Thursday, July 24, 2008

சிவப்பு நிறமும், பாசுபதமும் கதம்ப வனமும்...

ஆடி மாதம் அன்னைக்கு சிறப்பானது. இம்மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். மதுரையில் மீனாக்ஷியம்மனுக்கு இந்த மாதம் நடக்கும் விழாவிற்கு முளைக் கொட்டுத் திருவிழா என்று 10 நாள் உற்சவம் நடக்கும். அன்னை மீனாக்ஷி ருதுவான மாதம் என்பர். சக்திக்கு உகந்த இந்த மாத்த்தில் அம்பாளைப் பற்றி நிறைய பதிவுகள் போட வேண்டும் என்று நண்பர் கே.ஆர்.எஸ் கூறினார். எழுத பல விஷயங்கள் இருந்தாலும், நிச்சிந்தையாக உட்கார்ந்து டைப் பண்ண கால அவகாசம் இருப்பதில்லை. இம்மாதச் சிறப்பாக இந்த வலைப் பூவில் மூன்று பதிவுகளாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அன்னையின் அருளிருந்தால் நடக்கும். இது தவிர செளந்தர்ய லஹரி பதிவில் அடுத்த 6 ஸ்லோகங்களும் வரும் இரு-மூன்று வாரங்களில் எழுத முயற்சிக்கிறேன். அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற லேபிளில் அன்னையின் சில நாமங்களை முன்பே பார்த்தோம். அதன் தொடராக இப்பதிவில் சில நாமங்களைப் பார்க்கலாம்.

ஜ்வாலாமாலினிகா ஆஷிப்த வஹ்நிப்ரகார மத்யகா ஜ்வலிக்கும் அக்னியால் ஆன அரணால் சூழப்பட்டவள். ஜ்வாலாமாலினி என்பது திதிநித்யாவில் ஒரு தேவதை. அக்னிப்பிழம்பினை மாலையாக அணிந்தவள் என்பது ஒரு பொருள். ஜ்வாலா துர்க்கை என்று பல கோவில்களில் இருப்பவள் இவளே. பண்டாசுர வதத்தின் போது பராம்பிகையின் படைகளை காக்க இவள் ஒரு அக்னி அரணை உருவாக்கியதாக மஹாத்மியம் சொல்கிறது.

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரும்மாண்ட மண்டலா என்பது ஒரு நாமம். அதாவது அம்பிகையின் சிவந்த திருமேனியின் ஒளியானது பிரம்மாண்டங்களையும் மூழ்கடிக்கிறது என்பதாக பொருள். நிஜாருண ப்ரபா என்றால் தனது இயல்பான சிவந்த நிறம் என்று பொருள். எந்த மேக்கப்பாலும் வரும் சிவந்த நிறமல்ல இது. இதைத்தான் 'அருண-கிரண ஜாலை' என்றும் 'அருணாம் கருணா..' என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.சிந்தூரமேனியள் என்று அபிராமி அந்தாதியிலும் வருகிறது. செளந்தர்ய லஹரியின் 18ஆம் ஸ்லோகத்திலும் இது பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். இந்த ஸ்லோகமானது ஸ்தீரி வச்யத்தை தரும் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதென்ன ஸ்தீரி வச்யம்?, ஸ்ரீவித்யா உபாசகர்கள் இவ்வளவு கீழ்த்தரமான காரியங்களா செய்கிறார்கள்?. இங்கு ஸ்தீரி வசியம் என்பது பெண்களை மயக்கும் பிரும்ம ராக்ஷச குணமல்ல. கலைகளுக்கு உரிய தேவதைகள் அம்பிகையின் அடியார்களுக்கு வசமாவார்கள். அதாவது தேவதைகள் மூலம் கலைகள் வசமாகும் என்பதே இதன் பொருள். இன்னுமொரு பொருளும் இருக்கிறது, அதாவது அம்பிகையின் பக்தர்களுக்கு ஏற்ற கணவனோ/மனைவியோ வாய்க்காத போது அவர்கள் அன்னையின் இந்த அருண ரூப தியானம் செய்வதால் அவர்கள் மறுபாதியின் குணம் மாறிவிடுவர் என்று தேதியூரார் சொல்லியிருக்கிறார்.

