Friday, January 30, 2009

ஐந்தொழிலும் செய்பவள் பராசக்தி - அவள் பதமலர் பணிவோம்


தை வெள்ளிக் கிழமைச் சிறப்பு இடுகைகளாக கடந்த இரு வாரங்களில் கொப்புடையாளையும், கண்ணாத்தாளையும் பற்றிக் கொஞ்சம் எழுதினேன். மூன்றாவது வெள்ளிக்கு என்ன பதிவு போடலாம் என்று நினைக்கையில் அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்பதாக முன்பு சில இடுகைகள் இட்டது போல இன்னும் சில நாமங்களை எழுதலாம் என்று தோன்றியது. அந்த சிந்தனையின் விளைவே இவ்விடுகை.

அன்னைக்குப் "பஞ்ச க்ருத்ய பராயணா" என்று ஒரு நாமம், அதாவது, ஐந்தொழிலை செய்கிறவள் என்று அர்த்தம். முத்தொழில் என்றால் பலருக்கும் தெரியும், படைத்தல், காத்தல், அழித்தல் என்று. ஆனால் ஐந்தொழில்கள்?. ஆமாம், மூத்தொழில்களுடன், மறைத்தல் (திரோதானம்), மற்றும் அருளுதல் என்பதைச் சேர்த்து ஐந்தொழில்கள் என்பர். இந்த ஐந்து தொழில்களுமே அன்னை செய்கிறாள் என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். அபிராமி அந்தாதியில் பூத்தல், காத்தல், கரத்தல் என்று பட்டர் கூறியதும் இத்தொழில்களையே. இந்த ஐந்து தொழில்களைச் செய்யும் அன்னையின் நாமாவளிகளைப் பார்க்கலாம்.

ஸ்ருஷ்டி கர்த்ரீ - ப்ரம்ம ரூபா

கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி

ஸம்ஹாரிணி - ருத்ர ரூபா

திரோதானகரீ - ஈஸ்வரி

ஸதாசிவா - அனுக்ரஹதா


மேலே இருப்பது 5 தொழில்களை நடத்தும் அன்னையை அத்தொழிலுக்கான நாமங்கள்களுடன் சொல்லியிருக்கிறது. இதனையே அபிராமி பட்டர் அவர்கள், "பூத்தவள், காத்தவள், பின் கரந்தவளே" என்று முத்தொழிலுக்கும் காரணமாகச் சொல்லியிருக்கிறார். தேவி பாகவதத்தில் சொல்லியிருப்பது இங்கே நினைவு கூற வேண்டும். பாகவதத்தில் புவனேஸ்வரி, த்ரிமூர்த்திகளுக்கு தரிசனம் அளித்த போது அவர்களுக்கு அனுக்ரஹித்து தன்னிலிருந்து சக்திகளை (சரஸ்வதி, லக்ஷ்மி, கெளரி) பிரித்துக் கொடுத்து அச் சக்திகளைக் கொண்டு முத்தொழில் செய்யப் பணித்ததாக வருகிறது. அதன்படி பார்த்தால் இந்த மும்மூர்த்திகளும் அன்னையின் சக்தி ரூபங்களைக் கொண்டே முத்தொழில் செய்வதால், அன்னையே அத்தொழிலுக்கு அதிபதியாகிறாள்.

"ஸ்ருஷ்டி கர்த்ரீ" - ஸ்ருஷ்டித் தொழிலை, அதாவது படைப்புத் தொழிலைச் செய்பவள் என்பது இந்த நாமம். யார் படைப்புத் தொழிலைச் செய்வது?, பிரம்மா, அந்த பிரம்மாவாக இருப்பவளை "பிரம்ம ரூபா" என்கிறது சஹஸ்ரநாமம். "புவனங்கள் ஏழையும் பூத்தவள்" என்று பட்டர் இவளைச் சொல்லியது சரி தானே?.


"கோப்த்ரீ" - காப்பாற்றுபவள் என்று பொருள். சத்வ குணத்தின் அடிப்படையான தொழில் இது. மஹாவிஷ்ணுவைக் காக்கும் கடவுள் என்று கூறுவது வழக்கம். கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து காத்த கிருஷ்ணனுக்கு 'கோவிந்தா' என்னும் நாமம் அளித்தனர். 'கோ' என்றால் பசு என்று மட்டும் அர்த்தம் அல்ல, 'கோ' என்றால் பூமி என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. கிருஷ்ணனுக்கு பசுக்களை மட்டும் காத்ததால் வந்ததல்ல கோவிந்த நாமம். சகல ஜனங்களையும் அப்போது காத்ததால் கோவிந்தா என்ற நாமம். ஆக "கோவிந்த ரூபிணி" என்பது அந்த காக்கும் கடவுளது உருவில் அன்னை இருப்பதால் அவளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையே பட்டர் பிரான், "பூத்தவண்ணம் காத்தவளே" என்று கூறியிருக்கிறார்.


