Wednesday, April 16, 2008

பத்ம பாதரும் நரசிம்மரும்....





ஆதிசங்கரரின் பரம சிஷ்யர்களில் ஒருவர் பத்மபாதர். இவரைப்பற்றி சிறிது ஏற்கனவே இந்த வலைப்பூவில் பார்த்திருக்கிறோம். இவர் ஆதிசங்கரரிடம் வருவதற்கு முன்னர் தீவிரமான நரசிம்ஹ பக்தர். இவரது சீக்ஷா நாமம் சனந்தனர், இவர் தனது நரசிம்ஹ பக்தியினால் பகவத்பாதரை இருமுறை காப்பாற்றி இருக்கிறார். இன்று பத்மபாதரது நரசிம்ம பக்தியினை பார்க்கலாம்.





பத்ம பாதர் மிக திவிரமான தவத்தின் மூலம் நரசிம்மத்தை நேரில் தரிசிக்க வனத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவர் அவ்வாறு இருக்கையில் ஒரு வேடன் அவரிடம் வந்து "சாமி.....கண்ணை மூடிக்கிட்டு அப்படி என்ன வேண்டிக்கிறீங்க" அப்படின்னு கேட்டான். பத்மபாதர் பதிலாக, 'உனக்கு சொன்னால் புரியாதே' என்கிறார். அதெல்லாம் புரியும் நீங்க சொல்லுங்கன்னு வேடன் வற்புறுத்துகிறான். பத்மபாதரும் அவனுக்கு புரியும்படியாக 'சிங்க முகமும் மனிதவுடலும்' கொண்ட ஒருத்தரைக் காண்பதற்காக தவமிருப்பதாக சொல்கிறார். நீங்க சொன்ன மாதிரி எந்த மிருகத்தையோ அல்லது மனிதனையோ நான் பார்த்ததே இல்லை என்று கூறிய வேடன், அதனால் என்ன இந்த வனத்தினுள் இருப்பானாயில் அவனை இன்று மாலை சூரியன் மறைவதற்குள் கட்டி இழுத்து வருகிறேன் என்று சூளுரைத்துச் செல்கிறான்.





பத்ம பாதரும், பலகாலமாக கடுந்தவம் செய்யும் எனக்கே காணக் கிடைக்கவில்லை, இவன் கட்டி இழுத்து வருகிறானாமே என்று மனதுள் சிரித்துக் கொண்டு தனது தவத்தை தொடர்கிறார். வேடன் சோறு தண்ணியின்றி அலைந்து தேடுகிறான். மாலையும் நேரம் வருகிறது, ஆனால் அந்த மிருகம் கண்ணில் தென்படவில்லை. வேடனுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம். கொடிகளைக் கொண்டு தூக்கு மேடை அமைத்து, 'சாமி என்னை மன்னிச்சுக்கோங்க, சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நான் உயிர் வாழ விரும்பவில்லை' அப்படின்னு சொல்லிக் கொண்டே கழுத்தில் தூக்கு மாட்டிக் கொள்கிறான். சுருக்கு இறுகும் நேரத்தில் நார்/கொடி அறுபட்டு கிழே விழுகிறான். அவனெதிரில் அந்த மனித மிருகம் கண்ணில் படுகிறது. ஆகா அகப்பட்டாயா என்று அதைப் பிடித்து கொடியாலேயே கட்டி இழுத்துக் கொண்டு பத்ம பாதரிடம் வருகிறான். பத்ம பாதர் முன்பு வந்து, 'சாமி, கண்ணைத் திறந்து பாருங்க, நீங்க சொன்ன மனித மிருகத்தை கொண்டு வந்திருக்கேன்' என்கிறான். கண் திறந்த பத்மபாதருக்கு எதிரே ஏதும் தெரியவில்லை. ஆனால் அவன் கட்டிய கொடி/நார் மட்டும் கண்ணுக்குப் புலப்படுகிறது. 'எங்கேயப்பா? எதையும் காணவில்லையே' என்கிறார். வேடனும், 'நல்லாப் பாருங்க சாமி'ன்னு சொல்லிட்டு 'ஏ மிருகமே உனக்கென்ன மாய-மந்திரம் தெரியுமான்னு அதட்டுகிறான்.





நரசிம்மம் கர்ஜிப்பதை காதில் கேட்டார் பத்மபாதர். 'பத்மபாதா, ஞானக் கண்ணால் தவமிருந்த உனக்கு குரலால் தரிசனம் தருகிறேன். வேடனின் நம்பிக்கையும், தீவிரமும் என்னை தோன்றச் செய்தது. நீ என்னை நினைக்கும் போது நான் உன்னில் ஆவிர்பவிக்கிறேன்' என்று சொல்லி மறைந்தார். இந்த வரத்தினாலேயே பின்னாளில் ஆதிசங்கரரை கபாலிகர்கள் பலியிட முயன்றபோது பத்மபாதர் காப்பாற்றுகிறார். இவரே இன்னொரு சமயத்தில் சரசவாணியின் கேள்விக்கு பதிலறிய ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்த நேரத்தில் ஆதிசங்கரர் தனது உடல் எரியும் முன்பாக திரும்பி வருவதற்கு உதவுகிறார். இவ்வாறாக தனது தபோ பலத்தையும் குருவுக்கு அர்பணிக்க தயங்காதவர் பத்ம பாதர்.

