அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
சாதாரணமாக தமிழகத்தில் தீபாவளி என்பது நரக-சதுர்தசி மட்டுமே. ஆனால் அண்டை மாநிலங்களில், அடுத்து நாளான அமாவாசை, மற்றும் பிரதமை வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. "தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா" என்று பல பெரியவர்களும் சொல்லக் கேட்டிருப்போம். அதாவது நரக-சதுர்தசியன்று அதிகாலை நேரத்தில் எண்ணை தேய்த்து, வென்னீரில் குளித்து, புத்தாடைகள் அணிந்து கொள்வது வழக்கமாக இருக்கிறது. இந்த தினத்தில் இல்லத்தில் இருக்கும் எண்ணையில் லக்ஷ்மியும், தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவிற்கான காரணம் பூமாதேவி தனது மகன் நரகாசுரனை அழித்த ஸ்ரீ க்ருஷ்ணனிடம் வேண்டிக்கொண்டதே காரணம் என்பர். கங்காஸ்நானமும் அன்னபூரணி தரிசனமும் இந்த நன்நாளில் மிக விசேஷம். இந்த நாளில் தான் காசியில் தங்க அன்னபூரணி லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் நகர்வலம் வருகிறாள்.
அடுத்த நாள் அமாவாசை, வட தேசங்களில் ஸாத் பூஜா என்று பெண்கள் தமது இல்லத்தில் இருக்கும் ஆண்கள் நலனுக்காகச் செய்யும் பூஜை. இதே போல நம் பக்கமும் பல இல்லங்களில் அவரவர் இல்லத்துப் பழக்கங்களின்படி கேதார கெளரீ விரதம் என்று விமர்சையாக விரதமிருந்து மாங்கல்ய பலனுக்காக செய்யப்படுகிறது. பல இல்லங்களில் அமாவாசை தினத்தன்று மாலை லக்ஷ்மி குபேர பூஜையும் செய்யப்படுகிறது.
ப்ரதோஷ சமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத்
தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: சக்த்யா தேவக்ருஹேக்ஷுச
ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸ்த-வஸ்த்ரோப ஸோபிநா
என்பதாக, மாலை வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் குபேரரையும் பூஜிப்பது சில இல்லங்களில் பரம்பரையாக வழக்கம். இவ்வாறு லக்ஷ்மி-குபேர பூஜை செய்யும் போது குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை உடுத்தி, சர்வாபரணங்களும் அணிந்து கொண்டு பூஜிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பூஜை செய்யும் இடத்திலும், செய்பவருக்கும் லக்ஷ்மி கடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வட இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களில் தீபாவளியன்று புதுக்கணக்கு ஆரம்பித்தல் இன்றும் நடைமுறையில் இருப்பது இதனாலேயே.
இந்த தூலா/ஐப்பசி மாத அமாவாசை கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் மிக பிரசித்தம். முன்னொரு காலத்தில் ஒரு வைணவர் திருமணம் செய்யாது ப்ரம்மச்சரியத்தில் இருந்து கொண்டு ஸ்ரீ சாரங்கனனுக்கு கைங்கர்யம் செய்து வந்தாராம். அவரது உறவினர்கள் அவரை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்து, அவ்வாறு செய்து கொள்ளாவிடில் பிற்காலத்தில் அவருக்கு அந்திமக் கிரியைகள் செய்யவும் ஆளின்றி அநாதையாக போகும் நிலை வரும் என்றேல்லாம் சொல்லுகின்றனர். அப்போது அந்த வைணவர் தமக்கு திருமணம் வேண்டாம் என்றும் தமது அந்திமக் கிரியைகளை சாரங்கனே செய்வான் என்றும் கூறுகின்றார். இந்த பெரியவர் கட்டிய கோபுரந்தான் சாரங்கபாணி கோவில் ராஜ கோபுரம். காலங்கள் உருண்டோட, அந்த வைணவர் தூலா மாத அமாவாசையன்று வைகுந்த பதவியை அடைகிறார். அன்று தீபாவளி, எனவே யாரும் அவருக்கு அந்திம சம்ஸ்காரம் செய்ய முன்வரவில்லை. அப்போது எங்கிருந்தோ ஒரு வைணவ பிரம்மச்சாரி வந்து பெரியவரின் அந்திமக் கிரியைகளைக் குறைவின்றிச் செய்துவிட்டுப் போகின்றார். அவரை யார் என்று விசாரிக்கத் தேடியபோது காணவில்லையாம். அப்போதுதான் ஊர் மக்கள் அப்பெரியவர் சொன்னபடி பெருமாளே வந்து அந்திம சம்ஸ்காரம் செய்ததை உணர்கின்றனர். அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் சாரங்கபாணிக்கு கையில் பித்ரு காரியத்துக்கு உபயோகிக்கும் பவித்திரம் அணிவித்து சிராத்த சமையல் செய்து நிவேத்யம் செய்கின்றனர். அத்துடன் நில்லாது, பெருமாள் பெயரில் இரு வைணவப் பெரியவர்களை வரித்து சிராத்தமும் நடக்கிறது.
கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பலிபாட்டிமை என்று பிரதமை தினமும் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக பல விதங்களில் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் நாமும் அவரவர் இல்லத்து வழக்கத்தின்படி இறைவனை வணங்கி இனிமையாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
16 comments:
//அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் சாரங்கபாணிக்கு கையில் பித்ரு காரியத்துக்கு உபயோகிக்கும் பவித்திரம் அணிவித்து சிராத்த சமையல் செய்து நிவேத்யம் செய்கின்றனர். அத்துடன் நில்லாது, பெருமாள் பெயரில் இரு வைணவப் பெரியவர்களை வரித்து சிராத்தமும் நடக்கிறது.//
ஆஹா! தானே முன்னுதாரணமாய் இருக்கிறானே!
ஹலோ மெளலி,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
//தண்ணீரில் கங்கையும் இருப்பார்கள்.//
எங்க வீட்டுல காவிரி மட்டும் தான் வருவாளாம், என்ன பண்ணலாம்?(சும்மா)
அண்ணா, குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! :)
வாங்க திவாண்ணா....சரியாச் சொன்னீர்கள்.
வாங்க சுமதியக்கோவ். நன்றி.
ஐப்பசியில் கங்கையே தனது பாபங்களை தீர்த்துக் கொள்ள காவேரிக்கு வருவதாகச் சொல்லுவார்கள். இந்த மாதத்தில் காவேரி ஸ்நானம் மிகச் சிறப்பு, இதே துலா ஸ்நானம் என்று கூறுவார்கள்.ஆகவே சந்தோஷமா காவேரியில் ஸ்நானம் செய்யுங்கள். :)
வாங்க கொத்ஸ்....உங்களூக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
நன்றி மௌலி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
நன்றி கவிக்கா.
//அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளி அமாவாசையன்றும் சாரங்கபாணிக்கு கையில் பித்ரு காரியத்துக்கு உபயோகிக்கும் பவித்திரம் அணிவித்து சிராத்த சமையல் செய்து நிவேத்யம் செய்கின்றனர். அத்துடன் நில்லாது, பெருமாள் பெயரில் இரு வைணவப் பெரியவர்களை வரித்து சிராத்தமும் நடக்கிறது //
- அருமையான தகவல், அண்ணாவுக்கு மட்டும் எங்கேற்துதான் இந்த மாதிரி தகவல் எல்லாம் கிடைக்கிறதோ தெரியவில்லை......!!!!
தம்பி
ஆகா. அருமையான தொகுப்பு. தீபாவளி திருநாளைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி.
கர்னாடகா = கர்நாடகா?
வாங்க சர்வேசன். முதல் வருகைக்கு நன்றி.
//கர்னாடகா = கர்நாடகா?//
திருத்திவிடுகிறேன். நன்றி.
வருகைக்கு நன்றி குமரன். :)
வாங்க தம்பியாரே.
4 வருடங்கள் முன் சாரங்கபாணி கோவிலுக்குச் சென்ற போது கேள்விப்பட்டேன் அதைத்தான் எழுதியிருக்கேன்.
கங்கையில் நீராடி, தீபத்தை வழிபடும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
mouli anna, the Saarangapaani brahmachchaari story is inspiring me to no end. thanks !!
Post a Comment