"ஸம்ஹாரிணி" - அழிப்பவள் என்று பொருள். எதை அழிப்பவள்?. நம்மிடமிருக்கும் கெட்ட எண்ணத்தை, அசுர குணத்தை அழிக்கிறாள். தேவியே, தமோ குணமுடைய ருத்ரன் வடிவில் இருந்து அழித்தலைச் செய்கிறாளாம். அதனால் "ருத்ர ரூபா", அதாவது ருத்ரனின் வடிவத்தில் இருப்பவள்.


"திரோதானகரீ" - மறைத்தலை, மாயையைச் செய்பவள் என்பது பொருள். அன்னைக்கு, "திரஸ்காரிணி" இன்னொரு பெயரும் உண்டு. அந்த சக்தியும் மறைத்தலைச் செய்பவளே. அழித்தல் தொழிலைச் செய்தபின் அவ்வாறு அழித்ததை தன்னுள் ஒடுக்கி வைப்பவள் என்பதால் "ஈஸ்வரி" என்று கூறுகின்றார் பாஸ்கர ராயர். சம்ஹாரத்திற்குப் பிறகு மறைக்கும் இதைத்தான் "பின் கரந்தவளே" என்று பட்டர் கூறியிருக்கிறார் என்று தோன்றுகிறது.


இதுவரையில் நான்கு தொழில்களைச் செய்பவள் மற்றும் அதன் சார்பாக அவளுக்கு அளிக்கப்பட்ட நாமங்கள் என்றும் பார்த்தோம். அடுத்து வருவது "சதாசிவா" என்று முதலில் நாமத்தையும் பின்னர் "அனுக்ரஹதா" என்று தொழிலையும் இங்கே மற்றும் மாற்றிச் சொல்லியிருப்பது ஏன்?. சைவ சித்தாந்தத்தில், சதாசிவனின் அருளே சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. குழந்தை ஞான சம்பந்தருக்கு ஈசனது அருளான அம்பிகையே வந்து முலைப்பாலாக அருளுகின்றார். இதை எழுதுகையில் "சக்தியில்லையேல் சிவமில்லை" என்னும் வசனமும் நினைவுக்கு வருகிறது. இதுவே, தேவி பாகவதத்தில் "சிவோபிசவதாம் யாதி குண்டலின்யா" என்பதும், செளந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்திலேயே "அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி" என்னும் பதமும் மனதில் தோன்றுகிறது.

ஆக ஐந்து தொழில்களைச் செய்யும் பராசக்தி ஸ்ரீ லலிதையைப் பணிவோம்.

Friday, January 23, 2009

கண்ணுடை நாயகி - நாட்டரசங்கோட்டை

அன்னை கொலுவிருக்கும் பல கோவில்களுக்குச் சென்றாலும், சில கோவில்களில் சொல்லப்படும் அன்னையின் திருவிளையாடல்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, நம்மை அக்கோவிலுடன் நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவது தை வெள்ளியாகிய இன்று நாம் பார்க்க இருப்பது நாட்டரசங்கோட்டை கண்ணுடையாள். கடந்த மாதம் கொப்புடையம்மன் கோவில் சென்ற போது நாட்டரசங்கோட்டைக்கும் சென்றேன். இந்த ஊர் பல விதங்களில் சிறப்புற்றது என்று கேள்விப்பட்டேன். அவற்றின் தொகுப்பே இந்த இடுகை.



-----------------------------------------------------------------
பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்

செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி

அம்பொற் பணிபூண்டு அறுகோண வீதியிலே

கம்பத்தின் மேலிருந்து என் கண்ணம்மா கண்குளிரிப் பாரேனோ

----- அழுகுணிச் சித்தர்

சிவகங்கையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், பட்ட மங்கலத்திலிருந்து சுமார் 25 கீ.மியிலும் இருக்கிறது இந்த ஊர். கண்ணுடை நாயகி என்பது அன்னையின் பெயர். நாம் குழந்தைகளை கண்ணே, மணியே என்று கொஞ்சுவது போல கண்ணாத்தா என்று உரிமையுடன் கூப்பிடுகிறார்கள் இப்பகுதி மக்கள். சீர் மிகு நகரத்தார் தெய்வமாக, மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளியிருக்கிறாள் அன்னை பராசக்தி. சரி கோவிலுள் நுழைவோமா?.

