Wednesday, July 30, 2008

நாம சங்கீர்த்தன குரு - ஸ்ரீ போதேந்திரர்..




கலியில் பல நேரங்களில், பல்வேறு காரணங்களால் கர்மானுஷ்டானங்களை சரிவரச் செய்ய முடிவதில்லை. அப்படியே செய்தாலும் அவை எல்லாம் டாம்பீகத்துக்குகாக செய்வதாகவே இருக்கிறது. சிரத்தையால் வருவது ஞானம் என்பார்கள். இப்போது சம்ஸ்காரங்கள் சரியாக இல்லாததால் ஞான சூன்யர்களாக ஆகிவிடுகிறோம். இந்த நிலையினை முன்பே அறிந்த சுகர், "கீர்த்தனாதேவ கிருஷ்ணஸ்ய" என்று குறிப்பிட்டுளார் போல. அதாவது ஸ்ரீகிருஷ்ண சங்கீர்த்தனத்தாலேயே பந்தம் நீங்கி பரமாத்மாவை ஆடையலாம் என்பதாக பொருள்.



கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தின் மூலமே இறையனுபவம் பெறலாம் என்று நிதர்சனமாக காட்டியவர்கள் புரந்தர தாஸர், கனகதாஸர், ராமதாஸர், க்ஷேத்ரஞ்யர், கிருஷ்ண சைதன்யர், ஸமர்த்தர், தூக்காராம், கபீர்தாஸர், துளசிதாஸர், ஹரிதாஸ், மீரா, ஸ்ரீ வல்லபர் போன்றவர்கள். இங்கே குறிப்பிட்ட நாம சங்கீர்த்தன சக்ரவர்த்திகள் எல்லோரும் தமிழகத்தைச் சாராதவர்கள். இன்று தியாகப்பிரம்மத்தை நாம சங்கீர்த்தன பரம்பரையில் சேர்த்துக் கொண்டு பாடுவது இருக்கிறதென்றாலும், இவருக்கு முன்பே இரண்டு காமகோடி மடத்து பீடாதிபதிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை தமிழகத்துக்கு உணர்த்தியவர்கள் உண்டு. அவர்கள் ஆத்ம போதேந்திரரையும், பகவன் நாம போதேந்திரரும் ஆவர். காமகோடி பீடத்தின் 58ஆவது பீடாதிபதியான வித்வாதிகேந்திரர் என்ற ஆசிரம பெயர் கொண்ட ஆத்ம போதேந்திரர், ஞான, பக்தி வைராக்யங்களில் சிறந்தவர். இவரது சீடரே போதேந்திர ஸ்வாமிகள் என்று இன்று பாகவதோத்தமர்களால் கொண்டாடப்படும் தக்ஷிண ஸம்பிரதாய பஜனைப் பத்ததியை நமக்கெல்லாம் அருளிய சீலர். இதில் சிறப்பென்னவென்றால் போதேந்திரரும் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆச்சார்யார், 59ஆம் பீடாதிபதி. இந்த போதேந்திரரே பகவன் நாம ரஸோதயம் என்னும் பரம பவித்ரமான நூலை அருளியவர். இந்நூலில் நவ லக்ஷணமான பக்தியில் நாம சங்கீர்த்தனதுக்கு பிராதான்யம் அளித்து, அது இந்த யுகத்துக்கு எத்துணை ஏற்றதாக இருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். இந்த நூலிலே பாகவத தர்மம், ஸனாதன தர்மம், அத்வைதம் ஆகிய மூன்றையும் இணைத்து கூறியுள்ளார். இவரது காலத்தில்தான் ஸ்ரீதர ஐயாவளும், சதாசிவ பிரம்மமும், இருந்திருக்கிறார்கள்.