மஹாபாசுபத அஸ்த்ரக்னி நிர்தக்த அஸுரசை நிகா பண்டாஸுர வதத்தில் பண்டனது படைகளை அக்னியைக் கக்கும் மஹா-பாசுபதத்தால் அழித்தவள் என்பது இதன் பொருள். பாஸுபதம் என்பது மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தரப்பட்ட ஆயுதம். மஹாபாசுபதம் என்பது அதனிலும் உயர்ந்தது ஈசன் அம்பிகைக்கு மட்டுமே பண்டனை அழிக்க அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த பண்டாசுர வதத்தில்தான் அன்னை பாலாதிரிபுரசுந்தரி 7வயது பெண்ணாக வந்து பண்ட புத்திரர்களை அழிக்கிறாள். அந்த நாமமே பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா என்பது. பாலை, பாலா, வாலை என்றல்லாம் கூறுவது இவளையே.


இதுபோலவே பராம்பிகையின் கையில் இருக்கும் பாசாயுதத்திலிருந்து தோன்றியவளை அச்வாரூடா என்றும் அவளே அன்னையின் குதிரைப் படைக்கு தலைவியாகவும் சொல்லப்படுகிறது. அம்பிகையின் யானைப் படைக்கு தலைவியாக சம்பத்கரீ என்னும் ரூபத்தைச் சொல்வர். இந்த ரூபங்கள் எல்லாம் ஸ்ரீ லலிதையின் சக்திகளே. இவரகளை சக்தி சேனை என்று லலிதோபாக்யானம் குறிப்பிடுகிறது.

சரத்சந்த்ர நிபாநநா - அதாவது சரத்க்காலத்து சந்திரன் போன்ற திருமுக மண்டலம் அமையப் பெற்றவள். இலையுதிர் காலம் என்கிற சரத்காலத்தில் வானம் தெளிவாக இருக்கும் என்பதால் நிலவு பிரகாசமாக தெரியும். அந்த நிலவினைப் போல அம்பிகையின் முகமும் மதிமயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளனர் வசின்யா தேவிகள். இவ்வாறு ஒருவ நிலைகளில் வணங்கும் நாமங்கள் இருப்பது போல அருவ நிலையிலும் அம்பிகையை போற்றியுள்ளனர். அதில் சில நாமங்கள் மோஹநாசினி-பாபநாசினீ போன்றவை. மோஹநாசினி என்பதற்கு அடியவர்களின் மோகத்தை போக்குபவள் என்று பொருள். இதைத்தான் மஹாகவியும் "மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று காளியிடம் கூறியிருக்கிறான்.


நாவரசர் தேவாரத்தில், வானம் முட்டும்வரையில் விறகுக் கட்டைகளை அடுக்கியிருந்தாலும், ஒரு சிறு தழலானது எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும், அதுபோல நமச்சிவாய நாமம் சொன்னால் அனைத்து பாபங்களும் போகிடும் என்று சொல்வார். அது போலவே தான் அம்பிகையின் பாகவதத்தை கேட்ட பரிக்ஷித் மஹாராஜாவின் பாபங்கள் தீர்ந்து நற்கதி அடைந்தாதாக தேவி பாகவதம் கூறுகிறது. அதனால் தான் அவள் பாபநாசினீ. அம்பிகை பக்தர்களது பாபங்களை நசிப்பதால் பாபநாசத்தில் (திருநெல்வேலி) எழுந்தருளியிருக்கும் அவள் பெயரே உலகம்மை என்பதாம்.