ஆலயத்தின் பிரதான வாயிலுக்கு நேர் எதிரில் அருமையான குளம். குளத்தைச் சுற்றிலும் படிகள், மற்றும் கம்பியாலாகிய தடுப்பு வேலி. பக்தர்கள் நீர் நிலையினை தவறாக பயன்படுத்தாதிருக்க அறிவிப்புப் பலகை. குளத்தின் மேற்குக் கரையில் கற் சிற்ப்பங்கள் நிறைந்த பெரிய மஹா மண்டபம். கண் பார்வை பாதிப்புக்கு உள்ளானவர்கள் 48 நாட்கள் இம் மண்டபத்தில் தங்கி, தினமும் அன்னையை வணங்கி பார்வைக் கோளாறுகள் நீங்கிச் செல்வார்களாம். இந்த மண்டபத்தில் மத்தியில் கிழக்கு நோக்கியவாறு வேலைப்பாடுகள் நிறைந்த அருமையான ராஜ கோபுரம். இதைக்கடந்து உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தின் முடிவில் பெரிய துவார பாலகிகள் காவலுக்கிடையில் கருவறைக்கான நிலை வாசல்.

கருவறையில் சற்றே தலை சாய்து, கருணை பொங்கும் கண்களுடன் கண்ணுடை நாயகி காக்ஷி அளிக்கிறாள். சிலம்பணிந்த கால்களில் வலக்காலை சற்றே தூக்கியவாறும், இடக்காலின் அடியில் அரக்கனை அழுத்தியவாறும் எட்டு கரங்களுடன் ஜ்வாலை நிறைந்த கீரிடத்தில் சந்திர-சூரியர்களை அணிந்தவாறு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் கைகளில் கீழ் நோக்கிய சூலம், அக்னி, உடுக்கை, கேடயம், குறுவாள், மணி, கிளி, கபாலம் என்று வலது-இடது கரங்களில் முறையே வைத்திருக்கிறாள்.

தரிசனம் முடிந்து பிராகாரத்தை வலம் வருகையில் கருவறையை ஒட்டி, மேலே அடைப்புடன் கூடிய ஒரு பிராகாரமும், அதன் வெளிச்சுற்றாக திறந்த வெளி பிராகாரமும், அதன்பின் கோவில் மதிலும் இருக்கிறது. பிராகாரத்தில், வடக்குப் பகுதியில் அன்னையின் அபிஷேக நீர் வரும் இடத்தில் ஒரு தொட்டியினைக் காண முடிகிறது. பக்தர்கள் இத்தொட்டி அருகில் அமைதியாக பிரார்த்திப்பதைக் காணலாம். இதனைப் பற்றி இப்பதிவின் இறுதியில் பார்க்கலாம். வடமேற்கு மூலையில் கணபதி கோவில் கொண்டிருக்கிறார். வடகிழக்கில் பைரவர் மற்றும் கருப்பண்ணசாமி குடி கொண்டிருக்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு காலத்தில் யாதவர்கள் மிகுந்து வசித்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் பசுக்களிடத்திருந்து பாலைக் கறந்து விடியலில் பக்கத்து ஊருக்குக் கொண்டு செல்கையில் ஒரு இடத்தில் தினமும் கல் தடுக்கி பால் கொட்டுவதை உணர்ந்தனராம். அவ்விடத்தில் இருக்கும் கல்தான் தமது பாலை வீணாக்குகிறது என்று, கல்லை அப்புறப்படுத்தும் விதமாக கடப்பாரை கொண்டு கல்லை நகர்த்தும் போது இரத்தம் பீரிட்டு கிளம்ப, மக்கள் பெரும் அதிர்வுக்கு உள்ளாகி, ஊர் பெரியவர்களை அழைத்து வந்து காண்பித்துள்ளனர். அவர்களில் அம்பலகாரர் அக்கல்லை முழுவதுமாக வெளியில் எடுக்க, அன்னையின் உருவம் தெரிந்துள்ளது. விக்ரஹத்தை அவ்விடத்தை விட்டு நகர்த்த இயலாததால் அங்கேயே வைத்துப் பூஜிக்கத் தொடங்கியுள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பகுதியின் மிராசுதாரர் அன்னையைச் சுற்றி கருவரை எழுப்பினாராம்.காலில் இடறி அதன் மூலமாக தமது இருப்பிடத்தை கண்ணுற வைத்த காரணத்தால் கண்ணுடைநாயகி என்று பெயர் வந்ததாக கோவில் பட்டர்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் சேதுபதி மன்னர்களும், சிவகங்கை மன்னர்களும், நகரத்தாரும் ஆலயத்தை பல விதங்களில் விரிவுபடுத்தி நிவந்தங்களை அளித்துள்ளனர். இன்றும் இக்கோவில் சிவகங்கை சமஸ்தானத்தின் பராமரிப்பில் சிறப்பாக இருக்கிறது.

