Monday, January 28, 2008

ராஜ மாதங்கி


தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருபவள் ராஜ மாதங்கி. இந்த அன்னையே ராஜ ஸ்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்தர்களில் சிறந்தவரான மஹாகவி காளிதாஸர் எழுதிய "ச்யமளா தண்டகம்" இவளைக் குறித்து எழுதியதே. அதில் காளிதாஸர்,

மாதா மரகதச்யாமா மாதங்கி மதுசாலினி

சூர்யாத்கடாஷம் கல்யாணி கதம்பவனவாஸினி

ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுகே

ஜய ஸங்கீதரஸிகே ஜய லீலா சுகப்ரியே


என்றும்,


மாணிக்க வீணா முபலாலயந்தீம்

மாதலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி


என்றும் போற்றுகிறார். இவளை உபாசித்தால் வித்தை, தனம் ஆகிய இரண்டையும் அள்ளித்தருவாள் என்பது காளிதாஸரின் வாக்கு.


மதங்கர் என்னும் ரிஷிக்குப் பிறந்த அருந்தவச் செல்வியே இராஜ மாதங்கி. திருவெண்காட்டில் (ச்வேதாரண்யம்) ஆடிமாதம் வெள்ளிக் கிழமையன்று ரிஷி அவர்கள் அங்கிருந்த மதங்க தீர்த்தத்தில் குழந்தையாக கண்டெடுத்த்தாராம். இவளுக்கு ஏழு வயதிருக்கும் போதே மதங்க மஹரிஷி பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டாராம். இதற்காக மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில் சப்தமியன்று திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காடு தல வரலாறு கூறுகிறது.


இவள் அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மந்த்ரிணி என்பதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை மீனாக்ஷியே மந்த்ரிணி ரூபம் என்பதால் மீனாஷியே மாதங்கி ஸ்வருபம் என்றும், தச மஹா வித்தையில் வருபவள் மீனாக்ஷியே என்பர். மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர், "வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரஸிகா" என்று கூறுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ச்யாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துஸ்வாமி திக்ஷதரவர்கள் ஆகிய இருவரும் இவளை கானமூர்த்தி / சங்கீத ரஸிகே என்றெல்லாம் கூறிப்பாடியிருக்கிறார்கள். இவற்றில் ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர்.

ராஜ மாதங்கியின் அங்க தேவதையான லகுஸ்யாமளா பற்றி கேனோபனிஷதத்தில் குறிப்பு இருக்கிறது. இவளது அங்க தேவதைகளாக 6 தேவதைகள் (ஹசந்தி ச்யாமளா, சுக ச்யாமளா, சாரிகா ச்யாமளா, வீணா ச்யாமளா, வேணு ச்யாமளா, லகுச்யாமளா) கூறப்பட்டுள்ளது. இந்த தேவதைகள் பல கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் தந்திடுவாள் என்கிறார்கள். இப்பெரும் சக்தியினை பற்றி ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம் போன்ற நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்டு இச்சக்திக்கான மூலமந்த்ரங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவளை பற்றி சாக்த ப்ரமோதத்தில் கூறுகையில் "காசித் காயனதேவதா விஜயதே வீணாவதி" என்பதாக, உலகிற்கே உரித்தான கான தேவதையாக கூறப்பட்டுள்ளது.


16 comments:

நிவிஷா..... said...

நல்ல பதிவு

நட்புடன் நிவிஷா

ambi said...

நிறைவான விளக்கங்கள்.
"போ! சம்போ! சிவ சம்போ ஸ்வயம்போ!" பாடலில் கூட ஒரு சரணம்
"மதங்க முனிவர சம்புபுரீஷா!"னு வரும் என்று நியாபகம்.

பாட்டை மறுபடி கேட்டுட்டு சொல்றேன். :)

ambi said...

ராஜ மாதங்கி ரொம்பவே கேள்வி கணைகளால் துளைத்தெடுப்பாள்!னு ஒரு வரி சேர்த்து இருக்கலாம். :D

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க அம்பி...

//"மதங்க முனிவர சம்புபுரீஷா!"//

அப்படியா?, நான் கவனித்தது இல்லையே?.

//கேள்வி கணைகளால் துளைத்தெடுப்பாள்//

போடலாந்தான் ஆனா இந்த பதிவுக்கான லேபிளையும் 'சுயபுராணம்"த்துக்கு மாத்த வேண்டியதிருக்கும். :-)

குமரன் (Kumaran) said...

இராஜ மாதங்கி வீணையைக் கையில் ஏந்தியவள் என்று முன்பே படித்ததாக நினைவு. இன்று அவள் திருவுருவத்தைத் தரிசிக்கும் போது அது தெளிவாகத் தெரிந்துவிட்டது. அன்னை மீனாட்சியே ஸ்யாமளா, மாதங்கி என்று நன்கு தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் மௌலி. மிக்க நன்றி.

cheena (சீனா) said...

பதிவு அருமை. இர்ப்பினும் புரிந்து கொள்ள எங்களுக்குச் சற்று கடினமாக இருக்கிறது. சக்தி வழிபாடு தேவை தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்ரீவித்யா உபாசகர்கள் வணங்கிடும் தேவி ராஜமாதங்கி. அஷ்ட சித்திகளையும் அளிப்பவள் அவளே. திரு. முத்துஸ்வாமி தீக்ஷதர் ஒரு வராளி ராககீர்த்தனையில் இப்படி குறிப்பிடுகிறேர்
மாமவ மீனாக்ஷி
ராஜமாதங்கி
மாணிக்கவல்லகி ராணி
மதுரவேணி வராளி
ஸ்யாமே சங்கரி
திக்விஜய ப்ரதாயினி
காமக்கோரத நிவாரினி
கதம்ப வன நிவாசினி
என்றெல்லாம் புகழுகிறார்

கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன் கேளுங்கள்




http://www.musicindiaonline.com/p/x/NUb2YSPrMt.As1NMvHdW/

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி திராச. அறிந்த பாடல்தான் ஆனா எப்படியோ மறந்துவிட்டேன். எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சீனா சார். தொடர்ந்து படிங்க, கொஞ்சம், கொஞ்சமா விளங்கும்.

