Friday, July 29, 2011

புண்யகீர்த்தி; முக்தா; லீலா விக்ரஹ தாரிணீ; பக்தநிதி



தேவீ பாகவதம், செளந்தர்ய லஹரி போன்றவை அம்பிகையின் கீர்த்தியைச் சொல்வதாக இருக்கும் முக்கிய நூல்கள். இவற்றில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகங்களும் நமது நியாயமான விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடியதாக இருக்கிறதாலேயே ஒவ்வொரு ஸ்லோகங்களுக்கும் உரிய பலன்களைத் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இந்த ஸ்லோகங்களில் என்ன இருக்கிறது என்று பார்த்தோமானால் அவை அம்பிகையின் கீர்த்தியைப் செல்லுவதே. இந்தக் கீர்த்திகளைப் பாராயணம் செய்வதால் நமக்கு புண்யத்தை, முக்தியை அருளுபவள் என்பதாகத் தெரிகிறது. இவ்வாறு புண்யத்தை அருளும் கீர்த்தியுடையவள் புண்ய கீர்த்தி.


இன்றும் நாம் சர்வாலங்காரங்களுடன் இருக்கும் பெண்களை மஹாலக்ஷ்மி போல் இருக்கிறாள் என்றும் அம்பாளே நேரில் வந்தது போல இருக்கிறது என்றும் கூறுவதைப் பார்க்கிறோம், சில பெண்களைப் பார்த்தவுடன் கை கூப்பி வணங்குகிறோம், முக்தா என்றொரு நாமம், முக்தா எனறால் செளந்தர்ய ஸ்வரூபமானவள் என்று பொருள், இதே முக்தா என்னும் நாமத்திற்கு மூடன் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. முன்பு க்ஷயவினிர்முக்தா என்றொரு நாமத்தைப் பார்த்தோம், இந்த நாமத்தின் அடுத்ததாக வருவதே முக்தா. தொடராக இந்த இரண்டையும் அடுத்தடுத்துச் சொல்லுகையில் '(க்ஷயவினிர்முக்தா-முக்தா' என்கையில்), இந்த நாமத்தை "அமுக்தா" என்பதாகப் பிரித்துச் சொல்லுவது ஒருமுறை. இவ்வாறு அம்பிகையை வணங்காதவர்களை அமுக்தர்களாக, மூடர்களாகச் சொல்லுகிறார்கள் சில பெரியவர்கள்.

ஜனனம் என்று ஒன்று இருந்தால்தானே மரணம்?, அம்பிகையை அஜா, அதாவது ஜனனமற்றவள் என்று கூறுகிறது இன்னொரு நாமம். க்ஷயவினிர்முக்தா என்றால் மரணமில்லாதவள் என்றும் பொருள். அப்படியென்றால் பல சரீரங்களில் ஸதியாக, காளி,மாரி கெளமாரி போன்ற சப்தமாதர்களாக எல்லாம் தோன்றியிருக்கிறாளே என்றால், அது அவளது லீலைகள். மிகச் சுலபமாக பல லீலைகளைச் செய்வதற்கு ஏற்ப அவதாரங்கள் எடுக்கிறாள். இப்படி பல லீலா வினோதங்களுக்கு ஏற்ப அவதரிக்கிறாளே,அந்த மரணமில்லா மஹாசக்தி, அவளை லீலா விக்ரஹ தாரிணீ என்கிறார்கள் வசின் தேவதைகள். இந்த நாமத்தைப் பற்றி யோக வாசிஷ்ட்டத்தில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

உபாசகர்களுக்கு, பக்தர்களுக்கு இவளே சர்வ நிதியும், ஆகவேதான் இவளை பக்தநிதி என்கிறார்கள். இவள் பக்தர்களை மட்டுமல்லாது சகல ஜீவராசிகளுக்கும் வழிகாட்டியாக இருப்பதால் நியந்த்ரீ, அதாவது வழிகாட்டி. அகில உலகத்திற்கும் இவளே ஈச்வரி. நிகிலம் என்றால் பிரபஞ்சம் என்று பொருள். நிகிலேச்வரி என்பது பிரபஞ்சத்திற்கு ஈச்வரி என்பதாகச் சொல்வது.

