் கிடைத்த உணர்வு. உடனே அவரிடம் தேவி-மஹாத்மியம் எழுதமுடியுமா என்றேன். எழுதறேன், ஆனால் மேலோட்டமாகத்தான் எழுதுவேன் பரவாயில்லையா என்று கேட்டார். சரி மஹாத்மியம் ஒர் அறிமுகம் என்ற வகையில் எழுதுங்கள் என்றவுடன் ஏற்றார்.


தேவி-மஹாத்மியம் ஏதோ செளந்தர்ய லஹரி போல இல்லை. இதனை பாராயணம் பண்ண விசேஷமாக குரு அனுமதி வேண்டும். ஜபங்கள் எடுத்துண்ட எல்லோரும் கூட இப்புத்தகத்தை எடுத்து வச்சுண்டு பாராயணம் பண்ண முடியாது. திரு கணேசன் சில வருடங்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் சாரதாம்பாள் சன்னிதியில் இதைப் பாராயணம் பண்ணினவர். மஹா பவித்ரமான இந்த சப்தசதி அவர் மூலம் நமக்கு அறிமுகமாவது என்பதே அம்பாளின் அருள் நமக்கு கிஞ்சித்தும் இருக்கிறது என்பதை காட்டுகிறது என்றால் அது மிகையல்ல. இனி வருவது அவரது எழுத்துக்கள், இதை இரு இடுகைகளாக பிரித்து இந்த வலைப்பூவில் இடுவது மட்டுமே நான் செய்தது. எனது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இதை எழுதிக் கொடுத்த திரு. கணேசனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிழே இருப்பதிலிருந்து அவர் எழுத்துக்கள், படம் கூகிளாண்டவர்.

-------------------------------------------------------------------------------------------------



நமாமி சங்கராச்சார்யம் சர்வலோகைக பூஜிதம்,
பஜெ ஸ்ரீ பாரதீதீர்த்தம் ஸாரதா பீட ஸத்குரும்!
"குண்டலக்காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமெனும் கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே" - என்ற திருமந்திர வாக்கின் மூலம் திருமூலர் காலம் தொட்டே சண்டி உபாசனை இங்கு இருந்து வருவதை அறியலாம். மார்கண்டேய புராணம்,பத்ம புராணம் முதலியவற்றில் சண்டி பாராயணம் தெளிவாக வருகிறது, இதில் அம்பிகையானவள் சண்டிகா தேவியாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த ரூபத்திற்கு அப்படியென்ன சிறப்பு என இனி நாம் காணலாம்.

"கலெள சண்டி வினாயகெள" - அதாவது கலிகாலத்தில் அற்புதமான பலன்களை அளிப்பதில் சண்டியும், கணபதியும் தலைசிறந்த தேவதைகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த சண்டிகையின் புகழை விரிவாக கூறுவதே தேவீ-மாகாத்மியம் ஆகும்.


இந்த ஸ்தோத்ரம் முழுவதுமே மூலமந்திர ரூபமானது, உதாரணமாக ஸாவர்ணிஸ்ஸூர்யதனயோ என்று துவங்கும் ஸ்லோகம் புவனேஸ்வரி மந்த்ரமாக அமைந்துள்ளது. அன்னையின் ஆராதனை முறையை விளக்கும் டாமர தந்திரம் மற்றும் யாமள தந்திரம் முதலியவற்றில் இதன் பாராயணமுறை விளக்கப்பட்டுள்ளது. இதன் படி தேவீ-மாகாத்மியம் கவசம்,அர்க்கம்,கீலகம் முடிவில் மூன்று ரகசியம் என்று கொண்டதாக இருக்கும்.


இதற்கு ஸப்தசதீ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் 700 ஸ்லோகங்கள்(ஸப்த என்றால் 7,ஸதம் என்றால் 100) ஆகும். 13 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ப்ரதம சரித்ரம், மத்யம சரித்ரம் மற்றும் உத்தம சரித்ரம் என 3 பகுதிகளாக உள்ளது. முதலில் மதுகைடப வதமும், இரண்டாவதில் மகிஷாசுர வதம் + அம்பாள் ஸ்துதியும், மூன்றாவதில் அரக்கர்களின் அழிவிற்கு முன்பும் பின்பும் தேவி ஸ்துதி காணப்படும். பாராயணத்திற்கு முன்பும்,பின்பும் நவாக்ஷரி எனப்படும் சண்டியின் மூலமந்திரம் ஜபிக்கப்படும். பாராயணத்திற்கு முன்பு ஜபிக்கப்படும் அர்கலா ஸ்தோத்ரம் தனியாக பாராயணம் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் உள்ள ஜயந்தி மங்கலா காளி எனும் ஸ்லோகம் சத்ருக்களை நடுங்க செய்யும்.



