Wednesday, December 12, 2007

பாவை நோன்பு....




மனதில் ஒர் உறுதி கொண்டு அதை வாக்காலும், உடலாலும் எள் அளவும் தவறாது நிறைவேற்றுவதே நோன்பு. கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து ஒவ்வொரு வீடாக சென்று தூங்குபவர்களை எழுப்பி அழைத்துக் கொண்டு நதிக்கரைக்கோ அல்லது குளத்திற்கோ சென்று நீராடிய பின் மண்ணில் பாவை பொம்மை பிடித்து வைத்து பூஜை செய்வார்கள். இதன் தாத்பர்யம் என்ன?. இறைவனை நாயகனாகவும், உயிர்கள் நாயகியாகவும் உருவகம் கொண்டு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து விடுவித்தலே இந்த் நோன்பு. அதாவது பக்குவப்பட்ட உயிர்கள் முன்பே துயில் நீக்கி, மற்ற உயிர்களின் துயிலுணர்த்தி, இறையருளில் சேர்ப்பித்தலே இந்த பாவை நோன்பு. இந்த நோன்பு/பூஜையில் இப்பெண்கள் பாடும் பாட்டுக்கள் விளையாட்டும், வேடிக்கையுமாக இருப்பினும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தக் கூடியது.

இந்த நோன்பின் பயனாக இப்பெண்கள் வேண்டுவது யாது?. இவர்கள் இரு பயன்களை முன்னிட்டு பாவை நோன்பிருக்கிறார்கள். ஒன்று நாட்டில் நல்ல மழை பொழிந்து செழிக்க வேண்டும் என்றும் இன்னொன்று நல்ல கணவனை அடைய வேண்டும் என்பது. (இப்போது தெரிகிறதா ஏன் தற்காலத்தில் பாவை நோன்பு இல்லை என்று?) இவ்விரண்டினையும் பெறுவதற்கு இறையருள் அவசியம் என்று உணர்ந்ததால் அவர்கள் இந்த நோன்பிருந்து வழிபட்டனர்.

பாவை நோன்பை பற்றி சங்க இலக்கியத்திலும் (பரிபாடலில்) அம்பா ஆடல் என்று கூறப்பட்டிருக்கிறதாம். வயது முதிர்ந்த பெண்கள் நோன்பு நோற்கும் சடங்கு முறையினை சொல்லிக் கொடுக்க அதன்படி சிறியவர்கள் ஒரு தவமாக இதனை செய்தார்களாம். மார்கழி மாதத்தில் நிறைமதி நாளாகிய திருவாதரையில் இத்திருவிழா தொடங்குகிறதாகவும், வைகை ஆற்றங்கரையில் நோன்பிருந்ததாகவும் பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளதாக அறிகிறோம். பரிபாடலின் காலம் ஆண்டாள், மாணிக்கவாசகருக்கும் முந்தையது என்பதால் இந்த நோன்பு அவர்களுக்கும் முன்பிருந்தே இருப்பது புலனாகிறது. (நன்றி: நடராஜன் எழுதிய "பாவை நோன்பு", பிரதிபா பிரசுரம்)
காத்யாயினி நோன்பு என்பது பற்றி ஸ்ரீமத் பாகவத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கோகுலத்து குமரிகள் ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் அதாவது மார்கழியில், சூரிய உதயத்திற்கு முன் எழுந்து யமுனையில் நீராடி, அங்குள்ள ஈரமணலில் அம்பிகையின் பாவை உருவமைத்து காத்யாயினி விரதத்தை நடத்தினார்களாம்.

[அன்னை பராசக்தி, காத்யாயன மகரிஷியின் மகளாக பிறந்தாளாம், அப்போது அவளது பெயர் காத்யாயினி. (இதுவே பின்னர் திரிந்து காத்தாயி என்றானதோ?) திருவிழிமிழலை கோவில் அம்பிகை பெயர் காத்யாயினி. அன்னையின் 51 பீடங்களில் இவள் ஒட்டியாண பீடத்திற்கு உரியவளாக சொல்லப்படுவள்]

பாவை நோன்பை பற்றி திருப்பாவையில் நிறைய குறிப்புக்கள் காணக் கிடைக்கிறது. நோன்பிற்கு உரிய செயல்களை "கிரிசைகள்" (கிரியைகள்) என்கிறார் கோதை. நோன்பிற்கான உறுதியாக சில கிரியைகள் ஏற்றுக் கொண்டும், சில கிரியைகளை விடுத்தும் செயல்படுவதாக சங்கல்பம் செய்கிறார். பாவை நோன்பிருக்கையில் கோதை விலக்கியவையாக குறிப்பிடுவது இரண்டாம் பாடலில் வருகிறது.பால், நெய் உண்ணுதல், கண்களுக்கு அஞ்சனமிடுதல், மலரலங்காரம் செய்துகொள்ளல், மற்றும் பிறருக்கு தீமை செய்யாதிருத்தல், சூரிய உதயத்திற்கு முன் நீராடுதல், தான-தருமம் செய்தல் என்று எப்போதும் கடைபிடிக்க வேண்டிய சில நன்நெறிகளையும் சேர்த்து சங்கல்பித்துக் கொள்கிறாள்.