நகரேக்ஷு காஞ்சி என்று புகழப்படும் காஞ்சி மாநகரிலே கேசவ பாண்டுரங்க யோகி என்பவருக்கும், அன்னாரது தர்ம பத்னி ஸுகுணாவுக்கும் புத்ரனாக அவதரித்தார். குழந்தையின் ஜாதகங்களில் உள்ள சிறப்பம்சங்களைக் கருத்தில் கொண்டு 'புருஷோத்தமன்' என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டார். இவரது தந்தை சங்கர மடத்தில் ஸ்ரீ கைங்கர்யம் செய்து வந்ததால், குழந்தை புருஷோத்தமனுக்கு ஆச்சார்ய பக்தி அதிகம். அதுகண்ட ஆச்சார்யார் வித்வாதிகேந்திரர் குழந்தையை மடத்துக்கு தர வேண்ட, பெற்றோரும் குருபக்தியால் வாக்கு மீறாது குழந்தையை மடத்துக்கு அளித்தனர். ஐந்து வயதில் அக்ஷராப்யாசம், 7 வயதில் உபநயனம் என்று தொடர்ந்து 16 வயதுக்குள் வேத-வேதாந்த வித்தைகளில் பூர்ண சந்திரனாக விகசித்தார். எல்லா சாஸ்திரத்துக்கும் சாரம் நாராயண த்யானமே என்று உணர்ந்து தினமும் லக்ஷத்தது எட்டு ராமஜபம் செய்ய ஆரம்பிக்கிறார். இவ்வாறாக பக்தி வைராக்யங்களால் பக்குவமடைந்தவராக, மாயா சுகங்களில் மயங்காது, பரம பாகவத தர்மத்தில் இச்சையுடையவராக வளர்ந்தார். இதே சமயத்தில் ஆத்ம போதேந்திரர் என்றழைக்கப்பட்ட வித்யாதிகேந்திரரும் ஆச்சார தர்மங்களை சரிவர அனுசரிக்க இயலாத ஜனங்களையும் நல்வழிப்படுத்த நாம கீர்த்தன ரூபமான பாகவத தர்மத்தை பிரசாரம் செய்தார். இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக தனது காசி யாத்திரையினை அமைத்துக் கொண்டார். தன்னுடன் வர சித்தமாக இருந்த புருஷோத்தமனை சில காலம் கழித்து வரச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். வடதேசத்தில் நாம்சங்கீர்த்தனத்திற்கு இருக்கும் மரியாதையையும், அதனால் அப்பிரதேசத்து மக்களது ஆன்மீக சிந்தனை, அருள் எல்லாம் உணர்ந்த ஆத்ம போதேந்திரருக்கு தக்ஷிண தேசத்தில் இவ்வாறான நாம சங்கீர்த்தனம் புழக்கத்தில் இல்லையே என்ற குறை வந்தது. இந்த குறையைப் போக்க, தமக்கு பின் பீடாதிபதியாக பட்டத்துக்கு வரும் புருஷோத்தமனாலேயே முடியும் என்ற முடிவுக்கு வந்து புருஷோத்தமனை காசிக்கு வரச் செய்கிறார். காசி வந்து குருவை வணங்கிய புருஷோத்தமனுக்கு பிரம்மச்சார்யத்திலிருந்து சன்யாச ஆஸ்ரமத்தை காசியிலேயே அருளுகிறார்.



சன்யாச ஆஸ்ரம நாமமாக 'பகவன் நாம போதேந்திரர் என்ற பெயரை அளித்து ஸ்ரீ மடத்தின் 59ஆம் ஆச்சார்யராக பொறுப்பினை அளித்து தென்னகத்தில் நாமசங்கீர்த்தனைத்தை பரப்பக் கட்டளையிடுகிறார். அத்துடன் இல்லாது நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளை உணர்த்த சில காலம் நரசிம்மாச்ரமி அவர்களிடம் இருக்கும் பலவித கிரந்தங்களையும் படிக்கச் செய்தார். தகுந்த காலத்தில் காஞ்சீபுரம் செல்ல உத்தரவளித்த ஆத்ம போதேந்திரர், போகும் வழியில் ஜகன்னாத க்ஷேத்திரம் சென்று பகவன் நாம கெளமுகி என்ற சிற்ந்த பக்தி சங்கீர்த்தன கிரந்தத்தை அறிந்து கொள்ள உத்தரவிடுகிறார். [ஒரிசாவில் வாழ்ந்த லக்ஷ்மிதரர் என்ற கவி எழுதியது இந்த பகவன் நாம கெளமுகி. இதில் பகவன்நாமத்தின் வைபவத்தையும், செளலப்பித்தையும் ச்ருதி, ஸ்ம்ருதி, இதிகாச-புராண வாக்கியங்களைக் கொண்டு சொல்கிறார்.] கெளமுகியினையும் கற்றுணர்ந்த ஆச்சார்யார் காஞ்சீபுரம் வந்து ஸ்ரீதர அய்யாவாள் என்று அறியப்படும் ஸ்ரீதர வெங்கடேசரது சிறப்புக்களை அறிந்து அவரது கிரந்தங்களையும் தனது நாம சித்தாந்தங்களுக்கு ப்ரமாணமாகக் கொண்டார். போதேந்திரர் பிரமாணமாக கொண்ட மற்ற கிரந்தகளாவன, புருஷார்த்த ஸுதாநிதி, சங்கரரின் சஹஸ்ரநாம பாஷ்யம், வித்யாரண்யரின் சங்கரவிலாஸம், த்யான தீபிகை, பகவத்கீதா கூடார்த்ததீபிகை, நாமதரங்கம், பக்தி முக்தாபலம் போன்றவை. இத்துணை நூல்களையும் பிரமாணமாக கொண்டு ஸ்வாமிகள் எட்டு நாமசித்தாந்த கிரந்தங்களை வெளியிட்டார். அவற்றில் மிக பிரதான்யமானது நாமாம்ருத ரஸோதயம். இவை தவிர பல அத்வைத சித்தாந்த க்ரந்தங்களும் செய்திருக்கிறார்.



