Wednesday, January 4, 2012

2012 வைகுண்ட ஏகாதசி: திருவதிகை சர நாராயணப் பெருமாள் தரிசனம்....

ஒருவாரகாலம் கடலூர் மாவட்ட்த்தில் தங்கி அக்கம் பக்கம் கோவில்களுக்குச் செல்வதென முடிவாகி, உடன் செயல்வடிவம் பெற்றது கடந்த வாரம். பல இடங்களுக்கும் சென்றோம். முதலாவதாக திருவதிகை பற்றி சில இடுகைகள் எழுத முயல்கிறேன்.


*********************

சாதாரணமாக வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் சென்று பெருமாள் தரிசனம் செய்வது விசேஷம் என்றாலும் இயலாதவர்கள் அருகிலிருக்கும் பெருமாள் கோவில்களுக்குச் செல்வது வழக்கம். இந்த வைகுண்ட ஏகாதசி விசேஷமாக திருவதிகையில் வீற்றிருந்து நமக்கெல்லாம் வசந்தத்தை அள்ளி அருளும் சரநாராயணப் பெருமாளை தரிசிக்கலாம் வாருங்கள்.

ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

 கடலூர் – பண்ரூட்டி சாலையில் பண்ரூட்டிக்கு சில கிலோமீட்டர் முன்பாக இருக்கும் சிறு ஊர் திருவதிகை. இங்கு பெருமாள் கோவில்கள் மூன்றும், சிவன் கோவில் ஒன்றும் இருக்கிறது. சிவன் கோவில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவில், இது பற்றித் தனியாக வேறு ஒரு இடுகையில் காண்போம்.


ஈசனின் வீரம் விளங்கும் தலங்களை வீராட்டனம் என்று அழைக்கின்றனர். அஷ்ட வீராட்டன தலங்கள் என்று எட்டுதலங்களைச் சொல்வர். அந்த தலங்களில் திருவதிகையும் ஒன்று. இங்கே ஈசன் முப்புரங்களை எரித்ததாகச் சொல்லப்படுகிறது. இது தவிர தாருக வதத்தின் போது ஈசனுக்கு உதவியாக எல்லா தேவர்களும் வருகின்றனர். பரமனது தேர் சக்கரமாக சூர்ய-சந்திரர்களும், ப்ரம்மா சாரதியாகவும், பெருமாள் ஈசன் தொடுக்கும் சரமாகவும் இருந்த்தாகச் சொல்லப்படுகிறது.
 


இவ்வாறு சரமாக/அம்பாக இருந்த காரணத்தால் இங்கிருக்கும் பெருமாளது திருநாம்ம் சர நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவியுடன் திருமணக் கோலத்தில் மூலஸ்தானத்தில் அருள்கிறார். மூலவர் அருகிலேயே மார்கண்டேய மகரிஷியும் காக்ஷி கொடுக்கிறார். இங்கு தனிச்சன்னதியில் அருளும் தேவியின் திருநாமம் ஹேமாம்புஜவல்லித் தாயார். ஹேமாம்புஜ வல்லியார் மார்க்கண்டேயரது மகள், பெருமாளுக்கே தனது பெண்ணை தாரைவார்த்துக் கொடுத்து, அவர்களது கல்யாணக் கோலத்தைக் கண்டுகளிக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற போது பகல் பத்து முடிந்து பட்டர் விச்ராந்தியாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் ஏதுமில்லை. திருமங்கையாழ்வார் அலங்காரம் கலைத்து எதாஸ்தானத்திற்கு ஏளப்பண்ணிக் கொண்டிருந்தார் பட்டரின் உதவியாளர்.

நாங்கள் உள்ளே நுழைந்த்தும் பட்டர் வந்து தரிசனம் செய்து வைத்து பெருமாள் சரமாக வந்துதவிய வரலாற்றைக் கூறினார். பெருமாள் தரிசனம் முடிந்து தாயார் சன்னதிக்குத் திரும்புகையில் அவரே எங்களை அழைத்து, தாயார் சன்னதிக்குச் செல்லும் முன்னர் இந்தக் கோவில் சிறப்பினை காணவேண்டாமா என்று கேட்டவாறு இன்னொரு சன்னதிக்கு அழைத்தார்.

