Tuesday, December 11, 2007

மார்கழியின் மகிமை...








மாரி வேந்தனை வென்று பனியரசன் ஆட்சி ஆரம்பிப்பதை கட்டியங் கூறிக் கொண்டு வருகிறது மார்கழி. அவ்வரசனது வெற்றியினை கொண்டாடும் விதமாக கரும்பு செழிக்கிறது, அவரை முகை அவிழ்க்கிறது. மலர்கள் மட்டுமின்றி மக்கள் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது. எலும்பை உருக்கும் பனியிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது, இம்மாதத்தின் ஒவ்வொரு நாளையும் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.


முன்பெல்லாம் மார்கழி மாதமென்றால் விடியற்காலை மூன்று மணியிலிருந்தே சிறுமிகள் தெருவினை அடைத்து கோலம் போடவும், அதற்கு வண்ணந்தீட்டுவதும், மலரலங்காரம் செய்வதும். வாசலில் விளக்கு ஏற்றுவதுமாக இருப்பர். நாலு, நாலரை மணிக்கு இல்லத்திலிருக்கும் ஆண்கள், சிறுவர்கள் குளியல் முடித்து ஜப-தபங்களை செய்து பின் ஓரிடத்தில் கூடி ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தபடி வீதி வலம் வருவதும் தினம் நடக்கும்.



சந்திரனின் சுழற்சியினை கொண்டு சொல்லப்படும் சாந்திரமான பஞ்சாங்கத்தில் மார்க்க சீர்ஷம் என்றும், செளரமானத்தில் தனுர்மாதம் என்றும் இம்மாதம் வழங்கப்படுகிறது. சாந்திரமானத்தின்படி பார்த்தால் அமாவாசைக்கு அடுத்த நாளே மாதம் பிறந்துவிடுகிறது. (அப்பாடி தப்பித் தவறி யாராவது படித்து ஏன் இவ்வளவு சீக்கிரமா மார்கழி பதிவுன்னு கேட்டால் சொல்ல பதில் ரெடி). ஆன்மிக வழியில் செல்ல தலைமையான மாதம் (மார்க்க - வழி; சீர்ஷம் - தலைமையானது) இது. நமக்கு உத்தராயணம் என்று சொல்லப்படும் 6 மாதங்களும் தேவர்களுக்கு ஒரு பகல் என்றால் தக்ஷிணாயினத்தின் (இரவு) கடைசி மாதமான மார்கழி அவர்களுக்கு உஷத்/அருணோதய காலம் அல்லவா?. இந்த மாதத்தில் செய்யப்படும் பூஜை, ஜபம், பஜனை போன்றவற்றிற்கு இருமடங்கு பலன் என்று கூறப்படுகிறது.



இம்மாத திருவாதிரையன்று தான் வியாக்ர பாதருக்கும், பதஞ்சலிக்கும் சிவபெருமான் நடராஜ கோலத்தை அருளி இருக்கிறார். திருமால் கண் விழிக்கும் வைகுண்ட ஏகாதசி இந்த மாதம் தான். இராப்பத்து-பகற்பத்து உற்சவங்களும் இந்த மாதமே நடை பெறுகிறது. கீதையில் கிருஷ்ணன், தான் மாதங்களில் மார்கழியாக இருப்பதாக என சொல்லியிருக்கிறான். இராமாயணத்திலும் மார்கழி மாதச் சிறப்பு சொல்லப்படுகிறது. ராமன் காட்டிற்கு வந்து, பஞ்சவடியில் இருக்கும் காலத்தில் சரத் ருது முடிந்து ஹேமந்த ருது ஆரம்பிக்கிறது. ராமன், சீதை, லக்ஷ்மணனுடன் கோதாவரிக்கு நீராட செல்கிறான். அந்த சமயத்தில் லக்ஷ்மணன் ஹேமந்த ருதுவினையும், மார்கழி மாதத்தையும் புகழ்கிறான். இந்த வர்ணனையை ஆரம்பிக்கும் வால்மிகி 'பகவானான ஸ்ரீ ராமசந்திரனுக்கு மிக பிடித்த ஹேமந்த ருது வந்தது' என்கிறார்.



தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், இயற்பகை நாயனாரும், நந்தனாரும் அவதரித்த மாதம் இந்த மாதமே.


சாந்திரமான பஞ்சாங்கத்தின்படி பார்த்தால் இன்று மார்கழி 3ஆம் நாள். செளரமானத்தின்படி பார்த்தால் வரும் திங்கள் (17-12-2007) கிழமை மாதம் பிறக்கிறது.

18 comments:

pudugaithendral said...

அதனால் தான் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என்றான்.

jeevagv said...

