Sunday, August 11, 2013

சிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்?............

சில நாட்கள் முன்பு நண்பன் சேஷாத்ரியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. குரு மற்றும் சிஷ்யரது குணாசியங்கள் என்பன பற்றி பெரியவர்கள் கூறியிருப்பது பற்றி பேச்சு வந்தது. அதன் தொகுப்பே இந்த இடுகை. இதில் ஏதேனும் தவறாக இருப்பின் அது எனது அறியாமை என்று அறிக. 

மனோ புத்யஹங்கார சித்தாநினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம். 

[நான் மனமல்ல, நான் அறிவல்ல, நான் அகங்காரமல்ல, இதயமோ, கண்களோ, நாக்கோ நானல்ல, மூக்கும் நானல்ல, நான் ஆகாசமோ-பூமியோ அல்ல, நான் ஆற்றலோ, காற்றோ அல்ல, என்றும் வாழு அழிவற்ற இன்பமான சிவ ஸ்வரூபமே நான்.]

மேலே இருப்பது சங்கரர் அருளிய நிர்வாண அஷ்டகத்தில் வரும் ஸ்லோகம். இந்த ஸ்லோகமானது ஆசார்யர் தமது குருவைத் தேடி நர்மதை நதிக்கரையில்
செல்கையில் கோவிந்த பகவத்பாதர் நமது ஆசார்யாரிடத்தில் யார் நீ? என்று கேட்கையில் ஆசார்யாரால் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட பகவத்பாதர் புளகாங்கிதமடைந்து நமது ஆச்சார்யரை சிஷ்யனாக ஏற்றார் என்கிறது சங்கர விஜயம். 

அறிவை, ஞானத்தைப் பெறத்துடிக்கும் சிஷ்யன் 'தான்' என்ற எண்ணமின்றி, குருவிடத்தில் முழுமையான நம்பிக்கையுடன் பாடம் கேட்க வேண்டும் என்பதைக் குறிப்பது இந்த ஸ்லோகம். ஆதி சங்கரர் தமது அபரோக்ஷானுபூதி என்னும் நூலில் குருவிடத்தில் இருக்கும் சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பட்டியலாகச் சொல்லியிருக்கிறார். 

"வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்" என்பது போல 'அப்யாசம்' பற்றிச் சொல்லுகிறார். அதாவது குரு சொல்லிக் கொடுத்ததை மீண்டும், மீண்டும் படித்து, ஆசான்/குரு சொன்னவற்றை அடுத்தமுறை அவர் கேட்கையில் உடனே சொல்லக்கூடிய சக்தி பெறுதல் என்பதே அப்யாசம். இதைச் சொல்லுகையில் 'நித்யாப்யாஸம்' என்ற அழகான ஒரு வார்த்தையை உபயோகம் செய்திருக்கிறார். அதாவது நித்யமும் அப்யாசம் செய்தல் என்பதான பொருள். இதைச் சொல்லி, பின்வருமாறு கூறுகிறார். 

இந்திரியங்களைக் கட்டுப்படுத்தல், மனதைக் கட்டுப்படுத்தல், ஆசைகளைத் துறத்தல், மவுனமாக இருத்தல், இடம், பொருள், காலம் அறிந்து செயல்படுதல், உடலை ஆரோக்யமாக வைத்திருத்தல், ப்ராண சக்தியை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஆசா பாசங்களால் அலையாது இருத்தல், தியானம், எடுத்த காரியதையே நினைத்திருக்கும் சமாதி நிலை முதலியன நல்ல சிஷ்யனது அழகாம். 

ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய க்ரந்தங்களில் ஒன்று ஸ்ரீ நியாஸ விம்சதி என்பது. அவரது நூல்கள் பலவற்றுக்கும் மற்றவர்களை வியாக்யானம் செய்ய வைத்த ஸ்ரீ தேசிகர், இந்த நியாஸ விம்சதிக்கு மட்டும் தாமே வியாக்யானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நியாஸ விம்சதி முழுவதுமே குரு-சிஷ்ய குணநலன்களைச் சொல்வதாக இருக்கிறது என்றால் மிகையாகா.

கீழே இருக்கும் ஸ்லோகம் ஸ்ரீ நியாஸ விம்சதியிலிருந்து:

ஸத்புத்தி: ஸாது ஸேவீ ஸமுசித சரித: 
தத்த்வ போதாபிலாக்ஷி
சுச்ருக்ஷிஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர: 
ப்ரச்ந கால ப்ரதீக்ஷ:
சாந்தோ தாந்தோ அனஸூயு: சரணமுபகத:
சாஸ்த்ர விச்வாஸ சாலீ
சிஷ்ய: ப்ராப்த பரீக்ஷாம் க்ருதவி தபிமதம்
தத்த்வத: சிக்ஷணீய:

சிஷ்யனின் குணங்களாக பதினைந்து குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார் ஸ்ரீ தேசிகர். அவையாவன:

 1. நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்
 2. பாகவதர்களோடு பழகும் மனப்பாங்கு இருக்க வேண்டும்
 3. சாஸ்த்திரங்களின் மீது விஸ்வாசமும், அவற்றில் இருக்கும் தனக்கான கர்மங்களை வழுவாதிருக்க வேண்டும்.  
 4. தத்துவம்-உபாயம்-பலன் ஆகிவற்றை அறிய விருப்பம் வேண்டும்.
 5. ஆசார்யனுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும்.
 6. அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும்
 7. ஆசார்யனை வணங்க வேண்டும்
 8. தனக்கு வரும் சந்தேகங்களை ஆசார்யனிடம் கேட்டுத் தெளிவுபெற தகுந்த ஸமயத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டும்
 9. இந்திரியங்களை கட்டுப்படுத்தியவனாக இருக்க வேண்டும்.
10. மனத்தை தீயவழிகளில் செலுத்தாது இருக்க வேண்டும்
11. பிறரிடத்தில் பொறாமை கொள்ளாதிருத்தல் வேண்டும்
12. ஆசார்யன் திருவடிகளைப் பற்றவேண்டும்
13. ஆசார்யனது உபதேசங்களில் முழு நம்பிக்கை வேண்டும்
14. ஆசார்யன் தரும் பரிக்ஷைகளுக்கு உட்பட வேண்டும்
15. ஆசார்யனது உதவியை என்னாளும் மறக்கக் கூடாது.