பெருமாள் சன்னதிக்கு வலது புறத்தில் கதவுகள் மூடியவாறு இருந்த அந்த சன்னதியைத் திறந்து விளக்குகளை ஏற்றிக் கொண்டே எங்களிடத்தே பின்வரும் கேள்வியும் கேட்டார். “மாரி மழை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்று வரும் திருப்பாவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். எனது சகோதரி, உடனடியாக அந்தப் பாசுரத்தை பாட/சொல்லத் தொடங்கிவிட்டார். இந்தப் பாசுரத்தில் “மன்னிக் கிடந்துறங்கும் சிங்கம்  இங்கே இருக்கிறார் பாருங்கள். இவரைத்தான் கோதை திருப்பாவையில் சொல்லியிருக்கிறார் என்று கூறி அங்கிருந்த சயன கோலத்தைக் காண்பித்தார். அப்போதுதான் கவனித்தோம் அங்கே சயனித்திருப்பவர் நமது சிங்கமுகப் பெருமாள் என்று.  4-5 அடிகளுக்குள்ளான நீளத்தில் சிங்கப் பெருமாள் சயனத்தில் இருக்கிறார், அருகில் தேவியும் இருக்கிறார்.பார்கடலில், ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பெருமாளை ஸ்ரீரங்கம் முதலான பல திவ்யதேசங்களில் தரிசித்திருக்கிறோம். ஆனால் நமது நரசிம்ஹன் இங்கு மோகனமாக பள்ளி கொண்டிருப்பது இங்கு மட்டுமேயான விசேஷம் என்று கூறினார். அழகு என்றால் அது அந்த அர்ச்சாவதாரம்தான். என்னையாட்கொண்ட எம்பெருமான் என்று நான் இப்போதும் நினைக்கும்படியான திவ்ய கோலம். திகட்டா தீங்கரும்பு இவர். அந்த சன்னதியை விட்டு அகல மனமில்லை. ஆனால் பட்டர் தாயார் சன்னதிக்கு அழைத்த்தால் அவரை விட்டு அடுத்த சன்னதிக்குச் சென்றோம்.


ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட்து, பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் நிவந்தங்களும் புனருத்தாரணமும் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வூரிலேயே இன்னொரு சயனப் பெருமாளும் இருக்கிறார். இக்கோவில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டியது என்று கூறினார் அங்கிருக்கும் பட்டர்.

இந்த இரு பெருமாள் கோவில்கள் தவிர ஒரு வரதராஜர் கோவிலும் இருப்பதாகத் தெரிகிறது. தேமேன்னு கோவிலுக்கு வந்த எங்களை காற்றும், மழையுமாய் “தானேவந்ததால் அந்தக் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை.  

இப்பதிவைப் படிக்கும் அன்பர்கள் என்றேனும் ஒருநாள் இந்தக் கோவிலுக்குச் செல்ல சங்கல்பித்துக் கொள்ளுங்கள், அவனருளால் செல்லும் பாக்கியம் கிட்டும். அந்த மோகன ரூப நரசிம்ஹனை கண்ணாரக் காணுங்கள்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்!

கோவிந்தா! கோவிந்தா!

 
                                                                     
                                        அடுத்து திருவாதிரைச் சிறப்பாக "வீராட்டனேஸ்வரர்"

14 comments:

மதுரையம்பதி said...

படங்கள் கூகிளார் உபயம்: முதலில் வலையேற்றிய நண்பர்களுக்கு நன்றிகள்

Vasudevan Tirumurti said...

திருவதிகையை நிறைய பேருக்குத் தெரியவில்லை. பண்ணுருட்டிக்கு பைபாஸில் போய் விடுவதால்...
நல்ல பதிவு!

ஷைலஜா said...

அருமை மௌலி உஙக்ளைப்பார்த்தாவது புண்ணியத்தை சம்பாதிச்சிக்கிறேன்...திருவதிகை செல்ல ஆசை வந்துவிட்டது இரு அண்ணல்களூம் என் ஆவலைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

மதுரையம்பதி said...

வாங்க திவாண்ணா....உங்க ஊருக்கு திடீரென வந்து உங்களைத் திகைக்க வைக்க இருந்தேன்.....தானே வந்து கவுத்துடுத்து. :)

மதுரையம்பதி said...