இக்கோவிலில் ஆடி முளைப்பாரியும், தை மாதத்தில் தைலக்காப்பும், ஐப்பசியில் கோலாட்ட உற்சவமும், வைகாசியில் பிரம்மோற்சவமும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறதாம். பக்தர்கள் காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கண் பார்வை சம்பந்த நோய்கள் தீர அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.


அழுகுணிச்சித்தர் வாழ்ந்து ஜீவ சமாதியான அன்னையின் அபிஷேக நீர் வெளியேறும் தீர்த்தத் தொட்டியின் கீழே இவரது சமாதி இருக்கிறது. இவ்விடத்தில் செய்யப்படும் நியாயமான வேண்டுதல்கள் பலிப்பதாகவும், இங்கே தியானம் செய்தால் மிகுந்த மன நிறைவு கிட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஊரின் அருகிலேயே பாட்டரசன் என்று இவ்வட்டாரத்தாரால் அன்புடன் போற்றப்படும் கம்பரது சமாதி அமைந்திருக்கிறது. இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பரது சமாதியில் இருந்து மண் எடுத்து நாக்கில் தடவுவதன் மூலம் தமது குழந்தைகள் கவித்துவம் பெறுவர் என்று நம்புகின்றனர். கண்ணுடை நாயகிக்கு பூஜைகள் செய்வது கம்பரது பரம்பரையில் வந்தவர்களாம்.

கற்பகமே, கண்ணுடை நாயகி தாயே சகல புவனங்களையும் காத்தருள்வாய் என்று இந்த தை வெள்ளிக் கிழமையில் அவளைப் பிரார்த்திப்போம்.

Saturday, January 17, 2009

சமீபத்து நிகழ்வுகளும் பகவத் கீதையும்....

உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் தற்போழுது நான் பணி செய்யும் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி அறிந்து மிகுந்த கவலையுடன் போனிலும், மெயிலிலும் தொடர்பு கொண்டு கேட்டனர். நடப்பது எல்லாம் அம்பாள் சித்தம் என்றே நினைக்கிறேன் அதையே பதிலாகவும் கூறி வருகிறேன். இதனைப் பற்றி கொஞ்சம் சிந்தித்தேன் அதன் விளைவே இந்த இடுகை.


சந்தோஷம் என்பதே எல்லோரும் எக்காலத்திலும் எதிர்பார்க்கிறோம். அதற்காகவே முயற்சிக்கிறோம். இந்த முயற்சி எதுவரையில்?, ஆயுள் முடியும் வரையில் இதே முயற்சிதான் செய்கிறோம் அல்லது செய்வதைப் பார்க்கிறோம். அம்பாள் நமக்கு எதனை தருகிறாளோ அதை அனுபவிப்போம், அத்துடன் திருப்தி கொள்வோம் என்ற எண்ணம் எல்லா நேரமும், எல்லோருக்கும் வந்துவிடுகிறதா?. இவ்வாறு எல்லா நேரங்களிலும் இந்த நினைவு இருந்தால் அவர் யோகியாக அல்லவா இருப்பார்?. சரி, அவ்வாறு எல்லோரும், எல்லா நேரங்களிலும் இருக்க முடிவதில்லை. சரி, வேறு என்ன வழி என்று பார்த்தால், எப்போதும் நடப்பதெல்லாம் அம்பாள் சித்தப்படியே என்று இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.



கடந்த சில காலமாகவே ப்ரதி சனிக் கிழமை மதியத்தில் பகவத் கீதையில் கொஞ்சம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இன்று மதிய உணவிற்குப் பிறகு எனது தற்போதைய சிந்தனைக்கு ஏற்றவாறு என்ன இருக்கிறது என்று பார்க்கத் தோன்றியது. எனது தற்போதைய சிந்தனைக்கு ஏற்றதாக நான் நினைத்த வரி கீழே!

"யக்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்சர:"

என்னுடைய கடமை எதுவோ அதை நான் செய்கிறேன். நான் செய்யும் கடமை மூலமாக எனக்கு என்ன கிடைக்கிறதோ அதற்கு நான் சந்தோஷப்படுகிறேன். என்ற பாவம் இருக்கவேண்டும் என்கிறார். நமது முயற்சிகள் நல்லவையாக இருக்க வேண்டும். அதனை முறையே செய்தல் வேண்டும். அதன் பிறகு வரும் பலா-பலன்களை முழுவதுமாக ஏற்று அதுதான் ப்ராப்தம் என்று பகவான் சொல்லியதாகக் கருதவேண்டும். இந்த எண்ணம் மிக அவசியம் என்பதாக அறிகிறேன்.


