Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Sunday, February 22, 2009

மஹா சிவராத்ரி...2009

ப்ருஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத்-பிரணமாமி ஸதாசிவ லிங்கம்

[பிரம்ம தேவனாலும், முரன் என்னும் அசுரனைக் கொன்றவனாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் நன்கு பூஜிக்கப்பட்டதும், அழுக்கற்றதாக ஒளிர்வதும், மனிதப் பிறவியால் ஏற்படும் பலவித துன்பங்களை போக்கி முக்தியை தருவதுமான ஸ்ரீஸதாசிவத்தின் வடிவான சிவலிங்கத்தை நமஸ்காரம் செய்கிறேன்]

நாளை மஹா சிவராத்திரி. ஆதி-அந்தம் இல்லாத ஜோதி வடிவான லிங்கத்தில் இருந்து பரமேஸ்வரன் காக்ஷி தந்த தினம். வராஹ வடிவில் ஸ்ரீவிஷ்ணுவும், அன்ன வடிவில் பிரம்மாவும் பரம்பொருளை, லிங்கோத்பவ மூர்த்தியின் அடி-முடி தேடிய நாள். இன்று பகலில் சுத்த உபவாசமிருத்தல் மிகச் சிறப்பு. இரவு நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜை செய்து, பஜனைகள் செய்து, சிவகாதைகள் கேட்டு இரவைக் கழித்து மறுநாள் நித்ய கர்மாக்களை முடித்து தம்பதி பூஜை போன்றவை செய்து விரதத்தை முடித்தல் நலம். போன வருடம் சிவராத்திரி சிறப்பாக 3 பதிவுகள் இட்டேன். அவற்றின் லிங்க் இதோ!.

ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவானந்த லஹரி, சிவபுஜங்கம் மற்றும் சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரங்களை இந்நாளில் படித்து சர்வேசனை, ஸதாசிவனை பூஜித்தல் சிறப்பு. சிவநாமத்தை மனதில் நினைத்தாலேயே எல்லா பாபங்களும் நீங்கி நன்மை உண்டாகும் என்று பகவத்பாதர் கூறுகிறார். இந்த வருட சிவராத்ரி சிறப்புப் பதிவாக ஸ்ரீ ஆசார்யார் அருளிய சிவ-பஞ்சாக்ஷர ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.


நாகேந்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய

நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை-ந-காராய நம: சிவாய


சிறந்த சர்பங்களை மாலையாக அணிந்தவரும், மூன்று கண்களை உடையவரும், உடல் முழுவதும் விபூதி பூசியவரும், மஹேஸ்வரரும், அழிவற்றவரும், தூய்மையானவரும், திசைகளை ஆடையாகக் கொண்டவரும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள முதல் எழுத்தான ந-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


மந்தாகினீ ஸலிலசந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமதநாத மஹேஸ்வராய

மந்தாரபுஷ்ப பஹுபுஷ்ப ஸுபுஜிதாய தஸ்மை-ம-காராய நம: சிவாய


கங்கா ஜலத்தால் குழைக்கப்பட்ட சந்தனத்தை உடலில் பூசியவரும் நந்திகேஸ்வரர் முதலான பூதகணங்களுக்குத் தலைவரும், மஹேஸ்வரரும், மந்தார புஷ்பம் போன்ற பலவிதனமா புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் இரண்டாவது எழுத்தான ம-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.



சிவாய கெளரிவதனாய அப்ஜப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாஸகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை-சி-காராய நம: சிவாய


மங்களமானவரும், பார்வதியின் முகமென்னும் தாமரைக் கூட்டத்தை மலரச் செய்யும் ஸுர்யன் போன்றவரும், தக்ஷன் இறுமாப்புடன் செய்த யாகத்தை நாசம் செய்தவரும், ஆலகால விஷத்தை சாப்பிட்டதால் நீல வர்ணமான கழுத்தை உடையவரும், தர்ம வடிவான வ்ருஷபத்தை கொடியாகக் கொண்டிருப்பவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் மூன்றாவது எழுத்தான-சி-கார வடிவானவரும், மங்களம் அருளுபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


