Thursday, August 5, 2010

க்ஷராக்ஷராத்மிகா, க்ஷோபிணீ , ஸூக்ஷ்மரூபிணீ



அம்பிகை நிறை குறைகளற்றவள் என்பதை க்ஷயவ்ருத்தி வினிர்முக்தா என்ற நாமத்தின் மூலமாகப் பார்த்தோம். இதைப் போலவே இன்னொரு நாமம், "க்ஷயவினிர்முக்தா". க்ஷயம் என்றால் க்ருஹம்/இல்லம் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதாவது க்ருஹஸ்த ஆச்ரமத்தில் இருக்கும் உபாசகர்களுக்கும் அன்னை முக்தியை அளிப்பவள் என்பது இதன் பொருள். முமுக்ஷுக்கள் இல்லறத்தை விட்டு விலகியிருந்து முக்தியை அடைகிறார்களென்றால், இல்லறத்தில் இருப்பவ்ர்களுக்கும் அம்பிகை முக்தியை அருள்கிறாள் என்று அவளது உபாசனா மார்க்கத்துப் பலனைச் சொல்கிறது இந்த நாமம். பாஸ்கரர் தமது சிவஸ்துதியிலும், துர்வாசர் செய்த தேவி மஹிம்ந-ஸ்தவத்திலும் இவ்வாறான செய்தியைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

சர்வலோகங்களிலும் இருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவில்லாத பொருட்கள் எல்லாவற்றின் ஸ்வரூபமாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதே "க்ஷராக்ஷராத்மிகா". அழிவுக்கு உட்படும் எல்லாவற்றையும் க்ஷரம் என்றும் பரப்ரம்ஹத்தை அக்ஷரம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி க்ஷரம், அக்ஷரம் ஆகிய எல்லாவற்றுக்கும் ஆத்மிகாவாக இருப்பவள் அம்பிகை. இது போன்ற நாமம் ஒன்று ஸ்ரீலலிதா த்ரிசதியிலும் இருக்கிறது. அந்த நாமம், "ஏகானேகாக்ஷராக்ருதி:" என்பது. எண்ணிக்கையற்ற அக்ஷரங்களை ஸ்வரூபமாக உடையவள் என்று சொல்லலாம். இதே பொருள் விஷ்ணு புராணம் மற்றும், கீதையிலும் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

இப்படி அழிவுள்ள, அழிவற்ற சகலமுமாக இருக்கும் அம்பிகையே ஜகத் சிருஷ்டி நடக்க வேண்டிய காலத்தில் பரப்ராம்ஹமான ஈச்வரனுடைய மனதில் க்ஷோபத்தை (ஒரு வித உணர்ச்சியை) உருவாக்குகிறாளாம். இவ்வாறு க்ஷோபத்தை உருவாக்குவதால் அவளுக்கு "க்ஷோபிணீ" என்ற நாமத்தால் வணங்குகிறார்கள் வாக்தேவிகள். ப்ரக்ருதி ரூபமான அம்பாள் சிருஷ்டி செய்ய வேண்டிய நேரத்தில் ஒருவித உணர்வை ப்ரம்ஹத்திற்கு உருவாக்கி சிருஷ்டி நடக்கச் செய்கிறாள் என்பது இங்கு சொல்லப்படுகிறது. ப்ரம்ஹம் நிச்சலனமானது, சக்தியில்லையேல் சிவமும் சவமே போன்ற வாக்கியங்கள் இங்கு நினைவிலிருத்திக் கொள்ளவேண்டியவை.

வராஹ புராணத்தில் வரும் ஒரு செய்தியையும் இங்கு சொல்லப்படுகிறது. அம்பிகை வைஷ்ணவியாக தபஸ் செய்த காலத்தில் அவளுக்கு ஒருவித கலக்கம் உண்டானதாம். அந்த கலக்கத்தின் காரணமாக கோடிக் கணக்கில் அழகிய யுவதிகள் உருவானார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, அம்பிகையின் சலனம்/கலக்கம் என்பது சிருஷ்டிக்குக் காரணம் என்பதாகத் தெரிகிறது.

சகலமுமான அம்பிகையை "ஸூக்ஷ்ம-ரூபிணீ" என்கிறார்கள். அதாவது ப்ரக்ருதியில் இருக்கும் எல்லாவற்றிலும் ஸூக்ஷ்ம ரூபத்தில், எளிதில் அறியமுடியாதவகையில் இருப்பவள் என்பது நேரடிப் பொருள். ஸுக்ஷ்மம் என்று ஒருவிதமான ஹோமத்தைச் சொல்வதாகத் தெரிகிறது. அவ்வகை ஹோமத்தின் ரூபமாக இருப்பவள் அம்பிகை என்றும் கூறுகிறார்கள். இதைத் தவிர, அம்பிகையின் ஸ்தூல, ஸூக்ஷ்ம, பர ரூபங்களில் இந்த நாமம் ஸூக்ஷ்ம ரூபத்தைச் சொல்வதாகவும் சொல்லலாம்.

3 comments:

vijayaragavan said...

அண்ணா என்ன ஆச்சு? நான் தினம் வந்து ஏமாறுகிறேன்!

Jayashree said...

"க்ஷராக்ஷராத்மிகா
க்ஷரம், அக்ஷரம் ! ம்..ம்ம்- !! எனக்கு முதல்ல எல்லா விளக்கத்தோட இருக்கற புஸ்தகத்திலும், one who could never be destroyed and destroyed ங்கற விளக்கம் புரிஞ்சுக்க முடியாம ஏதோ தடுக்கறதேனு தோனும். இப்ப makes sense!!

குமரன் (Kumaran) said...

க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினியில் சொல்லப்பட்டதே இங்கு மீண்டும் க்ஷர அக்ஷர ஆத்மிகாவிலும் சொல்லியிருப்பதாகத் தோன்றுகிறது. க்ஷரம் பிரகிருதி; அக்ஷரம் ஜீவன்; இரண்டிற்கும் ஆத்மாவாக இருப்பது பிரம்மம். சரீராத்ம பாவம் என்று இதனை பிரம்மசூத்ர விளக்கத்தில் சொல்வார்கள். உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துளன் என்று நம்மாழ்வாரும் சொல்வார்.