இடையில் குரு ஆத்ம போதேந்திரர் திருப்பாப்புலியூரில் பரிபூர்ண மஹாஸமாதி அடைய, அவருக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்தபின் காஞ்சிபுரம் திரும்பி அத்வைத பிரசாரமும், நாமசங்கீர்த்தன பிரசாரமும் செய்துவந்தார். பீடாதிபதியான பின்பும், மடத்து சம்பிரதாயங்களுக்கிடையிலும் பிரதி தினம் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்வதும், பாகவத உபன்யாசமும் செய்து, ஞானத்தில் சனகாதியர் போலும், பக்தியில் நாரதர் போலும், வைராக்கியத்தில் சுகர் போலும் இருந்து வந்தார். ஜாதி, மத பேதமின்றி கருணையுடன் பகவன் நாம கீர்த்தனம் பற்றி விளக்கி ஹரிநாம சங்கீர்த்தனத்தை பரப்பினார். இவர் இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாமஜபத்தில் மூழ்கியிருக்கின்றனர். எந்த ஆச்ரமத்தில், எந்த ஜாதியில் இருப்பவர்களானாலும் நாமசங்கீர்த்தனம் செய்யாவிடில் அந்த ஜென்மம் வியர்த்தம் என்று குறிப்பிட்டு நாமஜப மகிமையினை உபதேசிப்பார். பீடாதிபதி என்ற கவுரவம் ஏதுமின்றி பாமரர்களுக்காக உருகி அவர்களும் கடைத்தேற நாமசங்கீர்த்தனத்தை பரப்பியிருக்கிறார்.



தடைபட்ட ராமேஸ்வர யாத்திரையினை முடித்து மத்யார்ஜுனம் வந்த போது அங்குள்ள மக்கள் ஓயாது நாமஜபம் செய்வது கண்டு அதிசயித்து விசாரித்ததில் ஸ்ரீதர அய்யாவாளால்தான் அந்த ஊரில் நாமஜபம் பரவியிருப்பதை அறிந்து அவரை சந்திக்கிறார். அய்யாவாள் ஸ்வாமிகளை



பகவன் நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ஸர்வஸ்ய விக்ரஹம்


ஸ்ரீமத் போதேந்திர யோகீந்திர தேசிகேந்திரம் உபாஸ்மஹே



[பகவன்நாம சங்கீர்த்தனம் என்னும் ஐச்வர்யத்திற்கு ஏக சக்ராதிபதியான போதேந்திர யோகீந்திரர் என்னும் தேசிகேந்திரரான குருமூர்த்தியை உபாசிக்கிறேன்]



என்று கூறி வணங்க அச்சமயத்தில் ஸ்வாமிகள் தனது ஆச்ரம தர்மத்தையும் மீறி அவரை தூக்கி ஆலிங்கனம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் பல விஷயங்களையும் சம்பாஷித்து மகிழ்ந்துள்ளனர். பின்னர் பலகாலம் காஞ்சீபுரத்தில் வாழ்ந்து சிஷ்யர்களுக்கு பாகவத தர்மத்தையும் நாமசங்கீர்த்தனத்தையும் உபதேசித்து வந்தார். தனது பிடாதிபத்தின் காரணமாக முழு மூச்சாக நாமசங்கீர்த்தன பிரசாரம் செய்ய முடியவில்லை என்று தனக்கு அடுத்த 60ஆவது பீடாதிபதியாக "அத்வைதப்பிரகாசர்" என்பவரை நியமித்து ஸ்ரீமடத்து நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு, தண்ட-கமண்டலத்துடன் தனியாக யாத்திரை கிளம்பி ஆங்காங்கே பிரசாரம் செய்து கொண்டு செல்லும் இடத்தில் கிடைத்ததை பிக்ஷை பண்ணிக் கொண்டு மீண்டும் திருவிடைமருதூர் வந்து ஸ்ரீதர அய்யாவாளுடன் சேர்ந்து இருவருமாக பல ஊர்களுக்கும் சென்று பகவன்நாம கீர்த்தன பிரசாரம் கிளம்பினர். சென்ற இடங்களில் எல்லாம் பலவகையான மக்களுக்கும் நாம உபதேசம் செய்வித்தனர்.