வஸிஷ்ட கும்போத்பவ கொளதமார்ய முநீந்த்ர தேவார்ச்சித சேகராய

சந்த்ரார்க்க வைஸ்வாநர லோசனாய தஸ்மை-வ-காராய நம:சிவாய


வஸிஷ்டர், அகஸ்தியர், கெளதமர் முதலிய சிறந்த முனிவர்களாலும், அனைத்து தேவர்களாம் பூஜிக்கப்பட்ட சிரஸ்ஸை உடையவரும், சந்திரன், ஸுர்யன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாக உடையவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் நான்காவது எழுத்தான வ-கார வடிவானவரும் மங்களத்தை தருபவருமான சிவனுக்கு நமஸ்கராம்.




யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய பிநாக ஹஸ்தாய ஸநாதனாய

திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை-ய-காராய நம: சிவாய


யக்ஷனான குபேர வடிவத்தில் இருப்பவரும், ஜடைகளைத் தாங்கிக் கொண்டிருப்பவரும், பிநாகம் என்னும் வில்லை கையில் வைத்திருப்பவரும், மிக பழமையானவரும், திவ்ய மங்கள வடிவானவரும், தேவருக்கெல்லாம் தேவரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், பஞ்சாக்ஷர மந்திரத்தில் ஐந்தாவது எழுத்தான ய-கார வடிவானவரும், மங்களத்தைத் தருபவருமான சிவனுக்கு நமஸ்காரம்.

பஞ்சாக்ஷர மிதம் புண்யம் ய:படேத் சிவஸன்னிதெள

சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே


இந்த புண்யமான பஞ்சாக்ஷர ஸ்தோத்ரத்தை சிவ ஸன்னிதியில் படிப்பவர்கள், இவ்வுலகில் ஸகல போகங்களையும் அனுபவித்து, பிறகு கைலாஸத்தை அடைந்து ஸ்ரீபரமேஸ்வரருடன் ஆனந்தத்தை அனுபவிப்பார்கள்.


சகலருக்கும் சாம்ப பரமேஸ்வரன் நலம் அருளப் பிரார்த்திப்போம்.

Thursday, March 6, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 3

சிவராத்ரி கடைசி கால / ஜாம பூஜை என்பது பொதுவாக சிவ-சக்தி ஐக்கிய வழிபாடாக கொள்வது வழக்கம். சிவம் என்றாலே ஆனந்தம் என்பது பொருள். அன்னையும் சேர்ந்த ஐக்கிய ஆனந்த ஸ்வரூபத்தை எப்படி நமது முன்னோர் வழிபட்டனர் என்பதே இந்த பதிவு. சிவ-சக்தி இணைந்த அந்த ஆனந்தத்தை அதிவீரராம பாண்டியர் எப்படி சொல்கிறார் என்றால்,'ஆரா அமுதம் உண்டவர் போல் அனந்தானந்தத் தகம்நெகிழ, ஆரா இன்பம் அறிவித்தாய்; அறியேன் இதற்கோர் வரலாறே' என்கிறார். சிவ-சக்தி ஐக்கியத்தைப் பற்றி கரிவலநல்லூர் அந்தாதியில் பாடும் போது பின்வருமாறு சொல்கிறார்.

உரகா பரணத் திருமார்பும்
உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும், புரிசடையும்,
செய்ய வாயும், கறைமிடறும்
வரதா பயமும், மழுமானும்,
வயங்கு கரமும், மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக்
காட்சி கொடுத்து நின்றானே.

ஸ்ரீவைஷ்ணவம் எப்போதும் பிராட்டி-பெருமாள் இணைத்தே பேசுவதைக் கண்டிருக்கலாம். அதுபோலவே சைவத்தில் உமா-மகேஸ்வரத் திருக்கோலம் முக்திக்கு முக்கியம் என்பார்கள். ஆன்மாக்களை அறியாமையிலிருந்து நீக்கி முக்தியின் பக்கம் இழுப்பதும் சக்தியோடு கூடிய சிவமே. இந்தக் கருத்தினை,

அருளது சக்தியாகும் அரன்றனக்கு;
அருளையன்றி தெருள் சிவமில்லை;
அந்தச்சிவமின்றிச் சத்தியில்லை.

