
ஸ்ரீ ராகவேந்திரரை எல்லோருக்கும் தெரியும். மந்திராலயத்திற்கு போகாத ஆன்மிக சீலர்கள் குறைவே. எல்லாம் சரி, மந்திராலயத்தில் குருராயரின் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் இன்னொரு பிருந்தாவனம் இருக்கிறதே?, அது யாருடையது?. அவர் பெயர் என்ன?. அவரை மட்டும் எப்படி குருராஜர் தன் பக்கத்தில் இருத்திக் கொண்டார்?. இவற்றை எல்லாம் பார்க்கலாமா?.
மந்திராலயத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் ஜீவ பிருந்தாவனத்திற்கு அருகில் (குரு ராஜருக்கு இடது புறம்) இருப்பது ஸ்ரீ வாதீந்திரர் என்னும் யதியின் பிருந்தாவனம். இவர் குருராஜனிலிருந்து 5வது தலைமுறையில் வந்த ஆச்சார்யரது பிருந்தாவனம். இந்த பிருந்தாவனம்தான் முதன் முதலில் குரு ராகவேந்திரருக்காக கட்டப்படது. ஆனால் குருராஜன், இதனை அப்படியே வைத்திருக்கச் சொல்லி தனக்காக வேறு ஒன்று எழுப்ப ஆணையிடுகிறார். அப்போது இந்த பிருந்தாவனத்தை என்ன செய்வது என்று திவான் வெங்கண்ணா கேட்ட பொழுது, அது பற்றி பின்னர் தெரிவிப்பதாக சொல்கிறார் குருராஜன்.
ஆயிற்று, குருராஜன் தன்னால் தேர்வு செய்த கற்பலகைகளை (கற் பலகைகள் அவராலேயே குறிப்பிடப்படுகிறது. அந்த கற்பாறைகளில் ஸ்ரீஇராமன் அமர்ந்து இருந்ததாக அவரே சொல்லியதாக கூறப்படுகிறது) கொண்டு கட்டப்பட பிருந்தாவனத்தில் அமர்ந்து விட்டார். இவ்வாறு பிருந்தாவன பிரவேசம் செய்யும் போது தான் இன்னும் 700 வருடங்கள் ஜீவ சரீரத்துடன் பிருந்தாவனத்துள் வாசம் புரியப் போவதாகவும், அதன் அறிகுறியாக 700 ம்ருத்திகா பிருந்தாவனங்கள் நாடெங்கிலும் தோன்றும் என்றும் அருளியுள்ளார். ஸ்ரீஸ்ரீ ராகவேந்திரர் உத்தரவுப்படி அவருக்குப் பின் ஸ்ரீ யோகீந்திரரும், பின் ஸுரிந்திரர், ஸுமதீந்திரர், உபேந்திரர் என்று குரு பரம்பரையில் நான்கு ஆச்சார்யர்கள், ஆனாலும் குருராஜனுடைய பிருந்தாவனத்தின் இடது பக்கத்தில் இருக்கும் அந்த பிருந்தாவனம் காலியாகவே இருக்கிறது.
ஐந்தாவதாக வருபவர் வாதீந்திரர். இவரே குருராஜன் உத்தரவின்படி குருராஜனுடைய மூல பிருந்தாவனத்திற்கு அருகிலிருக்கும் பிருந்தாவனத்தில் எழுந்தருளுகிறார். 79 ஆண்டுகளுக்கு முன்னால் பிருந்தாவன பிரவேசம் செய்த குருராஜன், வாதீந்திர தீர்த்தரின் சீடர் கனவில் வந்து தனதருகில் இருக்கும் பிருந்தாவனத்தை வாதீந்திரருக்கென உத்தரவிட்டாராம். இவ்வாறாக வாதீந்திரர் குருராஜன் அருகிலேயே அமர்ந்துள்ளார்.
இந்த வாதீந்திரர் குருராயரை வணங்கி எழுதிய நூலே குரு குண ஸ்தவனம். இந்த நூலில் வாதீந்திரர், குருராயரால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றியும், அவற்றின் சிறப்புக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்த நூல் 38 பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றிய வாதீந்திரர், ராயரின் ஜீவ பிருந்தாவனத்தின் முன் படித்து, அவருக்கு சமர்பணம் செய்கிறார். அவ்வாறு செய்கையில், திடிரென அவர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் ஒரு புஷ்பம் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கையில் குருராஜனது பிருந்தாவனம் லேசாக கேட்டதை ஆமோதிப்பது போல ஆடியதாம். இதனை அங்கிருந்த எல்லோரும் பார்த்து அதிசயித்தனராம். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நூலில் இருந்து குரு பக்தி பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தை இன்று பார்க்கலாம். குரு குண ஸ்தவனத்தின் 12ஆவது ஸ்லோக கருத்து கிழே.
குருவே! கர்ம, ஞான மார்க்கங்களை அறியும் விஷயத்தில் நான் திறமையில்லாதவனாக இருக்கிறேன். இந்த உடம்பு நிலையில்லாதது என்பதால், வித்வான்களால் கூறப்படும் மோக்ஷ உபாயத்தையும் (நிவ்ருத்தி கர்மா), பக்தி வகைகளில் ஒன்றான ஸ்ரவணத்தின் மூலம் அடையக் கூடிய கடவுளை நேரடியாக காணும் (அபரோக்ஷ ஞானம் எனப்படும்) வழியினையும் பெறக்கூடிய நிலையில் நான் இல்லை.
ஆனால் குருவே, தங்கள் அருளால், அனுக்ரஹத்தால், இடைவிடாத குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும். இவ்வாறு சிறப்பு மிகுந்த அருளினை நல்கி, தன்னை வணங்கியவர்களுக்கு நற்புத்தியைக் கொடுத்து, அவர்களின் அறிவினைத் தூண்டுகிற க்ரந்தங்களை தந்தருளிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை என்னாளும் வேண்டுகிறேன்.