இவ்வாறாக காலம் உருண்டோட, ஸ்ரீதர அய்யாவாளும் ஒருநாள் மஹாலிங்கத்தின் சன்னிதியில் வெகுநேரம் சிவநாம சங்கீர்த்தனம் செய்து பின்னர் மனமுருகி ஈசனிடம் பிரார்த்தனை செய்து ப்ரேமபக்தியின் உன்மத்ததில் மஹாலிங்கத்தை ஆலிங்கனம் செய்ய ஓடி கர்பகிரஹத்துள் நுழைகிறார். ஜோதிர் வடிவமாக தெரிந்த மஹாலிங்கத்தில் மறைந்தும் போகிறார். இதை அறிந்த போதேந்திரர் பல மணிநேரம் சமாதி நிலை யில் ஆழ்ந்து பின்னர் சகஜ நிலை அடைந்து அன்று முதல் யாரிடமும் பேசுவதை நிறுத்தி கோவிந்தபுரத்தில் காவிரிக் கரையிலேயே இருக்கத் தொடங்குகிறார்கள். அவர் ஒருநாள் அங்கு விளையாடும் சிறுவர்களிடம் ஒரு குழியினைக் காண்பித்து தான் அதில் இறங்குவதாகவும் அதன் பின்னர் மணலைத்தள்ளி மூடிவிட்டு மறுநாள் வந்து பார்க்கச் சொல்கிறார். விஷயமறியாத சிறுவர்கள் அவ்வாறே செய்து, மறுநாள் விஷயம் அறிந்த பெரியவர்கள் அவ்விடத்தை தோண்ட முற்படுகையில் அசிரீரியாக தான் அங்கேயே சமாதியாகி நாமசங்கீர்த்தனம் செய்ய முடிவெடுத்துவிட்டதாக சொல்லி, அங்கே பிருந்தாவனம் அமைத்துவிட சொல்கிறார் ஸ்வாமிகள். அத்துடன் இல்லாது யார் பிரதி தினமும் லக்ஷத்து எண்ணாயிரம் நாமஜபம் செய்தாலும் தான் தரிசனம் தருவதாக வாக்கும் தருகிறார். இச்சம்பவம் கி.பி 1692ல் ப்ரஜோத்பத்தி வருஷம் ப்ரோஷ்டபத மாதம் பெளர்ணமியன்று நடந்தது. இன்றும் கோவிந்தாபுரத்தில் அவரது ஜீவ சமாதியில் பாகவதர்கள் ஆராதனை மிகவிமர்சையாக கொண்டாடுகின்றனர்.



இன்று நாம் எல்லோரும் அறிந்த ஸ்வாமி ஹரிதாஸ் கிரி அவர்கள், மற்றும் அவரது குரு ஞானாநந்தர், புதுக்கோட்டை கோபால கிருஷ்ண பாகவதர், சஞ்சீவி பாகவதர், முத்தையா பாகவதர், முரளிதர ஸ்வாமிகள், கடையநல்லூர் ராஜகோபால், மற்றும் பலர் தமது பஜனைகளில் பரம குருவாக கொண்டு பாடல்கள் பாடி பஜனையினை போதேந்திராளின் கீர்த்தனைகளையே. இன்றைய சம்பிரதாய பஜனைக்கு வித்திட்ட அந்த மஹானது குருவந்தனம் (தோடே மங்களம்) பாடாத பஜனைகள் இல்லை. அது பாடப்படும் இடங்களிலெல்லாம் அவரது சாந்நித்தியத்தை நாம் உணரவும் முடிகிறது. இவ்வாறாக நாமசங்கீர்த்தனத்தை நமக்கு அளித்த குரு போதேந்திரரை மனதால் வணங்கி அவரது சொற்படி நாமும் நாம சங்கீர்த்தனம் செய்து இறையருளில் மூழ்குவோமாக.



யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே


தந்நமாமி யதிச்ரேஷ்ட்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும்





[எவருடைய ஸ்மரணத்தால் நாமபக்தி உண்டாகிறதோ அந்த யதிஸ்ரேஷ்டரும், ஜகத்குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை சரணமடைகிறேன்]







மேலே இருப்பது புதுக்கோட்டை ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர், இப்போது தமிழகத்தில் கொஞ்சமேனும் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது என்றால் அது இவராலேயே என்று அறுதியிட்டு கூறலாம். இவர் செய்த உஞ்சவர்த்தி, டோலோற்ச்சவம், தீப பிரதக்ஷணம், அகண்ட நாம சங்கீர்த்தனம், சீதா கல்யாணம் போன்றவை எண்ணிலடங்கா. அன்னாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த பதிவு சமர்பணம். அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக்கவும்



Thursday, July 24, 2008

சிவப்பு நிறமும், பாசுபதமும் கதம்ப வனமும்...