சரி, "த்வந்த்வாதீதோ" என்பது என்ன?. மேற் சொன்னதை இன்னும் தெளிவாக்குகிறது இந்தச் சொல். இது கீதையின் பல இடங்களில் சொல்லியதே. சுக-துக்கங்களை சமமாகப் பார்ப்பது என்பது தான் அது. இதன் பொருள் எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. சுகமான காலத்திலும், துக்கமான காலத்திலும் நமது மனம் சஞ்சலம் ஆகக் கூடாது என்பதே இதன் பொருள். இன்பமோ-துன்பமோ, அது ஈஸ்வர சங்கல்பம் என்று இருக்கப் பழக வேண்டும். நமது சுபாவம் இப்படியா இருக்கிறது?. சந்தோஷத்தில் தலை-கால் புரியாமல் ஆடுகிறோம். கொஞ்சம் கஷ்டம் வந்தாலும் அதற்கு காரணம் யார்?, எவர்? என்று ஆராய்ச்சியிலும், அதன் விளைவாக பலரை தண்டிக்க அல்லது தவறாகப் பேச ஆரம்பிக்கிறோம். கஷ்டம் வரும் காலத்தில் அதீத சிந்தனையின் காரணமாக, இறைவன் இருக்கிறானா? என்பது போன்ற கேள்விகளும், இறைவனைப் பழிப்பதும் நடக்கிறது. கஷ்டகாலம் என்பது நமது பூர்வ ஜென்ம பலன், இனி வரும் ஜென்மங்களில் இவை நடக்காதிருக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லவா, நமக்குத் தேவை?. இதை எழுதுகையில் ராமர் தனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் அவர் லக்ஷ்மணனிடம் சொன்னதாக ராமாயணத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஆரண்ய காண்டத்தில் "லக்ஷ்மணா, போன ஜென்மங்களில் என்ன பாபம் செய்தோமடா?, அரச போகங்களை இழந்து காட்டுக்கு வந்தும் நமக்கு சுகம் இல்லையே?" என்று சொல்கிறாராம். ஆக இறைவனே சொல்லியபடி ஜென்மாந்திர பலன்கள் நம்மை தொடரும் என்பது நமக்கு மனதில் எப்போதும் இருக்குமானால் நமக்கு சஞ்சலம் என்பது இல்லாது இருக்கும். இந்த சஞ்சலம் குறையக்-குறைய சுக-துக்கங்கள் ஏதும் நம்மைத் தாக்காத மனம் வாய்க்கும் என்று தோன்றுகிறது.


"மத்சர:" என்பதற்கு "அசூயை" என்று பொருள். இன்னும் தெளிவாகச் சொன்னால் பொறாமை. "விமத்சர:" என்றால் பொறாமையின்மை. என்று பொருள். நம்மைவிட அதிகம் படித்த ஒருவன் அல்லது நம்மைவிட பெரும் பொருள் சேர்த்த ஒருவனைக் கண்டால், நாமும் அவனைப் போல படிக்க அல்லது நல்ல வழியில் பொருள் சேர்க்க முயல வேண்டும். அதை விடுத்து அவனுக்கு என்ன தெரியும், அதை விட எல்லாம் எனக்கு தெரியும் என்ற குணம் இருப்பின் அதுதான் பொறாமை. நமக்குத் தெரியாதவற்றை அவனிடமிருந்து கற்க முயலலாம், அல்லது பெரும் பணக்காரனாக இருந்தால் அவனை உற்சாகப்படுத்தி சமூகத்திற்கு இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்யச் சொல்லாம். அதை விடுத்து அவனைப் தூஷிப்பதும், அவனது செயல்களை தூஷிப்பதும் நமது பாவத்தை அல்லவா அதிகமாக்கும்?. ஆக, இந்த பொறாமை, தூஷணை போன்றவை நமது சஞ்சலத்தை அதிகமாக்கி சித்தத்தைக் கலக்கமடையச் செய்திடும் என்று தெரிகிறது.


ஆகவே, எப்போது எது கிடைக்கிறதோ அதற்கு திருப்திப்படுவதும், அதிக ஆசை இல்லாமையும், சுக-துக்கங்களை சமமாக ஏற்கும் மனதும், மாத்சர்யம் இல்லா நிலையும் எப்போதும் இருக்க இறைவன் அருளட்டும்.

Friday, January 16, 2009

கொப்புடை அம்மன் - காரைக்குடி...

