Tuesday, March 6, 2012

மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்....


மாசி மாதம் பல விசேஷங்கள் வருகிறது, இவற்றில் சில நமக்கெல்லாம் தெரிந்த சிவ-ராத்ரி,  மற்ற  சில விசேஷங்கள் நம்மில் பலருக்கும் தெரியாதது. இவ்வாறாக இன்று வழக்கில் (அவ்வளவாக) இல்லாத சில விஷயங்களை கோடிட்டுக் காட்டுவதாக நினைத்து இதை எழுதுகிறேன். 

மாக மாத சுக்ல சதுர்த்தி (வளர்பிறை) “குந்த சதுர்த்தி என்று வழங்கப்படுகிறது. இந்த நாளில் பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் குந்த (மல்லிகை) புஷ்பத்தால் சதாசிவனை அர்சித்துப் பூஜை செய்வது குறைவற்ற செல்வம் மற்றும் நிறைவான வாழ்வுக்கு அடிக்கோலும் என்று கூறுகிறார்கள். இதன் அடுத்த நாளான பஞ்சமி தினமானது “வஸந்த பஞ்சமீ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மஹாவிஷ்ணுவை லக்ஷ்மியுடன் சேர்த்துப் பூஜிப்பதும், நாம சங்கீர்த்தனம் போன்றவை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த வழிபாட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், தம்பதியிடத்து அன்யோன்யமும் ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த இரு விசேஷங்களும் சாந்திரமான மாசி மாதத்தை அடிப்படையாக்க் கொள்ளாது, தைமாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி மற்றும் பஞ்சமீ திதிகளைக் கொண்டு அமைகிறது என்பது கவனிக்கத்தக்கது. 


   

சாதாரணமாக ஏகாதசி விரதம் என்பது மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவசியம் என்று கூறுகிறது புராணங்கள். அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரு ஏகாதசிகளும் சிறப்பானவை. மாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘ஜயா ஏகாதசி என்று பெயர். இந்திரன் சபையில் நடனமாடும் காந்தர்வர்கள் தவறாக நடனமாடியதால் சாபம் பெற்று, பின்னர் இந்த ஏகாதசி விரத்த்தின் மூலமாக விமோசனம் பெற்றதாகச் சொல்கிறார்கள். இந்த ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் செயல்படும் கார்யம் யாவும் ஜெயம் என்கிறார்கள். காவிரிக்கரையில் உள்ள திரு-ஈங்கோய் மலைக்குச் சென்று அங்கு அருள் பாலிக்கும் மரகதேஸ்வரர் மற்றும் அகஸ்தியர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ர பீடத்தை தரிசிப்பது பல பாவங்களையும் போக்கக்கூடியதாகச் சொல்கிறார்கள். 

மாசி மாத த்தில் வரும் கிருஷ்ண பக்ஷ (தேய்பிறை) ஏகாதசிக்கு ‘ஷட்திலா ஏகாதசி என்று பெயர். இந்த நாளில் எள்ளை அரைத்துப் பூசிக் குளிப்பது, எள்ளை தானமாக அளிப்பது, எள்ளை திரவியமாகக் கொண்டு ஹோமம் செய்வது, எள் மற்றும் நீர் தானமாக அளிப்பது, எள் கலந்த உணவினை உண்பது என்பதாக எள்ளை வைத்து ஆறுவிதமான செயல்களைச் செய்வதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். தெளலப்யர் என்னும் மஹரிஷியின் சிஷ்யர் ‘பசுவைக் கொன்றவர்கள், பிறன் பொருட்களை அபகரித்தவர்கள் போன்றோருக்கு பிராயச்சித்தம் என்ன என்று கேட்ட சமயத்தில், தெளலப்யர் இந்த விரதம் குறித்துச் சொன்னதாகத் தெரிகிறது.
ஈஸ்வரனின் சாபம் பெற்ற அம்பிகை, ஒரு மாசி மகத்தில் பூமியில், காளிந்தி நதிக்கரையில், தக்ஷனின் மகளாக  அவதரித்த்தாகச் சொல்லப்படுகிறது. மாசி மகம் என்பது “ஸ்ரீ லலிதா ஜெயந்தி என்று அழைக்கப்படும் அளவிற்கு சாக்தத்தில் சிறப்பான தினமாகச் சொல்லப்படுகிறது. மாக மாசம் என்று சொல்லப்படும் மாசி மாத பெளர்ணமி தினத்தன்று மாலையில் ஸ்ரீ லலிதையின் அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே எல்லா பெளர்ணமி தினங்களிலும் செய்யப்படும் ஆவரண பூஜைகள் இந்த் மாசி மாத பெளர்ணமியன்று மாலை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.

இந்த மாசி மாத பெளர்ணமி தினமே ஹோலிப் பண்டிகை என்று வடநாட்டில் கொண்டாடப்படுவதாம். இந்த ஹோலிப் பண்டிகையானது கண்ணுக்குத் தெரியாத ராக்ஷசர்களிடத்திருந்து குழந்தைகளைக் காப்பதற்காக என்று பவிஷ்யோத்தர புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.மாசிமாத ஞாயிற்றுக் கிழமையில் அமாவாசை, திருவோணம் வருமானால் அந்த தினம் மிகச் சிறப்பானதாக ‘அர்த்தோதயம் என்று சொல்லப்படுகிறது. இதுவே ஞாயிறுக்கு பதிலாக திங்கள் வருமாயின் ‘மகோதயம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த தின்ங்களில் செய்யும் கர்மாக்கள் மிகுந்த விசேஷம் என்கிறார்கள் பெரியோர். மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் பிதுர் தர்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்குமாம்.