ஆடி மாதம் அன்னைக்கு சிறப்பானது. இம்மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். மதுரையில் மீனாக்ஷியம்மனுக்கு இந்த மாதம் நடக்கும் விழாவிற்கு முளைக் கொட்டுத் திருவிழா என்று 10 நாள் உற்சவம் நடக்கும். அன்னை மீனாக்ஷி ருதுவான மாதம் என்பர். சக்திக்கு உகந்த இந்த மாத்த்தில் அம்பாளைப் பற்றி நிறைய பதிவுகள் போட வேண்டும் என்று நண்பர் கே.ஆர்.எஸ் கூறினார். எழுத பல விஷயங்கள் இருந்தாலும், நிச்சிந்தையாக உட்கார்ந்து டைப் பண்ண கால அவகாசம் இருப்பதில்லை. இம்மாதச் சிறப்பாக இந்த வலைப் பூவில் மூன்று பதிவுகளாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அன்னையின் அருளிருந்தால் நடக்கும். இது தவிர செளந்தர்ய லஹரி பதிவில் அடுத்த 6 ஸ்லோகங்களும் வரும் இரு-மூன்று வாரங்களில் எழுத முயற்சிக்கிறேன். அன்னையின் ஆயிரம் நாமங்கள் என்ற லேபிளில் அன்னையின் சில நாமங்களை முன்பே பார்த்தோம். அதன் தொடராக இப்பதிவில் சில நாமங்களைப் பார்க்கலாம்.

ஜ்வாலாமாலினிகா ஆஷிப்த வஹ்நிப்ரகார மத்யகா ஜ்வலிக்கும் அக்னியால் ஆன அரணால் சூழப்பட்டவள். ஜ்வாலாமாலினி என்பது திதிநித்யாவில் ஒரு தேவதை. அக்னிப்பிழம்பினை மாலையாக அணிந்தவள் என்பது ஒரு பொருள். ஜ்வாலா துர்க்கை என்று பல கோவில்களில் இருப்பவள் இவளே. பண்டாசுர வதத்தின் போது பராம்பிகையின் படைகளை காக்க இவள் ஒரு அக்னி அரணை உருவாக்கியதாக மஹாத்மியம் சொல்கிறது.

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரும்மாண்ட மண்டலா என்பது ஒரு நாமம். அதாவது அம்பிகையின் சிவந்த திருமேனியின் ஒளியானது பிரம்மாண்டங்களையும் மூழ்கடிக்கிறது என்பதாக பொருள். நிஜாருண ப்ரபா என்றால் தனது இயல்பான சிவந்த நிறம் என்று பொருள். எந்த மேக்கப்பாலும் வரும் சிவந்த நிறமல்ல இது. இதைத்தான் 'அருண-கிரண ஜாலை' என்றும் 'அருணாம் கருணா..' என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.சிந்தூரமேனியள் என்று அபிராமி அந்தாதியிலும் வருகிறது. செளந்தர்ய லஹரியின் 18ஆம் ஸ்லோகத்திலும் இது பற்றி சொல்லியிருக்கிறார் சங்கரர். இந்த ஸ்லோகமானது ஸ்தீரி வச்யத்தை தரும் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதென்ன ஸ்தீரி வச்யம்?, ஸ்ரீவித்யா உபாசகர்கள் இவ்வளவு கீழ்த்தரமான காரியங்களா செய்கிறார்கள்?. இங்கு ஸ்தீரி வசியம் என்பது பெண்களை மயக்கும் பிரும்ம ராக்ஷச குணமல்ல. கலைகளுக்கு உரிய தேவதைகள் அம்பிகையின் அடியார்களுக்கு வசமாவார்கள். அதாவது தேவதைகள் மூலம் கலைகள் வசமாகும் என்பதே இதன் பொருள். இன்னுமொரு பொருளும் இருக்கிறது, அதாவது அம்பிகையின் பக்தர்களுக்கு ஏற்ற கணவனோ/மனைவியோ வாய்க்காத போது அவர்கள் அன்னையின் இந்த அருண ரூப தியானம் செய்வதால் அவர்கள் மறுபாதியின் குணம் மாறிவிடுவர் என்று தேதியூரார் சொல்லியிருக்கிறார்.

மஹாபாசுபத அஸ்த்ரக்னி நிர்தக்த அஸுரசை நிகா பண்டாஸுர வதத்தில் பண்டனது படைகளை அக்னியைக் கக்கும் மஹா-பாசுபதத்தால் அழித்தவள் என்பது இதன் பொருள். பாஸுபதம் என்பது மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தரப்பட்ட ஆயுதம். மஹாபாசுபதம் என்பது அதனிலும் உயர்ந்தது ஈசன் அம்பிகைக்கு மட்டுமே பண்டனை அழிக்க அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்த பண்டாசுர வதத்தில்தான் அன்னை பாலாதிரிபுரசுந்தரி 7வயது பெண்ணாக வந்து பண்ட புத்திரர்களை அழிக்கிறாள். அந்த நாமமே பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா என்பது. பாலை, பாலா, வாலை என்றல்லாம் கூறுவது இவளையே.