ஆயிற்று நோன்பிற்கான சங்கல்பம், இனி சிரத்தையுடன் தொடர வேண்டுமே?. உடனேயே நோன்பின் பயனை கூறி எல்லோருக்கும் சிரத்தையினை வரவழைக்கிறார் மூன்றாம் பாடலில். என்ன பலனாம்?, நாடெங்கும் தீங்கு இன்றி இருக்கும், மாதம் மும்மாரி பொழியும், செந்நெல் சிறப்பாக விளையும், பசுக்கள் நிரம்பப் பால் கறக்கும், எங்கும் செல்வம் நிறையும் என்று மக்களின் ஜீவாதாரத்திற்கு வேண்டியவற்றை பலனாக கூறி உற்சாகப்படுத்துகிறாள். பின்னர் இருபதாம் பாடலில் நோன்பு முடிக்க வேண்டி பொருட்களான விசிறி, கண்ணாடி போன்றவற்றை பெரிய பிராட்டியிடம் கேட்கிறார். மேலும் இருபத்தாறாவது பாடலில் நோன்பு முடிப்பதை கொண்டாட வெண்சங்கம், பறைகள், மங்கள விளக்கு, கொடி, விதானம் எனப்படும் மேல் கூறை விரிப்பு ஆகியவற்றை கேட்கிறார். பின்னர் 27ஆம் பாடலில் நோன்பின் சன்மானமாக சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பலவிதமான நகையலங்காரங்களும் புத்தாடைகளும் அணிந்து அக்காரவடிசல் எனப்படும் பால்சோறு உண்பார்களாம். அதுவும் எப்படி?, அந்த அக்காரவடிசல் தெரியாதவாறு நெய் மூ(டி)ழ்கியிருக்க, அதனை உண்கையில் அந்த நெய் முழங்கை வரை வழிய உண்பார்களாம். ஆக பாவை நோன்பினை எப்படி கொண்ட வேண்டுமென பாடி, கொண்டாடி காட்டியிருக்கிறாள் கோதை.

இவை தவிர பழங்காலத்தில் பெண்கள் கணவனின் ஆயுள் விருத்திக்காக பல நோன்புகள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றில் குறிப்பாக மார்கழி, தை, மாசி மாதங்களில் நடந்த நோன்புகளாவன; நித்திய சிருங்கார நோன்பு, பொம்மை நோன்பு, அட்லத்தி நோன்பு (தெலுங்கு பேசும் மக்கள் இன்றும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்), சிட்டிப் பொட்டு நோன்பு போன்றவை.

9 comments:

cheena (சீனா) said...

தஞ்சையில், சிறு வயதில், மார்கழி மாதக் காலைப் பனியில், கோவில்களுக்குச் சென்று, பக்திப் பஜனைப் பாடல்கள் பாடி, நெய் சொட்டச் சொட்ட, இளஞ்சூட்டில், பொங்கல் உண்டது இன்றும் நினைவில் பசுமையாக நிற்கிறது. இக்காலத்துச் சிறுவர்களுக்கு, நெய் சொட்டும் (உள்ளங்கையில் வாங்கினால், முழங்கையில் வடிய வேண்டும்) பொங்கல் கிடைக்க வழி இல்லையே!

பாவை நோன்பினைப் பற்றிய விளக்கமான பதிவு. அருமை. அருமை.

//ஒன்று நாட்டில் நல்ல மழை பொழிந்து செழிக்க வேண்டும் என்றும் இன்னொன்று நல்ல கணவனை அடைய வேண்டும் என்பது. (இப்போது தெரிகிறதா ஏன் தற்காலத்தில் பாவை நோன்பு இல்லை என்று?) //

தற்காலத்தில் நல்ல கணவன் தானாகக் கிடைப்பதினால் பாவை நோன்பு இல்லையெனக் கூறுகிறீர்களா அல்லது நல்ல கணவன் தேவை இல்லையென பெண்கள் பாவ நோன்பு இருப்பதில்லையா

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி சீனா சார்.

//தற்காலத்தில் நல்ல கணவன் தானாகக் கிடைப்பதினால் பாவை நோன்பு இல்லையெனக் கூறுகிறீர்களா அல்லது நல்ல கணவன் தேவை இல்லையென பெண்கள் பாவ நோன்பு இருப்பதில்லையா//

அவரவர் விருப்பதிற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம் :-)

Geetha Sambasivam said...