என்று கூறியிருக்கிறார்கள். இதனை ஆதிசங்கரர் சிவானந்த லஹரியினைப் பின்வருமாறு ஆரம்பிக்கிறார்.

கலாப்யாம் சூடாலங்க்ருத சசிகலாப்யாம் நிஜதப:
பலாப்யாம் பக்தேக்ஷு ப்ரகடித பலாப்யாம் பவது மே
சிவாப்யாம் அஸ்தோக த்ரிபுவன சிவாப்யாம் ஹ்ருதிபுனர்
பவாப்யாம் ஆனந்த ஸ்புர தனுபவாப்யாம் நதிரியம்.

சொல்லும் பொருளும் போல, பிரிக்க முடியாத இணைந்த கோலத்தில் விளங்கும் மாதொரு பாகன் என்ற அர்த்தநாரிஸ்வர வடிவத்தினை வணங்குகிறார். இந்த ஸ்லோகத்தில் கலாப்யாம், பலாப்யாம், சிவாப்யாம், பவாப்யாம் என்ற சொற்கள் ஒவ்வொன்றும் இரண்டு முறை எடுத்தாளப்பட்டிருக்கிறது. அந்த சொற்கள் ஈசன் - இறைவி ஆகிய இருவருக்கும் பொருத்தமான பொருளினையே தருகிறது.

இருவரும் கலைகளின் வடிவானவர்கள் என்பதை கலாப்யாம் என்கிறார். 'சதுசஷ்டி கலாமயி' என்று அன்னையின் சஹஸ்ர நாமமும், ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவன் என்று தேவாரம் சொல்வதும் இதைத்தான். அம்மை-அப்பன் இருவரும் பிறைச் சந்திரனை சூடியவர்கள், இதனையே சசிகலாப்யாம் என்கிறார். இதுவே 'சாருசந்திர கலாதரா' என்று அன்னைக்கான நாமம். அப்பனை பிறைசூடிப் பெருமானே என்றும், தூவெண் மதிசூடி என்றெல்லாம் கூறுகின்றது தேவாரம். பலாப்யாம் என்பதை நிஜதப: பலாப்யாம் என்பதாக படிக்க வேண்டும். அதாவது அம்மை அப்பன் இருவருமே தவத்தின் பலனானவர்கள் என்பதாக அர்த்தம். இதே போல ஆனந்த தனுபவாப்யாம் என்பது அன்னை-ஈசன் ஆகிய இருவரும் ஆத்மானுபவத்தில் களித்திருப்பவர்கள் என்பதாக பொருள் தருகிறது.

இவ்வாறான ஈசனை, சர்வேசனை, உமா மகேசனை உளமாற வணங்கி அவனருளை நாடுவோம். எல்லோருக்கும் ஈசன் அருள் கிட்டட்டும்.

Wednesday, March 5, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு - 2


குருத்ரோகி என்ற வேடன் தனக்கு கடனாக பணம் கொடுத்தவர்களை ஏமாற்றினான். அவனிடம் ஏமாந்தவர்கள் ஒரு நாள் அவனை பகலெல்லம் சிவன் கோவிலில் அடைத்து வைத்தனர். இரவில் அவன் விடுவிக்கப்பட்டான். விடுபட்ட பின்பு, இரவில் அவன் வேட்டையாட செல்கிறான். அப்போது ஒரு நதியினைக் கடந்து அக்கரையினை அடைந்தான். நான்கு திக்கிலும் சப்தம் கேட்கவே, பயந்து ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அங்கு வந்த மான்களை அடிக்கத் தொடங்கினான். அப்போது மான்கள், 'தாங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமது என்றும், சென்றுவிட்டு காலையில் வருவதாகவும், அவ்வாறு வராவிடில் மஹா பாபங்களைச் செய்தவர்கள் செல்லும் நரகத்திற்கு செல்லதாகவும்' கூறிச் சத்யம் செய்துவிட்டு சென்றன. இரவு முழுவது மரத்தில் உறங்காது இருக்க அம்மரத்தின் தழைகளை உருவி உதிர்த்தபடியே கண்விழித்திருந்து, பின்னர் காலையில் கிழே இறங்கினான்.