இதுபோலவே பராம்பிகையின் கையில் இருக்கும் பாசாயுதத்திலிருந்து தோன்றியவளை அச்வாரூடா என்றும் அவளே அன்னையின் குதிரைப் படைக்கு தலைவியாகவும் சொல்லப்படுகிறது. அம்பிகையின் யானைப் படைக்கு தலைவியாக சம்பத்கரீ என்னும் ரூபத்தைச் சொல்வர். இந்த ரூபங்கள் எல்லாம் ஸ்ரீ லலிதையின் சக்திகளே. இவரகளை சக்தி சேனை என்று லலிதோபாக்யானம் குறிப்பிடுகிறது.

சரத்சந்த்ர நிபாநநா - அதாவது சரத்க்காலத்து சந்திரன் போன்ற திருமுக மண்டலம் அமையப் பெற்றவள். இலையுதிர் காலம் என்கிற சரத்காலத்தில் வானம் தெளிவாக இருக்கும் என்பதால் நிலவு பிரகாசமாக தெரியும். அந்த நிலவினைப் போல அம்பிகையின் முகமும் மதிமயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளனர் வசின்யா தேவிகள். இவ்வாறு ஒருவ நிலைகளில் வணங்கும் நாமங்கள் இருப்பது போல அருவ நிலையிலும் அம்பிகையை போற்றியுள்ளனர். அதில் சில நாமங்கள் மோஹநாசினி-பாபநாசினீ போன்றவை. மோஹநாசினி என்பதற்கு அடியவர்களின் மோகத்தை போக்குபவள் என்று பொருள். இதைத்தான் மஹாகவியும் "மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று காளியிடம் கூறியிருக்கிறான்.


நாவரசர் தேவாரத்தில், வானம் முட்டும்வரையில் விறகுக் கட்டைகளை அடுக்கியிருந்தாலும், ஒரு சிறு தழலானது எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும், அதுபோல நமச்சிவாய நாமம் சொன்னால் அனைத்து பாபங்களும் போகிடும் என்று சொல்வார். அது போலவே தான் அம்பிகையின் பாகவதத்தை கேட்ட பரிக்ஷித் மஹாராஜாவின் பாபங்கள் தீர்ந்து நற்கதி அடைந்தாதாக தேவி பாகவதம் கூறுகிறது. அதனால் தான் அவள் பாபநாசினீ. அம்பிகை பக்தர்களது பாபங்களை நசிப்பதால் பாபநாசத்தில் (திருநெல்வேலி) எழுந்தருளியிருக்கும் அவள் பெயரே உலகம்மை என்பதாம்.

கதம்ப வனவாசினீ என்று ஒரு நாமம். மதுரையில் ஒரு காலத்தில் கடம்ப வனம் இருந்ததாகவும் அதனால் கடம்பாடவி என்றே மதுரைக்கு ஒரு பெயர் என்பர். இந்த கடம்பவனத்தின் நடுவே கோவில் கொண்டதால் இந்த நாமம் அன்னை மீனாக்ஷியை குறிக்கும் என்று சொல்வர். அது மட்டுமல்ல, பரதேவதை வசிக்கும் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி கடம்ப வனம் இருக்கிறதாம். அதனால் பராசக்திக்கு கதம்ப வன வாசினீ என்று பெயர் என்றும் கூறலாம்.

தேவர்ஷிகண ஸங்காத ஸ்தூயமான ஆத்ம வைபவா என்பது இன்னொரு நாமம். அதாவது தேவர்களும், முனிவர்களும், கணங்களும் தமது ஆத்ம ரூபமாக போற்றும் அம்பிகை என்பது பொருள். ஆத்ம வைபவம் என்பதை தனிச் சிறப்புடைய என்றும் சொல்லலாம், அப்படிக் கொண்டால் தனிச் சிறப்புடைய அம்பிகையை தேவ-ரிஷி-கணங்கள் தொழுவதாக கொள்ளலாம். இந்த நாமம் பற்றி லலிதோபாக்யானத்தில் தனியாக சொல்லப்பட்டிருக்கிறது. பிறகொரு சமயம் இதனை தனிப் பதிவாகப் பார்க்கலாம்.