வாங்க ஷைல்ஸக்கா.....அந்த சன்னதியில் இருக்கையில் உங்களது நினைவும், உங்கள் வெல்லத்தம்பி மற்றும் ராகவன் நினைவும் வந்ததென்பயும் இங்கே சொல்லிக்கறேன். :)

கீதா சாம்பசிவம் said...

மன்னிக்கிடந்துறங்கும் சிங்கத்தை ஒருநாள் தரிசிக்கணும். நன்றி இடுகைக்கு. ஏற்கெனவே அட்டவீரட்டானங்கள் குறித்து எழுதியதால் திருவதிகை போகணும்னு ஒரு எண்ணம் இருக்கு. இப்போ இந்தச் சிங்கத்தையும் தரிசிக்க ஆவல். பார்க்கலாம்.

தக்குடு said...

கடலூர் பக்கத்துல உள்ள கோவில்னா தாராளமா போய் தரிசனம் பண்ணிட்டு வரலாம். அங்க நமக்கு ஒரு பால்ய ஸ்னேகிதர் இருக்கார் :) தூங்கிண்டு இருக்கும் சிங்கத்தை உங்க மூலமா தரிசனம் பண்ண முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்.

கீதா சாம்பசிவம் said...

ஓட்டுப் போடுங்கப்பா! எல்லாரும்!
எங்கள் ப்ளாக் கின் இடப்பக்க மூலையில் இருக்கும் ஓட்டுப்பெட்டியிலே போய் எல்லாரும் உங்க வாக்குகளை எனக்கே, எனக்கு மட்டுமே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒருத்தர் எத்தனை ஓட்டு வேணாப் போடலாம்னு சொன்ன எங்கள் ப்ளாக் என்னை ஒரு ஓட்டுக்கு மேல்(ஹிஹிஹி, எனக்குத்தான் அந்த ஒரு ஓட்டையும் போட்டேன், இன்னொரு ஓட்டும்போட்டுக்கலாம்னு பார்த்தா விடலை, அல்பம்)போட அனுமதிக்கவில்லை. இந்தப் பாரபட்சத்தை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன்.

வோட் ஃபார் எனக்கே!

சீக்கிரமாப் போய் வரிசையிலே நின்னு ஓட்டுப் போடுங்க!

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கீதாம்மா....கண்டிப்பா திருவதிகை போயிட்டு வாங்க....பக்கத்தில தான் கடலூர் :)

ஓட்டும் போட்டுட்டேன்னு சொல்லிக்கறேன் :)

மதுரையம்பதி said...

வாங்கோ தக்குடு....ஒங்களுக்கு அவர் பால்ய சினேகிதர்ன்னா அப்பறம் எனக்கு என்ன? :)

கவிநயா said...

கடலூர் பக்கத்திலா? நான் போனதே இல்லை :( உங்க தயவில் கிடைச்ச 'மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கத்தின்' அரிய தரிசனத்துக்கு மிக நன்றி.

மதுரையம்பதி said...

வருகைக்கு நன்றி கவிக்கா....அடுத்த இந்தியப் பயணத்தின் போது செல்ல முயற்சியுங்கள். :)

குமரன் (Kumaran) said...

எங்கள் கோத்திரம் மார்கண்டேய கோத்திரம். மார்கண்டேய மகரிஷி தனது திருமகளைப் பெருமாளுக்கு மணமுடித்து வைத்தார் என்று தெரியும். திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோவில்) தலபுராணமும் அது தான். அங்கும் பெருமாளின் இடப்பக்கத்தில் மார்கண்டேய மகரிஷி இருப்பார். இங்கும் அந்த தலபுராணம் இருப்பதை அறிந்து வியந்து கொண்டே வந்தேன். பார்த்தால் இன்னும் பெரிய வியப்பு இந்த மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கப்பெருமாள். மிக்க நன்றி மௌலி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி எத்தனை இனிமையான தகவல்.
உறங்கும் சிங்கத்தை நான் கண்டதே இல்லை.
அழகான் படம். பக்திப் பிரவாகம் உங்களிடம் அதிகமாய் இருப்பதால்தான் இத்தனை அபூர்வ தரிசங்கள் கிடைக்கின்றன. மிக மிக நன்றிம்மா.