கோலங்களுடன் பதிவு Down-to-Earth ஆக இருந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான மார்கழிப் பதிவு மெளலி!
தினம் ஒரு கோலம் போடப் போறீங்களா? :-)

மார்க்க+சீர்ஷம் விளக்கம் அருமை!
ஆன்மீகச் சிந்தனைகள் வளர்த்துக் கொள்ள ஏதுவான மாதம் என்பதால் தான் மார்கழி மாதம் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னார்கள்! ஆனா அதுவே மூட நம்பிக்கையால், மார்கழி நல்ல மாசம் இல்லைன்னு ஆயிடுச்சி!

கண்ணனே இந்த மாதமாகத் தானே இருக்கான்! அனுமனின் பிறந்த நாளும் மார்கழி தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்பாடி தப்பித் தவறி யாராவது படித்து ஏன் இவ்வளவு சீக்கிரமா மார்கழி பதிவுன்னு கேட்டால் சொல்ல பதில் ரெடி//

மாட்டிக்கிட்டீங்களா? :-)
கேள்வி!
மார்க்கசீருஷம்-னு மாசத்தைச் சொன்னீங்க சரி!
மார்க்கசீருஷம்-னு நட்சத்திரமும் இருக்கே!
விளக்கம் ப்ளீஸ்!

மேலும் தை, மாசி, பங்குனின்னு தமிழ் மாதங்கள் எல்லாம் சந்திரமானமா? இல்லை செளரமானமா? பெரியவங்க நீங்க சொன்னாப் பொடியனுங்க தெரிஞ்சிக்குவோம்! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பு.தென்றல், ஜீவா வருகைக்கு நன்றி.


@கே.ஆர்.எஸ்,

தினமும் ஒரு கோலம் போட நிறைய மக்கள் இருக்காங்க எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க கீதாம்மா/வல்லியம்மால்லாம் இருக்காங்க....அதனால் இன்றைக்கு மாட்டும் நான். ஹிஹி

//அனுமனின் பிறந்த நாளும் மார்கழி தான்!//

அட ஆமாம், எப்படி மறந்தேன்?. நன்றிங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

//தை, மாசி, பங்குனின்னு தமிழ் மாதங்கள் எல்லாம் சந்திரமானமா? இல்லை செளரமானமா? //


கே.ஆர்.எஸ்,

தை, மாசி எல்லாம் மாதங்களின் பெயர்கள் மட்டுமே. ஒரு மாதத்திலிருந்து அடுத மாதம் பிறக்கும் முறையினை சாந்தரமானம், செளரமானம் என்று இரு முறைகளில் கணக்கிடுகிறார்கள்.

சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு போவதை மாத பிறப்பென்று சொல்வது செளரமானம்.

அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த அமாவாசை வரை ஒரு மாசமாக கொள்வது சாந்தரமானம்.
தமிழ்நாடு, தென் கர்னாடகா, ஒரிசா, பஞ்சாப், வங்காளம் போன்ற பகுதிகளின் பஞ்சாங்கமுறை சூரியனை பேசிஸாக வைத்து சொல்வது. அதனால்தான் தமிழ் வருடபிறப்பன்றே இவர்களும் வருடபிறப்பினை கொண்டாடுவார்கள். (உ.ம் பைசாகி).

ஆந்திரா, வ்டகர்னாடகம், மத்ய/உத்ர பிரதேஷ், பீகார் எல்லாம் சாந்த்ரமானம்..உகாதி/வருடபிறப்பு கொண்டாடுவர்.

மெளலி (மதுரையம்பதி) said...

//பெரியவங்க நீங்க சொன்னாப் பொடியனுங்க தெரிஞ்சிக்குவோம்!//

யோவ் கே.ஆர்.எஸ், இந்த நக்கல்தானே வேண்டாங்கறது...நீங்களாய்யா பொடியன்?, பொடி வைக்கறவனய்யா நீங்க....ஒண்ணுமே தெரியாதமாதிரி கேள்வி கேட்டு, வாயிலிருந்து வார்த்தைய பிடுங்கிடுவீங்களே... :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//கேள்வி!
மார்க்கசீருஷம்-னு மாசத்தைச் சொன்னீங்க சரி!
மார்க்கசீருஷம்-னு நட்சத்திரமும் இருக்கே!
விளக்கம் ப்ளீஸ்!//

கேள்வி நோட்டட். விளக்கம் தேடி பின் அளிக்கப்படும்....ஹிஹி.