Thursday, July 3, 2008

பக்தி சில எண்ணங்கள்......பகுதி -2


பல மாதங்கள் கழித்து நண்பனுடன் சில நாட்கள் முன் சாட்டினேன். கடந்த முறை சாட்டியதை தொடரவே நினைத்தாலும், திவாண்ணாவின் பதிவுகள் பக்கம் பேச்சு திரும்பியதால் கர்மா, கர்மயோகம் ஆகியவற்றுக்கான வேறுபாடு, ஞான யோகம், பக்தி யோகம் என்று எங்கோ சென்றுவிட்டோம். ஞான மார்க்கத்தில் இருக்கும் யம, நியம, ப்ராணாயாம, தாரண, ஆசன, சமாதி போன்றவை பற்றியெல்லாம் பேசி, இன்றைய நிலையில் அதனை செயல்படுத்துவதில் இருக்கும் கஷ்டங்களையும், பக்தி யோகத்தில் இருக்கும் 32 ப்ரம்ம வித்தைகள் என்ன என்று தெரிந்தவற்றை பட்டியலிட்டு, முடிவாக பக்தி யோகமும் சராசரியான என் போன்றவர்களுக்கு அல்ல என்றே முடிவுக்கு வந்தோம். எத்தனையோ நெறிகள். வேதம் சொல்லும் ஓராயிரம் தர்மங்களையும் இன்றைய காலத்தில் செய்ய முடிகிறதா?. நித்ய கர்மாக்களையே நம்மிடத்து எவ்வளவு பேர் செய்கிறோம்?.


இவ்வாறாக எந்த யோகமும், செய்ய இயலாத நமக்கு இறையருள் கிடையாதா என்று பேசிக்கொண்டிருக்கையில் சட்டென நினைவில் வந்தது "த்வமேவ உபாயபூதோ மே பாவ இதி ப்ரார்தநா மதி: சரணாகதி:" என்னும் கீத வாக்கியம், கீதாம்மா வாக்கியமல்ல....கீதையில் கண்ணன் சொன்னது. அதாவது கர்ம/பக்தி/ஞான யோகம் செய்தால் அடையும் கிடைக்கும் பலன்களை, பரமாத்மாவின் திருவடியைப் பற்றி சரணாகதியானாலேயே கொடுத்து விடுகிறானாம். 'என்னையே சரணடை' என்றும் அடைந்தால் எளிதில் பலனளிக்கிறேன் என்றும் கூறுகிறான் கண்ணன். இறைவன் திருவடியை பற்றிக் கொள்வதே சிறந்தது, அதுதான் சரணாகதி. "நீ தான் உபாயம்; நீ தான் உபயம்; பலனும் நீயே" என்பதாக பிடித்துக் கொள்வது சரணாகதி.


ஞான யோகம், பக்தி யோகம் போன்றவற்றில் இருப்பது போல சரணாகதிக்கும் சில விஷயங்கள் உண்டு. ஐந்து அங்கங்களுடன் கூடிய ஆறாவதான ஆத்ம சமர்ப்பணம் தான் சரணாகதி. ஐந்து அங்கங்கள் நம்மிடம் இருக்க வேண்டும், அத்துடன் கூடிய ஆத்மாவை அப்படியே சமர்ப்பித்தலே சரணாகதி. ஆக ஐந்து அங்கங்கள், ஆறாவதாக சரணாகதி. சரி, அதென்ன ஐந்து அங்கங்கள்?.


'அநூகூல்யஸ்ய சங்கல்ப: ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் ரக்ஷிஸ்யதிதி விஸ்வாஸோ கோப்த்ருத்வே வரணம் ததா ஆத்மநிஷே கார்பண்யே ஷட்விதா சரணாகதி'


[இதைத்தான் ஆண்டாள், "உய்யும் வகை ஆறை எண்ணி" (திருப்பாவை 2ஆம் பாடல்) என்று கூறினாள் என்று நண்பன் கூறினான். இதுபோன்றே அவன் பெரிய திருவந்தாதியிலும் ஒரு பாடல் சொன்னான். எனக்கு அந்த தொடர்பு தெரியவில்லை, ஆகவே அந்த பாடலை இங்கு தரவில்லை. நினைவில் வருகையில் அதை பின்னூட்டமாகத் தருகிறேன். ]


