Monday, June 21, 2010
ஸத் சங்கம்....
Friday, June 11, 2010
மஹா காளீ, மஹா யோகேஸ்வரேஸ்வரீ

Wednesday, June 9, 2010
பரமாணவே, பராத்பரா, பாசஹஸ்தா, பாசஹந்த்ரீ


அம்பிகையை நிலவுடன் ஒப்பிடும் நாமங்கள் சிலவற்றை முன்னரே பார்த்தோம், இப்போது அவளே ஜ்யோதி ஸ்வரூபம் என்னும் நாமம்.ச்ருதியில் ப்ரம்ஹமே ஸுர்யன் முதலானவர்களுக்கு ப்ரகாசத்தை அருளுவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட ஜ்யோதி ஸ்வரூபமான பரம்பொருளே அம்பிகை என்பதை "பரம்ஜ்யோதி" என்று கூறுகிறார்கள். "தாம" என்றால் தேஜஸ், நிலை, இருப்பிடம் ஆகிய அர்த்தங்கள் உண்டு. நிறைந்த விசேஷமான நிலையில் இருப்பவள் என்றோ, அல்லது நிறைந்த தேஜஸுடன் இருப்பவளென்றும் சொல்லும்படியான நாமமே "பரம்தாம" என்பது. அம்பிகை ஸர்வ்வோத்தம பதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம். ப்ரயோகத்தில்/நாமாவளியாகச் சொல்லுகையில், பரஸ்மை ஜ்யோதிஷே நம: என்றும் பரஸ்மை தாம்னே நம: என்றும் கூறவேண்டும்.
இப்படி ஜ்யோதிஸ்வரூபமாகவும், நிறைந்த தேஜஸுடனும் இருப்பவளை அணுவாகவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் வாக்தேவதைகள். மிக ஸூக்ஷ்மமான பொருளான அணுவாகச் சொல்லியிருப்பதே "பரமாணு:" என்பது. அதாவது அறிவதற்கு முடியாத ரூபத்தை உடையவளாம். இன்றைய விஞ்ஞானமும் அணுவை ஏதேதோ கருவிகளைக் கொண்டே உணர்கிறார்களே தவிர சாதாரணக் கண்களால் காண இயலவில்லையே?...உணர்வால் அறியப்படுபவள் என்பதான பொருள் சரிதான். இப்படி அணுவாக இருப்பவளே பரம ஸ்ரேஷ்டமாகவும் இருக்கிறாள். திரிமூர்த்திகளைவிட ஸ்ரேஷ்டமானவர் என்பதாக "பராத்பரா" என்பதற்குப் பொருள் சொல்லுகிறார் பாஸ்கரர்.இதையே இன்னொருவிதத்திலும் சொல்லலாம். ப்ரம்ஹாவின் ஆயுளைக் குறிக்கும் சொல் பரம் என்பது. அவ்வாறான பரம் என்பதையும் விஞ்சிய, அதற்கு மேற்பட்டவள் அம்பிகை என்றும் கூறலாம்.
அம்பாள் தனது ஒரு கையில் ராகஸ்வரூபமான பாசத்தை இடது கையில் வைத்திருப்பதால் அவள் "பாசஹஸ்தா", இதையே பாசத்தை தன்கையால் விலக்குபவள் என்றும் கூறலாம். இவ்வாறு பாசத்தை, அவித்யைகளைப் போக்குபவள் என்பதே "பாசஹந்த்ரீ". அனிருத்தன் பாணாசுரனது நாக பாணத்தால் கட்டுண்டு இருந்த சமயத்தில் அம்பாளுடைய அனுக்ரஹத்தால் அவன் விடுவிக்கப்படுகிறான், இதை இந்த நாமவுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கிறார் கணேசய்யர். இவள் தனது பக்தர்களின் எதிரிகளது மந்திரங்களை சிறப்பாக விலக்குகிறாளாம், ஆகவே அவளை "பரம் மந்த்ர விபேதினீ" என்று சொல்கிறார்கள் தேவதைகள். பிறரால் ஆபிசாரம் போன்ற தவறான விஷயங்களுக்கு ப்ரயோகம் செய்யும் மந்த்ரங்களை நாசம் செய்து, அவை தனது பக்தர்களை தாக்காது காப்பவள் என்றும் கூறலாம். பரமான (சிறப்பான) மந்த்ரமாகிய பஞ்சதசி என்னும் தனது மந்திரத்தை தனது உபாசகர்களுக்கு பலவிதமாகச் சொல்லுபவள் என்றும் சொல்லலாம்.