கடந்த சிலவாரங்களில் சென்ற கோவில்களில் கூடலழகர் பற்றி எழுதினேன். பிறகு வேறு ஒரு பின்னூட்டத்தில் காரைக்குடி கொப்புடை அம்மன் கோவிலில் புதிதாக பிரதிஷ்ட்டை ஆன ஹனுமார் சன்னதிக்குச் சென்றது பற்றி சொல்ல, நண்பர் குமரன் இக்கோவிலைப் பற்றி எழுதக் கேட்டார். இன்னும் சில நண்பர்கள் போனில் பேசுகையில் இந்த அம்மனைப் பற்றி எழுதச் சொன்னாலும், இன்றைக்கு அம்பாளுக்கு உகந்த தை வெள்ளிக்கிழமை என்பதால் இந்த இடுகை.

எப்போது காரைக்குடி சென்றாலும் நான் மறக்காமல் செல்லும் இடம் கொப்புடையம்மன் கோவில். இக்கோவிலுக்கும் எனக்கும் ஏதோ வெகுகால தொடர்பிருப்பதாகவே தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் என்று பார்த்தால், 1930-45களில் எனது பாட்டனார் (தாய்வழி) இக்கோவிலுக்கு பேஷ்காராக (இக்கால அறநிலையத்துறை அலுவலர் போன்ற பதவி) இருந்து வந்திருக்கிறார். இன்றும் என் தாய் தமது சிறுவயதில் இக்கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டது பற்றி கூறுகிறார். திருமணமான பின் எனது மறுபாதியுடன் சென்ற முதல் கோவில் இதுதான். சரி, சுய புராணம் போதும், கோவில், மற்றும் தல புராணத்தைப் பார்க்கலாமா?


ஜகன்மாதா அன்னை பராசக்தி கோவில் கொண்டுள்ள பல திருத்தலங்களில் கொப்புடையம்மன் கோவிலும் ஒன்று. பைந்தமிழும், பக்தியும் தழைத்த பாண்டிய தேசத்தில் மீனாக்ஷி, காந்திமதி, கோமதி, மாரியம்மன், காளி என்று பல வடிவங்களில் சக்தி வழிபாடுகள் இருந்தாலும், நகரத்தார் தலைநகர் என்று சொல்லக்கூடிய சிறப்புற்ற காரைக்குடியின் மத்தியில் கொப்புடைய அம்மன், "கொப்பாத்தாள்", "கொப்புடையாள்" என்ற பெயரில் குடி-கொண்டிருக்கிறாள். இவள் இந்த ஊருக்கான கிராம தேவதையாகவே கூறப்பட்டாலும், ஆகம விதிகளின்படி அமைந்த கோவில், பூஜை முறைகள் என்றே இருக்கிறது.


ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததாம். அவற்றை அழித்து நகரம் நிர்மாணிக்கப்பட்டதால் காரைக்குடி என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். நகரின் நடுவில், குளத்துடன், மூன்று நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் கூடிய அழகிய கோவில். ராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் வரும் மண்டபத்தை சோபன மண்டபம் என்றழைக்கின்றனர். அன்னைக்கு பூச்சொரிதல் போன்ற விழாக்கள் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறதாம். இந்த சோபன மண்டபத்தின் இடது புறத்தில் முறையே வல்லத்துக் கருப்பர் மற்றும் விநாயகரும், வலது புறத்தில் தண்டாயுதபாணியும் அருள் புரிகின்றனர். கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, காசி-விஸ்வநாதர், விசாலாக்ஷி, தென்முகக் கடவுள், சண்டிகேஸ்வரர், மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன.



கருவறையின் உள்ளே நின்ற திருக்கோலத்தில் சுடர் வீசிப் பிரகாசிக்கும் ஜுவாலைக் கிரீடத்துடன், நாற்கரங்களில் வலது முன்-கை அஞ்சிடும் அடியவர்கட்கு அபயம் அளித்தும், வலது மேல்-கை தீமைகளை வேருடன் தோண்டிக் களையும் சூலத்தைச் சுமந்தும், இடது-கைகள் பாசத்தையும், கபாலத்தையும் ஏந்தியவாறு காக்ஷி அளிக்கிறாள். காணத் தெவிட்டாத அன்னையின் திருவுருவம் பஞ்ச லோகத்தால் ஆன திருமேனியாகும். பூர்ண அலங்காரத்தில் பட்டும் வைரமும் போட்டி போட்டு ஜ்வலிக்க, வெள்ளிப் பீடத்தில் வெள்ளி திருவாச்சி துலங்க அன்னை அருட் கண்கள் நம்மை, "வா!, நானிருக்கிறேன்" என்பதாக இருக்கிறது.

