Friday, July 27, 2012

முகுந்தா, முக்தி நிலையா,நாராயணீ......



நாராயணன் என்பதற்கு பல விதங்களில் பொருள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம். நரன் என்று ப்ரம்ஹத்தையும் குறிப்பிடுவதுண்டு. ப்ரம்ஹத்திலிருந்து நீர் உருவானதால் அதற்கு நீரை நாரம் என்று கூறுவார்கள். நீரில் சயனித்திருப்பவரை நாராயணன் என்று குறிப்பிடுவது முறைதானே?. இதே போல நரன் என்பது ஜீவனைக் குறிக்கும் சொல்லாகக் கொண்டால், அயனன் என்பதற்கு அடையும் பொருள் என்று பொருள் சொல்லி, ஜீவன்கள் கடைசியில் அடையும் பொருள் என்பதாக நாராயணன் [நராணாம் அயனம் யஸ்மாத் தஸ்மான்னாராயண ஸ்ம்ருத:] என்று கூறுகிறது ப்ரம்ஹ-வைவர்த்த புராணம்.

ப்ரம்ஹத்திலிருந்து உருவான ஜீவன்களை, அந்த ப்ரம்ஹமே வழிநடத்தி தன்னிடத்தில் அழைத்து வந்து சேர்த்துக் கொள்வதால் ப்ரம்ஹமே நாராயணன் என்றும் கூறியிருக்கிறார்கள். இப்படி தூரீயமான ப்ரப்ரம்ஹத்தையே பரமசிவன், மஹாவிஷ்ணு என்றெல்லாம் கூறுகிறோம். ஆக, நாராயணன் என்ற பதம் ஈசனையும் குறிக்கக் கூடியது என்பது நீலகண்ட தீக்ஷதர் போன்ற பெரியவர்கள் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது. அம்பிகை பரப்ரம்ஹத்தில் அபேதமாக இருப்பதால் அவளும் "நாராயணீ " என்று வாக்தேவதைகளால் அழைக்கப்படுகிறாள். பத்மநாப சஹோதரி, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி என்றெல்லாம் அம்பிகையின் நாமங்கள் இருப்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

மஹாவிஷ்ணுவை முகுந்தன் என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம். முகு: என்றால் மோக்ஷம், மோக்ஷத்தை அருளுவதால் அவன் முகுந்தனாகிறான். "முகுந்தா" என்று அம்பிகையையும் குறிப்பிடுகிறார்கள் வாக்தேவதைகள். அம்பிகையும் தனது பக்தர்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யத்தை அருளுவதால் அவளும் முகுந்தா என்று அழைக்கப்படுகிறார்கள். அம்பிகையே விஷ்ணு ரூபம் எடுத்து வந்ததாகச் சொல்வதை இங்கு மனதிலிருத்திப் பார்க்க வேண்டும். தந்த்ர ராஜம் என்ற நூலில் மந்த்ரங்கள் பற்றிச் சொல்லும் போது, கோபால மந்திரம் பற்றிச் சொல்லுகையில் ஸ்ரீக்ருஷ்ணரது பாகவதத்தில் கோபிகைகளாக வந்தவர்கள் எல்லாம் அம்பிகையின் சக்திகளே என்று கூறியிருப்பதாகச் சொல்லுவார் எனது குரு. நமக்கெல்லாம் தெரிந்த மன்னார்குடி ராஜகோபாலனது பீடத்தில் ஸ்ரீசக்ர யந்த்ரம் பொறிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ராஜகோபாலர் வருஷத்தில் ஒருநாள் ஸ்ரீசக்ரத்தில் இருக்கும் அம்பிகையாக அலங்கரித்துக் காக்ஷி கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.


கேரளத்தில் ஒரு மஹாவிஷ்ணு க்ஷேத்ரம் (பெயர் நினைவில் இல்லை), அங்கு ஜகன்நாதர் என்ற பெயரில் இருக்கிறார் பெருமாள். அவர் ஆசமனம் செய்வது போன்று தனது வலது கையை முகவாய் அருகில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மட்டுமின்றி பூரியிலும் பெருமாள் பெயர் ஜகன்நாதர் என்பதை அறிவோம். ஜகன்நாதர் என்றால் ஜகத்திற்கு நாயகர் என்று பொருள் சொல்லிவிடலாம். அம்பிகையைப் போற்றும் போது வாக்தேவதைகள் அவளை, "சராசர ஜகன்நாதா" என்கிறார்கள். அதாவது சராசரத்தில் இருக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் ஜகன்மாதாவாக, ஈஸ்வரியாக இருப்பவள் என்று பொருள்.

இப்படி, முகுந்தா, ஜகன்நாதா என்றெல்லாம் அழைக்கப்படும் அம்பிகையே முக்தி ஸ்தானமாக இருப்பவள் என்பதை, "முக்தி நிலையா" என்று கூறுகிறார்கள். அதாவது, ஸாலோக்ய, ஸ்மீப்ய, ஸாரூப்ய, ஸாயுஜ்ய, கைவல்யம் என்ற ஐந்து விதமான முக்திகளிலும் அடையப்படுபவள் என்று பொருள். இப்படி முக்தியை அளிக்கும் அம்பிகையின் கண்களை "பத்ம நயனா" என்று அழைக்கிறார்கள்.

தாமரைப் பூக்கள் வெண்மை மற்றும் சிவப்புக் கலந்த நிறங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். பாரதியும் "வெள்ளைத்-தாமரைப் பூவில் இருப்பாள்" என்று சரஸ்வதியைப் பாடியிருப்பதை நாமறிவோம். சிவப்புத் தாமரை போன்ற காந்தியுடையவள் அம்பிகை என்பதை "பத்மராக ஸமப்ரபா" என்கிறார்கள் வாக்தேவிகள். குண்டலினீ சிவந்த நிறமுடையதாம், அம்பிகையே குண்டலினீ சக்தியாக இருப்பதைச் சொல்வதாகவும் இந்த நாமத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ப்ர் பெரியோர்.
....................எல்லோருக்கும் வரலக்ஷ்மி விரத நல்வாழ்த்துக்கள்....................