Friday, December 21, 2007

மார்கழி நீராட்டு....



பொழுது விடிவதற்கு முந்திய அதிகாலை நேரத்தை பிரும்ம முகூர்த்தம் என்றும் உஷத் காலம் என்றும் சொல்கிறோம். இந்த நேரத்தில் ஸ்நானம்/குளித்தல் என்பது ஆரோக்கியம் என்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்திற்கு பெயர் போன கேரளாவில் இன்றும் மக்கள் அதிகாலை நீராடுதலை கடைபிடிக்க காணலாம். விடியலில் நீராட்டுவது சித்தத்தை குளிர வைக்கும், சூடேறிய மூளைப் பகுதி குளிர்ச்சியடைந்தால், சிந்தனை மிக சுறுசுறுப்பாக நடைபெறும். நமது உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கிறது. இவை இரவும், பகலும் மலத்தை ஏற்படுத்துகிறது. இரவு உறக்கத்திற்கு பின் உடலை, அதிலிருக்கும் இந்த துவாரங்களைச் சுத்தம் செய்து கொள்ளுதலே இந்த ப்ராத ஸ்நானம். இதனை செய்கையில் அகமர்ஷண சூக்தம் என்னும் பிரார்த்தனை செய்து கொள்ள கூறுகிறார்கள். அகமர்ஷண - என்றால் பாவத்தை ஒழிக்கும் என்று பொருள். இவ்வாறாக உடல் தூய்மை மட்டுமின்றி உள்ளத் தூய்மைக்கும் வழிகாட்டியுள்ளனர் நம் பெரியோர்.



நீராடுதலில் தமிழ் மக்களுக்கு ஒரு விசேஷ விருப்பம் இருந்திருக்கிறது. நெடுங்காலமாக் நீராட்டத்தை தங்கள் இன்ப விளையாட்டுகளில் ஒன்றாக கருதி வந்திருக்கிறார்கள். புது நீராடல், காவிரி ஆடல், கடல் ஆடல் போன்றவை சங்க இலக்கியங்களில் இருப்பதன் மூலமாக அக்கால மக்கள் நீராட்டினை சிறப்பாக கொண்டாடியது தெரியவருகிறது. இக்காலத்தில் நமக்கு ஷெவர் தவிர ஏதும் தெரியாத நிலைக்கு வந்துவிட்டோம். நம்மில் பலருக்கு ஆறு/குளம் போன்றவற்றில் நீராட தெரிவதில்லை. நமக்கு அடுத்த தலைமுறைக்கு, கிணறு என்றாலே என்ன என்று தெரியாது என தொன்றுகிறது. பாவை நோன்பின் பகுதியாக நீராடலும் இருந்திருக்கிறது. இதனை திருவேம்பாவை எப்படிச் சொல்கிறது என்று பார்க்கலாம்.

குளத்தைக் கண்டதும் ஓசை எழும்படியாக தண்ணிரைக் கையால் அடித்துக் குடைந்து நீராட வேண்டும் என்ற ஆசை அப்பெண்களூக்கு ஏற்படுகிறது. மேலும் நீரில் குடைந்து நீராடும்போது இறைவனைக் குறித்து பாடுகிறார்கள். எந்த காரியம்/வேலை செய்தாலும் ஈசனை மனதில் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவ்வாறாக சொல்கிறார் மாணிக்க வாசகர். இவர்கள் புனல் பொங்க நீராடுகிறார்களாம்.


பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப கொங்கைகள்
பொங்க குடையும் புனல் பொங்க பங்கயப் பூம்புனல்
பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

இவர்கள் குதித்தபோது தண்ணீர் பொங்குகிறது. மேலும் ஒருத்தி " ஐயோ குளிருமே" என்கிறாள். இன்னொருத்தி 'எப்பெருமான் ஆடும் சிதம்பரத்தை நினைத்துக் கொண்டு நீரில் இறங்கிவிடு, குளிர் தெரியாது" என்கிறாள். "சீதப்புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி" சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானை வாயாரப் பாடி நீராடினால் குளிருமில்லை நடுக்கமும் இல்லை என்பது குறிப்பு.