கொப்புடையாளது கதையாக இவ்வூர் மக்கள் சொல்லும் செவி-வழிச் செய்தியை பார்க்கலாம்.
காரைக்குடிக்கருகில் இருக்கும் சங்கராபுரம் என்னும் ஊரின் காவல் தெய்வம் காட்டம்மன் என்பதாம். அவளது சகோதரியே கொப்புடையம்மன் என்று கூறுகின்றனர். கொப்புடையம்மனுக்கு மழலைகளிடத்துப் பிரியம் அதிகமாம். அவள் எப்போதும் தமது சகோதரியின் குழந்தைகளிடத்து அளவில்லாப் பிரியத்துடன் இருந்தாளாம். இதனால் தமது குழந்தைகள் தன்னை அதிகம் நேசிக்கவில்லை என்று வருத்தமுற்ற காட்டம்மன், கொப்புடையாளிடமிருந்து தனது குழந்தைகளைப் பிரித்தாளாம். வருத்தமுற்ற கொப்புடையாள், பாச-பந்தத்தால், வருத்தமும் வேதனையும் தான் என்று உணர்ந்து துறவு பூண்டு கானகத்தில் வசித்தாளாம். அவ்வாறு வசித்த இடமே காரைக்குடி என்று கூறுகின்றனர்.

இன்னொரு கதையும் சொல்கிறார்கள். அக்காலத்தில் அப்பிரதேசத்தை ஆண்ட அரசன் ஒருவன் காட்டம்மனிடம் அளவில்லா பக்தி பூண்டிருந்தானாம். ஒவ்வொரு நாளும் அன்னையை வணங்கி, தனது அன்றாட வரவு-செலவுகளை அவளிடம் ஒப்பிவிப்பானாம். முகலாய படையெடுப்பின் போது அவர்களிடத்திருந்து காட்டம்மன் திருவுருவத்தை காப்பாற்ற சங்கராபுர கோவிலின் உற்சவ விக்கிரஹத்தை ஒரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த பொந்தில் மறைத்து வைத்து, அதனை பத்திரமாக பராமரிக்க சிலரை நியமித்தானாம். பிற்காலத்தில் மரப்பொந்தில் இருந்த விக்கிரஹத்தை மாடு மேய்க்கும் இடையர்கள் கண்டெடுத்து அதை ஒரு மகிழ மரத்தடியில் வைத்து பூஜித்தனராம். பிற்காலத்தில் ஊர் விரிவடைந்த நிலையில் இப்போது கோவில் இருக்கும் இடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். அரசர் நம்பகமானவர்களிடத்து ஒப்புடைத்ததால் அம்மன் 'ஓப்புடையம்மன்' என்று வழங்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் "ஒப்புடை" என்பதே மறுவி "கொப்புடை" என்று ஆனதாகக் கூறுகின்றனர். பெண்கள் அணியும் ஒரு காதணி ஆபரணத்தின் பெயர் "கொப்பு". அம்பாள் இவ்வாபரணத்தினை காதில் அணிந்திருப்பதால் இப்பெயர் பெற்று இருக்கிறாள் என்றும் கூறுகின்றனர்.

இங்கு பூச்சொரிதல் மற்றும் தேர் திருவிழா மிக முக்கியமானதாகச் சொல்கின்றனர். 50-60 வருடங்கள் முன்பெல்லாம் இவ்விழா சமயத்தில் நகரத்தார் தத்தம் இல்லத்து நகைகள் எல்லாம் அன்னைக்கு அணிவித்து அருள் வேண்டுவராம். குழந்தை வரம் வேண்டி கரும்பாலான தொட்டில் கட்டுவது மிக விசேஷ பலன் அளிக்கும் என்று கூறப்படுகிறது.

படங்கள் தந்து உதவிய நண்பர் கே.ஆர்.எஸ் அவர்களுக்கு நன்றி.

Saturday, January 10, 2009

திருவாதிரைத் திருநாள்




2007 திருவாதிரைக்காக இடப்பட்ட பதிவு இது.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

- திருநாவுக்கரசர்.


திரு ஆதிரை ஈசனின் நக்ஷத்திரமாக போற்றப்படுகிறது. மாணிக்க வாசகர் திருவாசகத்தை அருளச் செய்த சமயத்தில் அதனை எழுதுதுருவில் (நல்லவேளை அந்தக்காலத்தில் யூனிக்கோடெல்லாம் இல்லை) மாற்ற வேண்டுமென பலர் பிரார்த்தித்தனராம். என்னே விந்தை, மறுநாள் காலையில் தில்லை நடராஜன் சன்னதியில் அவன் காலடியில் திருவாசகம் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் இருந்ததாம். இவ்வாறாக அம்பல கூத்தன் திருவாசகத்திற்கு படி எடுக்கும் பெருமானாக அமைந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை தினமாம். இந்த நிகழ்ச்சியின் காரணமாக இன்றும் திருவாதிரை தினத்தில் சிதம்பரத்தில் மாணிக்க வாசகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு இறைவன் முன்னால் திருவாசகம் ஓதப்படுகிறதாம். நந்தனார் நடராஜனடி சேர்ந்ததும் திருவாதிரைத் திருநாள் தான்.