சத்யம் தவராத மான்களும் காலையில் அங்கு வந்தன, அதைக் கண்ட வேடனுக்கு நற்புத்தி உண்டாயிற்று. 'மான்கள் கூட சத்யத்தை கடைபிடிக்கிறதே?, நாம் ஏன் நல்லவனாக வாழக்க்கூடாது" என்று எண்ணி, 'இனி பிராணிகளைக் கொல்வதில்லை' என்று சத்யம் செய்தான். அப்போது அவன் முன் ஒரு சிவகணம் தோன்றி அவனிடம், 'நீ நேற்று சிவராத்ரி என்று உணராமலேயே 'சிவ சிவ' என்று விளையாட்டாக கூறியவாறு இரவு முழுவதும் வில்வ மரத்தின் மேல் விழித்திருந்து, அதன் தழைகளை கிழே இருந்த சிவலிங்கத்தில் போட்ட காரணத்தால் நீ சிவ சாயுஜ்ய பதவி அடைந்தாய்' என்று கூறி அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றதாம். அவனுடன் இருந்த மான்கள் மிருக சீர்ஷம் என்னும் நக்ஷத்ரமாயிற்று. அறியாமல் செய்த சிவராத்ரிக்கு பலன் இதுவானால், அறிந்து விதிப்படி, இயன்றவரை, பக்தி, பணிவுடன் இந்த விரதத்தை செய்வோர் பெறும் பலனைப் பற்றி எப்படிக் கூறுவது?.

சிவராத்ரியன்று சிவ பஞ்சாக்ஷர மஹா மந்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்றுக் கொள்ள மிகச்சிறந்த நாளாகும். கணவன்-மனைவி இருவருமாகச் சேர்ந்து பஞ்சாஷர உபதேசம் பெற்றுக் கொண்டு அதை அனுதினமும் ஜபித்துவர பரமசிவன் அனுக்கிரஹத்தால் நல்ல தெளிவான ஞானம், அறிவு, ஆகியவை உண்டாகும். ஏதாகிலும் சிவாபசாரம் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த்தாலோ அல்லது சிவன் சொத்து நம் குடும்பத்தை சார்ந்திருந்ததால் உண்டாகும் மனக் குழப்பம், புத்தி மந்தம், தடுமாற்றம் போன்றவை விலகிவிடும் என்று சிவ புராணம் கூறுகிறது. நமது பதிவுலக நண்பர்களுக்கு எளிதான பூஜை கிழே!.




சிவ மானச பூஜை என்னும் ஸ்லோகத்தை ஆதி சங்கர பகவத்பாதர் அருளியிருக்கிறார். லிங்கம், விக்கிரகம் போன்ற உருவங்கள் இல்லாது, செல்ல முடியாத சமயத்தில் எளிதாக மனதாலேயே சிவனைப் பூஜிக்க மிகச் சிறந்த ஸ்லோகம் இது.

ஆராதயாமி மணி ஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரி ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
சிரத்தா நதீ விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதிகுஸுமை: அபுநர்பவாய

மாயாபுரி என்னும் இந்த உடலிலுள்ள ஹ்ருதய கமலத்தில் ஸ்படிகம் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் ஆத்ம லிங்கத்தை, ஸ்ரத்தை என்னும் நதியிலிருந்து நிர்மலமான சித்தம் என்னும் ஜலத்தினால் அபிஷேகம் செய்து, ஸமாதி என்னும் புஷ்பங்களால் மீண்டும் பிறவாத வரமருள ஆராதிக்கிறேன்.