கதம்ப வனவாசினீ என்று ஒரு நாமம். மதுரையில் ஒரு காலத்தில் கடம்ப வனம் இருந்ததாகவும் அதனால் கடம்பாடவி என்றே மதுரைக்கு ஒரு பெயர் என்பர். இந்த கடம்பவனத்தின் நடுவே கோவில் கொண்டதால் இந்த நாமம் அன்னை மீனாக்ஷியை குறிக்கும் என்று சொல்வர். அது மட்டுமல்ல, பரதேவதை வசிக்கும் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி கடம்ப வனம் இருக்கிறதாம். அதனால் பராசக்திக்கு கதம்ப வன வாசினீ என்று பெயர் என்றும் கூறலாம்.

தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா என்பது இன்னொரு நாமம். அதாவது தேவர்களும், முனிவர்களும், கணங்களும் தமது ஆத்ம ரூபமாக போற்றும் அம்பிகை என்பது பொருள். ஆத்ம வைபவம் என்பதை தனிச் சிறப்புடைய என்றும் சொல்லலாம், அப்படிக் கொண்டால் தனிச் சிறப்புடைய அம்பிகையை தேவ-ரிஷி-கணங்கள் தொழுவதாக கொள்ளலாம். இந்த நாமம் பற்றி லலிதோபாக்யானத்தில் தனியாக சொல்லப்பட்டிருக்கிறது. பிறகொரு சமயம் இதனை தனிப் பதிவாகப் பார்க்கலாம்.

20 comments:

கீதா சாம்பசிவம் said...

//இந்த பண்டாசுர வதத்தில்தான் அன்னை பாலாதிரிபுரசுந்தரி 7வயது பெண்ணாக வந்து பண்ட புத்திரர்களை அழிக்கிறாள். அந்த நாமமே பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா என்பது. பாலை, பாலா, வாலை என்றல்லாம் கூறுவது இவளையே. //

இப்போத் தான் நெமிலி பாலா பத்திப் படிச்சேன், இங்கே வந்தால் இங்கேயும் பாலா! நல்ல விளக்கம், அதிலேயும் ஸ்த்ரீவச்யம் பற்றி நல்லாவே சொல்லி இருந்தாலும் அதை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டிருக்கலாமோ???

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அன்னையின் அருளிருந்தால் நடக்கும்//

அருள் இருக்கிறது!
எனவே நடக்கட்டும்!
ததாஸ்து!
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதாவது அம்பிகையின் பக்தர்களுக்கு ஏற்ற கணவனோ/மனைவியோ வாய்க்காத போது அவர்கள் அன்னையின் இந்த அருண ரூப தியானம் செய்வதால் அவர்கள் மறுபாதியின் குணம் மாறிவிடுவர்//

அப்படியே அன்னை அபீஷ்டங்களை அருளட்டும்!

அன்னையின் மந்திர மகிமை வெறும் சொல்லில் அடங்காது! மந்திரத்தின் மகிமை மந்திரத்திலே தான் அடங்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலா விக்ரம நந்திதா என்பது. பாலை, பாலா, வாலை என்றல்லாம் கூறுவது இவளையே//

எங்க வீட்டில் மூதாதையர் ஒருவர்...கொள்ளை அழகான சின்ன வயசுப் பெண்ணாம்! பாலகுஜம்பாள்-ன்னு பேரு. குடும்பத்துடன் திருவண்ணாமலை செல்லும் போது அந்தப் பெண், அண்ணாமலையார் சன்னிதியில் மயங்கி விழுந்து விட்டாள் போல! அங்கேயே இறைவனடியும் சேர்ந்து விட்டாள்!

கன்னிப் பெண்ணின் நினைவாக அனு முதல் இன்றும் புதுப் புடைவையை ஒரு குட்டிப் பெண் போல் வளைத்துச் செய்து, அதற்கு காதோலை கருகமணி எல்லாம் சார்த்தி, பொங்கல் வைத்து வழிபடுவார்கள், பாட்டியும், அம்மாவும்!