Monday, July 25, 2011

கோத்ரம் & ப்ரவரம் - ஒர் அறிமுகம்......

சமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.


அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.



"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.


அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.



ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.



2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது


3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.


4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.


5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்



2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.


3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.


4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.


5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.

Thursday, July 21, 2011

காமாக்ஷி...கடாக்ஷி - 1 (ஆடி வெள்ளி சிறப்புப் பதிவு)

காமாக்ஷி பற்றி எழுத வேண்டும் என்று பலநாட்களாக நினைத்திருந்தேன், இன்றைய தினம் ஆடி முதல் நாள், வெள்ளிக் கிழமையும் கூட. அன்னையின் அருள் வேண்டி இந்தச் சிறுதொடரை எழுத ஆரம்பிக்கிறேன். வரும் ஆடி வெள்ளிகளில் தொடராக 2-3 பதிவுகள் எழுத இருக்கிறேன்.


காமாக்ஷி பற்றி சொல்லப்பட்ட புராணங்கள் பின்வருமாறு.




1. மார்க்கண்டேய புராணத்தில் 'தேவீ மகாத்மீயத்தை அடுத்ததாக வரும் "ஸ்ரீ காமாக்ஷி விலாஸம்".


2.பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக உள்ள லலிதோபாக்யானம் மற்றும் த்ரிபுரா ரஹஸ்யம் என்னும் க்ரந்தம்.


3. ஸ்காந்த புராணத்தில் ஸநத்குமார ஸம்ஹிதையிலுள்ள 'காஞ்சீ மஹாத்மீயம்' குறிப்பாக அதில் வரும் 'தக்ஷ காண்டத்தில்'.


4. சில செவிவழிக் கதைகள்.




டிஸ்கி:

******************************************

சாதாரணமாக புராணங்கள்/சரிதங்களைப் படிக்கும் போது ஆங்காங்கே தெய்வங்களிடை உயர்வு-தாழ்வு தொனிக்கலாம், அது ஒரு குறிப்பிட்ட மூர்த்தியிடம் பக்தியை வலுப்படுத்துவதற்கான உத்தேசமேயன்றி, பிற தெய்வங்களை மட்டந்தட்டுவதல்ல என்பது நாம் அறிந்ததே. இந்தத் தொடருக்கும் அது பொருந்தும் என்றுணர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மனிதர்களைப் போலவே, மனிதர்களுக்கு ஆதர்சமாய் லீலை புரிவதற்கு என்றே பராசக்தி பல கடவுளராகி இப்படியெல்லாம் செய்துள்ளார் என்பதை மனதிலிருத்தி மேற்கொண்டு படிக்க வேண்டுகிறேன்.

******************************************


தேவியின் பல வடிவங்களுள், நாற்கரம் கொண்டு, அவற்றில் கரும்புவில், மலரம்பு, பாச-அங்குசம் தாங்கி அமர்ந்த கோலத்தில் இருப்பவளேகாமாக்ஷி மற்றும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ராஜராஜெஸ்வரி. பஞ்ச தசாக்ஷரி, ஷோடசீ ஆகிய மந்த்ரங்களில் தலையானதாக உள்ள ஸ்ரீவித்யா மந்த்ரங்களில் விவரிக்கப்பட்ட லக்ஷணப்படி அமைந்த விக்ரஹமே காஞ்சீ காமாக்ஷி விக்ரஹம். ஆக மொத்தமாக மந்த்ரங்களில் சிறந்த ஸ்ரீவித்யாவால் காட்டப்பட்ட ஸ்ரீ மாதாவின் ரூபம் காமாக்ஷீ.


இந்த தேவி எங்கு வாசம் செய்கிறாள்?.