ரத்தை கல்பிதமாஸநம் ஹிமஜலை: ஸ்நாநம் சதிவ்யாம்பரம்
நாநாரத்ன விபூஷிதம் ம்ருகமாதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் சதூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்கல்பிதம் க்ருஹ்யதாம்


கருணைக்கடலே! பசுபதே! நவரத்தினங்கள் இழைத்த ஆசனமும், பன்னீரால் திருமஞ்சனமும், திவ்யமான பட்டாடையும், சுந்தராபரணங்களும், கஸ்தூரி கமழும் சந்தனமும், ஜாதீ, சம்பகம், பில்வபத்ரம் போன்ற புஷ்பங்களும், தூப, தீபங்களும் என் மனத்தாலே ஸங்கல்பித்து அளிக்கிறேன். அன்புடன் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஸெளவர்ணே நவரத்னகண்டரசிதே பாத்ரேக்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பாபலம் பாநகம்
சாகாநாமயுதம் ஜலம் ருசிகரம் கர்பூரகண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயாவிரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

ப்ரபுவே! உயர்ந்த ரத்னங்கள் இழைத்த ஸுவர்ண பாத்ரத்தில் நெய்யும், பாயசமும், பஞ்ச பக்ஷணங்களும், பால், தயிர், வாழைப்பழம், பானகம், மற்றும் பல காய்கறிகளும், ருசியுள்ள நிர்மலமான ஜலமும், பச்சைக் கர்ப்பூரம் கலந்த தாம்பூலமும் பக்தியுடன் மனத்தால் ஸமர்பிக்கிறேன், அன்புடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

சத்ரம் சாமரயோர் யுகம் வ்யஜனகம் சாதர்கம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க காஹலகலா கீதம் சந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி ஸ்துதிர் பஹுவிதா சைதத் ஸமஸ்தம் மயா
ஸ்ங்கல்பேன ஸ்மர்ப்பிதம் தவவிபோ பூஜாம் க்ருஹாணாப்ரபோ

குடையும், சாமரங்களும், விசிறியும், நிர்மலமான கண்ணாடிகளும், வீணை, பேரி, மிருதங்கம்,எக்காளம்முதலிய வாத்ய கோஷங்களுடனும், பாடல்களுடனும், பல ஸ்தோத்திரங்களுடன் ஸாஷ்டாங்க நமஸ்காரமும் மனதில் அளிக்கிறேன். ப்ரபோ! என் பூஜைகளைப் பெற்றுக் கொள்வீராக.


ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: சரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசநா நித்ரா ஸ்மாதிஸ்திதி:
ஸ்ஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா கிரோ
யத் யத் கர்ம கரோமி தத்தகிலம் சம்போ தவாராதநம்

தாங்களே நான், புத்தியே பார்வதி தேவி, பஞ்சப்ராணன்களே பணியாட்கள். என் உடம்பே உமது திருக்கோவில். நான் நுகரும் விஷயாதிகளே உமக்கு அளிக்கும் பூஜை. உறங்குவதே சமாதி நிலை. காலால் நடப்பதே உமக்குப் பிரதக்ஷிணம், பேசுவதெல்லாம் உமது தோத்திரங்கள். சம்போ! என்ன என்ன காரியங்கள் செய்கிறேனோ அவை அனைத்தும் தங்கள் ஆரதனைகளாகும்.

கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ச்-ரவண நயனஜம் வா மானஸம் வாபராதம்
விதிதம் அவிதிதம்-வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சிவசிவ கருணாப்தே ஸ்ரீமஹாதேவ சம்போ

மங்கள ஸ்வரூபராண கருணைக்கடலே! மகாதேவ சம்போ! அடியேன் கைகளாலும், கால்களாலும், வாக்காலும், உடலாலும், காதுகளாலும், கண்களாலும், மனத்தாலும், விதிப்படியும், விதிப்படி இல்லாமலும், பலவித குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் அடியேனை மன்னித்து ஆட்கொள்வீராக என்ற் தங்களை மிகுந்த பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Tuesday, March 4, 2008

