
பக்தர்களுக்கு இறைவனிடத்தில் ப்ரீதி என்பதே ஆத்மானுபவத்தின் முதல்படி என்கிறார்கள் பெரியோர். இதைச் சொல்லுகையில், கோபிகைகளின் பக்தி பற்றிய ஒரு ஸ்லோகம் சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது. அந்த ஸ்லோகம்,
விரேது காமாசில கோபபாலா
முராரி பாதார்பித சித்த வ்ருத்தி:
தத்யாதிகம் மோக வசாதவோசது
கோவிந்த தாமோதர மாதவேதி.
கோபிகைகள் தங்கள் தலையில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றினைச் சுமந்து கொண்டு சென்று வியாபாரம் செய்வார்களாம். அப்போது அவர்கள் தங்களிடத்து இருக்கும் பொருட்களின் பெயர்களைக் கூவி விற்பதை விட்டுவிட்டு, "கோவிந்த, தாமோதர, மாதவ" என்று கூறிக்கொண்டு சென்றார்களாம். அதாவது தாம் செய்ய வேண்டிய வியாபாரத்தில் அவர்களது நாட்டம் இல்லை என்று பொருளல்ல. ஆனால் அவர்களையும் மீறி அவர்களிடத்தான க்ருஷ்ணனிடத்தான ப்ரேமை, பக்தி அவர்களை வியாபாரம் செய்யும் பொருட்களை விடுத்து கடவுள் பெயரைச் சொல்லுவதில் செலுத்தியிருக்கிறது. அன்றாட கார்யங்கள் அனைத்திலும் பரம்பொருளது நினைவும், செயலும் இருப்பது என்பது இது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இவ்வகையான நிலையை எய்தவே கர்மானுஷ்டானங்கள், ஜப-ஹோமங்கள், பூஜைகள் எல்லாம் என்பதை நாமெல்லாம் உணரவேண்டும்.
"பத்ரம் புஷ்பம், பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி", பக்தன் மிகுந்த பக்தி-சிரத்தையுடன் ஒரு சிறு இலை, பூ, பழம் போன்றவற்றைத் தந்தாலும் அதை நான் ஸ்வீகரிப்பேன் என்கிறான். நமது பக்தி, வழிபாடு போன்றவை இவ்வாறாக இருக்கிறதா என்பதை நாம் அவ்வப்போது சோதித்துக் கொள்ள வேண்டும். டாம்பீகமான பூஜைகளும், ஹோமங்களும் நமக்காக என்று இல்லாது லோகஷேமார்த்தமாக, ஈஸ்வரார்த்தமாக இருக்குமானால் அவற்றை பகவான் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் நன்மை செய்வான், ஆத்மானுபவமும் கிட்டும்.
ஆதி சங்கரரது பால்யத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுக்கு வருகிறது. சிறுவயதில் தந்தை பூஜித்து வந்த பகவதி அம்மனுக்கு ஆசார்யார் ஒருமுறை பால் சமர்ப்பித்துப் ப்ரார்த்தனை செய்கிறார். அப்போது அம்பிகை அந்தப் பாலை ஸ்வீகரிக்கவில்லை. இதனால் ஆசார்யாளது மனது க்லேசம் அடைகிறது, அழவும் தொடங்கிவிடுகிறார். இது கண்ட பகவதி அவளுக்கேயான மாத்ரு வாத்ஸல்யத்துடன் பாலை ஸ்வீகரித்துக் கொள்ளுகிறாள். அம்பிகைக்குத் தான் செய்த நிவேதனத்தை அவள் ஏற்க வேண்டும் என்பது மட்டுமே அந்த சங்கரக் குழந்தையின் எதிர்பார்ப்பு. இந்த சந்தவேசத்தில் அவருடைய பக்தி மற்றும் சிரத்தை மட்டுமே இருக்கிறது. மேற் சொன்ன இரண்டு உதாரணங்கள் பிரதிபலனற்ற [அவ்யாஜ] பக்திக்கு உதாரணம்.
எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து,எத்தனையோ கர்மாக்களைச் செய்து,அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்வதும்,ஸத் வாஸனைகளைப் பெருக்கிக்கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும், துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் 'வெறும்' சடங்கு என்று சொல்கிற கர்மாகள், பூஜை எல்லாம் நமக்குரொம்பவும் அவசியமானவையே" என்கிறார் பரமாசார்யார்.
எத்தனையோ ஜன்மாக்கள் எடுத்து,எத்தனையோ கர்மாக்களைச் செய்து,அத்தனை பூர்வ வாசனைகளாலும் நாம் உண்மை ஸ்வரூபமான ஆத்மானந்தத்தை மூடிக் கொண்டிருக்கிறோம். ஸத்கருமம் செய்வதும்,ஸத் வாஸனைகளைப் பெருக்கிக்கொண்டும்தான் பழைய துஷ்கர்மங்களையும், துர்வாஸனைகளையும் போக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு கர்மா தானே நின்று போகும். ஆத்ம விசாரத்தில் இறங்கலாம். அதுவரையில் 'வெறும்' சடங்கு என்று சொல்கிற கர்மாகள், பூஜை எல்லாம் நமக்குரொம்பவும் அவசியமானவையே" என்கிறார் பரமாசார்யார்.
ஆகவே நான் இந்த பூஜை செய்கிறேன், இந்த ஜபம் செய்கிறேன், இத்தனை கோவில்களுக்குச் சென்றிருக்கிறேன். இவ்வளவு கோவில்களுக்குச் செய்திருக்கிறேன் என்று எண்ணவும் செய்யாது அனுஷ்டானங்களை, பக்தியைச் செய்யத் தலைப்படுவோம்.