மெளலி (மதுரையம்பதி) said...

குமரன் கவனித்திருப்பீர்கள்ன்னு நினைக்கிறேன்.அன்னையின் கையில் கிளியும் உண்டு. நன்றி குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா!
//மாதங்கி ரொம்பவே கேள்வி கணைகளால் துளைத்தெடுப்பாள்!னு//

ஓ..லிட்டில் மாதங்கியோ? :-))

அப்பறம் ஒரு டவுட்டு!
சக்திகளில் இவளை மட்டும் "ராஜ" என்று குறிப்பிட்டு அழைப்பது ஏனோ?
மதுரையை ஆண்டதாலா? இல்லை வேறு தத்துவ விளக்கம் உள்ளதா?

சியாமளை-ன்னு சொல்லும் போதே நிறத்தாலும் மீனாட்சி அம்மையே கண் முன் வருகிறாள்!

முத்தையா பாகவதரின் கமாஸ் ராக கிருதி...
மாதே மலையத்வஜ பாண்டிய சஞ்ஜாதே
"மாதங்க" வதன குக - மாதே
என்கிற பாட்டு மார்னிங் ராகா படத்தின் மூலமாகவும் ஃபேமஸ் ஆனது!

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கே.ஆர்.எஸ்.

இன்றைய பொழுது எனக்கு மிக நல்ல பொழுது போல, திரச, நீங்கன்னு எல்லா பெரியவங்களும் இந்த பதிவுக்கு வந்து சிறப்பித்திருக்கீங்க :-)

ஆமாம், சியாமள நிற ஒற்றுமை சரிதான். இந்த சியாமளைக்கும், நீல மேக சியாமளனுக்கும் எப்படி இந்த ஒற்றுமைன்னு தெரியுமா?. அடுத்து வரும் 2-3 செளந்தர்ய லஹரி ஸ்லோகங்களில் அந்த விளக்கம் வரும். :-)

பாடலுக்கு நன்றி கே.ஆர்.எஸ். நீங்க குறிப்பிட்ட பாடலும் எனக்கு தெரிந்ததே. அதில் வரும் ஸ்வரங்கள் உள்பட. ஆனாலும் பாருங்க எனக்கு இந்த பதிவினை எழுதும் போது இந்த பாடல்கள் ஏதும் நினைவில் இல்லை. ஏதோ எனக்குத் தெரிந்த ஸ்யாமளா தண்டகத்தை சொல்லிவிட்டு எழுத உட்கார்ந்தேன்.

இறைசெயல் நீங்களும், திராசவும் வந்தீர்கள், இல்லையென்றால் இந்த பதிவு இப்பாடல்கள் இல்லாம நிறைவுற்றிருக்காது. மிக்க நன்றி கே.ஆர்.எஸ்.

pudugaithendral said...

அருமையான பதிவு.

ரெய்கி கற்றுக் கொள்ளும் போது என் ரெய்கி குரு லலிதாஸஹஸ்ரநாமத்தில் இருக்கும் குண்டலினி தியானம் முறையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்.

லலிதாவில் அம்பிகை ஒவ்வொரு சக்கரத்திலும் எப்படி, எந்த நைவேத்தியம் ஏற்று அருள்பாலிக்கிறால் என்று விரிவாக இருக்கிறது.

ஜகத் ரட்சகியின் புகழ் பாடி முடியாது

Geetha Sambasivam said...

//ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர். //

புதிய தகவல், நன்றி. மாதங்கியும், மீனாட்சியும் வேறே, வேறே இல்லையோ? மீனாட்சிக்கு மாதங்கி என்ற சிறப்புப் பெயர் உண்டு என்றுதான் சொல்வார்கள் அல்லவா? ம்ம்ம்ம் அம்பி சொல்வது போல் "போ, சம்போ!" பாட்டில் மதங்க முனிவரைப் பத்தி வரும், ஆனால் இந்த வரிகளானு தெரியலை, நானும் பாட்டை மறுபடி கேட்டுட்டே சொல்றேன். :D

மாதங்கியானாலும், மீனாட்சியானாலும் கேள்விக்கணைகளால் துளைக்கத் தான் செய்வார்கள். :)))))))) (இது சுய புராணம் தான்)

Geetha Sambasivam said...

yappaa,நேத்திலே இருந்து உங்க ப்ளாகும் சரி, குமரனோடதும் சரி, திறக்கவே ஒரே அடம். இப்போக் கூட பின்னூட்டம் கொடுத்தது, திரும்பத் திரும்ப வந்துட்டே இருந்தது. ஒரு வழியா 4-வது முறையா அரை மனசோட ஏத்துக்கிட்டது. :P

BABU MUTHU said...

ஐயா, எனக்கு (சியாமள பீடம்) ஸ்ரீ மாதங்கி உபாசகர்கள் பற்றியும் அதன் உபாசனை முறைகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . எனக்கு ஸ்ரீ வித்யா உபாசகர்கள் மதுரையில் இருந்தால் எனக்கு அவர்களின் விவரங்களை srimatangi63@gmail.com அனுப்பவும்