சிவராத்ரி சிறப்புப் பதிவு -1



இந்துமத பண்டிகைகளில் நவராத்திரியும், சிவராத்திரியுமே 'ராத்ரி' என்னும் பெயரோடு அழைக்கப்படுகிறது.இதற்குக் காரணம் இந்த இரண்டு பண்டிகைகளும் இரவு நேரத்தில் செய்யப்படும் பூஜையினை கொண்டது என்பதைக் குறிக்கிறது. சிவராத்திரி என்பது, நித்ய சிவராத்ரி, பக்ஷ சிவராத்ரி, மாஸ சிவராத்ரி, யோக சிவராத்ரி, மஹா சிவராத்ரி என்பதாக ஐந்து வகைப்படும். இந்த தினங்களில் பகலில் உபவாசமிருந்து, மாலையில் ஆரம்பித்து இரவு நான்கு ஜாமங்களிலும் பரமேஸ்வரனுக்கு 'ஸ்ரீருத்ர' மஹா மந்த்திரத்தால் பதினோரு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பில்வத்தால் அர்ச்சனை செய்தல் வேண்டும். இவ்வாறு சிவனை ஆராதிப்பவருக்கு அவனருளால் இவ்வுலகில் தேவையானவை எல்லாம் கிட்டுவதுடனன்றி இறந்த பின் கைலாச பதவியும் கிட்டும் என்கிறது லிங்க புராணம்.


மஹா சிவராத்ரி தினமானது சிவபஞ்சாஷர ஜபம் செய்து சித்தி செய்து கொள்ள மிகச் சிறந்த நாளாகும். அறிந்தோ, அறியாமலோ உபவாசம் செய்து, இரவு கண் விழித்து ஜபம், அர்ச்சனை போன்றவற்றை செய்து சிவ புராணம் படித்து/கேட்டு இறையருளை அடையலாம். சிவராத்ரி விரதத்தை யாதொரு பலனை விரும்பாதவரும், ஸ்ரீ வைஷ்ணவரும் கூட அனுஷ்டிக்க வேண்டும் என்று கருட புராணத்தில் மஹாவிஷ்ணு கூறியிருக்கிறார். புராணங்களில் சொல்லப் பட்டிருக்கும் பல நிகழ்ச்சிகள் சிவராத்ரி தினத்திலேயே நடந்ததாக தெரிகிறது.


ஆலஹால விஷமருந்திய சிவபெருமான் மயங்கிய நேரம் சிவராத்ரி நாள். ப்ரம்மாவும், விஷ்ணுவும் அடிமுடி தேடிச் சென்ற போது சிவன் ஜோதி ஸ்வருபனாய் நின்ற சிவனை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி. சிவராத்ரி விரதமிருந்துதான் ப்ரம்மா சரஸ்வதியையும், மஹாவிஷ்ணு லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும் அடைந்தனராம். தேவி விளையாட்டாய் ஈசன் கண்களை மூட, அதன் காரணமாக உலகங்கள் இருண்டு போன போது, ஒளி வேண்டி தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்ரி காலமே. ஒரு மனுவின் காலம் முடிந்து அண்டங்கள் எல்லாம் இருண்ட சமயம் பதினோரு ருத்ரர்களும் அந்த இருள் நீங்க பரமேஸ்வரனை திருவிடை மருதூரில் பூஜித்த காலம் சிவராத்ரி.

இவ்வாறாக சிவராத்ரிக்கு ஏகப்பட்ட மஹிமைகள் உண்டு. ஈசனை வழிபட ருத்ரமும், சமகமும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. அவரவர் தமக்கு தெரிந்த, சிவ பரமான மந்திரங்கள், தேவாரம், திருவாசகம், போன்றவற்றைச் சொல்லலாம், அல்லது 'நம: சிவாய' என்று பக்தியுடன் ஜபித்தாலே போறும்.


சிவராத்ரி மஹிமைக்கு எடுத்துக்காட்டாக ஒரு கதையும், பூசலார் மனதாலேயே கோவில் கட்டியது போல ஆதிசங்கரர் மனதாலேயே ஈசனுக்கு பூஜை செய்த (சிவ மானஸ ஸ்துதி) ஸ்லோகமும், நாளைய பதிவில்.