அவங்களைக் கும்பிடும் போது அவங்க பேரைச் சொல்லி,
பூவாடைக்காரி தாயே பாலா
என்று தான் அம்மா கூப்பிட்டுக் கற்பூரம் காட்டுவாங்க!

இந்த பாலா என்ற திருநாமத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஏதோ சொல்லொணாத ஆனந்தம் எழும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அச்வாரூடா = குதிரைப் படைக்கு தலைவி.
சம்பத்கரீ = யானைப் படைக்கு தலைவி

அன்னையின் சேனை பற்றியும், அதன் ஒவ்வொரு சக்திகள்-தலைவிகள்-அவர்கள் நாமங்கள் பற்றியும் தனியாக ஒரு பதிவை இடுமாறு விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன்!

புதுகைத் தென்றல் said...

தான் சிறுவயதில் பள்ளி செல்வதர்கு முன் பாலா திருபுரசுந்தரியை பூஜித்து விட்டுத்தான் சென்றதாக என் கணவர் கூறுவார்.

இன்றும் நவராத்திரி நாட்களில் 5 வயதுகுட்பட்ட பாலாவிற்கு பூஜை செய்து, சாப்பாடு போட்டு, உடை கொடுப்பது வழக்கம்.

ஜகத் ஜனனி அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

என் பங்கிற்கு ஆடி மாத சிறப்பு பதிவு

லலிதா ஸஹஸர்நாமமும் குண்டலினியும்.

கவிநயா said...

ஒவ்வொரு நாமமும் ஒவ்வொரு விதத்தில் அழகு, அவளைப் போலவே. அன்னையின் திருநாமங்களை நீங்கள் விளக்கிக் கேட்க சுகமாக இருக்கிறது மௌலி. மிக்க நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

திருநாமங்களை தெளிவித்தமைக்கு நன்றி மௌலி சார்.

மதுரையம்பதி said...

வாங்க கீதாம்மா...நீங்க சொன்னதை கவனத்தில் கொண்டேன். :)

மதுரையம்பதி said...

வருகைக்கும், உங்களது இல்லத்து தெய்வத்தைப்பற்றி பகிர்ந்தமைக்கும் நன்றி கே.ஆர்.எஸ்.

மதுரையம்பதி said...

வருகைக்கும் தங்களது கருத்துக்களுக்கும் நன்றி கவிக்கா, புதுவையக்கா & ஜீவா சார்.

மதுரையம்பதி said...

//அன்னையின் சேனை பற்றியும், அதன் ஒவ்வொரு சக்திகள்-தலைவிகள்-அவர்கள் நாமங்கள் பற்றியும் தனியாக ஒரு பதிவை இடுமாறு விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன்!//

பார்க்கலாம் கே.ஆர்.எஸ். நேரம் வருகையில் மனத்தில் தோன்றுகையில் எழுதுகிறேன். எனக்கு எழுத, படிக்க ஆர்வம் குறைகிறது.

ambi said...

//அம்பிகை பக்தர்களது பாபங்களை நசிப்பதால் பாபநாசத்தில் (திருநெல்வேலி) எழுந்தருளியிருக்கும் அவள் பெயரே உலகம்மை என்பதாம்.
//

ஆம், ஸ்வாமி பெயர் திருமறை நாதர்.

சில மாதங்களுக்கு முன் தி.ராச சாரை அகத்தியர் அருவியில் குளிப்பாட்டி, கோவிலுக்கு கூட்டி போனோம். :))

ambi said...

//இப்போத் தான் நெமிலி பாலா பத்திப் படிச்சேன்,//

@geetha madam, வேலுர் பக்கத்துல இருக்கோ நெமிலி..?
காஞ்சியில் இருந்த போது போகனும்னு நினைத்கேன்.

பாலா த்ரிபுரசுந்தரி ஒரு அங்குல நீளம் தான் விக்ரகம்.