ஸுரதன் எனும் மன்னனுக்கும், ஸமாதி எனும் வணிகனுக்கும் ஒரு ரிஷியின் மூலமாக தேவியின் பெருமைகள் சொல்லப்பட்டு அவர்கள் உயர்ந்த நிலையை அடைவதாக இந்த ஸ்தோத்ரம் அமைந்திருக்கும். துர்கா ப்ரதீப: எனும் நீலகண்டர் எழுதிய உரை, நாகேசி எனும் நாகேச பட்டர் உரை மற்றும் பாஸ்கரராயர் எழுதிய "குப்தவதி" ஆகியவை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த ஆராதனையில் ஜபம் ,யாகம், தர்ப்பணம் ஆகியவை மிகவும் முக்கியம் ஆகும். இதில் பல அர்த்தங்கள் தத்துவ உட்பொருள் கொண்டதாக உள்ளது. இதன் மந்திரங்களே சண்டி யாகத்திற்கு உச்சரிக்கப்படுகிறது. பாராயணம் மட்டும் செய்யும் பொழுதும் சிறந்த பலனை தரும் அற்புத பொக்கிஷம் ஆகும். இதில் பல இடங்கள் தேவியின் வாக்காக வெளிப்படும் (தேவ்யுவாச) அதனால் இந்த ஆராதனையானது சாக்த உபாசகர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.


மகிஷாஸுரனின் 14 படைத்தலைவர்கள்(சாமரன், உதக்ரன், கராலன், உத்ததன், பாஷ்கலன், பிந்திபாலன், தாம்ரன், அந்தகன், உக்ராஸ்யன், உக்ரவீர்யன், மகாபானு, பிடாலன், துர்தரன், துர்முகன்) சண்டி-தேவியால் போர்களத்தில் அழிக்கப்பட்டு, அதன்பின், ரக்தபீஜன்,சண்ட முண்டனுடன் மகிஷாஸுரனும் வதைக்கப்படுவான். மேலே கூறிய ஓவ்வொரு அசுரனும் மிகுந்த பலவான்கள், அவர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. உதாரணமாக, ரக்தபீஜன் பெற்ற வரத்தின் படி அவன் உடலில் இருந்து பூமியில் சிந்தும் ஒவ்வொரு துளியில் இருந்தும் ஒரு ரக்தபீஜன் தோன்றுவான்(குளோனிங் தொழில் நுட்பம்!!). அவனின் ரத்தம் முழுவதும் குடித்து காளியானவள் வென்று வீழ்த்தினாள்.



13 அத்தியாயங்கள் முறையே மதுகைடப வதம், மகிஷாசுர சைன்ய வதம், மகிஷாசுர வதம், தேவி ஸ்துதி,தேவீதூத ஸம்பவம், தூம்ரலோசன வதம், சண்ட-முண்ட வதம், ரக்த பீஜ வதம், சும்ப-நிசும்ப வதம், தேவி ஸ்துதி, பலஸ்துதி, வரப்பிரதானமென அமைந்துள்ளது. இதில் அம்பிகை கூறும் போது "என்னுடைய அருள் பெற்றவன் இதை பாராயணம் செய்யும் பாக்கியத்தை அடைவான், செய்பவன் கடுமையான துன்பத்தில் மாட்டிக்கொண்டாலும் நொடிப் பொழுதில் அவனை அதிலிருந்து நான் மீட்பேன், இந்த பாராயண ஸப்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் ஒழிந்து போகும் என்று கூறியிருக்கிறாள். பாராயணத்திற்கு முன்பு ஜபிக்கப்படும் அர்கலா ஸ்தோத்ரம் தனியாக பாராயணம் செய்யும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகும். இதில் உள்ள ஜயந்தி மங்கலா காளி எனும் ஸ்லோகம் சத்ருக்களை நடுங்க செய்யும்.

இனி வருவதை நாளை அடுத்த பதிவில் தொடரலாம்.

யா தேவீ ஸர்வபோதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

19 comments:

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் கணேசன், என்றாலும் இன்னும் கொஞ்சம் மெதுவாய், விபரமாய்ச் சொல்லலாமோ?? என்னை மாதிரி ஆட்கள் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமே! என்றாலும் தொடக்கத்திற்கு மீண்டும் வாழ்த்துகள்.பணி தொடர்ந்து சிறக்கவும் ஆசிகள்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் கணேசன், என்றாலும் இன்னும் கொஞ்சம் மெதுவாய், விபரமாய்ச் சொல்லலாமோ?? என்னை மாதிரி ஆட்கள் புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமே! என்றாலும் தொடக்கத்திற்கு மீண்டும் வாழ்த்துகள்.பணி தொடர்ந்து சிறக்கவும் ஆசிகள்.

Kavinaya said...

நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். மௌலிக்கு ஸ்ரீபாத ஸப்ததி சொல்ல ஒருத்தர், தேவி மஹாத்மியம் சொல்ல ஒருத்தர், ... :)

//திரு கணேசன் சில வருடங்கள் தமது சொந்த ஊரில் இருக்கும் சாரதாம்பாள் சன்னிதியில் இதைப் பாராயணம் பண்ணினவர். மஹா பவித்ரமான இந்த சப்தசதி அவர் மூலம் நமக்கு அறிமுகமாவது என்பதே அம்பாளின் அருள் நமக்கு கிஞ்சித்தும் இருக்கிறது என்பதை காட்டுகிறது என்றால் அது மிகையல்ல.//

திரு. கணேசன் அவர்களுக்கு மிக்க நன்றியும் வணக்கங்களும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா. கணேசன் நண்பகலில் வருவாருன்னு நினைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கவிக்கா

//மௌலிக்கு ஸ்ரீபாத ஸப்ததி சொல்ல ஒருத்தர், தேவி மஹாத்மியம் சொல்ல ஒருத்தர், ... :)//

ஆமாம், எனக்குன்னு என்னத்தை தெரியும், நல்ல மனிதர்கள் நட்பு மட்டுமே என்னை வழிநடத்துது.

jeevagv said...

