தச மஹா வித்யையில் ஒன்பதாவது ஸ்வருபமாக வருபவள் ராஜ மாதங்கி. இந்த அன்னையே ராஜ ஸ்யாமளா என்றும் அழைக்கப்படுகிறாள். சாக்தர்களில் சிறந்தவரான மஹாகவி காளிதாஸர் எழுதிய "ச்யமளா தண்டகம்" இவளைக் குறித்து எழுதியதே. அதில் காளிதாஸர்,
மாதா மரகதச்யாமா மாதங்கி மதுசாலினி
சூர்யாத்கடாஷம் கல்யாணி கதம்பவனவாஸினி
ஜய மாதங்கதனயே ஜய நீலோத்பலத்யுகே
ஜய ஸங்கீதரஸிகே ஜய லீலா சுகப்ரியே
என்றும்,
மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மாதலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
என்றும் போற்றுகிறார். இவளை உபாசித்தால் வித்தை, தனம் ஆகிய இரண்டையும் அள்ளித்தருவாள் என்பது காளிதாஸரின் வாக்கு.
மதங்கர் என்னும் ரிஷிக்குப் பிறந்த அருந்தவச் செல்வியே இராஜ மாதங்கி. திருவெண்காட்டில் (ச்வேதாரண்யம்) ஆடிமாதம் வெள்ளிக் கிழமையன்று ரிஷி அவர்கள் அங்கிருந்த மதங்க தீர்த்தத்தில் குழந்தையாக கண்டெடுத்த்தாராம். இவளுக்கு ஏழு வயதிருக்கும் போதே மதங்க மஹரிஷி பெண்ணுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டாராம். இதற்காக மதங்கேஸ்வரரை தியானிக்க, ஈஸ்வரரும் சித்திரை மாத சுக்ல பக்ஷத்தில் சப்தமியன்று திருமணம் செய்து கொண்டதாக திருவெண்காடு தல வரலாறு கூறுகிறது.
இவள் அன்னை லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லில் இருந்து தோன்றிய மந்த்ரிணி என்பதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை மீனாக்ஷியே மந்த்ரிணி ரூபம் என்பதால் மீனாஷியே மாதங்கி ஸ்வருபம் என்றும், தச மஹா வித்தையில் வருபவள் மீனாக்ஷியே என்பர். மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர், "வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரஸிகா" என்று கூறுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ச்யாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துஸ்வாமி திக்ஷதரவர்கள் ஆகிய இருவரும் இவளை கானமூர்த்தி / சங்கீத ரஸிகே என்றெல்லாம் கூறிப்பாடியிருக்கிறார்கள். இவற்றில் ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர்.
ராஜ மாதங்கியின் அங்க தேவதையான லகுஸ்யாமளா பற்றி கேனோபனிஷதத்தில் குறிப்பு இருக்கிறது. இவளது அங்க தேவதைகளாக 6 தேவதைகள் (ஹசந்தி ச்யாமளா, சுக ச்யாமளா, சாரிகா ச்யாமளா, வீணா ச்யாமளா, வேணு ச்யாமளா, லகுச்யாமளா) கூறப்பட்டுள்ளது. இந்த தேவதைகள் பல கலைகளுக்கு அதிபதி என்பதால் ராஜமாதங்கியை உபாசித்தால் கலைகள் யாவும் தந்திடுவாள் என்கிறார்கள். இப்பெரும் சக்தியினை பற்றி ஸ்ரீசாக்த ப்ரமோதத்தம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம் போன்ற நூல்களில் சிறப்பாக சொல்லப்பட்டு இச்சக்திக்கான மூலமந்த்ரங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவளை பற்றி சாக்த ப்ரமோதத்தில் கூறுகையில் "காசித் காயனதேவதா விஜயதே வீணாவதி" என்பதாக, உலகிற்கே உரித்தான கான தேவதையாக கூறப்பட்டுள்ளது.