தண்ணீரிலே ஒருவிதமாக அடிப்பதன் மூலமாக மிருதங்க சப்தம் போன்ற ஒலி எற்படச் செய்வார்களாம். இந்த அபூர்வகலை பற்றி மேலும் அறிய முய்ற்சிக்கிறேன். பாகவதத்தில் ராசலீலையில் இருப்பதாக தெரிகிறது. பார்க்க வேண்டும்.

இதே போல கோதையும் மார்கழி நீராட்டினை தனது பாவை நோன்பின் ஒரு பகுதியாக கொண்டு, "மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்" என்று மார்கழி நீராட்டுக்கு வேண்டுவனவாக சில பொருட்களை குறிப்பிடுகிறார்.

இந்த மார்கழி நீராட்டினை நினைவுபடுத்தும் விதமாக ஸ்ரீவில்லிப் புத்தூரில் கோதை நாச்சியாருக்கு தைலக் காப்பு உற்சவம் நடக்கிறது. இந்த விழாவினை " தண்டியல் சேவை" என்று கூறுகிறார்கள். திருமுக்குளத்தின் ஒருபகுதியில் நீராட்ட மண்டபம் என்றே ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தில் எழுந்தருளும் ஆண்டாள் ஒரு காலை ஊன்றிக் கொண்டும், மற்றொரு காலை தொங்கவிட்டுக் கொண்டும் நிறைந்த தலை முடியினை விரித்துக் கொண்டு இருப்பதும், அந்த முடிக்கு அர்ச்சகர்கள் நறுமணம் கமழும் தலத்தை தேய்த்துவிடும் அழகே அழகு. இது முடிந்தபின் குளக்கரையில் திருமஞ்சனம் நடக்கும். இவ்வாறாக மார்கழியில் இருதினங்களில் இது நடக்குமென தெரிகிறது.

7 comments:

jeevagv said...

மிக்க நன்றி.
திருப்பள்ளி எழுச்சி யூட்யூபில் இங்கே

cheena (சீனா) said...

அதிகாலை எழுந்தவுடன் குளியல் - பின்பு இறை வழிபாடு - ஆகா ஆகா

பெண்கள் குளங்களிலும் ஊரணிகளிலும் குளிக்கும் போது இறைவனை நினைத்துக் கொண்டே குளிப்பது அக்கால வழக்கம்.

பதிவு அருமையான எளிமயான ஒன்று - தொடர்க - வாழ்த்துகள்
.

குமரன் (Kumaran) said...

மௌலி. எத்தனை தகவல்கள் எத்தனை தகவல்கள். அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். ஒரு தகவலைப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் முன்பே அடுத்த தகவல் தாவி வருகிறது. சீதப்புனல் ஆடி சிற்றம்பலத்தைப் பாடியதைப் போல் தான் இருக்கிறது இந்த இடுகையைப் படித்த பின்னர்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க ஜீவா. திருப்பள்ளி எழுச்சி அருமை.

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் நன்றி சீனா சார். மார்கழி சிறப்பாக, இன்னும் 2-3 பதிவுகள் போடலாமென இருக்கிறேன். பார்க்கலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//சீதப்புனல் ஆடி சிற்றம்பலத்தைப் பாடியதைப் போல் தான் இருக்கிறது இந்த இடுகையைப் படித்த பின்னர்.//

அடடே, இந்த இடுகையிலிருந்தே அப்படி ஒரு உணர்வு வருதென்றால், நீங்க அவ்வளவு கனிந்து இருக்கீங்கன்னு அர்த்தம் குமரன்.

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி குமரன்.

Geetha Sambasivam said...

விட்டுப் போனதை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன், நல்லா இருக்கு, நன்றி.