ஒவ்வொரு அங்கமாக பார்க்கலாம். "அனுகூலஸ்ய சங்கல்பம்" என்றால் இறைவனிடமும், பக்தர்களிடமும் ப்ரீதியுடன் இருத்தல் என்பதே இது. சாஸ்திரம் சொல்வதை கேட்பதும், அதன்படி நடத்தலும், இறைவனது கல்யாண குணங்களைப் பாடுவதும், போற்றுவதும், பாகவதோத்தமர்களிடத்து ப்ரியத்துடன் இருத்தலும் ஆலயங்களுக்கு சென்று வணங்குதலுமாக பகவான் நம்மை விரும்பும்படியாக நாம் இருக்க வேண்டும். இறைவன் எவனை விரும்புகிறானோ அவன் இறைவனால் அடையப்படுகிறான் என்கிறது கடோபநிஷத். சரி, பரமாத்மா தன்னிஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் விரும்பி செல்வான் என்றால் என்ன பொருள்?. யாரையெல்லாம் விரும்புவான்?. வேதத்திற்கு அனுகூலமாய், கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு, ஸ்வதர்மத்தை விடாது அனுசரித்துச் செல்பவனை பகவான் விரும்புவான். பகவானுக்கு எது ப்ரீதியோ அதை கட்டாயம் செய்ய வேண்டும். அதுதான் 'அனுகூலஸ்ய சங்கல்பம்'.


"பர்திகூலஸ்ய வர்ஜனம்" என்றால் என்ன?, அனுகூலத்துக்கு தடையாக இருப்பதை விலக்குதல் ப்ரதிகூலம் என்று சொல்லலாம். குடும்பத்தில் எல்லோரும் கோவிலுக்கு செல்ல நினைக்கையில் ஒருவர் அதை வேண்டாமென சொல்லும் போது, வேண்டாம் என்பவரை விடுத்து மற்றவர்கள் செல்ல வேண்டும். இறைவனை அடைவதற்கு ப்ரதிபந்தமாக இருப்பவற்றை மொத்தமாக விலக்க வேண்டும் என்பதே இரண்டாம் அங்கம்.


"ரக்ஷிஸ்யதிதி விஸ்வாசம்" - இறைவனிடத்து பூரணமான நம்பிக்கை என்பது மிக அவசியம். குமரில பட்டர் பெளத்தம் கற்பதற்காக பெளத்த மதத்தவராக நடித்துவரும் காலத்தில் பெளத்த மடலாயத்தில் இருப்பவர்கள் குமரிலரின் உண்மை நிலை அறிந்து அவர் செய்யும் வஞ்சகமான செயலுக்கு தண்டனையாக அவரை வஞ்சமாக கொல்ல மடாலயத்தின் மேல் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயல்கின்றனர். அப்போது பட்டர் தனது ப்ரார்த்தனையாக 'நான் நம்பும் வேதம் உண்மையானால் அது என்னைக் காக்கட்டும்' என்று கூறுகிறார். அவர் தனது கால் ஊனமாவதுடன் உயிர் பிழைக்கிறார். அப்போது அசிரீரி பின்வருமாறு சொல்கிறது, 'உனக்கு வேதத்தின் மீது முழு நம்பிக்கை இல்லை, 'உண்மையானால்' என்று சந்தேகத்துடனேயே இருந்ததால் உன் கால்களை நீ இழக்க நேரிட்டது'. ஆக பூரண விஸ்வாசம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது போன்று, இறைவனது திருவடியை பற்றும்போது, அவன் ரக்ஷிப்பானா?. கைவிட்டுவிடுவானா?, கைவிட்டால் என்ன செய்வது? என்ற மாற்று சிந்தனைகளே இருக்கக் கூடாது. இவ்வாறான சந்தேகத்துடன் திருவடியைச் சரணடையக் கூடாது. பூரண விஸ்வாசத்துடன், நீயே கதி என்பதாக சரணடைய வேண்டும்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ந்யாஸ தசகம் என்று ஒரு நூல் இருக்கிறது. ஸ்வாமி வேதாந்த தேசிகனால் சொல்லப்பட்ட நூல் இது. அதில், 'விஸ்வாஸ ப்ரார்த்தநா பூர்வம் ஆத்மரக்ஷா பர்மத்வய' என்கிறார். அதாவது, ஆத்மாவை ரக்ஷிக்க வேண்டிய பொறுப்பு இறைவனுடையது என்று அவனிடம் விஸ்வாசத்துடன் ஆத்ம சமர்பணம் செய்தல் என்பது அடுத்த அங்கம்.


எனவே, யோகம் எல்லாம் பண்ண முடியல்லையே, கடைத்தேறுவது எப்படி என்று விசாரம் செய்துகொண்டே காலம் கழிக்காது, நித்திய கர்மாக்களை முடிந்தவரை கண்டிப்பாகச் செய்து கொண்டு "அவனருளால் அவன் தாள் பணிந்து" பூரண சரணாகதி செய்வோம்.

ஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....


முருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே!!!


அதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
ரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்தனும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
தீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே!
ரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
வவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோ! ஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
வத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனே! பக்தர்களின் கவலைகளைப் போக்குகின்றவனே! தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.

ஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
ய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.