ஆகா, தேவியின் சிறப்பை அறியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றிகள்!

Anonymous said...

//யோசித்த போது நண்பர் கணேசன் (அம்பியின் தம்பி) நினைவுக்கு வந்தார். உடனே போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி உதவ முடியுமா என்று கேட்டேன். அவர் சரின்னு சொன்ன போதே அம்பிகை அருள் கிடைத்த உணர்வு.//

அடியேன், சின்ன பையன்.மேலே உள்ளதெல்லம் மதுரையம்பதி அண்ணாவின் பெருந்தன்மையே!

தம்பி

Anonymous said...

//நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். மௌலிக்கு ஸ்ரீபாத ஸப்ததி சொல்ல ஒருத்தர், தேவி மஹாத்மியம் சொல்ல ஒருத்தர், ... :)//

மதுரையம்பதி அண்ணாவின் சதுரங்க சேனையில் அடியேன் பொடியனும் ஒருவன்....:)


தம்பி

Anonymous said...

//தொடக்கத்திற்கு மீண்டும் வாழ்த்துகள்.பணி தொடர்ந்து சிறக்கவும் ஆசிகள்.//

நன்றி கீதாம்மா!!

தம்பி

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜீவா...வந்து படித்தமைக்கு நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//அடியேன், சின்ன பையன்.மேலே உள்ளதெல்லம் மதுரையம்பதி அண்ணாவின் பெருந்தன்மையே!//

ஆஹா!...இல்லாததை ஏதும் சொல்லலையே நான். :)

//மதுரையம்பதி அண்ணாவின் சதுரங்க சேனையில் அடியேன் பொடியனும் ஒருவன்//

இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டீங்கன்னா அப்பறம் இல்லாத குழு-புழூ எல்லாம் இருகறதா ஆகிடும் ஆமாம் :)

குமரன் (Kumaran) said...

சென்ற வருடம் சப்தசதீ/தேவி மகாத்மியத்தைப் பற்றி ஒரு நண்பர் கேட்டார். அப்போது கூகிளில் தேடிப் பார்த்துக் கிடைக்கவில்லை. இப்போது இந்த இடுகைகளின் சுட்டியை அவருக்கு அனுப்பிவிட வேண்டியது தான். :-)

கலௌ சண்டி வினாயகௌ - அதனால் தான் சண்டி தேவியைப் பற்றி கணேசன் சொல்லிப் படிக்கும் படி நமக்கும் அமைந்திருக்கிறது போலும்.

சப்தசதீயின் மூன்று பகுதிகளில் கடைசி பகுதிக்குப் பெயர் உத்தம சரித்ரமா உத்தர சரித்ரமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யப்பா கணேசா....
இப்போது தான் ஆற அமர வந்து பதிவினைச் சேவித்துப் பின்னூட்ட முடிகிறது! இந்தப் பதிவு வந்த அன்று தில்லையில் அன்னை சிவகாம சுந்தரியைச் சேவித்துக் கொண்டிருந்தேன்! :)

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள்!
மெளலி அண்ணா ஓசை கொடுக்க, கணேசன் பின் வந்து, பின்னியதிலும் அதே தாத்பர்யம் தான் போலும்!

கணேச வரவுக்கும், கவின் மிகு பதிவுக்கும் வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யா தேவீ ஸர்வபோதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதா//

யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸ்ம்ஸ்திதா என்று இருக்க வேண்டுமோ?

Anonymous said...

//சப்தசதீயின் மூன்று பகுதிகளில் கடைசி பகுதிக்குப் பெயர் உத்தம சரித்ரமா உத்தர சரித்ரமா?//

உத்தம சரித்ரம் என்பதே சரியானது குமரன் அண்ணா,

தம்பி

The inner Instinct... said...

Devi mahathmiam really superb anna... Kalakkureenga...
- with love,
Venkat.

Geetha Sambasivam said...

போன வருஷத்து இடுகை என்றாலும் மீண்டும் படிக்கப் படிக்க ஆநந்தமே.

ParamaSivan / Supreme Servant said...

May MAHAADEVI bless you to visit www.omsathyam.com to learn more about MAHAADEVI, the Single cum Supreme Power GOD.

Unknown said...

Dear sir,

With ambal grace, I read one time in tamil meaning fully. I started second time with
arkala,and devi kavasam. I don:t have guru. Each and every time I started, first I pray vinayagar and continue to read. On every sunday I will read one chapter.

My mail id karthikj@emantras.com. Kindly advise.

Thanks
S.Karthick jaikumar