"பாவை நோன்பு" பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு மதுரை ப்ரோஜெக்டில் பார்க்கலாம். நிறையவே கிடைக்கும். பதிவுக்கும், நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி, நான் பள்ளியில் படிக்கும்போது, ராஜம்மாள் சுந்தரராஜனின் திருப்பாவை வகுப்பில் சேர்ந்து, ஒவ்வொரு வருஷமும் புதிய மாணவி லிஸ்ட்லேயே பேரைப் போட்டு, தானப்ப முதலி அக்ரஹாரம், கண் ஆஸ்பத்திரி/கல்யாண மஹாலில் திருப்பாவைப் பாட்டுக்களும், திருவெம்பாவை பாட்டுக்களும் கத்துக்கிட்டதும், அவங்க நடத்தற பஜனைக்குக் காலம்பரவே எழுந்து 3 மணிக்கே குளிச்சுட்டுப் போனதும், மாசி வீதிகளில் சுற்றிவிட்டு வந்து, பொங்கலும், சுண்டலும் வாங்கிச் சாப்பிட்டதும் ,அடா அடா, அந்தப் பொங்கலின் சுவைக்கு ஈடு, இணை ஏது? :(((((((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
பதிவு சூப்பர்...அம்பா ஆடல், காத்யாயினி விரதம், பாவை நோன்பு ன்னு வரிசைப்படுத்திச் சொல்லி இருக்கீங்க!
ஒட்டியாண பீட நிலையாயை-ன்னு வருமில்ல?

உயிர்களை இறைவனிடம் சேர்பிக்கும் போது கூடத் தனக்கு மட்டும்-னு சுயநலம் இல்லாமல், தோழிகளையும் ஆற்றுப்படுத்தி கூட்டிச் செல்றாங்க பாருங்க! அங்க தான் பாவை நோன்பு நிக்குது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒன்று நாட்டில் நல்ல மழை பொழிந்து செழிக்க வேண்டும் என்றும் இன்னொன்று நல்ல கணவனை அடைய வேண்டும் என்பது. (இப்போது தெரிகிறதா ஏன் தற்காலத்தில் பாவை நோன்பு இல்லை என்று?) //

அலோ...
நல்ல மனைவியை அடைய வேண்டும்-னு கணவன்கள் மட்டும் நோன்பு நோற்க மாட்டாங்களா?
தேடிப் பிடிச்சி சொல்லுங்க, எங்காச்சும் நோற்றுள்ளார்களா என்று! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க கீதாம்மா,

மதுரை பதிவுக்கு கொஞ்சம் மேட்டர் ஞாபகம் வந்துடுச்சு போல இருக்கே?.

மெளலி (மதுரையம்பதி) said...

//பதிவு சூப்பர்...அம்பா ஆடல், காத்யாயினி விரதம், பாவை நோன்பு ன்னு வரிசைப்படுத்திச் சொல்லி இருக்கீங்க!//

நன்றி கே.ஆர்.எஸ். எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள முயற்சிப்பதன் விளைவுதான். :-)

//நல்ல மனைவியை அடைய வேண்டும்-னு கணவன்கள் மட்டும் நோன்பு நோற்க மாட்டாங்களா//

இதற்கு நோன்பில்லை, ஆனா ஹோமம் இருக்கு. சுயம்வரா பார்வதி ஹோமம் அப்படின்னு. :)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க வேதாக்கா.....

கண்ணபிரானுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாத்தீங்கதானே?

குமரன் (Kumaran) said...

பாவை நோன்பின் தாத்பர்யத்தை நன்கு சொன்னீர்கள் மௌலி.

பரிபாடலில் வைகையில் நீராட்டத்தைப் பற்றிய குறிப்பு மட்டும் இல்லை; இரண்டு மூன்று முழுப்பாடல்களும் இருக்கின்றன. இலக்கியத்தில் இறை என்ற தொடரை எழுதுவதற்காக அண்மையில் பரிபாடலைப் படிக்கும் போது இவற்றையும் படித்தேன்.

கீதாம்மா, நீங்க சொல்ற ராஜம்மாள் சுந்தரராஜன் தான் நான் நினைக்கிறவங்களும்னு நினைக்கிறேன். அவங்களோட திருப்பாவை வகுப்பில் எங்க பெரியம்மா சேர்ந்திருந்தாங்க. வருடாவருடம் அவங்க ஏதாவது ஒரு சிறப்பு தெய்வீகப் படத்திற்கு வகுப்பில் இருப்பவர்களை எல்லாம் அழைத்துச் செல்வார்கள். அப்போது ஒவ்வொருவருக்கும் கூடுதலாக சில டிக்கட்டுகள் கிடைக்கும். பல வருடம் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் பெரியம்மா.