நான் இந்த நேர்த்திகடன் செய்யறேன், நீ எனக்கு இதை நடத்தி குடு!னு எல்லாம் வேண்டிக்க கூடாதாம் இந்த அம்மனிடம்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பண்டாசுரனுடன் அம்பிகை சண்டை இட்ட போது அவன் போட்ட அஸ்த்ரங்கள் எல்லாம் வினோதமானவை. மோக அஸ்த்ரம்,வசிய அஸ்த்ரம் போன்றவைகள். இவைகளைப் போட்டால் எல்லோரும் மயங்கிவிழுந்து விடுவார்கள்.அதனால்தான் அம்பாள் சக்தி வாய்ந்த பாசுபத அஸ்த்ரத்தைப் போட்டாள்.ஏற்கனவே சிவப்பு வர்ணம் அதிலும் சண்டை போடும்போது உக்கிரத்தினால் சிவந்து முகம் இரத்தம் போல் ஆகிவிட்டது. அம்பிகைக்கு ""ரக்த வர்ணா"" என்ற பெயரும் வந்தது.இந்த தடவை நவராத்ரிக்கு லலிதாவையும் அபிராமியையும் இணத்து 9 நாட்களும் பதிவுபோடலாம் என்று இருக்கிறேன்.சித்தம் எப்படியோ.

தி. ரா. ச.(T.R.C.) said...

கதம்ப வனவாசினீ என்று ஒரு நாமம்


ஆமாம் மௌளி சரியாகச் சொன்னீர்கள். காளிதாசனும் ஸ்யமளா தண்டகத்தில் ஒரு இடத்தில்""குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவனவாசினி"" என்கிறார். மகான் முத்துஸாமிதீக்ஷ்தரும்""காதம்பரிப்ரியாயை கதம்பகாநநாயை நமஸ்தே நமஸ்தே "" கதம்பவனத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு நமஸ்காரம் நமஸ்காரம் என்கிறார். மற்றொரு கீர்த்தனையில் "" கதம்ப காநந விலாசினி காத்யாயனி மதுர வாணி சுகபாணி அலிவேணி...... என்கிறார். கதம்பவனம் என்னும் மதுரையில் வசிப்பவளே! காத்யாயணியே! இனிமையாக பேசுபவளே! கையில் கிளியைக் கொண்டவளே! மீனாக்ஷியே என்னைக் காப்பற்று!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆமாம் மௌளி சரியாகச் சொன்னீர்கள். காளிதாசனும் ஸ்யமளா தண்டகத்தில் ஒரு இடத்தில்""குர்யாத் கடாக்ஷம் கல்யாணி கதம்பவனவாசினி"" என்கிறார். மகான் முத்துஸாமிதீக்ஷ்தரும்""காதம்பரிப்ரியாயை கதம்பகாநநாயை நமஸ்தே நமஸ்தே "" கதம்பவனத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு நமஸ்காரம் நமஸ்காரம் என்கிறார். மற்றொரு கீர்த்தனையில் "" கதம்ப காநந விலாசினி காத்யாயனி மதுர வாணி சுகபாணி அலிவேணி...... என்கிறார். கதம்பவனம் என்னும் மதுரையில் வசிப்பவளே! காத்யாயணியே! இனிமையாக பேசுபவளே! கையில் கிளியைக் கொண்டவளே! மீனாக்ஷியே என்னைக் காப்பற்று!

குமரன் (Kumaran) said...

என்றைக்கோ எடுத்து வைத்ததை இன்று தான் படிக்க இயன்றது மௌலி. லலிதா சகஸ்ரநாமம் கேட்கும் போது கேட்ட திருப்பெயர்களின் விளக்கங்களைத் தந்ததற்கு நன்றி.

sse said...

சித்தர் திருமூலரும் அம்பிகையை கடம்பவனத்தில் கண்டு தொழுங்கள்
என்கிறார்.ஆகவே மதுரையும் சிறப்பான தலமாகும்