நம்ம சுப்பையா வாத்தியாரை கேட்டால் தெரியும். முயற்சிக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

நட்சத்திரம் மார்கசீர்ஷம் இல்லை...ம்ருகசீர்ஷம் என்று நினைக்கிறேன்...சரியா? கே ஆர் எஸ். ஹிஹிஹி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
நட்சத்திரம் மார்கசீர்ஷம் இல்லை...ம்ருகசீர்ஷம் என்று நினைக்கிறேன்...சரியா? கே ஆர் எஸ். ஹிஹிஹி//

மெளலி அண்ணா
சாந்திரமானம், செளரமானம் விளக்கங்களுக்கு நன்றி!
எளிமையாப் புரிய வச்சி இருக்கீங்க!
அதுக்குத் தான் அப்படி கேள்விய கேட்டேன்!

பொதுவா செளரமானம் (கதிர் வழி ஆண்டு) - இதில் அந்தந்த ராசிகளின் பெயர் மாதங்களுக்கு வரும்!
எ.கா
தனுர் மாதம் = மார்கழி,
மகர மாதம் = தை...

சந்திரமானத்தில் (மதி வழி ஆண்டு), அந்த மாதப் முழு நிலவு எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அதுவே மாதத்தின் பெயராக வரும்!
எ.கா
சித்திரை = சித்திரை
வைகாசி = விசாகம்
ஆனி = ஜ்யேஷ்டா
ஆடி = ஆஷாடம்
அதே போல...
மார்கழி = மார்க்கசீருஷம் (மிருகசீருஷம்)
மார்க்ழித் திங்கள் "மதி நிறைந்த" நன்னாளால்...என்று ஆண்டாளும் பாடுகிறாள்!

தி. ரா. ச.(T.R.C.) said...

அட மார்கழிலே இவ்வளவு விஷ்யமிருக்கா இல்லை மௌளி கிட்டே இவ்வளவு விஷ்யம் இருக்கா? என்னையும் சிஷ்யனா ஏத்துகனும்.

cheena (சீனா) said...

மார்கழித் திங்கள் பற்றித் தெரிந்து கொள்ள அருமையான பதிவு. மெளலியும் கேயாரெஸ்ஸும் சேர்ந்து கலக்குகின்றனர். கோலங்கள் கண்கொள்ளாக் காட்சி.

மெளலி (மதுரையம்பதி) said...

//பொதுவா செளரமானம் (கதிர் வழி ஆண்டு) - இதில் அந்தந்த ராசிகளின் பெயர் மாதங்களுக்கு வரும்!
எ.கா
தனுர் மாதம் = மார்கழி,
மகர மாதம் = தை...

சந்திரமானத்தில் (மதி வழி ஆண்டு), அந்த மாதப் முழு நிலவு எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அதுவே மாதத்தின் பெயராக வரும்!//

இத, இதத்தான் சொன்னேன்.

நன்றி கே.ஆர்.எஸ். அழகுத் தமிழில், அழகாக, மதி-வழி, கதிர்-வழின்னு சொன்னீங்க பாருங்க...ஆஹா...ஆஹா.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி டி.ஆர்.சி சார்.

//அட மார்கழிலே இவ்வளவு விஷ்யமிருக்கா இல்லை மௌளி கிட்டே இவ்வளவு விஷ்யம் இருக்கா? என்னையும் சிஷ்யனா ஏத்துகனும்//

ஏன்?, ஏன்? இந்த கொலவெறி உங்களுக்கு. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி சீனா சார்.

Geetha Sambasivam said...

எல்லாரும் வந்து கலக்கிட்டுப் போனப்புறம் நான் மட்டும் வந்து என்ன கோலமா போடப் போறேன்? அதையும் மெளலியே போட்டுடுவார், இல்லைனா யார் விட்டாங்க? :P

குமரன் (Kumaran) said...

Down to Earthன்னு ஜீவா சொன்னது சரி தான் மௌலி. அருமையா தெளிவா எளிமையா சொல்லியிருக்கீங்க.

சந்திரமானம், சூரியமானம் எல்லாம் சரியான விளக்கம் தான். நீங்க சொன்னது, இரவிசங்கர் சொன்னது இரண்டிலும் இன்னொரு விளக்கம் சொல்லணும். சூரிய - சந்திரமானம்ன்னு மூன்றாவதா ஒரு முறை இருக்கு. தமிழ் மாதங்கள் சூரிய - சந்திர மானத்தின் படி என்று நினைக்கிறேன்.

இராம.கி. ஐயாவும் குமரிமைந்தனும் இவற்றைப் பற்றி எழுதிப் படித்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வருகைக்கு நன்றி குமரன். புதிதாக ஒரு தகவல் சொல்லியிருக்கிறீங்க. நான் இராமகி அய்யா பதிவுகளை தேடிப் பார்க்கிறேன்.