Monday, June 21, 2010

ஸத் சங்கம்....

உறவுகள், பிரிவுகள், நினைவுகள், அதன் தொடர்பான சிந்தனைகள் என்று, காலத்தின் கோலத்தில் அனைத்தும் அசைவுகளே!. சலனம் என்ற ஒன்று இருப்பது, இயற்கையை எப்போதும் உணர்த்துவதற்காகவே என்று தோன்றுகிறது. ஆக, ஆடும் மனத்தை எப்படி சமனப்படுத்துவது?. இதற்காக பிரயாசை செய்யதாலொழிய சாத்தியமாகாது. மனதை வசப்படுத்துதல் என்பதில் எப்போதும் கவனம் வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படியான சூழ்நிலையிலும்,மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகவேண்டும். சரி,மனதை அடக்க/பழக்க என்ன செய்யவேண்டும்?. நம்மைச் சுற்றியிருக்கும் இருப்பவர்களை விலக்கி விட்டால் மன மயக்கம் தீர்ந்திடுமா?.

குளத்தில் தாமரைக் கொடி வளர்கிறது, மலரையும் தருகிறது. அக்கொடியை தண்ணீரிலிருந்து எடுத்து நிலத்தில் வைத்தால் வளருமா?. தண்ணீரில் இருந்தாலும் அதன் இலைகள் நீரில் பட்டும் படாமல் இருக்கிறதே?, அது போன்ற வாழ்வு வாழ வேண்டும் என்கிறார்கள் பெரியோர். தாமரை நீரை விட்டுச் சென்றால் வளராது, அது போல நாமும் நமது சுற்றத்தை விட்டு சென்றால் மட்டும் மனதை வெல்ல முடியாது. நமது கடமைகளை விலக்கி காட்டுக்குச் செல்லுதல் என்பது தாமரைக் கொடியை மண்-தரையில் நடுவது போன்றது என்கிறார்கள். ஆகவே, நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், உலகியலில் இருந்து விலகுதல் என்று இல்லாது, தாமரை இலைத் தண்ணீர் போல இருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனதில் ஆயிரம் அபிலாஷைகளை வைத்துக் கொண்டு, வெளியில் எனக்கு ஏதும் வேண்டாம், நான் ஈச்வரனிடத்தில் மட்டுமே பந்தம் என்று இருக்கிறேன் என்றால் அது எப்படி சரியாகும்?. பாடும் பாடலென்னவோ "பிறவா வரம் தாரீர் பெம்மானே" என்பதாக இருந்தாலும், மனதென்னவோ மயக்க நிலையினை விட்டு வெளியில் வருவதில்லையே?. மரணத்தின் வாயில் கண்முன் வந்தாலும், மனமென்னவோ பண்பற்ற நிலையிலேயே இருக்கிறதே?...எப்போது தெளிவடையும் இந்த மனம் ?.

மகிழ்ச்சியாகட்டும், துக்கமாகட்டும் எல்லாம் மனதின் கல்பிதம் என்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் இருத்திக் கொண்டால் மனது தானாக அடங்கிவிடும் என்கிறார்கள் பெரியோர். இவ்வாறான நிலை எப்படி, எப்போது ஏற்படும்?. இதற்க்கான வழியைத்தான் பகவத்பாதர் "ஸத்சங்கத்வோ நிஸ்சங்கத்வம்" என்கிறார். அதாவது ஸத்புருஷர்களது [இங்கு புருஷர்கள் என்பது ஆண்களை மட்டும் குறிப்பதல்ல] தொடர்பில் இருக்க வேண்டும் என்கிறார். ஸத்புருஷர்களின் தொடர்பில் இருந்தால் மனதை நிலையாக இறையிடத்தில் செலுத்த முடியும் என்று கூறுகிறார், இந்த ஸத்-தொடர்பே ஸத்-சங்கம். தொடர்ந்து ஆன்மீகப் பெரியவர்களது நிழலில் இருந்து, அவர்களது சொல்-செயல் போன்றவற்றை கவனித்து, அதன்படி வாழ்ந்தால் மனதை தன்வயப்படுத்தலாம், இதுவே ஸத்-சங்கத்தின் பெருமை.

ஸத்-புருஷர்களுடைய தொடர்பால் நமக்கு நல்ல பழக்கங்கள் வரும். இரு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களில் ஒருவன், தினம் கோவிலுக்குச் சென்று இறை வழிபாடு செய்வது, எளியவருக்கு உதவுவது போன்றவற்றைச் செய்பவன் என்றால்,அவனுடன் தொடர்பில் இருக்கும் மற்றொருவனுக்கும், பக்தி, பரோபகாரம் போன்றவை தானாக வந்துவிடும். இதுதான் ஸத்சங்கத்தின் பயன். இவ்வாறு பக்தி இருக்கும் இடத்தில் வேதம், புராணம், சாஸ்திரம் போன்றவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படும். ஆக, ஸத்-சங்கம் என்பதன் மூலமாக ஆன்மீகத்தின் அடிப்படை அமையும் என்பது தெளிவாகிறது.