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆச்சார்ய ஹ்ருதயத்தில் இட்ட இடுகை, அங்கு வந்த பின்னூட்டங்கள் கீழே!

7 comments:
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஒன்னுமே இருக்காது போலிருக்கே! இப்படி திராசவும் மெளலி அண்ணாவும் மாறி மாறி வெளுத்து வாங்கினா அடியேன் பொடியேன் என்ன செய்வேன்?

இந்த பத்மபாதர் தானே சிருங்கேரி பீடத்தின் ஆதி தோன்றல்?

சாந்தமே உருவான பத்மபாதர் மேல் ஆவர்பித்த நரசிம்மர் அந்தக் காபாலிகனை அக்கு வேறு ஆணி வேறாகத் துவம்சம் செய்ததைக் கண்டு சங்கரரே மிரண்டு போனாராம்!

//சரசவாணியின் கேள்விக்கு பதிலறிய ஆதிசங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்த நேரத்தில் ஆதிசங்கரர் தனது உடல் எரியும் முன்பாக திரும்பி வருவதற்கு உதவுகிறார்//

கை மட்டும் எரிந்த நிலையில் அப்போது சங்கரர் பாடியது தானே லக்ஷ்மீ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்?

April 24, 2008 5:05 AM
கீதா சாம்பசிவம் said...
அட, மெளலி, நீங்க எழுதப் போறீங்கனு தெரியலை. ஓகே. நான் ட்ராப்ட் போட்டு வச்சுக்கறேன்,
ஆனால் கே ஆர் எஸ் சொல்றாப்பலே நீங்களும், திராச, சாரும் மாத்தி மாத்தி எழுதறதாலே என்ன எழுதறதுனும் புரியலை தான்!

நல்லதொரு பதிவு மெளலி, நல்லாவே எழுதி இருக்கீங்க, இன்னமும் நிறைய எழுத வாழ்த்துகள்.

April 24, 2008 5:20 AM
மதுரையம்பதி said...
வாங்க கே.ஆர்.எஸ்...

//ஆகா எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஒன்னுமே இருக்காது போலிருக்கே! இப்படி திராசவும் மெளலி அண்ணாவும் மாறி மாறி வெளுத்து வாங்கினா அடியேன் பொடியேன் என்ன செய்வேன்//

கதை எல்லாம் வேண்டாம்...அடுத்த வியாழன் கீதாம்மா போடட்டும், அதுக்கடுத்த வியாழன் நீங்க ஆரம்பிங்க. :-)

April 25, 2008 1:46 AM
மதுரையம்பதி said...
//கை மட்டும் எரிந்த நிலையில் அப்போது சங்கரர் பாடியது தானே லக்ஷ்மீ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்//

ஆமாம்!

//இந்த பத்மபாதர் தானே சிருங்கேரி பீடத்தின் ஆதி தோன்றல்?//

இல்லை. சிருங்கேரியின் முதல்வர் சுரேஸ்வராச்சாரியார்.

April 25, 2008 1:48 AM
மதுரையம்பதி said...
//அட, மெளலி, நீங்க எழுதப் போறீங்கனு தெரியலை. ஓகே. நான் ட்ராப்ட் போட்டு வச்சுக்கறேன்,
ஆனால் கே ஆர் எஸ் சொல்றாப்பலே நீங்களும், திராச, சாரும் மாத்தி மாத்தி எழுதறதாலே என்ன எழுதறதுனும் புரியலை தான்! //

கீதாமமா, 2 வாரம் முன்னாடி நான் போட்டிருகவேண்டியது, அன்று என்னால் முடியல்ல, திராசவைப் போடச்சொன்னேன். அதன் விளைவாக அடுத்த ரெண்டு வாரம் நான் போட்டேன். அடுத்த வாரம் நீங்க, அதுக்கடுத்து கே.ஆர்.எஸ்..

April 25, 2008 1:55 AM
குமரன் (Kumaran) said...
அடுத்த இடுகையில பத்மபாதர் எப்படி சங்கரரை இரண்டு முறையும் காப்பாற்றினார்ன்னு சொல்லப் போறீங்க. சரி தானா? :-)

April 25, 2008 9:02 AM
மதுரையம்பதி said...
வாங்க குமரன்..

//அடுத்த இடுகையில பத்மபாதர் எப்படி சங்கரரை இரண்டு முறையும் காப்பாற்றினார்ன்னு சொல்லப் போறீங்க. சரி தானா? :-)//

இல்லைங்க குமரன் :-)

April 25, 2008 2:29 PM