பிரளய காலத்தில் எல்லாம் அழிந்தாலும், அழிவில்லாத 'அக்ஷரம்' எனப்படும் ஓங்கார ஒலியின் அலைகளான இருபத்து-நான்கு சப்த சலனங்களிடையே அவள் வாசம் செய்கிறாள்.



ஆம்! அந்த இருபத்து-நான்கு சப்தங்களை, இருபத்து-நான்கு ஸ்தம்பங்களாகக் கொண்ட மண்டபத்தில் அவள் வாசம் செய்கிறாள் என்றே காமாக்ஷி விலாஸத்தில் சொல்லப்படுகிறது.



அதென்ன 24 சப்தங்கள்?. 16 கால், 1000 கால் மண்டபங்கள் எல்லாம் இருக்கும் போது, ஏன் 24 சப்த ஸ்தம்பங்களாலான மண்டபம்?.


காயத்ரீ மஹாமந்திரம் இருபத்தி-நான்கு அக்ஷரம் கொண்டது, அந்த மந்த்ரத்தின் மஹிமையை நமக்கு விளக்கும் விதமாக காயத்ரி மண்டபத்தில் வசிக்கிறாள் ஸ்ரீமாதா. காஞ்சி காமாக்ஷி கோவிலில் அன்னையின் வாசஸ்தலம் காயத்ரி மண்டபம் என்றே கூறப்படுகிறது.

சரி, அதென்ன காமாக்ஷி என்ற பெயர்?. இதன் விளக்கம் என்ன?.


'க' என்ற பதம் பிரம்மனைக் குறிக்கும்; 'கஸ்மை தேவாய' என்று வேதத்தில் பல இடங்களில் பிரம்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல,


'அ' என்பது சிவனின் பெயர். அ'காரத்திலேயே ஆண்பால் நாமங்கள் பெரும்பாலும் முடிகிறது உ.ம்: சிவ, ராம, க்ருஷ்ண என்பதாக. பிரகிருதிக்கு அப்பாற்பட்ட புருஷ ரூபம் சிவம்.



வேதத்தில் 'ம' என்ற சப்தம் நாராயணனைக் குறிப்பதாம். இதனாலேயே 'மா' என்ற சப்தம் மஹாலக்ஷ்மியைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது கணவன் 'ம' என்பதாலேயே, இவள் 'மா' ஆகிறாள்.



ஆக, 'க' என்ற ப்ரம்மன், 'அ' என்ற சிவன், 'ம' என்ற விஷ்ணு ஆகிய மூவரும் எவளது 'அக்ஷி'யிலிருந்து தோன்றினார்களோ, அவள் காமாக்ஷி. ('அக்ஷி' என்றால் கண்).


பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற்பாடலில், "திருமகள் வலக்கண், வாக்கின் சேயிழை இடக்கண், ஞானப்பெருமகள் நுதற்க்கண்ணாகப் பெற்று வான் செல்வம் கல்வி அருமைவீடளிப்பாள்" என்பதாக கூறுகிறார். பரஞ்சோதி முனிவர் மீனாக்ஷியை அப்படிக் கூறினாலும், அது காமாக்ஷியை மனதிலிருத்தியே என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப் போனால், ஸ்ரீ லலிதாவின் சேனை நாயகி (அ) தண்டினி எனப்படுபவள் வாராஹி ரூபம். அதே போல மந்த்ரிணியாக இருப்பது ராஜ மாதங்கீ. அதனால் தான் அகிலாண்டேஸ்வரியை தண்டினியாகவும், ராஜமாதங்கீ ரூபத்தில் கிளியுடன் இருப்பதாலும், மீனாக்ஷி கையில் கிளியைக் கொண்டதாலும் அவளை மந்திரிணியாக ஆதி சங்கர பகவத்பாதர் சொல்கிறார்.