சரி ஸத் புருஷர் என்பவர் யார்? என்ற கேள்விக்கான விடையையும் பார்த்துவிடலாம். எவனுக்கு ஈச்வரனிடத்தில், வேத, தர்ம சாஸ்தரத்திடத்தில் அசையாத நம்பிக்கை இருக்கிறதோ அவரே ஸத்-புருஷர் என்கிறார் ஆதி-சங்கரர். ஆகவே நாமும் ஈச்வரனைப் பிரார்த்திப்பது மட்டுமின்றி வேத-வேதாந்தங்களிடத்தும், தர்ம சாஸ்திரங்களிடத்தும் நம்பிக்கை வைத்து நல்ல ஸத்-சங்கத்தை வேண்டுவோம். நம்மிடையே மறைந்திருக்கும் ஸத்-புருஷர்களது சகவாசத்தால் நாமும் நன்னெறிகளைப் பற்றிக் கொள்ள பராசக்தி அருளட்டும்.

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர!

Friday, June 11, 2010

மஹா காளீ, மஹா யோகேஸ்வரேஸ்வரீ




காலத்தை முடிவு செய்பவள் என்பதாகவும், காலனான ம்ருத்யுவுக்கும் முடிவு ஏற்படச் செய்பவள் என்பதால் காளீ என்ற பெயர் அம்பாளுக்கு. உஜ்ஜயினீ பீடத்தில் இருக்கும் சிவனது பெயர் மஹாகாளர், அவருடைய பத்னி "மஹாகாளீ". இவள் எப்படிப்பட்டவளென்றால், ப்ரபஞ்சத்தையெல்லாம் தன்னுள் அடக்கி இருப்பவள் என்பதாக "மஹாக்ராஸா" என்று உடனேயே சொல்கிறார்கள். க்ராஸா என்றால் பிடி என்று பொருள். அதாவது ப்ரபஞ்சத்திற்கு மிகப்பெரிய பிடிப்பாக இருப்பவள். அந்தர்முகமாக இருக்கும் போது ப்ரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கியிருக்கும் அவளது ஆஹாரமும் மிகப் பெரியதாகத்தானே இருக்க முடியும்?. அதைச் சொல்லுவதாக "மஹாசனா". மஹாசனா என்பது இங்கே ப்ரபஞ்சத்தையே ஒரு கவளம் ஆகாரமாகக் கொள்பவள் என்ற பொருளில் சொல்லியிருக்கிறார்கள்.

இதே மஹாசனா என்னும் நாமத்திற்கு மிகப் பெரிய ஆசனத்தை உடையவள் என்றும் பொருள் உண்டு. யாரை தெரிந்துவிட்டால்/உணர்ந்துவிட்டால் தெரியவேண்டியது வேறு ஏதும் இருக்காதோ, அவருக்கு மஹதீ என்று பெயர். அப்படியான மஹத்தான புத்தியைத் தரும் அம்பிகையை "மஹாபுத்தி:" என்று சொல்லி, இப்படிப்பட்ட மஹத்தான புத்தியை அருள்பவளே மஹத்தான ஸித்தியையும் அருளும் அவளே "மஹாஸித்தி".

ஸித்திகள் என்பவை நாம் அறிந்த அணிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசித்வம், வசித்வம், என்ற அஷ்டமாசித்திகள் தாம். இவற்றையெல்லாம் தனது ப்ரசாதமாக அருள்கிறாளாம். இந்த சக்திகளைப் பெற்றவர்கள் யோகேச்வரர்கள் என்று அழைப்போம். அவ்வாறான கேச்வரர்களுக்கெல்லாம் தலைவியாக ஈச்வரியாக இருக்கிறாள் அம்பிகை, அதைச் சொல்வதே "மஹாயோகேச்வரேச்வரீ" என்னும் நாமம்.

இவளது தந்திர சாஸ்திரங்களையும், யந்திரத்தையும் மஹத்தானதாகவே இருப்பதாகச் சொல்லி, அவற்றை உடையவள் என்பதே முறையே "மஹா தந்த்ரா", "மஹா யந்திரா" என்று கூறுகிறார்கள். இவளது மந்திரமும் மஹத்தானது, அந்த சிறப்பான மந்திரத்தை உடையவள் "மஹா மந்த்ரா" எனப்படுகிறாள்.