மாக ஸ்நானம் என்பது மிகுந்த நற்பலன்களை அளிக்க்க் கூடியது என்று கூறியிருக்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த தினத்தில் இருந்து,  பிரம்ம முஹூர்த்த காலத்தில் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்தவதற்கு என்று ஸ்லோகம் செய்து கொடுத்திருக்கிறார்கள் பெரியோர். பலகாலம் விசேஷ தீர்த்தங்களில் நீராடிய பலனை மாக ஸ்நானம் அளித்துவிடுவதாகப் புராணங்கள் கூறுகின்றன. தேவேந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்ராவில் நீராடி, சிவ பூஜை செய்து,  சாப விமோசனம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” 

என்று சம்பந்தர் கூறுவதன் மூலமாக மாசியில் கடலாடுவதன் சிறப்பும், கபாலி கோவிலில் மாசி மாதச் சிறப்பு உற்சவம் பற்றியும் தெரிகிறது.

இந்த மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி (மஹா அஷ்டகை) பித்ருக்களது ஆசிகளை நமக்கு கொடுக்கும் என்று தெரிகிறது. 

காரடையான் நோன்பு / மாசி-பங்குனி நோன்பு என்பதும் இந்த மாதத்தின் கடைசியில், பங்குனி வருவதற்கு சில நாழிகைகள் முன்னறாக மாசியிலேயே நூற்க்கும் நோன்புதான். 

இப்படியான சிறப்புக்கள் அதிகம் கொண்ட மாசியில் ஈசனை வழிபட்டு எல்லா நலங்களும் பெற்றிடுவோமாக. 

13 comments:

Geetha Sambasivam said...

மாசி மாசம் வேறே மாக மாசம் வேறே இல்லையோ. ஒரு இடத்தில் மாசினு சொல்லி இருக்கீங்க. இன்னொரு இடத்தில் மாக மாசம்னு சொல்லி இருக்கீங்க. மாக மாசம் முன்னாடியே வந்துடுமே. மாசி தமிழிலே சொல்றது அதுக்கு அப்புறமாத் தானே வரும்?

மற்றபடி குந்த சதுர்த்தி பற்றிக் கேட்டதில்லை. தகவல்களை அளிக்கும் பதிவுக்கு நன்றி.

Vasudevan Tirumurti said...

அருமையான பதிவு மௌலி! கொஞ்சம் முன்னால வந்திருக்கலாம்!

மெளலி (மதுரையம்பதி) said...

கீதா மாமி, சாந்திரமான பஞ்சாங்கத்தின்படி மாக மாசம் என்பது தை அமாவாசையிலிருந்து ஆரம்பித்துவிடும்....நமது (தமிழ்) பஞ்சாங்கம் சூர்யனை அடிப்படையாகக் கொண்டதால் மாசி வேறுபடுகிறது. எந்த விரதம்/உற்சவம் மாக மாசத்தால் வருகிறதோ அவ்விடத்தில் மாகம் என்றும் மாசி (மகம், சாவித்ரி நோன்பு போன்றவை) குறித்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க திவாண்ணா.....மாசி ஆரம்பிக்கும் முன்னர் எழுதாரம்பித்தது...முடியும் முன்னராவது போட்டுடணும் என்று இப்போது முடித்து பதிவிட்டேன் :-)

sury said...

//அருமையான பதிவு மௌலி! கொஞ்சம் முன்னால வந்திருக்கலாம்!//


பாதி படித்துக்கொண்டிருக்கும்போதே நானும் இப்படித்தான் நினைத்தேன்.

Better Late than never, though.

சுப்பு ரத்தினம்.

குமரன் (Kumaran) said...

இன்னும் பல முறை மாக/மாசி மாதங்களை ஈசன் அருளால் பார்க்கப் போகிறோம் என்பதால் தாமதித்து வந்ததும் சரி தான். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

வாங்க சூரி சார்....லேட் தான்....:-)

மெளலி (மதுரையம்பதி) said...

//இன்னும் பல முறை மாக/மாசி மாதங்களை ஈசன் அருளால் பார்க்கப் போகிறோம் என்பதால் தாமதித்து வந்ததும் சரி தான். :-)//

வாங்க குமரன், நீங்க கூறியதும் ஈசன் அருளில் நடக்கக்கூடியதுதான். :-)

Geetha Sambasivam said...

என்னவோ போங்க, கூகிளார் ஃபாலோ அப் ஆப்ஷனை எடுத்துட்டதாலே வந்து வந்து பார்க்க வேண்டி இருக்கு. :(((((கமென்ட் பப்ளிஷ் ஆனதே தெரியலை. :(((((

Vasudevan Tirumurti said...

மௌலி, மாசி செவ்வாய் கிழமையே விசேஷம் ன்னு சொல்லறாங்களே? ஏதும் தெரியுமா?

Vasudevan Tirumurti said...

என்னவோ போங்க, கூகிளார் ஃபாலோ அப் ஆப்ஷனை எடுத்துட்டதாலே //
அட, ஆமால்லே! இப்பதான் பாக்கிறேன்!

மதுரையம்பதி said...

ஆமாம் திவாண்ணா....மாசி செவ்வாய் மெளன விரதம் இருப்பார்கள். எனது பிதாமஹி இருப்பதை கவனித்திருக்கிறேன்....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...