
முன்னர் இங்கே ராமோ விக்ரஹவான் தர்ம" என்கிற தலைப்பில் ஒரு இடுகை இட்டேன். இதன் தொடர்பாக சில குறிப்புக்கள் எடுத்தாலும், அப்போது இத்தொடரை தொடரவில்லை. இன்று காயத்ரி ஜபத்தை முன்னிட்டு தொடர்கிறேன். இன்னொரு பகுதியும் இருக்கிறது. அதனை அடுத்த மாதத்தில் இட முயற்சிக்கிறேன்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராமாவதாரத்திற்கு என்றும் சிறப்பு அதிகம் என்று சொல்வார்கள். மற்ற எல்லா அவதாரங்களிலும் இல்லாத சிறப்பாக இறைவன் மனிதனாகத் தோன்றி, இறைத்தன்மை ஏதும் காண்பிக்காமல் மனிதனாகவே வாழ்ந்து, நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து கண்பித்த அவதாரம். இந்த இடுகையில் ராமாவதாரத்தில் நித்யகர்மாவிற்கு, ஸந்த்யா உபாஸனைக்கு ராமபிரான் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
பால காண்டத்தில் விச்வாமித்ர மஹரிஷியின் யாகத்தைக் காக்க பயணம் செய்கிறார்கள். சரயூ நதியைக் கடந்தாயிற்று. இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் பிரயாணத்தைத் தொடர முடிவு செய்து ஓய்வு எடுக்கிறார்கள். காலை எழுந்தவுடன் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லுகையில், "ஸ்நாத்வா க்ருதோதகெள வீரெள ஜேபது: பரமம் ஜபம்" [பால காண்டம் ஸர்கம் 23] என்கிறார் வால்மிகி. அதாவது, குளித்து, அர்க்யம் அளித்து உயர்ந்த காயத்ரி ஜபத்தைச் செய்தார்களாம். காயத்ரி மந்திரத்தின் ரிஷியான விச்வாமித்ரர் அருகில் இருக்கையில் ராம-லக்ஷ்மணர்கள் காயத்ரியை ஜபித்தார்களாம். இவ்வாறு விச்வாமித்ரருடன் செல்கையில் வழியில் சந்தித்த பல தவசீலர்களும் சந்தியாவந்தனம் செய்தார்கள் என்பதை "யதார்ஹம் அஜபன் ஸந்த்யாம் ருஷயஸ்தே ஸமாஹிதா" என்று கூறுகிறார் வால்மிகி.
சித்ரகூடம் வந்து, விச்வாமித்ரர் யாகத்தை நடத்துகையில், இரவு முழுவதும் கண்விழித்து யாகத்திற்கு பங்கம் இல்லாது காப்பாற்றினாலும், விடியலில் "ப்ரபாதகாலே சோத்தாய பூர்வாம் ஸந்த்யா முபாஸ்ய ச" என்று கூறுவதன் மூலம், விடியலில் ராம லக்ஷ்மணர்கள் சந்தியாவந்தனம் செய்ததை பால காண்டம், 29ம் ஸர்க்கத்தில் கூறுகிறார். இவ்வாறு சூர்யனைக் காணாமல், கோணாமல், கண்டு கொண்டிருக்கும் நேரங்களில் விடாது ஸந்த்யாவந்தனம் செய்த ராமரை யாகம் முடிந்தவுடன் வானளாவப் புகழந்ததாக மட்டும் வால்மிகி சொல்லவில்லை. ராமரைப் புகழ்ந்த அந்த சந்த்யா காலத்தில் அவருடன் சேர்ந்து சந்த்யாவந்தனம் செய்தார் என்பதை, "ஸ ஹி ராமம் பிரசஸ்யைவம் தாப்யம் ஸந்த்யாம் உபாகமத்" என்று பால காண்டம், ஸர்க்கம் 30ல் சொல்லுகிறார்.
