கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
[பாடலுக்கும், பொருளுக்கும் நன்றி : தேவாரம்.காம்]
நமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
அஷ்ட வீராட்டனேஸ்வரர் கோவில்களில் திருவதிகை வீராட்டனேஸ்வரர் கோவிலும் ஒன்று. திரிபுரம் எரித்த ஈசனுக்கு பெருமாள் தானே சரமாக/அம்பாக இருந்து தாருகனை அழிக்க உதவியதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் வழிபடப்பட்டு பல நிவந்தங்கள் அளித்து அவ்வப்போது புனரமைத்ததாகச் சொல்லப்படுகிறது. சமீபத்திலும் புனரமைத்திருக்கிறார்கள். மிகப் பெரிய லிங்க ரூபத்தில் ஈசன் அருளுகிறார். அருகிலேயே தனிச்சன்னதியில் அம்பிகை திரிபுரசுந்தரி நின்ற கோலத்தில் காக்ஷியளிக்கிறாள்.
![]() |
முன்புற வாயில் தோற்றம்
|
கருவறையில் காட்சி அளிக்கும் வீராட்டனேஸ்வரர் 16 பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, பரமேஸ்வரன் சுதை சிற்பமாக தரிசனம் தருகிறார்கள். கருவறை விமானம் கொள்ளை அழகு, அவ்வளவும் சிற்பங்கள். கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் தேரில் வந்து திரிபுரம் எரித்த காரணத்தால் இங்குள்ள கருவறையே தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. இந்த கோபுரத்தை மாதிரியாக்க் கொண்டே தஞ்சை கோபுரத்தை ராஜராஜ சோழன் கட்டியதாகச் சொல்லுகிறார்கள்.
![]() |
கருவறை கோபுரம்
|
முன்-மண்டபத்தை கடந்தவுடன் கொடிமரத்தின் இடதுபுரத்தில் சூலை தீர்த்தக் குளம் இருக்கிறது. அப்பர் இந்த குளத்தில் குளித்துவிட்டுப் பாடல்கள் பாடியதால் சூலை நோய் தீர்ந்த்தாகச் சொல்லுகிறார்கள், ஆகவே இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வணங்குவதால் வயிற்றில் ஏற்படும் வியாதிகள் எல்லாம் நீங்கும் என்கிறார்கள். தற்போது இக்குளத்தில் நீர் இல்லை என்றாலும் பல படிகளுடன் மிகுந்த ஆழ்த்துடன் பார்க்க மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. சமீபத்தில் புனரோத்தாரணம் செய்கையில் நக்ஷத்திர தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கல்வெட்டு செய்திருக்கிறார்கள். இந்த கல்வெட்டுகளில் அந்தந்த நக்ஷத்திரங்களுக்கான தலங்கள், மூர்த்திகள், மரம், ரத்தினம் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. கொடிமரத்தின் வலது புரத்தில் நவகிரஹங்களுக்கான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த மரங்களுக்கு அருகிலேயே அப்பர் பெருமானுக்கு ஒரு தனி சன்னதி அமைத்திருக்கிறார்கள்.
![]() |
கோபுர சிற்பங்களில் திரிபுர சம்ஹார கோலம் |
அப்பர் ஸ்வாமிகளுக்கு சூலை நோய் தீர்த்த இறைவன் இவர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம், அதே போல சுந்தரருக்கு இங்கே திருவடி தீட்சை செய்தருளியதாகவும் சொல்கிறார்கள். சைவ சித்தாந்த மூல நூல்களில் ஒன்றான “உண்மை விளக்கம்” என்னும் நூலை அருளிய “மனவாசகம் கடந்தார்” அவர்களது ஜனன ஸ்தலம் இதுவே என்று கூறுகிறார்கள்.
அப்பர் தனது சகோதரி திலகவதியுடன் இத்தலத்தில் வந்து பிரார்த்தனை செய்து நோய் தீர்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. அப்பர் ஸ்வாமிகளின் முதல் பதிகமே இங்குதான் பாடப்பட்டிருக்கிறது. அவர் தனது சூலை நோய் நீங்குவதற்காகப் பாடப்பட்ட அப்பதிகங்களில் முதலானது கீழே!
கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பொருள் : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதவனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்
![]() |
உற்சவர் திருமேனி – போருக்கான ஆயுதங்கள் கைகளில்
|
திருமணத் தடை அகல, எதிரிகள் அகல என்றெல்லாம் பரிகாரம் செய்ய இந்த தலம் சிறப்பானதாகச் சொல்லுகிறார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் “தானே” புயலின் சீற்றம் ஆரம்பமாகியிருந்தாலும் 10-15 பெண்கள் தங்களது பிரார்த்தனையைச் செலுத்த வந்திருந்தார்கள், ஆனாலும் கோவிலில் இறைவன் தனியே இருப்பது போன்ற நினைவினைத் தவிர்க்க இயலவில்லை. இம்மாதிரிக் கோவில்களுக்கு அடிக்கடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிறது.
நமசிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!