Tuesday, December 25, 2007

பரசுராம ஜெயந்தி....



மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம் அப்படின்னு சொன்னா நம்ம மக்கள் கமலஹாசனை தேடக் கூடும்) ஆறாவது அவதாரம் பரசு ராமர் அவதாரம். இன்று அந்த பரசுராமரின் ஜெயந்தி. ஏனோ தெரியவில்லை, கிருஷ்ண ஜெயந்தி போல, ராம நவமி போல இது பிரசித்தமாக கொண்டாடப் படுவதில்லை. நரசிம்ம ஜெயந்தி கூட பல இடங்களில், குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் சில இடங்களில் கொண்டாடுவதை அறிவேன்.


ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தவர் பரசுராமன். மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி அவருக்கு உபநயனம் மற்றும் வேத அத்யயனம் போன்ற்வை செய்விக்கப்பட்டது. பிருகு முனிவரின் முந்தைய சாபத்தினால் இவரிடம் ஷாத்ர குணம் மேலோங்கி இருந்தது.(இந்த சாபம் இறைவனுக்கு ஏற்பட்டதல்ல, ஆனால் ஜமதக்னியின் தாயால், ஜமதக்னிக்கு அடுத்த தலைமுறைக்கு ஏற்பட்ட சாபம். அந்த தலைமுறையாக ஸ்ரீவிஷ்ணு அவதரிக்கிறார்) அரசர்களுக்கு உரிய எல்லா கலைகளையும் கற்றார். சிவ பெருமானை தினமும் உபாசித்து, தவம் மேற்கொண்டதால், ஈசன் இவரது பக்தியினை மெச்சி தன்கையில் உள்ள மழு என்னும் ஆயுதத்தின் அம்சமாக இன்னொரு மழுவினை தோற்றுவித்து பரசுராமருக்கு தந்தார்.


பதிவிரதைகளில் பரசுராமரின் தாய் ரேணுகாதேவிக்கு தனியிடம் உண்டு. ஆற்றில் குளித்துவிட்டு, அந்த ஆற்று மணலில் குடம் செய்து அதில் நீர் எடுத்து வருவாராம். இவ்வாறான தாய் மீது தந்தைக்கு கோபம் ஏற்பட்டு, தந்தையின் கட்டளையால் தாயைக் கொன்று 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்ற தர்மத்தை நிலைநாட்டினார். பின்னர் தந்தையின் வரத்தால் தாயை உயிர்பித்தார். தன் தாய் கொல்லப்பட காரணமான சித்ரரதன் என்னும் அரசனையும், அவனது குலத்தை தனது பரசு என்னும் மழூவால் கொன்றார்.


கர்த்தவீர்யார்ஜுனன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாட வருகையில் ஜமதக்னி முனிவரது ஆஸ்ரமத்திற்கு வருகிறான். அங்கு ஜமதக்னியும், ரேணுகாதேவியும் அவனை உபசரிக்கின்றனர். அவர்களிடத்து இருக்கும் காமதேனுவை அபகரிக்கிறான் அரசன். இதனை அறிந்த பரசுராமர், நேராக அரசனிடம் சென்று போரிட்டு கர்த்தவீர்யார்ஜுனனைக் கொன்று காமதேனுவை மீட்டுவருகிறார். கர்தவீர்யார்ஜினனின் மகன்கள் தந்தையை இழந்ததால் பழிக்குப் பழியாக ஜமதக்னியை கொன்றுவிடுகின்றனர். இதன் தொடர்பழியாகத்தான் பரசுராமர் 21 தலைமுறைக்கு க்ஷத்திரிய வம்சம் தலையெடுக்க விடாது அழித்து வந்தது புராணம்.


ஸ்ரீவிஷ்ணுவின் இந்த அவதாரம் 2 யுகங்கள் நிலைத்திருக்கிறது. இராமாவதாரத்தில் ராமச்சந்திர மூர்த்தியால் கர்வபங்கப் படுத்தப்பட்டபின், கிருஷ்ணாவதாரத்தில் கர்ணனுக்கு (அவன் க்ஷத்திரியன் என்று அறியாத வரையில்) வில்வித்தை கற்றுத் தருகிறார். இவர் தனது இறுதிக் காலத்தில் தனது பரசினை தூக்கி எறிந்த இடம்தான் இன்றைய கேரளா. இதனாலேயே கேரளப் பகுதிக்கு பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயர் உண்டு. பரசுராமர் பல இடங்களில் கோவில்களைக் கட்டி பூஜித்து தான் செய்த கொலைகளால் தன்னை பிரம்மஹத்தி அண்டாமல் பார்த்துக் கொண்டாராம். அரசர்களை கொன்ற பாவம் தீர மகேந்திர மலையில் தவமிருந்து சிவனிடம் சீரஞ்சீவி வரம் பெற்றாராம்.

எனக்குத் தெரிந்து பரசுராம அவதாரத்திற்கு உண்டான கோவில் என்று ஏதும் தெரியவில்லை. படிப்பவர்கள் யாருக்கேனும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

5 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

புதுமுயற்சி. கேள்விப்படாதவிஷயங்களை தொகுத்துத் தந்து அசத்தி விட்டீர்கள்.

மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி

நமக்கே நாமே மான்யம் விட்டுக்கக்கூடாது

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திரச....

//நமக்கே நாமே மான்யம் விட்டுக்கக்கூடாது//

நீஙக சொல்றது புரியறது சார்....ஹிஹிஹி...

பெருமாளே அவதரிச்ச கோத்திரம் அப்படிங்கறதைத்தான் சொன்னேன்... :))

சிறியன் ஏதோ உளறிவிட்டேன், மன்னியுங்கள்....ஆனா உங்களுக்கு இது ரெகுலரா கேள்விப்படும் வசனமாக இருக்கும் போல...ஹிஹிஹி

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் கமென்ட் போட்டது தங்கமனிக்கு தெரியாது.

Geetha Sambasivam said...

"மிகுந்த பெருமைக்கு உரிய ஸ்ரீவத்ஸ கோத்திர வழக்கப்படி "

நன்னி, நன்னி, நன்னி!!!!!!! :)))))))))))))))))))

பாச மலர் / Paasa Malar said...

பரசுராமர் கோவில் இருப்பதாகத் தெரியவில்லை..

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!