Wednesday, June 9, 2010

பரமாணவே, பராத்பரா, பாசஹஸ்தா, பாசஹந்த்ரீ


இன்று பிறந்தநாள் கொண்டாடும் நமது நண்பர் திராச அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள். இந்த பதிவினை அவரது பிறந்தநாள் பரிசாக்குகிறேன்.


அம்பிகையை நிலவுடன் ஒப்பிடும் நாமங்கள் சிலவற்றை முன்னரே பார்த்தோம், இப்போது அவளே ஜ்யோதி ஸ்வரூபம் என்னும் நாமம்.ச்ருதியில் ப்ரம்ஹமே ஸுர்யன் முதலானவர்களுக்கு ப்ரகாசத்தை அருளுவதாகச் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட ஜ்யோதி ஸ்வரூபமான பரம்பொருளே அம்பிகை என்பதை "பரம்ஜ்யோதி" என்று கூறுகிறார்கள். "தாம" என்றால் தேஜஸ், நிலை, இருப்பிடம் ஆகிய அர்த்தங்கள் உண்டு. நிறைந்த விசேஷமான நிலையில் இருப்பவள் என்றோ, அல்லது நிறைந்த தேஜஸுடன் இருப்பவளென்றும் சொல்லும்படியான நாமமே "பரம்தாம" என்பது. அம்பிகை ஸர்வ்வோத்தம பதமாக இருப்பவள் என்றும் சொல்லலாம். ப்ரயோகத்தில்/நாமாவளியாகச் சொல்லுகையில், பரஸ்மை ஜ்யோதிஷே நம: என்றும் பரஸ்மை தாம்னே நம: என்றும் கூறவேண்டும்.

இப்படி ஜ்யோதிஸ்வரூபமாகவும், நிறைந்த தேஜஸுடனும் இருப்பவளை அணுவாகவும் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் வாக்தேவதைகள். மிக ஸூக்ஷ்மமான பொருளான அணுவாகச் சொல்லியிருப்பதே "பரமாணு:" என்பது. அதாவது அறிவதற்கு முடியாத ரூபத்தை உடையவளாம். இன்றைய விஞ்ஞானமும் அணுவை ஏதேதோ கருவிகளைக் கொண்டே உணர்கிறார்களே தவிர சாதாரணக் கண்களால் காண இயலவில்லையே?...உணர்வால் அறியப்படுபவள் என்பதான பொருள் சரிதான். இப்படி அணுவாக இருப்பவளே பரம ஸ்ரேஷ்டமாகவும் இருக்கிறாள். திரிமூர்த்திகளைவிட ஸ்ரேஷ்டமானவர் என்பதாக "பராத்பரா" என்பதற்குப் பொருள் சொல்லுகிறார் பாஸ்கரர்.இதையே இன்னொருவிதத்திலும் சொல்லலாம். ப்ரம்ஹாவின் ஆயுளைக் குறிக்கும் சொல் பரம் என்பது. அவ்வாறான பரம் என்பதையும் விஞ்சிய, அதற்கு மேற்பட்டவள் அம்பிகை என்றும் கூறலாம்.

அம்பாள் தனது ஒரு கையில் ராகஸ்வரூபமான பாசத்தை இடது கையில் வைத்திருப்பதால் அவள் "பாசஹஸ்தா", இதையே பாசத்தை தன்கையால் விலக்குபவள் என்றும் கூறலாம். இவ்வாறு பாசத்தை, அவித்யைகளைப் போக்குபவள் என்பதே "பாசஹந்த்ரீ". அனிருத்தன் பாணாசுரனது நாக பாணத்தால் கட்டுண்டு இருந்த சமயத்தில் அம்பாளுடைய அனுக்ரஹத்தால் அவன் விடுவிக்கப்படுகிறான், இதை இந்த நாமவுக்குப் பொருளாகச் சொல்லியிருக்கிறார் கணேசய்யர். இவள் தனது பக்தர்களின் எதிரிகளது மந்திரங்களை சிறப்பாக விலக்குகிறாளாம், ஆகவே அவளை "பரம் மந்த்ர விபேதினீ" என்று சொல்கிறார்கள் தேவதைகள். பிறரால் ஆபிசாரம் போன்ற தவறான விஷயங்களுக்கு ப்ரயோகம் செய்யும் மந்த்ரங்களை நாசம் செய்து, அவை தனது பக்தர்களை தாக்காது காப்பவள் என்றும் கூறலாம். பரமான (சிறப்பான) மந்த்ரமாகிய பஞ்சதசி என்னும் தனது மந்திரத்தை தனது உபாசகர்களுக்கு பலவிதமாகச் சொல்லுபவள் என்றும் சொல்லலாம்.