சிதம்பரம் ஈசனின் பஞ்சபூத தலங்களில் ஆகாய க்ஷேத்திரம். இத்தலத்தின் பெருமைகளை திருமூலர் திருமந்திரமும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் அருளிய தேவாரமும் அருணகிரியாரின் திருப்புகழும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும் மிக தெளிவாக குறிப்பிடுகிறதாய் சொல்ல கேட்டிருக்கிறேன். சோழ ராஜ்யத்திற்கு மட்டுமா இக்கோவில் இதயம்?, இல்லையில்லை சைவ சமயத்திற்கே இதயமாயிற்றே. அதனால் சோழர்கள் இந்த ஈசன் மீதுள்ள தங்கள் பக்தியினை எக்காலமும் நிலைத்திருக்குமாறு அவர்கள் காலத்திலான அளவைகளுக்கு பெயராக "சிற்றம்பலக்கோல்" (நீள-அகலம் அளக்க), "ஆடாவல்லான்" (மரக்கால் அளவை) என்பனவாக இந்த ஈசனது நாமங்களை வைத்துள்ளனர்.


சிதம்பரத்தில் நடராஜபிரானுக்கு வருடத்தில் ஆறு முறை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெருகிறது. அந்த ஆறுநாட்களில் ஒரு நாள்தான் ஆருத்திரா தரிசனம் நடக்கும் திருவாதிரைக்கு முந்தைய தின இரவு. இந்த இரவில் ஆயிரக்கால் மண்டபத்தில் இந்த அபிஷேகம் நடைபெறுவதை காண கண் கோடி வேண்டும். அபிஷேகப் பிரியனுக்கு பால், தேன், இளநீர் எல்லாம் குடம் குடமாக அபிஷேகிக்கப்படும். பின்னர் விடியலில் ஆருத்திரா தரிசன வைபவமாக நாதஸ்வர இசைக்கேற்ப அசைந்தாடி வரும் ஆனந்த் கூத்தனைப் பார்க்க சலிக்காது. திருவாதிரைக் களி பற்றிய கதையினை மிகத் தெளிவாக தனக்கே உரிய பாணியில் நண்பர் கே.ஆர்.எஸ் எழுதியிருக்கிறார். அதனை வாசிக்க இங்கே சுட்டவும்.


களி என்றால் ஆனந்தம் என்று பொருள். ஈசனின் இயல்பே ஆனந்தம் தானே?. அரிசியில் வெல்லத்தை குழைத்து களி செய்வதுபோல் அறிவில் அருளைக் குழைத்து பெருவதே ஆண்டவன். ஏழு காய்கள், பயறு வகைகள் சேர்த்து வைக்கும் கதம்ப கூட்டானது ஆண்டவன் அளித்துள்ள இயற்கை வளங்களை திரட்டி அவனுக்கு அற்பணிப்பதாககும்.பல சுவைகளையுடைய வெவ்வேறு காய்களை கொண்டு படைக்கும் இந்த கூட்டினை நமது பல உணர்ச்சிகளையும் கொண்ட இகவாழ்வுக்கு அறிகுறியாக கொள்ளலாம். இவற்றினை பாத்திரத்தில் இட்டு உப்பு-புளி, நீர் வார்த்து தீயில் வேகவைத்த பின்னரே அதன் தனியான சுவையினை அறிய முடிகிறது. அது போல பொருளற்ற நமது உணர்ச்சிக் குவியலில் பக்தி என்ற நீரை ஊற்றி ஞான தீயில் சமைத்தால் நித்யானந்த சுவையினை பெறலாம்.

இந்த விழா தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் கொண்டாடப்படுகிறது. நமது கோலாட்டம், கும்மி போல கேரளத்து பெண்கள் இந்நன்னாளில் "ஸ்வாஞ்சலிட்டு" என்பதான ஒரு நடனம் ஆடுகிறார்கள். இந்த நடனம் ஆடாவிடில் பாவம் என்று எண்ணும் அளவிற்கு இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.


உத்திரகோச மங்கையில் (மேலே உள்ள தினமலர் படம்) உள்ள முழுவதும் மரகதக் கல்லால் ஆன நடராஜர். திருவாதிரையன்று மட்டுமே இவரது சந்தனக்காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடைபெறும். திருவாதிரை காலையில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டுவிடும். உத்திரகோச மங்கை இராமநாதபுரத்தில் இருக்கிறது.