பாலகாண்டத்தில் யாகத்தைக் காப்பாற்றும் இடத்தில் மட்டும்தான் சந்த்யாவந்தனத்தை, காயத்ரி ஜபத்தைச் சொல்லியிருக்கிறாரா என்று பார்த்தால், யாகம் முடிந்து, ஜனகபுரியை நோக்கிச் சொல்லும் போதும், "க்ருத்வா பூர்வாஹ்நிகம் க்ரியாம்" என்று ராமர் சொல்லுவதாக வருகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலை வேளையில் செய்ய வேண்டிய கர்மாக்களை எல்லாம் முடித்து நாங்கள் தயாராகிவிட்டோம் என்கிறார்.
அயோத்யா காண்டத்தில் ராமரை துயிலெழுப்பியதைச் சொல்லுகையில், துயிலெழுந்த ராமர் தனது ப்ராத ஸந்த்யையை முடித்த பின்னர் மக்களைக் கண்டதாகச் சொல்லும்படி, "பூர்வாம் ஸந்த்யாமுபாஸீனோ ஜ்ஜாப யதமானஸ:" என்று ஸர்க்கம் 6ல் சொல்லுகிறார். இதேபோல ராமன் காட்டுக்குச் செல்லுகையில், ஸாயங்கால சந்த்யாவந்தனம் செய்ததையும் சொல்லியிருக்கிறார் வால்மிகி. இதே போல பரதன் காட்டில் ராமரைக் காணும் போதும் அதிகாலையில் சந்த்யாவந்தனத்தை முடித்த பின்னரே ராமனைக் கண்டதாகச் சொல்லியிருக்கிறார்.
பின்னர் காட்டு வழி செல்லுகையில் அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நெருங்குகையில், "ராமஸ்ய அஸ்தம் கத: ஸந்த்யா காலோப்யவர்த்த, உபாஸ்ய பச்சிமாம் ஸந்த்யாம் ஸஹப்ராத்ய யதாவிதி" என்கிறார் ஆரண்ய காண்டத்தில். அதாவது அகஸ்தியரது இல்லத்தை நெருங்கிவிட்டதால் ஏதோ 10 காயத்ரி ஜபத்தைப் பண்ணி, தனது கர்மாவை முடிக்கவில்லையாம். 'யதாவிதி' என்பதாக, அதாவது விதிக்கப்பட்ட விதத்தில் ஸந்த்யாவந்தனம் செய்தார் என்று கூறுகிறார்.
இதே ஆரண்ய காண்டத்தில், இன்னொரு இடத்தில், கிழக்கில் உதயமாகும் சூர்யனை வணங்கி, கோதாவரி தீர்த்தக் கரையில் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும் வழிபாடு [ப்ரம்ஹ யக்ஞம்] செய்ததாகச் சொல்லியிருக்கிறார்.
போர்க்காலத்தில் ராமர் ஸந்த்யாவந்தனம் செய்யாது விட்டிருக்கலாம் என்று நினைக்கக் கூடும், அப்படி நினைத்தால் அது தவறு. ஹனுமன் ஸீதாதேவியைக் கண்டு, சூடாமணியைக் கொண்டு வந்த நேரத்தில், தான் எப்போது ஸீதையக் காண்போமோ என்று தவித்த நேரத்திலும் ராமர் தனது ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைக் காலம் தவறாது செய்ததாக யுத்த காண்டத்தில் சொல்லுகிறார் வால்மிகி.
இப்படி தனது சிறுவயது முதலாக, ச்ரம-திசையிலும் (மனையாள் இல்லாத வாழ்விலும், போர் முனையிலும்) கூட வழுவாது ஸந்த்யாவந்தனம் செய்த காரணத்திலேயே, "ராமனைப் போல் வாழ வேண்டும்" என்று சொன்னார்கள் நம் பெரியவர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. "ராமோ விக்ரஹவான் தர்ம" என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பது புரிகிறதல்லவா?.
நாமும், ஸந்த்யாவந்தனத்தை விடாது, விதிப்படி செய்வோம். நாளை ஒரு நாளாவது ஸஹஸ்ர ஆவர்த்தி காயத்ரி ஜபத்தினைச் செய்வோம்.