மனிதனுடைய குணத்தை அவனுடைய கண்களிலிருந்தே அறியலாம் என்பார்கள். திருடனின் கண்களில் இருக்கும் தடுமாற்றம் அவனைக் காட்டிக் கொடுத்துவிடும். காதலுடைய கண்களில் எத்தனையோ விதம், கெஞ்சும் கண்கள், கொஞ்சும் கண்கள்,மிஞ்சும் கண்கள் என்பதாக பலவற்றையும் கவிஞர்கள் சொல்லக் காண்கிறோம். கடைக்கண்ணால் பார்க்கும் பார்வையை தயாளத்தின் உருவமாகவும், அன்பின் தோற்றமாக அருள் நிறைந்த தேஜசுடனும் சொல்வது வழக்கம். காதலியின் கடைக்கண் பார்வைக்கு காதலனும், பரமேஸ்வரியின் கடைக்கண் பார்வைக்காக பக்தனும் காத்திருப்பதாகச் சொல்வர்.



"தனந்தரும், கல்விதரும்" என்று ஆரம்பித்து அன்னையின் கடைக்கண் பார்வையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு பட்டியலே தந்திருக்கிறார் அபிராமி பட்டர். இதையே ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பாடலில் "சாரதா ரமா நயநே' என்று கூறுகிறார். சிவப்பிரகாச ஸ்வாமிகள், "நின் திருமுக பங்கயத்தில் கண்ணாயினர் உனக்கு அவ்வலைமாதும், கலைமகளும் பெண்ணார் அமுதனையாய்" என்கிறார். "ஸசாமர ரமா வாணீ ஸவ்ய தக்ஷிண ஸேவிதா" என்கிற லலிதையின் நாமா என்ன சொல்கிறதென்றால், வாணியும், ரமாவும் (லக்ஷ்மி), அன்னைக்கு இருபுறங்களிலும் சாமர சேவை செய்வதாக வருகிறது. ஆக காமாக்ஷி ரூபத்தில் கண்களாக கலைமகளும், அலைமகளும் இருப்பதாகவும் கொள்ளலாம்.


சிவ சிவ பச்யத்திஸமம் காமாக்ஷி கடாக்ஷீதா: புருஷா:

விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவது பிம்போஷ்டம்



அதாவது காமாக்ஷியின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு விபிநம், பவநம் ஆகிய இரண்டும் ஒன்றாகவே தெரியுமாம். விபிநம் என்றால் காடு, பவநம் என்றால் மாளிகை. காமாக்ஷியின் அருள் பெற்றவர் ஞானியாகிவிடுவர், ஆகவே அவர்களுக்குமித்ரம்-அமித்ரம், சிநேகிதன்-சத்ரு, போன்ற வேறுபாடுகளோ அல்லது யுவதியின் ஒஷ்டம் (சிவந்த உதடுகள்) மற்றும் லோஷ்டம் (ஓட்டு சில்லு) போன்றவற்றில் எந்த வேறுபாடுகள், காமனைகள் இல்லை என்று பரமாசார்யார் கூறுகிறார்.


தெய்வத்தை ஸ்திரீ ரூபமாக வணங்குவது என்பது நமது வேதத்தில் மட்டுமே சொல்லப்பட்டிருக்கறதாகச் சொல்கிறார்கள். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், அன்னையின் தரிசனத்தை வேண்டும் போது, "அம்பிகே!, தங்களை நான் சேவிக்க திவ்ய ரூபத்துடன் தரிசிக்க அருள வேண்டும். வாயில் தாம்பூலமும், கண்களீல் மையும், நெற்றியில் காஷ்மீர குங்குமமும், கழுத்தில் முத்து ஹாரமும், இடுப்பில் பட்டாடையும், தங்க ஒட்டியாணமும் அணிந்த பர்வத ராஜ குமாரியாக தரிசனம் அருள வேண்டும்" என்கிறார். இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட ரூபத்தில், கைகளில் பாச-அங்குசமும், கரும்புவில்-மலரம்புகளுமாய் காக்ஷி தருகிறாள் அம்பிகை.